"சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்" - ராகுலின் பேச்சை கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
- எழுதியவர், சல்மான் ராவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன் கார்கே வீட்டிற்கு ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியை திங்கட்கிழமை அழைத்துச் சென்றபோது, 18 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு இருந்தனர்.
தனது பிரதிநிதியை அனுப்பாத ஒரே எதிர்கட்சி சிவசேனை. கார்கே வீட்டில் கூடியிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நெற்றியில் அது ஒரு சுருக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கூட்டத்தில் சிவசேனை கட்சியின் எம்.பி. அல்லது தலைவர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
கார்கே வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் வரவில்லை.
டெல்லியின் அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் காந்தி, "என் பெயர் சாவர்க்கர் அல்ல. என் பெயர் ராகுல் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டார்” என்று கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் நிலவும் அமளி குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி இவ்வாறு கூறினார். ராகுல் காந்தி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் வலியுறுத்தினர்.
ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள மகாவிகாஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரே, சாவர்க்கரைப் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் ஒரு வகையில் ராகுல் காந்தியை எச்சரித்தார்.
ராகுல் காந்திக்கு அறிவுரை வழங்கிய அவர், சாவர்க்கரை மீண்டும் மீண்டும் அவமதிக்கவேண்டாம் என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ராகுலுக்கு சிவசேனையின் அறிவுரை
ராகுல் காந்தியின் அறிக்கைக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, "சாவர்க்கர் அந்தமானில் உள்ள காலா பானி சிறையில் 14 ஆண்டுகளுக்கு கற்பனைகூடச் செய்ய முடியாத துன்பங்களை அனுபவித்தார். சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர். அவரை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.
சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து அவமானப்படுத்தினால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் விரிசல் ஏற்படும் என்றும் உத்தவ் தாக்கரே தெளிவான வார்த்தைகளில் சுட்டிக்காட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, ஜனநாயகத்தைக் காப்பாற்றவே சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
"ராகுல் காந்தியை வேண்டுமென்றே தூண்டிவிடுகிறார்கள். ஆனால் இவற்றில் நாம் நேரத்தை வீணடித்தால் ஜனநாயகம் ஒழிந்துவிடும்" என்று அவர் மேலும் கூறினார்.
ராகுல் காந்தியை தனியாக சந்தித்து இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று ஆலோசனை கூறுவேன் என்று சிவசேனை கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் கூறினார்.
சாவர்க்கர் விவகாரத்தில், என்சிபி தலைவர் ஷரத் பவாரும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனைக்கு ஆதரவாக இருப்பது போலத்தெரிகிறது.
பவார் தனது கவலையை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்துள்ளார்

பட மூலாதாரம், Getty Images
சாவர்க்கர் பிரச்சனை மகாராஷ்டிராவில் ஏன் முக்கியமானது?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மார்ச் 27 அன்று எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் என்று செய்திமுகமை PTI தெரிவிக்கிறது.
இந்த கூட்டத்தில் ஷரத் பவார் கலந்து கொண்டு, மகாராஷ்டிராவில் சாவர்க்கரின் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது என்றும் அப்படிப்பட்ட நிலையில் அவரைப் பற்றி கருத்து தெரிவிப்பது மாநிலத்தில் காங்கிரஸ், என்சிபி மற்றும் உத்தவ் கோஷ்டியின் கூட்டணிக்கு சரியாக இருக்காது என்றும் காங்கிரஸ் தலைமையிடம் தெளிவாக கூறினார்.
முன்னதாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே பங்கேற்றார். ஆனால் இந்த பயணத்தின் போதும் ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் சாவர்க்கரைப்பற்றி பேசினார்.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனையின் இதழான 'சாம்னா'வும் தனது தலையங்கத்தில் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளது.
மகாவிகாஸ் அகாடியின் ஒரு அங்கமாக இருக்கும் உத்தவ் தாக்கரே பிரிவின் சிவசேனை, சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்களை பொறுத்துக்கொள்ளாது என்றும் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
"நான் சாவர்க்கர் இல்லை என்று ராகுல் காந்தி அறிக்கை விடுகிறார். இதுபோன்ற அறிக்கைகள் ஒருவரை துணிச்சல்காரராக ஆக்குவதில்லை, அவர் இப்படிக் கூறுவதால் சாவர்க்கர் மீதான மக்களின் மரியாதையும் மதிப்பும் மாறாது" என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, காங்கிரஸின் முன்னாள் தலைவர் 'அரசியல் ரீதியாக முதிர்ச்சியற்றவர்' என்று சொல்ல ராகுல் காந்தியின் எதிர்ப்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று காங்கிரஸை தொடர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் ரஷித் கித்வாய் கருதுகிறார்.
பல கட்சிகள் ஒரு விவகாரம் தொடர்பாக ஒன்று சேரும் போது, கருத்தியல் முரண்பாடுகள் இருக்கும்போதிலும் அவர்கள் தங்களுக்குள் நல்ல இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். இந்த நல்லிணக்கம் ஒருவரையொருவர் மதித்து சில அடிப்படை விஷயங்களில் உடன்பாடு கொண்டு உருவாக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ராகுல் காந்தியிடம் நெகிழ்வுத்தன்மை குறைவு
பிபிசியிடம் பேசிய ரஷீத் கித்வாய்,"ராகுல் காந்தி மற்றவர்களிடமிருந்து இல்லாவிட்டாலும், தனது சொந்தக் குடும்பத்தில் இதற்கு உதாரணங்களைக் காண வேண்டும். ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளை எப்படி சிறப்பாக நிர்வகித்தார்கள் என்பதை அவர் பார்ப்பார். இந்திரா காந்தி சாவர்க்கரை சிறப்பித்து தபால் தலையை வெளியிட்டார்." என்று கூறினார்.
அரசியல் ரீதியாக ராகுல் காந்தி தனக்குள்ளேயே சித்தாந்த நெகிழ்வுத்தன்மையை உருவாக்கிக்கொள்வது அவசியம் என்றும், அப்போதுதான் அவரால் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்க முடியும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை உதாரணம் காட்டிய மூத்த செய்தியாளர் என்.கே.சிங், உத்தரப் பிரதேச தேர்தல் நேரத்தில் டிக்கெட் விநியோகத்தின் போது, “பெரிய கட்சி பெரிய மனதைக் காட்ட வேண்டும்” என்று ராகுல் காந்திக்கு அகிலேஷ் யாதவ் அறிவுரை கூறியதாகக் கூறினார்.
பல கட்சிகளை ஒன்றிணைப்பது சவாலாக இருக்கும் போது. அரசியலில் இது ஒரு பெரிய மந்திரம் என்று என்.கே.சிங் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தான் கூறும் ஒரு கருத்தில் என்ன நியாயம் உள்ளது என்பதை ஒரு முதிர்ந்த அரசியல்வாதி எப்போதும் எடைபோடுவார் என்கிறார் ரஷித் கித்வாய்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு தவறு காரணமாக அஸ்தமித்த அத்வானியின் அரசியல் வாழ்க்கை
”இதே போன்ற ஒரு தவறை எல்.கே. அத்வானியும் செய்தார். தனது பாகிஸ்தான் பயணத்தின்போது முகமது அலி ஜின்னாவை சுதந்திரப் போராட்ட வீரர் என்று அவர் அழைத்தார். பல நேரங்களில் பல விஷயங்கள் சரியாக இருக்கலாம். ஆனால் எந்த நேரத்தில் எதைப்பேசுவது சரி என்பது மிகவும் முக்கியம். அதன் விளைவு என்ன? அத்வானி அரசியலில் ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்,” என்று ரஷித் கித்வாய் சுட்டிக்காட்டினார்.
”கருத்தியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், 1984 ஆம் ஆண்டில், அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாகேப் தேவ்ரஸ் மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோர் இந்திரா காந்தியை 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்'க்காக மிகவும் பாராட்டினார்கள். அதே நேரத்தில் இந்திரா காந்தியின் சிந்தனை அவர்களின் சித்தாந்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி பலமுறை யோசிக்காமல் பேசிவிடுகிறார் என்றும் எதிரணியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கருத்துத்தெரிவித்த ரஷித் கித்வாய், “ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அல்லது டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை உற்சாகத்துடன் சந்திக்காததற்கு இதுவே காரணமாக இருக்கலாம். நீங்கள் பல கட்சிகளை அரசியல் ரீதியாக ஒன்றாக இணைக்க வேண்டுமென்றால் அந்த கட்சிகளின் சித்தாந்தத்தை மதிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யவேண்டும்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
தாக்குதலை கூர்மைப்படுத்திய பாஜக
ஆனால், ராகுலின் அறிக்கைகள், அவரைக் குறிவைக்க அவரது போட்டிக் கட்சிக்கு அதாவது பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதுமே வாய்ப்பை அளிக்கின்றன என்பதும் உண்மை.
அவரது அறிக்கைக்குப் பிறகு கட்சித் தலைவர்கள் தவிர பல அமைச்சர்களும் சமூக ஊடகங்களில் ராகுல் காந்தியை விமர்சித்தனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பதிவில், "நீங்கள் கனவில் கூட சாவர்க்கராக ஆக முடியாது. ஏனென்றால் அதற்கு நிறைய தன்னம்பிக்கை, நாட்டின் மீது அன்பு, தன்னலமற்ற தன்மை மற்றும் அர்ப்பணிப்பு தேவை."என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனையை இலக்கு வைத்து தாக்க, ராகுல் காந்தியின் அறிக்கை ஒரு வாய்ப்பை அளித்தது.
திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இரு தலைவர்களும், மகாராஷ்டிரா முழுவதும் 'சாவர்க்கர் கெளரவ யாத்திரை' விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், இதன் மூலம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சாவர்க்கரின் பங்களிப்பை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே இடையே மோதல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ராகுல் காந்தி சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்ததாகவும், அந்த நேரத்தில் உத்தவ் தாக்கரேவின் எம்.பி.க்கள் ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து கருப்பு பட்டை அணிந்து அங்கே அமைதியாக அமர்ந்திருந்ததாகவும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டினார்.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இதை ஊதிப்பெரிதாக்க முயல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இதனால் எந்த பலனும் கிடைக்காது என்று இது குறித்து சிவசேனையின் உத்தவ் தாக்கரே பிரிவின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
மும்பையில் இருந்து போனில் பேசிய மனிஷா, ”எட்டு ஆண்டுகள் ஆனபோதிலும் ஏன் சாவர்க்கருக்கு பாரத ரத்னா கொடுக்கவில்லை. இந்த கேள்வியை, பாரதிய ஜனதா கட்சியிடம் பொதுமக்கள் கேட்பார்கள். சாவர்க்கரின் பெயரை, ஓட்டுக்காகத்தான் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். கோவா, நாகாலாந்து மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி தொடர்பாக பாஜகவின் கொள்கை என்ன என்ற கேள்விகளையும் பொதுமக்கள் மத்தியில் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
உத்தவ் தாக்கரேயின் சிவசேனை எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், ராகுல் காந்தியின் அறிக்கைக்கு வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்ததாக மனிஷா கூறுகிறார்.
”எங்கள் கட்சி எப்போதுமே சாவர்க்கரை மதிக்கிறது. காங்கிரஸ் தலைவர் இது போன்ற அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டால் அல்லது மற்ற கூட்டணிக்கட்சிகளின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது கனவாகவே இருக்கும்,” என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












