சச்சினைவிட அதிவேகமாக சாதனை படிக்கற்களில் ஏறும் கோலி - நியூசிலாந்துக்கு எதிராக அபாரம்

இந்தியா - நியூசிலாந்து, சச்சினை விஞ்சிய கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார்.

"விராட் தற்போது பேட்டிங் செய்வதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அவர் விளையாட்டில் தென்படும் அந்த சுதந்திரம், நிதானம் மற்றும் உற்சாகம் போன்றவை அவர் இந்த விளையாட்டை எவ்வளவு ரசித்து விளையாடுகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது."

ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இதையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கோலி குறித்து இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் தொடங்கிய விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் பயணம், வதோதராவிலும் தொடர்ந்தது.

இதன் மூலம் சங்கக்காராவை முந்தி, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வதோதரா ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது.

சச்சினை விட அதிவேகமாக 28,000 ரன் குவித்த கோலி

இந்தியா - நியூசிலாந்து, சச்சினை விஞ்சிய கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார்.

வதோதரா ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி 25 ரன்களைக் கடந்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

அத்துடன், சச்சினை விஞ்சி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.

சச்சின் டெண்டுல்கர் இந்த மைல்கல்லை எட்ட 644 இன்னிங்ஸ்களையும், சங்ககாரா 666 இன்னிங்ஸ்களையும் எடுத்துக் கொண்டனர்.

ஆனால், விராட் கோலி வெறும் 624 இன்னிங்ஸ்களில் 28 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார்.

இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் விராட் கோலி, சமீபகாலமாக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த அவர், அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிட்னி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்த கோலி, அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசினார். மூன்றாவது போட்டியில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென்னாப்பிரிக்கத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக 'தொடர் நாயகன்' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 54வது சதத்தை அடிக்கத் தவறவிட்டார், அவர் 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பான சாதனையைப் படைத்த விராட் கோலி, இது குறித்து கூறுகையில், "எனது ஒட்டுமொத்தப் பயணத்தையும் திரும்பிப் பார்த்தால், இது ஒரு கனவு நனவானது போல உள்ளது. எனது திறமையின் மீது நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தேன். இருப்பினும், இந்த நிலையை அடைய நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், நான் தற்போது எந்த சாதனைகளைப் பற்றியும் யோசிக்கவில்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால், ஒருவேளை நான் இன்னும் அதிரடியாக விளையாடியிருப்பேன். அனுபவம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அணியை வெற்றி பெறச் செய்வதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது," என்று தெரிவித்தார்.

கில் மற்றும் ஸ்ரேயாஸ்

இந்தியா - நியூசிலாந்து, சச்சினை விஞ்சிய கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரைத் தவறவிட்ட பிறகு, கேப்டன் சுப்மன் கில் இந்த ஒருநாள் தொடரில் வெற்றிகரமாகத் திரும்பினார்.

301 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் சேர்த்தது.

ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் கிடைத்த நல்ல தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். அவர் 29 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பிறகு, கில்லுடன் விராட் கோலி இணைந்தார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டிற்கு 107 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தது.

இந்தியா - நியூசிலாந்து, சச்சினை விஞ்சிய கோலி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அரைசதம் கடந்த பிறகு சுப்மன் கில்லால் தனது இன்னிங்ஸை நீண்ட நேரம் தொடர முடியவில்லை, அவர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஷுப்மன் கில்லைத் தவிர, ஸ்ரேயாஸ் ஐயரும் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பினார். அணியின் துணை கேப்டனான அவர், 49 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸ் சற்று தடுமாறியது.

கோலி ஆட்டமிழந்த நேரத்தில் இந்தியா 234 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் வெறும் எட்டு ரன்கள் இடைவெளியில் இந்தியா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் ஹர்ஷித் ராணா 23 பந்துகளில் 29 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்துப் பேசிய சுப்மன் கில், "விராட் கோலி இப்போது பேட்டிங் செய்யும் விதம், அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, ஆனால் விராட் கோலி அதை மிக எளிதாக மாற்றிக்காட்டினார்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு