இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்து: சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான் - இந்தியா நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
மழை காரணமாக இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டது.
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்தத் தொடர் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் போட்டியில் நேபாளம் அணியை பாகிஸ்தான் அணியும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியை இலங்கை அணியும் வென்றன.
இலங்கையின் பெல்லகெலேவில் ஆசிய கோப்பையின் மூன்றாவது போட்டி, இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஷ்ரேயாஸ் அய்யர் இன்று இந்திய அணியில் விளையாடினார். இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களில் பும்ரா, சிராஜ் இடம்பெற்றனர். ஷமி இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
தடுமாறிய இந்திய அணி- கைகொடுத்த இஷான் மற்றும் ஹர்திக் ஜோடி

பட மூலாதாரம், Getty Images
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியினர், நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். முதலில் களம் இறங்கிய ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.
சரியாக 14.1 ஓவர் முடிவில் 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. அதற்கு பிறகு களத்தில் இருந்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இஷான் கிஷன் 81 பந்தகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் விளாசி, 82 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது, 37 வது ஓவரி்ல் ஹரிஸ் ரவுஃப் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார் இஷான் கிஷன்.
அதற்கு பிறகு, 43 வது ஓவரில் ஷஹீன் அப்ரிடியின் பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். 13வது ஓவரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, 90 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 87 ரன்கள் எடுத்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
266 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா; மழையால் தடைபட்ட ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images
அடுத்தடுத்த களமிறங்கிய, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர். அதனால், இந்திய அணி 48.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி 10 ஓவர்கள் பந்து வீசி, 35 ரன்கள் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்ததாக, நசீம் ஷாவும், ஹரிஸ் ரவுஃப்ம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
பாகிஸ்தான் அணி 266 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் அணி வெற்றி பெற முடியும் என்ற சூழலில் இடைவெளிக்கு பிறகு மழையால் போட்டி தடைபட்டது. மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இந்தியா நிலை என்ன?
போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. தனது முந்தைய ஆட்டத்தில் நேபாளத்தை தோற்கடித்ததன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற அடுத்த ஆட்டத்தில் நேபாளத்தை வெல்ல வேண்டும்.
உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இதுவரை 132 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 55 முறையும், பாகிஸ்தான் அணி 73 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












