வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

பட மூலாதாரம், IMD
மலாக்கா நீரிணை பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'சென்யார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மலாக்கா நீரிணையில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 'சென்யார்' புயலாகத் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இன்று காலை 07:30 - 08:30 மணி நிலவரப்படி, சென்யார் புயல் இந்தோனீசியா கரையைக் கடந்துள்ளது. அப்போது காற்று 70-80 கிலோமீட்டர் வேகம் வரையிலும் சில நேரங்களில் 90 கிலோமீட்டர் வேகம் வரையும் சென்றதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு இந்தோனீசியா கரை அருகே சென்யார் புயல் மையம் கொண்டுள்ளது.
"நவம்பர் 26, 2025 மதியம் 01:15 மணி நிலவரப்படி, 'சென்யார்' புயல் நான்கோவ்ரிக்கு (நிக்கோபார் தீவுகள்) கிழக்கு - தென்கிழக்கே 580 கிமீ மற்றும் கார் நிக்கோபருக்கு (நிக்கோபார் தீவுகள்) தென்கிழக்கே 730 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது."
அதன் பிறகு, "அது மேற்கு - தென்மேற்கு நோக்கி நகர்ந்து, 27ஆம் தேதி காலை வரை புயலின் தீவிரத்துடன் இருக்கும் என்றும் அதற்கடுத்த 24 மணிநேரத்தில் படிப்படியாக வலுவிழந்து கிழக்கு நோக்கித் திரும்பும்" எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மற்றொரு சுழற்சி
இது தவிர, ''நேற்று தென்மேற்கு வங்ககடல் பகுதியை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது''. என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து இது மேலும் வலுவடைந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அதற்கடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கரையை நோக்கி நகரும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், IMD
சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா நவம்பர் 24 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இந்த இரு சுழற்சிகளாலும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்?

பட மூலாதாரம், Getty Images
நவம்பர் 26: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நவம்பர் 27: தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 28: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 29: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும்
இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 30: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் சில இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
'ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ள வானிலை ஆய்வு மையம், 'தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நவம்பர் 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்' என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் என்ன நிலை?

பட மூலாதாரம், Getty Images
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 15 சென்டிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், ஏனைய பகுதிகளின் சில இடங்களில் 100 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடை 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதுடன், ஏனைய பகுதிகளில் இடைக்கிடை 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல பகுதியில் கடந்த 21ம் தேதி பாரிய கல்லொன்று சரிந்து ஏற்பட்ட மண்சரிவில் 6 பேர் உயிரிழந்திருந்ததுடன், மாவனெல்ல பகுதியில் 23ம் தேதி முச்சக்கரவண்டியொன்றின் மீது மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, பதுனை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட, ஹங்குரங்கெத்த ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை எச்சரிக்கைகளே விடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளன. கடந்த சில தினங்களாக மழையுடனான வானிலை நிலவிவந்த போதிலும், இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அதிகளவான மழையுடனான வானிலை நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் சமீபத்திய பாதிப்பு என்ன?
இலங்கையை அண்மித்து ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்துக்கு இந்த சீரற்ற வானிலையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பல தாழ் நில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. காரைதீவு மாவடிப்பள்ளி அம்பாறை வீதியில் அமைந்துள்ள மதகின் ஊடாக வெள்ள நீர் செல்வதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதுடன், மோட்டார் சைக்கிள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கிட்டங்கி வீதியும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. அதே போன்று அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு திருக்கோவில் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சாகாமவீதி மதகின் ஊடாக வெள்ளம் செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சம்மாந்துறை மல்வத்தை வீதியும் நீரில் மூழ்கியுள்ளது
ஒரே நேரத்தில் உருவான இரு சுழற்சிகள்
வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் ஒரே நேரத்தில் இரு சுழற்சிகள் உருவாவது மிக அரிதான ஒரு நிகழ்வு என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மலாக்கா கடல் பகுதியில் புயல் உருவாகிவிட்டது. இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மலாக்கா பகுதி வங்கக் கடல் பகுதி இல்லை என்றாலும் வங்கக் கடல் - அந்தமான் கடல் பகுதி, அதை ஒட்டியுள்ள பகுதிகளை ஒன்றாகவே கருதுவார்கள்.
சில தருணங்களில் ஒரு புயல் சின்னம் வங்கக் கடலிலும் மற்றொரு புயல் சின்னம் அரபிக் கடல் பகுதியிலும் உருவாகும் என்றாலும் வங்கக் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் இப்படி இரண்டு சுழற்சிகள் உருவாவது மிக மிக அரிது" என்றார்.
இப்போது மலாக்கா கடல் பகுதியில் உருவாகியுள்ள புயலைப் பொறுத்தவரை, அது விரைவிலேயே வலுவிழந்துவிடும் எனக் கூறும் ஸ்ரீகாந்த், இலங்கையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவித்தார்.
"பசிபிக் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல் பகுதிகளில் இதுபோல ஒரே நேரத்தில் இரு புயல்கள் உருவாகும் நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும் என்றாலும் வங்கக் கடல் பகுதி, அரபிக் கடல் பகுதி போன்ற கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் இதுபோல உருவாவது மிக அரிது. இதற்கு முன்பு 2019இல் அரபிக் கடல் பகுதியில் ஓர் அரிதான நிகழ்வாக மகா, கியார் என இரு புயல்கள் உருவாயின," என்கிறார் ஸ்ரீ காந்த்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












