மதுரை ரயில் பெட்டியில் தீ - காணாமல் போன சிறுவன் உள்பட 6 பேர் எங்கே? புதிய தகவல்

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருந்த பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் பெட்டியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து குறித்து தடயவியல் துறையினர் இரண்டாவதுநாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அங்கு ஓர் இரும்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதில் கட்டுக்கட்டாக 500, 200 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் இருந்துள்ளது. மதுரை ரயில் பெட்டி விபத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்து விட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில் ரயில் நிலையங்களில் செய்யப்படும் பரிசோதனைகளையும் மீறி சமையல் செய்வதற்கான எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்புகள், விறகுக் கட்டைகளை அவர்கள் சட்டவிரோதமாகக் கொண்டு வந்தது எப்படி? தீ விபத்து எப்படி நேரிட்டது? அதிக உயிர் பலி ஏற்படக் காரணம் என்ன? விபத்துக்குப் பிறகு காணாமல் போன 6 பேரும் எங்கே?
டிராவல்ஸ் நிறுவனம் மூலம் ஆன்மீக சுற்றுலா
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னௌ அருகே அமைந்துள்ள சித்தாப்பூரில் செயல்பட்டு வரும் (Basin Tour & traves) பாசில் டூர் & ட்ராவல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தென் தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்கு யாத்திரை ஏற்பாடு செய்து இருக்கிறது.
அந்த சுற்றுலா நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட 64 பேர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தங்களது பயணத்தை லக்னோவில் இருந்து ரயில் மூலம் தனிப் பெட்டியில் பயணத்தை துவங்கி இருக்கின்றனர்.
ஒரு ரயில் பெட்டியில் மட்டுமே இந்த யாத்ரீகர்கள் பயணிகள் பயணம் செய்து இருக்கிறார்கள். ஆகவே அந்த வழியாக செல்லும் ரயிலுடன் இவர்களது ரயில் பெட்டி இணைக்கப்பட்டு அந்த ஊருக்குச் சென்று அங்கே தரிசனம் செய்து வந்து இருக்கிறார்கள்.
ரயில் செல்லும் நேரத்திற்கு முன்பே ரயில் நிலையத்திற்கு சென்றதால் அவர்களது ரயில் பெட்டி தனியாக நிறுத்தி வைக்கப்பட்டு ரயில் நேரத்தின் பொழுது அந்த குறிப்பிட்ட ரயிலுடன் இணைக்கப்பட்டு அவர்கள் மற்ற ஊர்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்திருக்கின்றனர்.
திருவனந்தபுரம் பத்பநாப சுவாமி கோவில். நாகர்கோவில் உள்ள நாகராஜா கோவில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை ஆகிய இடங்களுக்கு நேற்று அவர்கள் சென்றுள்ளனர். பின்னர், நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து ரயில் மூலம் மதுரை அதிகாலை 3: 45 மணியளவில் மதுரைக்கு அவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

விபத்து நேரிட்டது எப்படி? அதிக உயிர் பலி ஏன்?
மதுரை ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் போடி ரயில் பாதையில் இவர்களது ரயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இரயிலின் உள்ளேயே டீ போடுவதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து இருக்கின்றனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த கேஸ் சிலிண்டர் வெடித்து ரயில் பெட்டி முழுவதும் தீப்பிடிக்க தொடங்கி இருக்கிறது.
ரயில் பெட்டி முழுவதும் புகை சூழ்ந்ததால் பயணிகள் அலறல் சத்தம் கேட்டு ஒவ்வொருவராக வேகவேகமாக கீழே இறங்கி இருக்கின்றனர். ரயில் பெட்டியின் ஒரு புற ரயில் கதவு அருகே சமையல் செய்யும் பணி நடைபெற்றதால் அந்த வழியாக செல்ல முடியாத அளவிற்கு இரு கதவையும் பூட்டி வைத்து இருக்கிறார்கள்.
இதன் காரணமாக ஒரு புறத்தில் இருக்கு இரு கதவுகள் வழியே மட்டுமே பயணிகள் இறங்கக் கூடிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டதால் 9 பேர் ரயிலின் உள்ளேயே மாட்டிக்கொண்டு இறந்து இருக்கின்றனர்.



சிலிண்டர், விறகு, அடுப்புகளை ஏற்றியது எப்படி?
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர் என் சிங் "இந்த விபத்து ஒரு சோகமான நிகழ்வு. லக்னௌ ரயில் நிலையத்தில் பரிசோதனைக்கு பிறகு ரயில் பயணிகள் ரயில் பெட்டியில் ஏற்றி அவரது யாத்திரை பயணத்தை துவங்கியுள்ளனர்.
சட்டவிரோதமாக சுற்றுலா நிறுவனத்தார் சிலிண்டர், அடுப்புகள், விறகுகளையும் ஏற்றி இருக்கலாம். இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டப்படியும் ரயில்வே சட்டப்படியும் விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்றே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவரது உடல்கள் விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்படும்", தெரிவித்தார்.

விபத்து நேரிட்டது எப்படி? உயிர் தப்பிய பயணி தகவல்
தீ விபத்தில் காயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லக்னௌவை சேர்ந்த அசோக்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது, "ரயில் விபத்து குறித்து பேசும்பொழுது பாசின் டூர் & டிராவல் நிறுவனத்தில் ரூ.21,700 பணம் செலுத்தி சுற்றுலாவிற்கு வந்தோம். சுற்றுலா பயணிகள் யாரும் சிலிண்டர் போன்ற உபயோக பொருள்களை எடுத்து வரவில்லை. டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து 5 முதல் 7 பேர் இந்த ரயில் பயணத்தில் பயணித்தனர். அவர்களே ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் சமைத்து எங்களுக்கு தந்து வந்தனர். இன்று காலை அதேபோல் ரயிலின் உள்ளே சமைத்த போது விபத்து ஏற்பட்டது", என்று கூறினார்.
இது தொடர்பாக அந்த பாசின் டூர் & டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள்

விபத்திற்குள்ளான ரயில் பெட்டியில் பயணித்த மற்ற பயணிகள், ரயில் நிலையத்தின் பாதுகாப்பு அறையில் இருந்து இன்று(ஆகஸ்ட் 27) காலை சிறப்பு விமானம் மூலம் மதுரையிலிருந்து லக்னெளக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரயில் விபத்து நடைபெற்ற பெட்டியில் இரண்டாவது நாளாக ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, விபத்து நடந்த இடத்தில் பயணிகள் கொண்டு வந்திருந்த இரும்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதில், 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காணாமல் போன 6 பேரும் எங்கே?
மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் ரயிலில் இருந்து சிலர் மாயமாகி இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இவர்கள் எங்கே சென்றார்கள் என்பது குறித்து ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இது குறித்து ரயில்வே இருப்புப் பாதை உயர் அதிகாரி கூறும் போது, " இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் காசிம், ஹரிஷ் குமார் பாசிம் ஆகிய இருவரும் பாசிம் சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் 10 பேர் யத்திரைப் பயணிகளுக்குத் தேவையான பணிகள் செய்ய இந்த சுற்றுலா ரயில் பெட்டியில் பயணம் செய்திருக்கிறார்கள். இன்று 49 பேர் அவர்களது லக்னெளக்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
9 பேரின் உடல்கள் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு சென்னை எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சிறப்பு விமான மூலம் லக்னோ கொண்டு செல்லப்பட்டது.
மீதம் இருந்த ஒரு சிறுவன் உட்பட 6 பேரை இன்று ரயில்வே இருப்புப் பாதை போலீசார் மீட்டு அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் ரயில் பெட்டி விபத்துக்கு முன்பாக இறங்கி அருகிலே கழிப்பறை மற்றும் சிலர் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தமாக இந்த ரயில் பணியின் மீட்பு பணிகள் நிறைவடைந்து இருக்கின்றனர்", என்றார்.
அதிகாரிகள் ரயில் பெட்டி விபத்து குறித்து விசாரணையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












