You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நீட்' அச்சத்தால் தொடரும் தற்கொலைகள் - கோட்டா பயிற்சி மையங்களில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி நியூஸ்
அது ஜனவரி மாதம். 21 வயதான விஜய் ராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மிகவும் வேதனையில் தவித்தார்.
இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த அவர், மே மாதம் நடக்கவிருந்த தேர்வில் மீண்டும் தோல்வியடைந்துவிடுவோமோ என பயந்தார்.
இயற்பியல் பாடம் தான் நீண்ட காலமாக அவரது பிரச்சினையாக இருந்தது. இது தவிர, பயிற்சி நிறுவனம் நடத்திய அகமதிப்பீட்டுத் தேர்வில் மோசமான மதிப்பெண்கள் பெற்றதால் அவரது நம்பிக்கையும் பலவீனமாக இருந்தது.
விவசாய குடும்பத்தை சேர்ந்த விஜய், மன அழுத்தம், பதட்டம், நெஞ்சுவலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தார். பல சமயங்களில் பிரச்னைகளில் இருந்து தன் கவனத்தை திசை திருப்ப மொபைலில் ரீல் மற்றும் ஷார்ட்ஸ் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இது நேரத்தை வீணடிக்கும் செயலாக இருந்தது. பெற்றோரை ஏமாற்றுவதைத் தவிர்க்க, தேர்வுகளில் தனது குறைவான மதிப்பெண்களைப் பற்றி வீட்டில் பல முறை பொய் சொன்னார்.
பல ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் படித்துவந்த விஜய், "முதன்முறையாக மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இதை பெற்றோரிடம் கூறவில்லை. அவர்கள் வருத்தப்படுவதை விரும்பவில்லை" என்றார்.
ஒருமுறை அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியது.
அப்போது, "எனக்கு வேறு வழியில்லை என்று நான் உணர்ந்தேன். நான் எனது குடும்பத்தினரின் பணத்தை வீணடித்து, அவர்களின் மரியாதையை குறைத்துவிட்டதாக உணர்ந்தேன்," என நண்பர்களிடம் கூறிவந்தார். இதற்கிடையே, மூன்றாவது முறையாக நீட் தேர்வில் தோல்வியடைந்தார்.
பெரிய பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் பிள்ளைகளைச் சேர்ப்பது இந்தியக் குடும்பங்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்கும் போது, அவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் அது ஒரு இழிவான செயலாகப் பார்க்கப்படுகிறது.
உதவி கேட்பது முக்கியம்
நடிகை தீபிகா படுகோனின் மனச்சோர்வு மற்றும் சமூக அக்கறைகளை புறக்கணித்தல் பற்றிய வெளிப்படையான விவாதத்தில் இருந்து உத்வேகம் பெற்ற விஜய், மனநல மருத்துவரை அணுக முடிவு செய்தார். அதன் விளைவாக இன்று அவர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.
ஆனால் 18 வயது நிரம்பிய ஆதர்ஷ் ராஜுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவர் மருத்துவராக விரும்பினார். அவரது விவசாயக் குடும்பம் பீகாரில் சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறது. இந்நிலையில் ஆதர்ஷ் இறந்ததையடுத்து குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அவரது மாமா ஹரிசங்கர் பிரசாத் சிங் கூறுகையில், "ஆதர்ஷ் சில காலமாக பயிற்சி தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று வந்ததாகத் தெரியவருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,"தேர்வு முடிவுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதன் காரணமாக அவருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக நாங்கள் உணர்கிறோம். ஆனால், தற்கொலை என்பது அவருடைய இயல்பு அல்ல. இருப்பினும் திட காத்திரமான மனநிலை உள்ளவர்கள் கூட சில நேரங்களில் தங்கள் பாதையில் இருந்து விலகிச் செல்கிறார்கள். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு தற்கொலை. இல்லை. நீட் தேர்வில் பங்கேற்பவர்கள் அனைவரும் மருத்துவர் ஆகின்றனரா?" என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் கோட்டா நகரில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 25 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவே இதுவரை இல்லாத எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 15 ஆக இருந்தது.
ஒரு பகுப்பாய்வின்படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆண் மாணவர்கள் என்றும், இதில் பல மாணவர்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
புள்ளிவிபரங்களின்படி, கோட்டாவில் உள்ள பெரும்பாலான மாணவர்களின் வயது 15 முதல் 17 வரையாக உள்ளது. குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், தினமும் 13 முதல் 14 மணி நேர படிப்பு. அதிக மதிப்பெண் பெறுபவர்களிடம் கடுமையாக போட்டி நிலவுவதால் மன அழுத்தம் என பெற்றோர்களை விட்டுவிட்டு கோட்டாவில் தனியாக வாழ்வது அவர்களுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.
இதுகுறித்து ஆதர்ஷின் மாமா பேசிய போது, "கோட்டா நகரில் இது போல் நடக்கும் தற்கொலைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆதர்ஷ் எந்தவிதமான மன அழுத்தத்திலும் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை," என்றார்.
2022ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 13 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்கள் 2021ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கையை 4.5 சதவீதம் அதிகம் என்பதைக் காட்டுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி , ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய ஏழு லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் 15-29 வயதுடையவர்களில் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக தற்கொலை உள்ளது எனத்தெரியவருகிறது.
கோட்டாவில் மூன்றாயிரத்து ஐநூறு விடுதிகளிலும் ஆயிரக்கணக்கான வீடுகளிலும் சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
கோட்டாவில் தொடரும் உயிரிழப்புகளால் மக்கள் மிகவும் சோகமாக உள்ளனர். மேலும் இந்த ஆண்டு தற்கொலைகள் அதிகரித்ததற்கு கொரோனா தான் காரணம் என பலர் கருதுகின்றனர்.
கொரோனா காலத்தில், மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் கோட்டா நகரை அடைந்த பின், பல மாணவர்கள் மிகவும் கடுமையான போட்டி மிகுந்த சூழ்நிலையில் ஏமாற்றத்திற்கு ஆளானதாகவும் சிலர் கருதுகின்றனர்.
அண்மையில் வெளியான ஒரு ஆய்வில், கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கற்றல் திறன் “குறிப்பிடத்தக்க அளவில்” குறைந்துள்ளது எனத்தெரியவந்துள்ளது.
கல்வியாளர் ஊர்மில் பக்ஷி இது குறித்துப் பேசியபோது, “கொரோனா தொற்றுக்குப் பின்னர் குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பியபோது, அவர்களின் எழுதும் திறன் பெரிதும் குறைந்திருந்ததைக் காணமுடிந்தது. இதேபோல் அவர்கள் பிறருடன் பழகுவதிலும் பெரும் வித்தியாசம் தெரிந்தது. ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புகொள்வது, ஆசிரியர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்று குழந்தைகளுக்கு கற்பிக்க நாங்கள் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டியிருந்தது," என்றார்.
கோட்டா நகரில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனமான மோஷன் எஜுகேஷன் நிர்வாக இயக்குனர் நிதின் விஜய் கூறுகையில், "கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்னர் வந்த குழந்தைகளின் மன அழுத்தத்தை தாங்கும் திறன் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், நாளடைவில் அவர்கள் மேம்பட்டு வருகின்றனர்," என்றார்.
கொரோனா பாதித்த காலத்தில், அனைத்து கல்வியும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பதுடன் அவர்களது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை ஒப்படைக்க வேண்டியிருந்தது.
மனநல மருத்துவர் டாக்டர் எம்.எல்.அகர்வால் இது குறித்துப் பேசிய போது, "எல்லோருடைய கைகளுக்கும் ஸ்மார்ட் போன்கள் கிடைத்த போது சில மாணவர்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தினர். அதனால், அவர்கள் இணைய அடிமைகளாக மாறிவிட்டனர். மேலும், பல மாணவர்கள் வகுப்புகளை அவ்வப்போது புறக்கணிக்கத் தொடங்கினர். இதனால் படிப்பில் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படிப் பின்தங்கிய மாணவர்கள் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகினர். இது தற்கொலைக்கு வழிவகுத்தது. இங்கு பயிற்சி மிக வேகமாக செல்கிறது. ஒரு மாணவன் ஓரிரு நாட்கள் வகுப்புகளைப் புறக்கணித்தால், மீண்டும் படிப்பது மிகவும் சிரமமான செயல்," என்றார்.
200-300 மாணவர்கள் நிரம்பிய ஒரு சூழலில் வகுப்பில் ஒரு மாணவர் பின்தங்கியிருந்தால், பாடத்திட்டத்தை மீண்டும் எட்டுவது எளிதல்ல. பின்னர் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதன் விளைவு தேர்வின் போது தெரியும். இது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது.
கோட்டா நகரில் உள்ள மாணவர்கள் குறித்து ஒரு நிபுணர் பேசுகையில், கோட்டாவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் 15-17 வயதுடையவர்கள் என்றும், இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான காலகட்டம் என்ற நிலையில், ஆனால் உண்மையில் அவர்கள் இன்னும் குழந்தைகளாக இருக்கின்றனர் என்றார்.
டாக்டர் எம்.எல்.அகர்வால் கூறுகையில், "மாணவர்கள் இங்கு வரும்போது, உடல் வளர்ச்சி, உளவியல் வளர்ச்சி, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் பருவத்தில் உள்ளனர். இது அவர்களுடைய மனதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகிறது," என்றார்.
கோட்டா நகரின் பொருளாதாரம் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதாகவும், இந்த பொருளாதாரம் இங்கு வரும் மாணவர்களை நம்பியே இருப்பதாகவும் ஒரு வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
கோட்டா நகர விடுதி சங்கத் தலைவர் நவீன் மிட்டல் பேசுகையில், நகரில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், வணிகம் பாதிக்கப்படாமல், மாணவர்கள் கோட்டா நகருக்கு வருவது தொடர்கிறது என்றார்.
கல்வியில் நிகழும் போட்டி கடுமையானது என்பதுடன் குடும்பங்களின் வலி ஆழமானது. தற்கொலைகளைத் தடுக்க கோட்டா நகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மனநலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் தற்கொலைகள் தொடர்கின்றன. பல மாணவர்கள் மன வேதனை அடையும் போதும் தற்கொலை எண்ணம் தோன்றும் போதும் நகரத்தில் உள்ள உதவி எண்களை அழைக்கின்றனர்.
இது குறித்து ஹெல்ப்லைன் ஆலோசகர் பிரமிளா சகலா கூறிய போது, “மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்கள் போனில் பேசும்போது அழத் தொடங்குகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பின்னர் அவர்களது பெற்றோரிடம் நாங்கள் பேசுகிறோம். அவர்கள் இப்படி குழந்தைகளுக்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதை நாங்கள் அவர்களுக்கு விளக்குகிறோம். அவர்கள் தங்கள் குழந்தை டாக்டராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்? ஆனால், அந்தக் குழந்தை இந்த உலகில் இல்லை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்?" எனக்கேள்வி எழுப்பினார்.
கல்வியாளர் ஊர்மில் பக்ஷி, குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு கோட்டாவில் அதிகரித்து வரும் "சந்தைமயமாக்கல்" தான் காரணம் என்று கூறுகிறார்.
அவர் பேசும் போது, "பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. ஆசிரியர்களுக்கு குழந்தைகளின் பெயர்கள் கூட தெரியாது. ஒரு வகுப்பில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியுமா? யாருடைய பெயரும் யாருக்கும் தெரியாது. ஒரு மாணவர் மற்றவர்களுடன் நட்புறவு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இது மிகவும் வருத்தமான விஷயம்," என்றார்.
"பணம் தான் முக்கியம் என பலரும் எண்ணுகின்றனர். நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைப் புரியவைத்து அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற வேண்டும்."
பல குடும்பங்கள் அளிக்கும் தகவலின் படி, ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி நிறுவனக் கட்டணம் 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
மோசன் எஜுகேஷன் கோச்சிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிதின் விஜய் பேசும் போது, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார், ஆனால் அவரைப் பொறுத்தவரை, "போட்டி காரணமாக கட்டணம் மிகக் குறைவாகவே உள்ளது. பிரச்னை என்னவென்றால், திறமையான ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பதால், அவர்களுக்கு மிக அதிகமாக சம்பளம் கொடுக்கவேண்டியுள்ளது," என்கிறார்.
கோட்டா நகரில் உள்ள ஒவ்வொரு பயிற்சி மையமும் மாணவர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ஆசிரியர்களை ஈர்க்க முயற்சிக்கிறது.
நிதின் விஜய் கூறுகையில், "கோட்டா நகரை கல்வி மாஃபியா என்று மீடியாக்கள் காட்டுகின்றன. இது ஒரு வியாபாரம். கோட்டாவில் கல்வியை பிசினஸ் என்று சொல்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோச்சிங் சென்டர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்களுக்கு ரூ. 50 கோடி நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மோசன் பயிற்சி மையத்தில் இதுவரை தற்கொலை சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும், பிரச்னையை சமாளிக்க, கேளிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், பாடங்களைக் குறைவாக வைத்தல், கவுன்சிலிங் மூலம் மாணவர்களுக்கு மனநலத்தை அதிகரித்தல், மாணவர்களின் வருகையை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்றார்.
மாணவப் பருவம் எவ்வளவு கடினமானது?
கோட்டா நகரில் பலர் உயிரிழந்த நிலையில் மக்கள் சோகமாக உள்ளனர். ஆனால் பெற்றோர்களின் கனவுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இங்கு மேல் வகுப்பு மாணவர்கள் வசிக்கும் இடத்தில் மாதம் ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை வாடகைக்கு வீடுகள் உள்ளன. ஆனால் இந்த வீடுகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
கோட்டா நகரில் உள்ள விக்யான் நகரில் குறுகிய, இருண்ட தாழ்வாரங்களைக் கடந்து, படிக்கட்டுகளில் ஏறி, ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அர்னவ் அனுராக் வசிக்கும் அறையை அடைந்தோம்.
பீகாரைச் சேர்ந்த அர்னவ் டாக்டராக வேண்டும் என்று கனவு காண்கிறார். இவரது தந்தை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். அடுத்த சில மாதங்களுக்கு இந்த அறைதான் அவர்களின் வீடு. அர்னாவின் ஆண்டு பயிற்சிக் கட்டணம் ரூ.1 லட்சத்து இருபதாயிரம் மற்றும் மாதச் செலவு ரூ.12 முதல் 13 ஆயிரம் ஆகிறது.
இந்த அறைக்கு எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை கொடுக்கிறார்.
இந்த அறை ஒரு திருமணமாகாத நபருக்கானது. ஈரமான அலமாரிகள், படுக்கையில் புத்தகக் குவியல், டேபிளில் மடிக்கணினியுடன் ஒரு இண்டக்ஷன் அடுப்பு, உப்பு வைத்துள்ள கண்ணாடி பாட்டில் என நிறைய பொருட்கள் இருக்கின்றன.
"இந்த அறைக்குள் இருக்கும் போது மூச்சு அடைப்பது போல் உள்ளது. ஆனால், ஆனால் நான் இங்கே கடுமையாக உழைக்க வேண்டும். அதன் பின், முடிவுகள் அறிவிக்கப்படும் போது, நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பேன். பின்னர் இங்கு வரும் போது, இதுவும் ஒரு அறை என்றும், நான் இங்குதான் எனது படிப்பைத் தொடர்ந்தேன் என்று சொல்வேன்," என்றார்.
கோட்டா நகரில் வசிக்கும் பல மாணவர்கள் அந்நகரின் தட்பவெப்ப நிலைக்குத் தகவமைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமாகத் தெரியவில்லை.
நாங்கள் கோட்டாவில் இருந்தபோது, அங்குள்ள விடுதியில் வசித்த மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி கிடைத்தது. விடுதியில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். “அவர் எங்கள் மகள் போல இருந்தார்,” என விடுதி பராமரிப்பாளர் கூறினார்.
இம்மாணவியின் தந்தை கோட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த போது அவரிடம் தொலைபேசியில் உரையாடினோம்.
“கோட்டாவில் நடந்த தற்கொலைகள் பற்றி மகள் குறிப்பிட்டிருந்தாள். ஆனால், அதையெல்லாம் கவனிக்க வேண்டாம் என நாங்கள் அறிவுறுத்தியிருந்தோம். இப்போது, எங்களுடைய இரண்டு மகள்களில் ஒருவர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்,” என்று கூறினார்.
ராஜஸ்தான் காவல்துறையின் கோட்டா நகர மாணவர் பிரிவின் பொறுப்பாளர் சந்திரஷீல் கூறுகையில், தற்கொலைகளைத் தடுக்க, அவரது குழு தொடர்ந்து விடுதிகள் மற்றும் பல இடங்களுக்குச் சென்று, எந்த மாணவரின் நடத்தையில் ஏதேனும் வித்தியாசம் அல்லது மாற்றம் உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறது எனத் தெரிவித்தார். விடுதி வார்டன் மற்றும் சமையல் செய்பவர்களிடம் மாணவர்கள் குறித்து தொடர்ந்து பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதாகவும் அவர் கூறுகிறார்.
பல மாணவர்களின் தாய்மார்கள் மாணவர்களின் தனிமையைப் போக்கவும், அவர்களுக்கு வீட்டில் சமைத்த உணவு மற்றும் வீட்டுச் சூழலை அளிக்கவும் அங்கேயே தங்கியுள்ளனர்.
நிபுணர்கள் அளிக்கும் தகவலின்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனதை ஆராய்வது, அவர்களுடன் பேசுவது, அவர்களுடன் நீண்ட நேரம் செலவிடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடவேண்டும். இதனால் குழந்தைகளின் மன ஓட்டத்தை ஓரளவு தெரிந்துகொள்ளமுடியும் என்பதுடன், குழந்தைகளும் அவர்களுடைய எண்ணங்கள் குறித்து வெளிப்படையாக விளக்க முடியும்.
(சிலரின் பெயர்கள் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க மாற்றப்பட்டுள்ளன)
முக்கியமான தகவல்-
மனநல பிரச்சனைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும், இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்-
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 (13 மொழிகளில் கிடைக்கிறது)
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம்-9868396824, +919868396841, 011-22574820
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)