எடப்பாடி பழனிசாமி: "திமுகவின் 'பி' அணி ஆக செயல்படும் ஓபிஎஸ்" - தேர்தல் ஆணைய அறிவிப்புக்குப் பிறகு பேசியது என்ன?

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் பி அணியாக செயல்பட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 10 நாட்களுக்குள் தமது நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு அவரது தலைமையை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.
இதேவேளை, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "இன்றைய தினம் தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே நீதிமன்றமும் பொதுக்குழு கூட்டம் நடந்தது செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.

அத்துடன் ஏற்கெனவே நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கழக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்த தேர்தலில் கழகத்தின் அனைத்து பொது உறுப்பினர்களும் வாக்களிக்கும் சூழலை உருவாக்கி, ஏகமனதாக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதிமுகவை பொறுத்தவரை இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும். அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பீடுநடை போடச் செய்வோம். நீண்ட சட்ட போராட்டத்துக்குப் பிறகுதான் வெற்றி பெற்றுள்ளோம்," என்று கூறினார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதால் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய அழைப்பு விடுப்பீர்களா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
"ஒரு சிலர் தவிர மற்றவர்கள் வரலாம்"

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "இனி எங்களுடைய பணியே வேறு. மற்றவர்களை பற்றி பேசி எங்களுடைய காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. உண்மையாக கட்சியை நேசிப்பவர்கள் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரு சிலரைத் தவிர அனைவரும் கட்சிக்கு திரும்ப வரலாம். இந்த அழைப்பை ஏற்கெனவே விடுத்திருக்கிறோம்," என்று பதிலளித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இது தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒற்றைத்தலைமை என என்னை அழைக்க வேண்டாம். நான் ஒரு சாதாரண தொண்டன்தான். கட்சிக்கு ஒரு தலைமை தேவை. அதன் அடிப்படையில் மூத்த உறுப்பினர்கள், தலைமைக்கழக உறுப்பினர்கள் எனக்கு கட்சியின் பொதுச்செயலாளருக்கான வாய்ப்பை அளித்துள்ளனர்," என்று கூறினார்.
"அதிமுக என்பது ஒன்றுதான். அதில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சில சுயநலவாதிகள் பிரிந்து விட்டனர். மற்றபடி இங்கே இருப்பவர்கள் நிறைவாக உள்ளனர். கட்சிக்கு தற்போது ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதை இரண்டு கோடியாக்கும் எண்ணத்துடன் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஓபிஎஸ் வகிக்கும் பதவி

சட்டப்பேரவை உருவாக்கப்பட்ட காலம் முதலே, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி உள்ளது. அதை அமைப்பது மரபு. எனவே எங்களைச் சார்ந்த ஒருவரே துணைத் தலைவராக வருவதற்கு உரிமை உள்ளது. இது தொடர்பாக மீண்டும் சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் கொடுப்போம். அவர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் தமது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டபோது நிராயுதபாணியாகி விட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சில கும்பல்களுடன் வந்தது யார், யார் ஜெயலலிதாவின் அறை கதவை உடைத்தது, பொருட்களை அபகரித்துச் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்துவதற்காக பேரவையில் பேசுகிறார். அவர் ஆளும் திமுகவின் பி டீம் ஆகவும் கைப்பாவையாகவும் செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ஆளும் திமுக, ஓபிஎஸ் மற்றும் சிலரை பயன்படுத்தி நாடகத்தை அரங்கேற்றியது. அதிமுக தலைமை அலுவலகம் எம்ஜிஆர், ஜெயலலிதா பணியாற்றிய புனிதமான இடம்.இங்கு யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
20.08.2023 அன்று மதுரையில் அதிமுகவின் மாநில மாநாட்டை நடத்திக் காட்டுவோம் என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












