"எம்ஜிஆர், ஜெயலலிதாவால் முடியவில்லை, இப்போது ஸ்டாலின் முயல்கிறார்" - மீனவர்கள் எதனை குறிப்பிடுகிறார்கள்?

நொச்சிக்குப்பம்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

45 வயதான நீலாவதி உச்சிவெயிலில் சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீன் விற்றுக்கொண்டிருந்தார். ஒரு சிறிய பெட்டி மீது, மரப்பலகை ஒன்றை வைத்து, மீன்களை வைத்திருந்தார். கடலில் இருந்து பிடித்து வந்து சில மணிநேரம் ஆன இறால், அயிலை, பாறை மீன்களை அடுக்கி வைத்துக்கொண்டு அவற்றின் பெயர்களைச் சொல்லிக் கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தார்.

நீலாவதி போல நூற்றுக்கணக்கான மீனவப் பெண்கள், சிறிய கடைகள் விரித்து மீன் விற்கும் இடமான நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீன் கடைகளை அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 11ம்தேதி உத்தரவிட்ட நேரத்தில் அவர்கள் கலங்கிப்போனார்கள். ஒரு வார காலம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

''மீனவர்களை வாழ விடுங்க. நாங்க அன்றாடங்காய்ச்சி மக்கள். உழைச்சு சாப்பிடுகிறோம். எங்கள வாழ விடுங்க. இந்த சிங்காரச் சென்னையில் நாங்கள் ஒரு பகுதி. மீனவர்கள் இருந்தால் தான் அது சிங்காரச் சென்னை. நாங்க இல்லாமல் சிங்காரச் சென்னை கிடையாது. இங்கு நாற்றம் வீசுகிறது என்கிறார்கள். இது எங்களுக்கு வாசனை. இது இல்லாமல் எங்களுக்குச் சோறு கிடையாது. வி.ஐ.பி.க்கள் பலரும் இங்கு வந்து மீன் வாங்குகிறார்கள். இங்கு பிரெஷ் மீன் கிடைக்கும் என்பதால் தான் இங்கு வருகிறார்கள். நாங்க யாரிடமும் கை ஏந்தவில்லை. நாங்க உழைத்துச் சாப்பிடுகிறோம். இந்தச் சிறு கடைகளால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,''என்கிறார் நீலவாதி.

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரையின் ஒரு பகுதி நொச்சிக்குப்பம். பட்டினப்பாக்கத்தில் இருந்து பிரியும் சிறிய சாலையான லூப்சாலை நொச்சிக்குப்பத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்லும். அங்கு தான் நீலாவதி போல சுமார் 500 மீனவப்பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வெயில், மழை பாராமல் மீன் விற்கின்றனர்.

பல காலமாக நொச்சிக்குப்பத்தில் மீனவப் பெண்கள் கடைகள் நடத்தி வருகின்றனர். ஆண்கள் அதிகாலை கடலில் இருந்து திரும்புவதும், இங்குள்ள பெண்கள் மீன்களை வாரிக் கூடைகளை நிரப்பி, தங்களது சிறிய கடைகளில் பரப்பி கூவி விற்பனை செய்வது பல பத்தாண்டுகளாக இந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்றது எனச் சென்னையின் வரலாற்றை ஆய்வு செய்யும் எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத் உறுதி செய்கிறார்.

நொச்சிக்குப்பம்

பட மூலாதாரம், Getty Images

மீனவப் பெண்களின் வேதனை

லூப் சாலை என்பதே சமீபத்தில்(2013-2015) உருவாக்கப்பட்டது என்றும் தங்களது முன்னோர்கள் வழிவழியாக மீன் விற்ற இடத்தில் அதே தொழிலைச் செய்து வருவதால், லூப் சாலையில் கடை நடத்தத் தங்களுக்கு முழு உரிமை உள்ளது என்கிறார் நீலாவதி.

நல்ல விற்பனை ஆகும் நாளில் அவர் ரூ.1,000 வரை சம்பாதிப்பதாகவும், சில நாட்கள் வெறும் ரூ.200 கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கும் என்றும் கூறுகிறார். ''நாங்கள் பரம்பரைபரம்பரையாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுகிறோம். நான் சிறு வயதில் விளையாடிய இடம் இது. கடற்கரைப் பகுதியில் சாலையை அமைத்துவிட்டு, மீனவர்கள் ஆக்கிரமிப்பு செய்கிறோம் என்று சொல்வதில் நியாயம் உள்ளதா?,'' என்று கேள்வி எழுப்புகிறார் நீலாவதி.

அவர் நம்மிடம் பேசிக் கொண்டிருந்த வேளை அதீத வெயில் இருந்தது. மதிய வேளை என்பதால் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால் தொடர்ந்து பொதுமக்கள் வந்து நேரடியாகப் பார்த்து மீன் வாங்கிச் சென்றுகொண்டிருந்தனர். நீலாவதியைச் சந்தித்த அடுத்த நாள் காலை நேரத்தில் நாம் அங்கு சென்றோம். மிகுந்த நெரிசல் உள்ள இடமாக இந்த சாலை மாறியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. ஆனால் பல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த வாடிக்கையாளர்கள் இந்த சாலையில் நின்று ஆர்வத்துடன் மீன் வாங்கிச்செல்வதையும் பார்க்கமுடிந்தது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை நேரத்தில் மீன் வாங்கிக்கொண்டிருந்த செந்திலிடம் பேசினோம். ''நான் சுமார் 7 ஆண்டுகளாக இங்கு தான் மீன் வாங்குகிறேன். இங்கு மீன் பிடித்ததும் விற்பனைக்கு வந்துவிடும். விலையும் குறைவு என்பதால் இங்கு தொடர்ந்து வருகிறேன். காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினால் போதும் , இங்கு இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் செல்லலாம், மீன் விற்பனையும் செய்யலாம்,''என்கிறார் செந்தில்.

நொச்சிக்குப்பம்
நொச்சிக்குப்பம்

மீனவர்கள் போராட்டத்தின் பின்னணி

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி(பொறுப்பு) ராஜா, லூப்சாலையில் மீன் கடைகள் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அந்தக் கடைகள் சென்னை நகரத்தின் அழகைக் கெடுப்பதாவும் தெரிவித்தார். இதையடுத்து, ஏப்ரல் 11ம்தேதி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கில், மீன் கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டது.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் லூப் சாலையில் உள்ள மீன்கடைகளை அகற்ற முற்பட்டபோது, ஏப்ரல் 11ம்தேதி அன்று , நூற்றுக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினர். சாலை நடுவே மரக்கட்டைகள், படகுகளை நிறுத்தி வைத்துப் போராட்டம் நடத்தினர். இரவில் கூட, சாலையில் குவிந்து போராட்ட முழக்கங்களை எழுப்பினர். லூப் சாலையில் மீன் கடைகள் நடத்துவதை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளம் பெண்கள், ஆண்கள், முதியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

லூப் சாலையில் கடைகளை அகற்றவேண்டும் என்று நீதிமன்றம் கூறியதை அடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்தனர். கடற்கரையில் மீன் விற்கும் பெண்கள் எந்த வித நிரந்தரக் கடைகளையும் அமைக்கவில்லை என்றும் சிறிய குடை ஒன்றை பிடித்துக்கொண்டு, மரப்பெட்டியில் மீன்களை வைத்து வியாபாரம் செய்வதால், அவர்களை லூப் சாலையில் இருந்து விரட்டக்கூடாது என்றும் சீமான் தெரிவித்திருந்தார்.

போராட்டக் களத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடைகளை ஆக்கிரமிப்பு என்று கூறுவது தவறு என்றும் கடைகளை அகற்றுவது மீனவர்களின் பாரம்பரியத் தொழிலில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கும் சமம் என்றும் கூறினார்.

ஏப்ரல் 11ம்தேதி முதல் 18ம்தேதி வரை போராட்டம் நடைபெற்றது. சட்டமன்றக் கூட்டம் நடைபெற்ற வேளையில் போராட்டம் நடைபெற்றதால், தமிழ்நாடு அரசு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதோடு சென்னை மாநகராட்சி சார்பாக, காவல் துறை உதவியுடன் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படும், மீன்கடைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீன்கடைகள் செயல்பட நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இதன் பின்னர் மீனவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

நொச்சிக்குப்பம்
படக்குறிப்பு, தமிழ்ச்செல்வி

மீனவர் பகுதியில் சாலை அமைக்கலாமா?

லூப் சாலையில் கடைகளை அமைத்ததே தவறு என்று கூறும் இளம் பெண் தமிழ்ச்செல்வி, கடற்கரையை ஒட்டியுள்ள மீன் கடைகளை அகற்றினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கிறார்.

''நாங்கள் சுயமாகத் தொழில் செய்கிறோம். எங்கள் வீடுகளில் உள்ள ஆண்கள் மீன் பிடித்து வருகிறார்கள், நாங்கள் அதை வெட்டி, சுத்தம் செய்து விற்பனை செய்கிறோம். இதில் வரும் வருமானத்தில் நாங்கள் வாழ்கிறோம். யாருக்கும் இடைஞ்சல் செய்யவில்லை. கடைகளை நிரந்தரமாக அமைக்கவில்லை. ஒரே ஒரு குடையை பிடித்துக்கொண்டு வெயிலில் அமர்ந்து வியாபாரம் செய்கிறோம். இதை எப்படி ஆக்கிரமிப்பு என்று சொல்லமுடியும்?

சுமார் 500 குடும்பங்கள் இந்தச் சாலையோர வியாபாரத்தில் பிழைக்கின்றன. இத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரம் முக்கியமா? நீங்கள் வேகமாகச் சாலையில் செல்வது முக்கியமா? அதுவும் இந்தச் சாலை ஒரு கூடுதல் சாலைதானே? 2013ல் தான் இந்தச் சாலையைப் பொதுப் பயன்பாட்டிற்கு விட்டார்கள். அதுவரை இங்கு நாங்கள் மீன்வலைகளை உலர்த்தினோம். படகுகளை நிறுத்தினோம். முக்கியமான சாந்தோம் சாலை மறுபுறத்தில் இருக்கிறது. கூடுதல் சாலையை அரசாங்கம் அமைத்துவிட்டு, எங்களை விரட்ட வேண்டும் என நினைப்பது தவறு,''என்கிறார் தமிழ்ச்செல்வி.

லூப் சாலையில் தொடர்ந்து கடை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தமிழ்ச்செல்வி, ''நாங்கள் எந்தவொரு சமரசத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் எங்கள் முன்னோர்களைப் போலவே, வலையில் இருந்து மீனை எடுத்து, நேரடியாக மக்களுக்கு விற்கும் முறையை மாற்றமாட்டோம். அதற்குத் தடை வந்தால், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். கடலும், கடற்கரையும் எங்களுக்குச் சொந்தம்,''என்கிறார்.

நொச்சிக்குப்பம்

எம்ஜிஆர் காலத்தில் தொடங்கிய போராட்டம்

நீலாவதி, தமிழ்ச்செல்வியைப் போல, 1985 தொடங்கி பலமுறை கடற்கரை மீதான தங்களது உரிமைகளை நிலைநாட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தியதாக நினைவு கூர்கிறார் மீனவர் பாரதி(52). இவர், தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவராகச் செயல்படுகிறார். மீனவர்கள் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என அரசாங்கம் சொல்வதும், போராட்டம் நடத்தி தங்களது உரிமைகளை மீட்பதும் இங்குள்ள மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது என்கிறார் பாரதி.

''1985ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த சமயத்தில், கட்டுமரங்கள், வலைகளை அகற்றி, கடற்கரையை அழகுபடுத்துகிறோம் என்று கூறி அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. மீனவர்கள் உடனடியாகக் கரையில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றார்கள். காவல்துறையினர் வந்து வலைகளை அகற்றினார்கள், படகுகளை வேறு இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்றார்கள். கடலில் இருந்து வந்ததும் படகு தரையைத் தட்டும் இடத்தில் இருந்து நேரடியாக மீன்களைக் கொண்டு விற்பனைக்கு வைக்கிறோம் என்பதை அரசாங்கம் ஏற்கவில்லை. ஒருமாதம் நாங்கள் போராட்டம் நடத்தினோம். 1985 நவம்பர் மாதம் 4ம் தேதி 17ரவுண்ட் துப்பாக்கி குண்டு வெடித்தது. ஐந்து மீனவர்கள் துப்பாக்கிச்சூட்டில் இறந்து போனார்கள். அதன்பின்னர் எம்ஜிஆர் கடற்கரையில் இருந்து மீனவர்களை அகற்றும் திட்டத்தைக் கைவிட்டார்,''என்கிறார் பாரதி.

எம்ஜிஆர் காலம் தொடங்கி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் அக்கிரமிப்பு முத்திரை குத்தி, மீனவர்களை அகற்றும் உத்தி தொடர்ந்தது என்கிறார்.

''2003ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் ஆக்கிரமிப்பு பிரச்சனை என்றார்கள். மீண்டும் போராட்டம் தான். ரூ.1,000 கோடி செலவில், கடற்கரைப் பகுதியில், தமிழ்நாடு-மலேசியா இடையிலான கூட்டுமுயற்சியில் 'மெரினாவை மாற்றலாம் வா' என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தார்கள்.

கார்பரேட் நிறுவனங்களின் காம்ப்ளெக்ஸ் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளைக் கடற்கரைப் பகுதியில் அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவ அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுக்கும் என்ற அறிவிப்பு வந்த பின்னர், இந்த அழகுபடுத்தும் திட்டம் கைவிடப்பட்டது. அழகு என்பதை மீனவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து யாரும் பார்ப்பதில்லை. எங்கள் ஊரில் நாங்கள் இல்லாமல், படகுகள், வலைகள் இல்லாமல் கடற்கரைப் பகுதியில் அலுவலகங்கள் இருந்தால், கடற்கரை வெறுமையாகத் தானே இருக்கும்,''என்கிறார் பாரதி.

அதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு என்பது பழைய சவால்தான் என்றும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை அடுத்து, தற்போது ஸ்டாலின் முதல்வராக இருக்கும் நேரத்தில் அது மீண்டும் வந்துள்ளது என்கிறார்.

''போராட்டம் தான் எங்களுக்குத் தீர்வு. நாங்கள் இந்தக் கடலின் மைந்தர்கள், நாங்கள் ஏன் வெளியேறவேண்டும். இந்த உப்புக்காற்றிலும், கடல் நீரிலும் எங்கள் வியர்வை கலந்திருக்கிறது,''என உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார் பாரதி.

நொச்சிக்குப்பம்

லூப் சாலை பிரச்னைக்கு தீர்வு என்ன?

போக்குவரத்து நெரிசல்தான் உண்மையான பிரச்சனை என்றால் அதற்கு எளிமையான தீர்வுகள் உள்ளன என்றும் கடைகள் இருப்பதால் நகரத்தின் அழகு கெடுகிறது என்பதை வேறு கோணத்திலும் பார்க்கலாம் என்கிறார் நகர வடிவமைப்பாளர் கண்ணன்.

''போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குப் பல நாடுகளில் தீர்வுகளை எளிமையாகச் செயல்படுத்தியிருக்கிறார்கள். அது ஒவ்வொரு நாட்டின் நகர அமைப்புக்கு ஏற்ற வகையில் மாறும். சென்னை நகரத்தை மற்ற இந்திய நகரங்கள் மற்றும் பிற நாட்டின் நகரங்களுடன் ஒப்பிட்டுத் தீர்வு சொல்வதைவிட, இந்த நகரத்தின் தன்மை, இங்குள்ள சமூக கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் தீர்வை எட்டலாம். அதாவது, கடற்கரையில் மீன் வாங்க இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள் அவர்களின் வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்க, 'பீக்' நேரத்தில் மட்டும் அந்தச் சாலையை முற்றிலுமாகப் பாதசாரிகளுக்கான சாலையாக மாற்றலாம். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் செல்லவேண்டும் என்றால், உயரமான நடைமேடை அமைத்து, கடைகளை உயரத்தில் வைத்துவிட்டு, வாகனங்கள் செல்வதற்கு வழியை உருவாக்கலாம்,''என்கிறார் கண்ணன்.

உலகின் பலநாடுகளில் நெரிசலான பகுதிகளில் உள்ள பழங்கால மார்க்கெட்களை அதே வகையில் செயல்படுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் என்றும் நொச்சிக்குப்பம் சாலையில் உள்ள மீன் கடைகளைப் புராதன மார்க்கெட் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.

''பல நகரங்களிலும் இதுபோன்ற 50 ஆண்டுகளைக் கடந்த மார்க்கெட்களைப் புராதன சின்னமாகப் பார்க்கிறார்கள். இந்த மார்க்கெட்டை, நாம் எப்படி சர்வதேச அளவில் சந்தைப்படுத்தலாம் என்ற கோணத்தில் யோசித்தால், இந்த இடத்தை மேலும் அழகாக்கலாம்.

அந்த லூப் சாலையை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியில் வேகமாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பகுதியாகவும், மற்ற பகுதியை மீன் வாங்க வருபவர்கள், கடைகளுக்கு வந்து வாங்கிச் செல்லும் பகுதியாகவும் பயன்படுத்தலாம். நவீன கியாஸ்க் போன்ற கடைகளை அமைக்கலாம். மீன் வாங்க வருபவர்கள் அந்தச் சூழலைப் பார்த்து அதை அனுபவித்து வாங்கமுடியும்,''என்கிறார் கண்ணன்.

நொச்சிக்குப்பம் மீன் கடைகளுக்கு 'லிவிங் ஹெரிடேஜ்' (living heritage)அந்தஸ்தைக் கொடுத்து அங்கீகரித்தால், சென்னை நகரத்தின் நூற்றாண்டு கால அடையாளம் என்ற பெருமையை நொச்சிக்குப்பம் பகுதி அடையும் என்கிறார் எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத். சென்னை நகரத்தின் பழமை குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் இவர் 'சென்னபட்டணம் மண்ணும் மக்களும்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

''நடைமுறையில் செயல்பாட்டில் இல்லாத பழங்காலக் கட்டடங்களை நாம் பராமரிக்கிறோம். ஆனால் இங்கு மீனவர்கள், பல தலைமுறைகளாக மீன் விற்கிறார்கள் என்பதை நாம் ஏன் பெருமையாகக் கருதக்கூடாது? பழவேற்காடு முதல் சாந்தோம் வரை மீன்பிடி தொழில், மீன் விற்பனை நடந்ததைப் பற்றி கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பழமையான விற்பனைக் கூடங்கள் இன்றளவும் இயங்குகின்றன என்பதை நாம் கொண்டாடவேண்டும்,''என்கிறார் அவர்.

நொச்சிக்குப்பம்

மீன் மார்க்கெட்டை மீனவர்கள் புறக்கணிப்பது ஏன்?

போராட்டத்திற்குப் பின்னர் மீன் கடைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்று பிபிசி தமிழிடம் விவரித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து ஒழுங்கு செய்யப்படுவதால், மீன் விற்பனை தொடர்கிறது என்று தெரிவித்தார்.

''தற்போது காவல்துறையின் உதவியுடன் போக்குவரத்து நெரிசல் நேரத்தில் கடைகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. மற்ற வேளைகளில் கடைகள் இயங்குகின்றன. பட்டினப்பாக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை செல்லும் வழியில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் சாலையின் இரண்டு புறத்திலும் மீன் கடைகள் அமைந்திருக்கும். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் மீன் விற்பனையும், எதிர்ப்புறம் வலையை உலர்த்தும் இடமும், மீன் வெட்டிக் கொடுக்கும் கடைகளும் இருக்கும். மீன் வெட்டிக் கொடுக்கும் கடைகளைச் சிறிதளவு உள்புறமாக மீனவர்கள் நகர்த்தியுள்ளார்கள். போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். அதோடு நவீன மீன் மார்க்கெட் ஒன்றை ரூ.10 கோடி செலவில் கட்டி வருகிறோம். அந்தக் கட்டடம் வந்த பின்னர், மீன் கடைகள் அங்கு செயல்படும்,'' என்றார் ஆணையர் ககன்தீப்சிங் பேடி.

ஆனால் புதிய மார்க்கெட் வளாகத்தில் தங்களை அடைக்கக் கூடாது என்பது தான் மீனவர்களின் வாதம். தற்போது உள்ளது போலவே இருபுறமும் கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் மீனவர்கள். கடைகள் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து இந்த மீன் மார்க்கெட் வளாகம் சுமார் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆனால் இந்த வளாகம் தேவையில்லை என்கிறார்கள் மீனவர்கள். பொதுமக்கள் சாலையில் செல்லும்போது, நேரடியாகப் பார்த்து மீன் வாங்குவதை விரும்புகிறார்கள் என்றும் மார்க்கெட் அமைத்தால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, வந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள் மீனவர்கள்.

புதிய மார்க்கெட் வளாகத்தில் 380 கடைகள் மட்டும் செயல்பட இடம் தரப்பட்டுள்ளது என்பதால் இங்குள்ள சுமார் 500 கடைகளுக்கும் இடம் அங்கு இருக்காது என்கிறார் பாரதி. சென்னை மாநகராட்சி அமைக்கும் நவீன மார்க்கெட்டைப் புறக்கணிப்பது ஏன் என்றும் அரசாங்கத்தின் கட்டமைப்பை புறந்தள்ளுவது சரியா என்றும் பாரதியிடம் கேட்டோம்.

''சுனாமி, புயல் எனப் பல இயற்கைச் சீற்றங்கள் வந்த நேரத்தில் கூட, மீனவர்கள் கடற்கரைப் பகுதியில் தான் இருந்தோம். இது எங்கள் பூர்வீக இடம். கடற்கரையில் கடை அமைக்காமல், நாங்கள் ஏன் வேறு இடத்திற்குச் செல்லவேண்டும்? கடலில் இருந்து வந்ததும், வலையில் இருந்து மீனை எடுத்து உடனே விற்பனை செய்கிறோம். அதனால் பலரும் இங்கு வந்து விரும்பி வாங்குகிறார்கள். இதை ஏன் நீதிமன்றம் புரிந்துகொள்ளவில்லை.

எங்களைச் சார்ந்த விசயத்தில், எங்களைக் கேட்காமல், நீதிமன்றம் முடிவு செய்யலாமா? இங்கு மாற்றங்கள் செய்யவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு உள்ள உரிமைகளைப் போல, கடல் தாயின் மடியில் வாழ்ந்து மறையும் மீனவர்களான எங்களின் கருத்துகளுக்கும் மதிப்பு கொடுங்கள். எங்கள் தொழிலை நாங்கள் நடத்துவதற்கு ஏதுவாக மாற்றங்களைச் செய்யுங்கள். எங்களை வெளியேற்றாமல் எங்கள் வாழ்வாதாரத்தைக் கெடுக்காமல், எங்களுக்கும் உதவும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவாருங்கள்,''என்கிறார் பாரதி.

நொச்சிக்குப்பம்

நொச்சிக்குப்பம் யாருக்குச் சொந்தம்?

நொச்சிக்குப்பம் மீனவர்களைக் கடை போடக் கூடாது என்று சட்ட ரீதியாகச் சொல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான விடையைத் தெரிந்து கொள்ள, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமனைச் சந்தித்தோம். அவர் கடலும், கடலை ஒட்டி உள்ள இடமும் மீனவர்களின் பூர்வீக இடம் என்பதை யாரும் மறுக்கமுடியாது என்கிறார்.

''நொச்சிக்குப்பம் பகுதியில் லூப் சாலை என்ற பொதுச் சாலை ஒன்று அமைக்கப்படுகிறது. அதாவது மீனவர்கள் பல காலமாகத் தங்களது தொழிலுக்காகப் பயன்படுத்திய இடத்தில் சாலையை அரசாங்கம் அமைகிறது. ஆனால், அங்கு பல காலமாக விற்பனையில் ஈடுபட்ட மக்களை நீங்கள் உங்கள் கடைகளை இங்கு நடத்தினால் அது ஆக்கிரமிப்பு என்று நீதிமன்றம் சொல்கிறது. உடனே சென்னை மாநகராட்சி, கடைகளை அகற்றும் வேலையைச் செய்கிறது. இந்த அவரச நிலையில் துளி அளவும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை,''என்கிறார் அவர்.

பொதுச் சாலையில் எல்லோருக்கும் உரிமை உள்ளது என்பதால், மீனவர்களிடம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யவேண்டாம் என்று சொல்லலாம் ஆனால், கடை போடக் கூடாது என்று சொல்ல முடியாது என்கிறார். ''மீன்வர்களிடம் நீங்கள் மீன் விற்கக்கூடாது, படகுகளை நிறுத்தக் கூடாது, வலையை விரிக்காதீர்கள் என்று சொல்லமுடியாது. நெரிசலான நேரத்தில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லலாம். பொதுச் சாலையாக மாற்றப்பட்ட பகுதி காலங்காலமாக மீனவர்களுக்குச் சொந்தமான பகுதி. இன்றும் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்தும் பகுதியை ஆக்கிரமிப்பு என்று சொல்லமுடியாது,''என்கிறார் ஹரிபரந்தாமன்.

மேலும், சென்னை நகரம் மீனவ கிராமமாக இருந்தது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இன்றளவும் மீன்கடைகள் நொச்சிக்குப்பதில் இருப்பதைச் சான்றாகக் கொண்டு, அந்தப் பகுதியில் மீனவர்களின் உரிமையை நிலைநாட்டமுடியும் என்கிறார் அவர். ''மீனவ கிராமத்தில் மீன் இருப்பது தான் அழகு. அதில் அழகில்லை என்று கருதுவது நம் தவறு. கடற்கரை என்றால் மீனவர்கள் இருப்பார்கள், மீன் விற்பனை நடக்கும் என்பதை இயற்கையான அழகாக பார்க்கவேண்டும்,''என்கிறார் அவர்.

அதோடு, கடற்கரையை ஒட்டி, விதிகளை மீறிப் பல அரசியல்வாதிகள், திரைத்துறை நட்சத்திரங்கள் ஆடம்பர மாளிகைகளைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கட்டியுள்ளதை நீதிமன்றம் கண்டுகொள்ளாமல், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கை வைப்பது சரியல்ல என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: