மார்ச் 31: வரி, வங்கி தொடர்பான இந்த நடைமுறைகளை முடித்துவிட்டீர்களா?

பட மூலாதாரம், GETTY/BBC
- எழுதியவர், ஜான்ஹவீ மூலே
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவில் நிதியாண்டுக்கான கடைசி நாளாக மார்ச் 31 உள்ளது.
நாட்டின் பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. அது தொடங்குவதற்கு முன், நிறுவனங்கள், வங்கிகள், வணிகர்கள் வருடாந்திர இருப்புநிலை, வருமான வரி தொடர்பாக பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நடப்பு நிதியாண்டில் சராசரி குடிமக்களும் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடித்தாக வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இந்த ஆண்டு அவ்வாறு எந்த எந்த பணியை செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
வங்கியில் KYC செயல்முறையை முடித்து விட்டீர்களா?
வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நிதி நிறுவனங்கள் கேஒய்சி அதாவது Know Your Customer என்னும் செயல்முறையை மேற்கொள்கின்றன.
வங்கி கணக்கு மற்றும் வங்கி பரிவர்த்தனையில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருப்பதற்கு இந்த செயல்முறையை பூர்த்தி செய்வது அவசியமாகும்.
உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடுவை இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31, 2023 வரை நீட்டித்துள்ளது.
ஆன்லைன் மூலமாகவே பான் கார்டு, முகவரி சான்று மற்றும் பிற விவரங்களை பூர்த்தி செய்து கேஒய்சி செயல்முறையை முடிக்கலாம். ஆஃப்லைன் மூலமாக கேஒய்சி செயல்முறைய முடிக்க விரும்பினால், கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு நேரடியாக சென்று இந்த செயல்முறைகளை மேற்கொள்ளலாம்.
வருமான வரியில் இருந்து சலுகை பெற உதவும் முதலீடுகள்
2022-23 நிதியாண்டின் வருமான வரியில் இருந்து சலுகை பெற முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு மார்ச் 31ஆம் தேதிதான் கடைசி நாள் ஆகும். வருமான வரி சட்டப் பிரிவு 80சி, 80டி, 80ஜி ஆகியவற்றின் கீழ் வரும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வருமான வரியில் இருந்து சலுகை பெற முடியும்.

பட மூலாதாரம், Getty Images
நீங்கள் பணிபுரிபவராக இருந்தால், மார்ச் 31க்குள் உங்கள் அலுவலகத்தில் படிவம் 12பிபியைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் HRA, LTC, வீட்டுக் கடன் அல்லது வாடகை மற்றும் உங்கள் முதலீடுகள் மற்றும் வருமான வரி தொடர்பான பிற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் வருமான வரிச் சலுகை கிடைக்கும்.
PPF, NPS மற்றும் SSY-க்கான குறைந்தப்பட்ச தொகையை செலுத்திவிட்டீர்களா?
நீங்கள் PPF, NPS மற்றும் SSY இல் முதலீடு செய்திருந்தால், ஒவ்வொரு வருடமும் அந்தக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்வது அவசியம்.
நடப்பு நிதியாண்டில் இதற்கான காலக்கெடு 31 மார்ச் 2023 அன்று முடிவடைகிறது. இந்தக் கணக்குகள் உங்கள் பெயரிலோ, உங்கள் மனைவி அல்லது குழந்தைகளின் பெயரிலோ இருக்கலாம்.
NPS (தேசிய ஓய்வூதிய திட்டம்) முதல் அடுக்கு I கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1000 மற்றும் அடுக்கு II கணக்கில் ரூ.250 செலுத்த வேண்டும்.
PPF கணக்கில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் செலுத்த வேண்டும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனாவிலும் SSY (செல்வ மகள் திட்டம்) நீங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 மற்றும் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் செலுத்தலாம்.

பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்
2022 பட்ஜெட்டில், புதுப்பிக்கப்பட்ட வருமான வரி தாக்கல் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, முந்தைய மற்றும் நடப்பு நிதியாண்டு என இரண்டு ஆண்டுகளுக்கான வருமான வரியையும் செலுத்தலாம்.
ஓராண்டுக்கான வருமான வரி செலுத்துவது நிலுவையில் இருந்தாலோ அல்லது அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றாலோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2020-21 நிதியாண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்ய மார்ச் 31, 2023 கடைசி நாளாகும்.
முன்பண வரி செலுத்த கடைசி நாள்
வருமான வரி பிரிவு 208ன் படி, 10,000 ரூபாய்க்கு மேல் வருமான வரி செலுத்த வேண்டிய நபர்கள் நான்கு காலாண்டுகளில் இந்த வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
நான்காவது வாரம் மற்றும் முந்தைய மூன்று வாரங்களில் எது எஞ்சியிருந்தாலும், அதற்கான தொகையும் வட்டியும் 31ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையை டி.டி.எஸ் உடன் வேலையாட்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வது அவசியம்.
மியூச்சுவல் ஃபண்ட், டிமேட் கணக்கு ஆகியவற்றுக்கு நாமினி நியமிக்க வேண்டும்.
பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய டிமேட் கணக்கு அவசியம். இந்தக் கணக்கிற்கு நீங்கள் யாரையாவது நாமினியாகச் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் நாமினி இல்லை என்று நீங்கள் அறிவிக்க வேண்டும்.
இதற்காக, பங்குச் சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பான செபி வழங்கிய நீட்டிப்பு 31 மார்ச் 2023 அன்று முடிவடைவதாக இருந்தது. தற்போது இதற்கான காலக்கெடுவை செபி செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது. இந்த காலக்கட்டத்திற்குள் நீங்கள் நாமினி தொடர்பான தகவல்களை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் சமர்ப்பிக்கவில்லை என்றால், உங்கள் டிமேட் கணக்கு செயலிழந்து போகலாம்.
ஆதார் - பான் கார்டு இணைப்பிலும் கால அவகாசம் நீட்டிப்பு
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், ஜூன் 30, 2023 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த இணைப்புக்கு செலுத்த வேண்டிய தாமதக் கட்டணமான ஆயிரம் ரூபாயில் எந்தத் தள்ளுபடியும் இருக்காது.
ஆதார்-பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் உங்கள் பான் கார்டு செயலிழந்து போகலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார் மற்றும் பான் எண்ணைச் சேர்ப்பதற்கான தகவல்கள் மற்றும் இணைப்புக்கான லிங்க் வருமான வரித் துறை இணையதளத்தில் கிடைக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












