கனடாவில் கருத்து சுதந்திரத்தை நசுக்கிறாரா ஜஸ்டின் ட்ரூடோ? புதிய விதிகளால் சர்ச்சை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்தியா-கனடா இடையே நிலவி வரும் கசப்புணர்வுக்கு மத்தியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்கொள்ளும் சர்ச்சைகளும், நெருக்கடிகளும் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை.

உள்நாட்டு முன்னணி நபர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் இருந்து நிறைய கேள்விகளை எதிர்கொள்ளும் பிரதமர் ட்ரூடோ மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

இப்போது, சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் உரிமையாளர் ஈலோன் மஸ்க், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ட்விட்டரில், “கனடாவில் கருத்து சுதந்திரத்தை நசுக்க ட்ரூடோ முயற்சிக்கிறார். இது வெட்கக்கேடானது," என ஈலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் க்ளென் கிரீன்வால்டின் ஒரு பதிவுக்குப் பதிலளித்த போது மஸ்க் இப்படி எழுதியுள்ளார்.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு புதிய விதியை உருவாக்கிய கனடா அரசின் முடிவை விமர்சித்து அவர் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த விதியின்படி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகள் கனடாவில் செயல்பட வேண்டுமானால், முறையாக 'கனடியன் ரேடியோ-தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்தில்' (CRTC) பதிவு செய்ய வேண்டும்.

புதிய விதிகள் என்ன சொல்கின்றன?

கனடா வானொலி-தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் என்பது ஒளிபரப்பு மற்றும் தகவல்தொடர்புகளை மேற்பார்வையிடுவதுடன், ஒழுங்குபடுத்தும் ஒரு பொது அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கனடாவில் இயங்கும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகள், உள்ளடக்கங்களை ஒளிபரப்பும் நிறுவனங்கள், ஆண்டு வருமானமாக சுமார் 61 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்தால், நவம்பர் 28, 2023க்குள் பதிவு செய்யவேண்டும் என்று அரசு கூறுகிறது.

இந்த பதிவு படிவத்தில் ஆன்லைன் தளம் தொடர்பான தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, சில ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகள் தங்கள் கருத்துகள் மற்றும் சந்தாக்கள் பற்றிய தகவலை வழங்க வேண்டும். அதாவது, ஆன்லைன் தளம் என்ன உள்ளடக்கத்தை உருவாக்குகிறது என்பதுடன் எத்தனை பேர் அதனுடன் இணைந்துள்ளனர் என்ற தகவலை அளிக்கவேண்டும்.

சமூக ஊடக தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆணையம் கூறுகிறது. அதே நேரம் தனிப்பட்ட இயங்குதளங்களில் இயங்கும் பயனர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

இது தவிர, போட்காஸ்ட் தயாரிக்கும் தளத்திற்கும் பதிவு செய்வதும் அவசியம். இது தவிர, ஆன்லைன் வீடியோ கேம்கள் மற்றும் ஆடியோ புத்தகங்களுக்கு இந்த விதி பொருந்தாது.

முறைப்படி பதிவு செய்த பிறகு, ஆணையத்தின் தகவல் தளத்தில் அனுமதி பெற்ற தளங்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

ட்ரூடோவின் அரசு கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல.

கடந்த பிப்ரவரி 2022 இல், கட்டாய தடுப்பூசிகளை எதிர்க்கும் டிரக் டிரைவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அவசர கால அதிகாரங்களை ட்ரூடோ பயன்படுத்தினார்.

கியூபெக் மற்றும் பிற மாநிலங்களில் எதிர்ப்புகளை ஒடுக்க ட்ரூடோ தனது இராணுவத்தை அனுப்பினார். கேபினட் அமைச்சர் ஒருவரின் படுகொலைக்குப் பிறகு இந்த நெருக்கடி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

கனடாவின் பிரபல யூடியூபர் ஜே ஜே மேக்கல்லாஃப் சமூக ஊடக தளமான X இல், "இப்போது யூடியூப் நவம்பர் இறுதிக்குள் கனடா அரசில் தன்னைப் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்த இது ஒரு முக்கியமான படியாகும்," எனப்பதிவிட்டுள்ளார்.

ஜே நெல்சன் என்ற பயனர் X இல், “நான் ஒரு போட்காஸ்ட் இயங்குதளத்தை வைத்திருந்தால், அதை CRTC இல் பதிவு செய்யவே மாட்டேன். அதேபோல் நான் ஒரு இயங்குதளத்தைத் தொடங்க விரும்புகிறேன். ஆனால், நான் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை," எனப்பதிவிட்டுள்ளார்.

இதற்காக கனடா அரசை நீங்கள் விமர்சிக்க முடியாது என்று சங்கஸ்பி என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.

அவர், “அரசு இதை நல்ல நோக்கத்துடன் செய்கிறது என்று நீங்கள் நம்ப வேண்டும். தெற்குலக நாடுகள் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, ​​​​அவர்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது என்பது வெளிப்படையானது," எனப்பதிவிட்டுள்ளார்.

கனடா அரசாங்கத்தில் போட்காஸ்ட்டை பதிவு செய்ய வேண்டாம் என்று பேட்ரிக் என்ற பயனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷான் ரிக்கார்ட் என்ற பயனர் ஆணையத்தின் உத்தரவை வெளியிட்டு, “வடக்கு கியூபாவிற்கு வரவேற்கிறோம். நெட்ஃபிக்ஸ், பிரைம், யூடியூப் மற்றும் பிற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் இப்போது CRTC யில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கனடா அரசு அவற்றை தணிக்கை செய்து கட்டுப்படுத்த முடியும்," என்று பதிவிட்டுள்ளார்.

அண்மையில், நாஜிக்களின் ராணுவத்தில் பணியாற்றிய ஒரு வீரரைக் கௌரவித்ததற்காகவும், பள்ளிகளில் பாலின சித்தாந்தத்தை சேர்த்ததற்காகவும் கனடா நாடாளுமன்றத்தில் ட்ரூடோ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவில் பதற்றம் நிலவுகிறது.

நிஜ்ஜாரின் கொலையில் இந்திய ஏஜென்டுகளுக்குத் தொடர்பிருக்கிறது என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன என கனடா பிரதமர் ட்ரூடோ கூறியிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா முழுமையாக நிராகரித்துள்ளது.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், நாஜிக்கள் ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரரை கனடா நாடாளுமன்றத்தில் கௌரவித்ததற்காக ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று.

"இது கனடா மற்றும் கனடாவின் நாடாளுமன்றம் என இரண்டையும் சங்கடப்படுத்தும் தவறு" என்று ட்ரூடோ கூறினார். "சூழல் நமக்குத் தெரியாது என்றாலும், சபையில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்ததற்கு வருந்துகிறோம்," என அப்போது தெரிவித்தார்.

நாஜிகளால் நடத்தப்பட்ட இனப் படுகொலையில் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களின் நினைவுகளுக்கு இது ஒரு பயங்கரமான அவமானம் என்றும் ட்ரூடோ கூறினார்.

முன்னதாக கனடாவின் முஸ்லிம் சங்கம் அவரை இலக்காகக் கொண்டிருந்தது. கனடா பள்ளிகளில் பாலின சித்தாந்தம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் கீழ், பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளம் கற்பிக்கப்படுகிறது.

இந்த முடிவுக்கு கனடா முஸ்லிம் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு எந்த விருப்பமும் வழங்கப்படவில்லை என்றும், வயது வந்தோருக்கான உள்ளடக்கங்கள் இந்த புதிய திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுவதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதை எதிர்த்து 'ஒன் மில்லியன் மார்ச் ஃபார் சில்ட்ரன்' என்ற பெயரில் செப்டம்பர் 20 அன்று ஒரு பேரணி நடத்தப்பட்டது. இதில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

நாட்டில் தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட எந்த வித கலாச்சாரத்துக்கும் இடையூறு ஏற்படக் கூடாது என்றும், இந்த விஷயத்தில் பாலியல் சிறுபான்மையினருக்கு ஆதரவாக வெளிப்படையாக நிற்பதாகவும் ட்ரூடோ கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)