ஜோசஃப் விஜய் திரையுலகில் தளபதியாக உயர்ந்த கதை - நீங்கள் அறிந்திராத தகவல்கள்

பட மூலாதாரம், ACTORVIJAY/KAYALDEVARAJ
- எழுதியவர், விக்ரம் ரவிசங்கர்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர் விஜய் தனது தன் 50ஆவது பிறந்த தினத்தை இன்று (ஜூன் 22), கொண்டாடும் நிலையில், அவர் திரையுலகுக்கு வந்து தனக்கென இடத்தைப் பிடித்து இன்று தளபதி என்ற பெயரில் வளர்ந்து நிற்பது எப்படி என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்த ஜோசஃப் விஜய்தான், இன்றைய தளபதி விஜய்.
அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பரபரப்பான கமர்ஷியல் டைரக்டராக இருந்த காலகட்டத்தில், வெற்றி, நான் சிவப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில், விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். சினிமா தான் எதிர்காலம் என்று அப்போதே முடிவு செய்துவிட்ட விஜய்க்கு, கல்லூரியில் காட்சி ஊடக இளங்கலைப் பிரிவில் சேர்ந்ததும் ஆர்வம் அதிகரித்தது. ஆனால், நடிக்கும் ஆர்வத்தில் பாதியில் கல்லூரிப்படிப்பை கைவிட்டார்.
அம்மா ஷோபா திரைக்கதை எழுத, அப்பா சந்திரசேகரனின் இயக்கத்திலேயே "நாளைய தீர்ப்பு" என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய். அந்தத் தலைப்புக்கு ஏற்ப, இப்போதைய உயரத்தை விஜய் எட்டுவார் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நாலு ஃபைட்டு, அஞ்சு பாட்டு
இவரின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. முதல் படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திராத விஜய்க்கு பட்டித்தொட்டியெங்கும் அறிமுகம் கிடைக்கவேண்டும் என அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுதான் விஜயகாந்துடன் விஜய்யை இணைத்து அவர் இயக்கிய 'செந்தூரப்பாண்டி' திரைப்படம். எதிர்பார்த்தது நடந்தேறி விஜய் கிராமங்களுக்குள்ளும் ஊடுருவினார். விஜய் என்கிற நடிகனை தமிழ் ரசிகர்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றது அந்தப் படம்தான்.

பட மூலாதாரம், ALAGAPPAN
தொடர்ந்து தந்தையின் இயக்கத்திலேயே ரசிகன், தேவா, விஷ்ணு என அடுத்தடுத்த படங்களில் நடித்த விஜய், நடனம், நடிப்பு, ஆக்ஷன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொண்டார்…
வெற்றியின் முதல் படிக்கட்டு
நாலு ஃபைட்டு, அஞ்சு பாட்டு, என்று ஒரு ஃபார்முலா வளையத்திற்குள் சாதாரண ஹீரோவாகவே வலம் வந்த விஜய்யை 1996ஆம் ஆண்டு வெளியான 'பூவே உனக்காக' படத்தின் மூலம் வெளியே கொண்டு வந்தவர் இயக்குனர் விக்ரமன் தான். முந்தைய படங்களால் உருவாகியிருந்த எண்ணங்களைச் சட்டென்று மாற்றியதோடு, தமிழ் சினிமாவுக்கு விஜயை ஒரு நடிகராக அடையாளம் காட்டியது பூவே உனக்காக. இந்தப் படத்தில் விஜய் க்ளைமாக்ஸில் பேசும் காதல் வசனங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகின. பூவே உனக்காக விஜய்யுடைய வெற்றியின் முதல் படிக்கட்டு என்றுதான் சொல்லவேண்டும்.
விஜய்யின் குடும்ப வாழ்க்கைக்கு அச்சாரமிட்டதும் அந்தப் படம்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது... இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டு, லண்டனில் படித்து வளர்ந்த ஈழத்தமிழர் சங்கீதா, 'பூவே உனக்காக' படத்தைப் பார்த்து விஜய்யின் தீவிர ரசிகை ஆனாராம்... விஜயைப் பார்ப்பதற்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்தவர், ரசிகை என்று அறிமுகமாகி, தோழியாகி, பின் காதலியாகி இருக்கிறார்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வெளியாகி வெள்ளிவிழா கண்ட 'லவ்டுடே' இளைஞர்களிடம் விஜய்க்கான தனி இடத்தை உறுதிப்படுத்தியது.

பட மூலாதாரம், TWITTER @KAYALDEVARAJ
1998ல் சங்கிலி முருகன் தயாரிப்பில், ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, விஜய் தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையென அனைவரையும் உணர வைத்தது. விஜய் என்றால் விடலைப்பசங்கதான் ரசிகர்கள், என்ற இமேஜை உடைத்து தமிழ்த்திரை உலகையே கலக்கிய படம் அது... இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். விஜய்-ஷாலினி இருவரும் புக் ஸ்டாலில் முதன்முதல் காதல் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் காட்சியின் கவிநயம் யாரையும் விஜய் ரசிகனாக மாற்றிவிடும். இந்தப் படத்தின் வெற்றி அதுவரை இளைஞர்கள் மட்டுமே பார்த்து வந்த விஜய்யின் படங்களுக்கு வயதானவர்களையும் இழுத்துவர ஆரம்பித்தது.
வித்தியாசமான வேடத்தில் முயற்சி செய்வோமே என பிரியமுடன் படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் சவாலான வேடத்தையும் ஏற்று நடித்தார் விஜய். அவரது கேரியரில் அது முக்கியமான படமும் கூட. கிட்டத்தட்ட சைக்கோ வில்லன் கேரக்டர். நாயகியின் அப்பாவை பேசிக்கொண்டே மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யும்போது விஜய் பிரமாதமாய் நடித்திருப்பார். க்ளைமாக்ஸ்சில் தனது காதலைப்பற்றி சொல்லிக்கொண்டே உயிர் விடும் காட்சியிலும் கலக்கினார்.
சங்கீதாவை கரம்பிடித்த விஜய்
1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் நாள் குடும்பத்தினர் ஆசிர்வாதத்தோடு காதலி சங்கீதாவின் கரம்பிடித்தார் விஜய். திருமணம் ஆனவுடனேயே விஜய்யின் சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றுவரை அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற உடைகளை மட்டுமே அணிகிறார் விஜய்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், எழிலின் இயக்கத்தில் வெளியான 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் அவர் ஏற்றிருந்த 'குட்டி' கதாபாத்திரமும் சிம்ரனுக்கும் அவருக்குமான கவித்துமான காதலும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டர்களுக்கு அழைத்து வந்தன. க்ளைமாக்சில் `இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை` பாட்டுக்கு சிம்ரன் விஜய் இருவரும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள்... அருமையான கதை, இனிமையான பாடல்களுடன், விஜய்யின் நடிப்பும் நடனமும் நகைச்சுவையும் இந்தப் படத்தை வெள்ளிவிழா காண வைத்தன..
காதலுக்கு மரியாதை கொடுத்த ஃபாசிலின் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு வெளியான கண்ணுக்குள் நிலவு வசூல் ரீதியாக தோல்வியடைந்தாலும், விஜய்க்கும்,அவரது ரசிகர்களுக்கும் முக்கியமான படமாக அமைந்தது. அவர் நடித்த படங்களிலேயே அதிக அளவு வித்தியாசமான முக பாவங்களை வெளிப்படுத்திய படம் இதுதான். வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஆனால், அந்த சஸ்பென்ஸ் ஓவர்டோஸ் ஆகியதால் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான ''குஷி'' படத்தின் மூலம் விஜய்யின் இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோவை விஜய் ஜோதிகா இருவருமே அற்புதமாக பிரதிபலித்திருந்தனர்... பல இடங்களில் ஜோதிகாவின் நடிப்பை, விஜய் அண்டர்பிளே செய்து சமன்படுத்தியிருப்பார்.
நகைச்சுவை நாயகனாக விஜய்
சித்திக் இயக்கத்தில் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடு போட்ட படம் ஃப்ரெண்ட்ஸ்... வடிவேல் சர்வசாதாரணமாக விஜய்யை வாடா போடா என சகட்டு மேனிக்கு திட்டுவது போல் காட்சிகள் இருந்தாலும் விஜய் பெருந்தன்மையாக அதில் நடித்து, பாத்திரத்துக்கு உயிர் ஊட்டியிருந்தார். திரைக்கதையையும்,காமெடியையும் நம்பினாலே சக்சஸ் உறுதி என்பதை உணர்த்திய படம் அது.
தொடர்ந்து பிரியமானவளே, பத்ரி, ஷாஜகான், யூத், பகவதி என அடுத்தடுத்த கமர்ஷியல் திரைப்படங்கள் மூலமாக தனக்கான நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொண்டதோடு, ரசிகர்களின் எண்ணிக்கையையும் பெருக்கிக்கொண்டார் விஜய்.
2003ஆம் ஆண்டு கே.செல்வபாரதி இயக்கத்தில் வெளியான வசீகரா திரைப்படத்தில், குறும்புத்தனமான கதாப்பாத்திரம் ஏற்று தனது வித்தியாசமான காமெடி சென்சை வெளிப்படுத்தியிருந்தார்... படம் முழுக்க நகைச்சுவை தோரணங்கள் கொடி கட்டிப்பறக்கும்.

பட மூலாதாரம், SUN PICTURES
காதல் நாயகனாகவே வலம் வந்து கொண்டிருந்த விஜய்க்கு இயக்குனர் ரமணா திருப்பத்தைக் கொடுத்தார். அவர் இயக்கிய திருமலை படம் விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியதோடு, பஞ்ச் டயலாக் பேசவும் வைத்தது. இந்த படத்திலிருந்துதான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது என்றுகூட சொல்லலாம். விஜய் நடித்த படமென்றால் நிச்சயம் கல்லா கட்டும் என்று தியேட்டர் அதிபர்களும் நம்பத் தொடங்கியது அந்த காலகட்டத்தில் தான்...
அந்த நம்பிக்கை தில், தூள் என்று தொடர் ஹிட்டுகளைக் கொடுத்துவந்த இயக்குனர் தரணிக்கும் வந்ததால், தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்கிற்காக விஜய்யை சந்தித்தார். அந்த சந்திப்பு விஜய்யின் சரித்திரத்தையே மாற்றி எழுதியது... 2005ஆம் ஆண்டு வெளியான `கில்லி` திரைப்படத்தின் வீச்சு, படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தவர்களின் பரவசமான முகங்களில் பிரதிபலித்தது. `அப்படிப் போடு... போடு` என்று தமிழ்நாடே ஆடித் தீர்த்தது... தன்னை சுற்றி வளைத்த பல நூறு பேரை ஒற்றை ஆளாய் சமாளித்த விஜய்யின் சாகசம் ஏன், எப்படி என்று கேட்காமல் ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது. சொல்லப்போனால் சிறு குழந்தைகள்கூட விஜய்க்கு ரசிகர்களாக மாற ஆரம்பித்தது அந்த தருணத்தில்தான்.
தொடர்ந்து இயக்குனர் பேரரசுவின் கூட்டணியில் திருப்பாச்சியும், சிவகாசியும் விஜய்யின் வெற்றிக்கு கலர் சாயங்கள் பூசின. திருப்பாச்சி படத்தில் அவரின் தங்கை சென்டிமென்ட் தாய்மார்களிடையே பரவசத்தை ஏற்படுத்த, எதிரிகளை வீழ்த்த அவர் வகுக்கும் வியூகம் ரசிகர்களின் கைதட்டலை அள்ளியது. குறிப்பாக திருப்பாச்சி அருவா பற்றி வில்லனிடம் அவர் பேசும் வசனம் அன்றைய குழந்தைகளின் ரைமிங்காகவே மாறிப்போனது.
அடுத்து வந்த சில படங்கள் விஜய்க்கு சரியாகப் போகாத நிலையில், பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளியான தெலுங்கு ரீமேக்கான 'போக்கிரி' அசுரத்தனமான வெற்றியைப் பெற்று விஜய்யின் பின்னடைவைப் போக்கி முன்னுக்குக் கொண்டு வந்தது... இந்தப் படத்தில் விஜய்யின் டயலாக் டெலிவரியும், பாடி லாங்குவேஜ்ஜும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. ''நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்'' என்று விஜய் பேசும் வசனத்தை படம் பார்த்துவிட்டு வந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான இடங்களில் எல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.

பட மூலாதாரம், @ACTORVIJAY
வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்தாலும் சில காலகட்டங்கள் அவருக்கு கொஞ்சம் சோதனையாக அமைந்ததை மறுக்க முடியாது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், அவரை தூக்கி நிறுத்திய படம் தான் காவலன்... ஃப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் விஜய்க்கு ஒரு சூப்பர்ஹிட் கொடுத்த சித்திக் மலையாளத்தில், தான் இயக்கிய பாடிகார்ட் படத்தை, தமிழில் காவலனாக மாற்றினார்... ஆக்ஷன் ஹீரோ விஜய் இதில் அழகான காதலனாகவே மாறிப்போனார்…

பட மூலாதாரம், @ACTORVIJAY
பிடிக்காதவர்களையும் கவர்ந்த விஜய்
அடுத்து வந்த வேலாயுதம், நண்பன் இரண்டு படங்களும் வெற்றிப்படங்கள் தான் என்றாலும் போக்கிரிக்குப் பிறகு அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த படம் என்று ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் வெளியான துப்பாக்கியைத்தான் சொல்ல வேண்டும்... தீவிரவாதிகளை வேரறுக்க விஜய் கையாளும் வித்தியாசமான நகர்வுகள், பிடிக்காதவர்களைக் கூட இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு ரசிகர்களாக மாற்றியது…
புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்திய முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் விஜய். நண்பன், துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு பிரபல இயக்குனர்கள் விஜய்யின் கால்ஷீட்டுக்கு காத்திருந்தும் கூட, ஒரேயொரு படத்தை மட்டுமே இயக்கிய நேசன் என்ற ஒரு இயக்குனருக்குதான் தனது ஜில்லா படத்தை இயக்கும் பொறுப்பை தந்தார். விஜய்யின் இந்த பண்பு நிச்சயம் கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்… இதே பண்புதான் தன்னை வைத்து அழகிய தமிழ்மகன் என்றொரு தோல்விப்படம் கொடுத்த இயக்குனர் பரதனை மீண்டும் அழைத்து பைரவா எனும் வெற்றிப்படத்தை கொடுக்க வைத்துள்ளது.

பட மூலாதாரம், @ACTORVIJAY
மாபெரும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற தருணத்தில் கூட, தனது இயக்குனரின் முந்தைய படங்களைப் பற்றி கவலைப்படாமல் கால்ஷீட் கொடுப்பவர் விஜய். இயக்குநர் ஏ.எல்.விஜயின் முந்தைய படம் வெற்றியடையவில்லை என்றாலும், துப்பாக்கி-க்குப் பிறகு அவர் நடித்தது ஏ.எல்.விஜயின் தலைவா படத்தில்தான்... அதற்கு இன்னொரு உதாரணமாக சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான புலி படத்தைச் சொல்லலாம்...
குழந்தைகள் அதிகம் விரும்பும் நடிகர் என்பதால், அவர்களுக்காக ஒரு படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் நடித்த ஃபேண்டசி ரகப்படம்தான் புலி. பெரும் பொருட்செலவில் தயாரான இந்தப் படமும் சரியாகப் போகவில்லை.
இருந்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு குழந்தைகளின் பேராதரவைப் பெற்ற நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் விஜய்தான். எதைக் கொடுத்தும் குழந்தைகளை விலைக்கு வாங்க முடியாது. விஜய்யின் படங்கள், அவரின் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் குழந்தைத்தனத்தின் வெற்றியாகக் கூட இதனைச் சொல்லலாம்.
மாஸ் ஹீரோவான விஜய்யைக் கொண்டு கமர்ஷியல் கலாட்டாக்களுடன் நிதர்சன அரசியலையும் பேசும் ஏ.ஆர்.முருகதாசின் முயற்சிதான் கத்தி. துப்பாக்கியைப் போன்றே இவர்கள் கூட்டணியில் இந்தப் படமும் செம்ம ஹிட். சிறையின் ப்ளூபிரின்ட் பார்த்து விஜய் ஸ்கெட்ச் போடுவது, காயின் கேமில் ரௌடி கும்பலைச் சிதறடிப்பது, என ஒவ்வோர் அத்தியாயமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
ஏர்.ஆர்.முருகதாசைப் போல், இயக்குனர் அட்லியின் கூட்டணியும் விஜய்க்கு, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து கைகொடுத்தது. அப்படங்களில், தொண்ணூறுகளில் வந்த சில வெற்றிப்படங்களின் சாயல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், விஜய் நடிப்பில் அவை புதியதாகவே ரசிகர்களுக்குத் தெரிந்தன. வசூலும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
திறமையாக டான்ஸ் ஆடும் தென்னிந்திய ஹீரோக்களில் விஜய் முக்கியமானவர் என்பதை மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் ஒப்புக்கொள்வார்கள். ``200 நடனக்கலைஞர்களுக்கு மத்தியில், ஆடினாலும் விஜய் தனியாகத் தெரிவார்`` என்கிறார், அவருடன் பல படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் பிருந்தா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``நடனத்தைப் பொறுத்தவரையில், ஒருமுறை பார்த்தால் போதும், பயிற்சியே தேவையில்லை, பிழையில்லாமல் அப்படியே ஆடக்கூடியவர், அமைதியான மனிதர், அவர் பேச மாட்டார், அவருடைய வேலைதான் பேசும்`` என்கிறார் பிருந்தா. ``எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாத இயல்பான மனிதர் விஜய்`` என்று மேலும் கூறினார் நடன இயக்குனர் பிருந்தா.

பட மூலாதாரம், BRINDA GOPAL
நடனம் நடிகனுக்கு அவசியம் என்றாலும், சக நடிகர்கள் பலரும் முயற்சிக்காத காலத்தில் இருந்தே சொந்தக் குரலில் பாடல்களையும் பாடத்தொடங்கியவர் விஜய்.
90களில் வெளியான விஜய் படங்களில் அவர் சொந்தக்குரலில் இடம்பெற்ற தொட்டபெட்டா ரோட்டு மேல, அய்யய்யோ அலமேலு போன்ற பாடல்கள் மிகப் பிரபலம். தான் நடித்திராத சில படங்களில் கூட பாடியுள்ளார் விஜய். தற்போதுவரை துப்பாக்கியில் செல்ஃபி புள்ள, ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி, மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி போன்ற பாடல்கள் விஜய்யின் குரலில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.
காதலுக்கு மரியாதை படத்துக்காக 1998-ல் ஒருமுறையும், 2005-ல் திருப்பாச்சி படத்திற்காகவும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை இருமுறை பெற்றுள்ளார் விஜய்.
ஜோசஃப் விஜய்யாகப் பிறந்து, விஜய் என அறிமுகமாகி, இளையதளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர், தற்போது தளபதி விஜய்யாக வளர்ந்து நிற்கிறார்.

பட மூலாதாரம், BHARADWAJ RANGAN
"விஜயுடைய சினிமா வாழ்க்கையில், இந்த காலகட்டத்தை மிகவும் முக்கியமானதாகவும், சுவாரசியமானதாகவும் நான் பார்க்கிறேன்" என்கிறார் திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன். "கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக மட்டுமே கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்துகொண்டிருந்த விஜய், தற்போது தன்னுடைய திருப்திக்காகவும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். அதேவேளையில், ரசிகர்களை மகிழ்விப்பதிலும் கவனம் செலுத்துகிறார்.'' என்று பிபிசி தமிழிடம் கூறினார் பரத்வாஜ் ரங்கன்.
ஆனால், கடைசியாக வெளிவந்த அவருடைய பீஸ்ட் திரைப்படம் வரை, எல்லாமே கமர்ஷியல் மசாலா படங்கள் போலத்தானே தெரிகிறது என்று கேட்டோம். அதற்கு அவர், ''ஒரு திரைப்படம் முழுமையாகத் தயாரானபிறகு எப்படி இருக்கிறது என்பது வேறு, அந்தப் படத்தில் நடிக்க நடிகர் ஒப்புக்கொண்டு கையெழுத்திடும்போது அதன் நிலை வேறு. மாஸ்டர் திரைப்படத்தில் குடிகார பேராசிரியர் கதாப்பாத்திற்கு, பழைய விஜய் கண்டிப்பாக ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். பீஸ்ட்-ம் அதுபோலத்தான். படத்தில் அப்பா அம்மா யாரு?, தங்கச்சி இல்லையா? செண்டிமெண்ட் இல்லையா? என எந்தக் கேள்வியும் கேட்காமல், இதுவரை பண்ணாத கதாப்பாத்திரமா? என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் விஜய். இது, சினிமாவில் அவரின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என்றே நான் கருதுகிறேன்'' என்கிறார் திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












