You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைஷாலி: தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் பிரக்ஞானந்தாவின் சகோதரி
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி ரமேஷ்பாபு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
ஸ்பெயினில் நடைபெற்றுவரும் செஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் அவர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் 2,500 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார்.
இதன்மூலம் அவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது இந்தியப் பெண் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார். இதற்குமுன் கோனேரு ஹம்பியும், ஹரிகா துரோணவல்லியும் இந்தப் பட்டத்தைப் பெற்றிருக்கின்றனர். வைஷாலி தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரும் ஆவார்.
மேலும், உலகிலேயெ கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் அக்கா-தம்பி என்ற பெருமையையும் பிரக்ஞானந்தாவும் வைஷலியும் பெற்றிருக்கின்றனர்.
22 வயதான வைஷாலி, முன்னர் தனது இளைய சகோதரர் பிரக்ஞானந்தா ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்ததை அடுத்து, அதிக ஊடக கவனம் பெற்று வருகிறார். ஆனால், பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பதை தாண்டி, வைஷாலி தனது திறமைகளால் பல உயரங்கள் தொட்டவர்.
2012-ஆம் ஆண்டு 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உலக இளைஞர்கள் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதே போன்று 2015ம் ஆண்டு, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும் பட்டத்தை வென்றார். 2021ம் ஆண்டில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெருமையும் அவரை சாரும்.
பெண்கள் இண்டர்நேஷ்னல் மாஸ்டர் பட்டத்தை தனது 15 வயதில் பெற்ற பெருமையை கொண்டவர் வைஷாலி.
வைஷாலிக்கு 14 வயது இருக்கும் போது மும்பையில் நடந்த தேசிய பெண்கள் சேலஞ்சர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றார். பல இளையோர்களுக்கான போட்டியில் வைஷாலி வெற்றி பெற்றிருந்தாலும், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது தான் அவருக்கு மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்தது.
சர்வேதச மாஸ்டர் பட்டம்
பெண்கள் இண்டர்நேஷ்னல் மாஸ்டர் பட்டம் மட்டுமல்லாமல் 2021ம் ஆண்டு இண்டர்நேஷ்னல் மாஸ்டர் பட்டமும் வென்றார். அதற்கு முன்பாக 2020-ல் கொரோனா காலத்தில் நடைபெற்ற ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில் அவரது ஆட்டத்தின் காரணமாக இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. அதே போன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவர் இடம்பெற்றிருந்த இந்திய பெண்கள் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
மேலும், ஆசிய இளைஞர்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2019ம் ஆண்டில் தங்கப்பதக்கம் வென்றவர் வைஷாலி.
கடந்த 2017-ம் ஆண்டு ஏஷியன் இண்டிவிஜுவல் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கு, பிரதமர் நரேந்திர மோதி வைஷாலியைப் பாராட்டினார். கடந்த 2018-ம் ஆண்டு வைஷாலி இந்தியாவின் பெண் கிராண்ட் மாஸ்டரான போது, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் அவரைப் பாராட்டி ட்விட் செய்திருந்தார்.
இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர்
செஸ் ஆட்டத்தில் உயரிய பட்டமான கிரண்ட் மாஸ்டர் பட்டத்தை வைஷாலி பெற்றிருக்கிறார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்ல கிராண்ட் மாஸ்டர் நார்ம் (Grandmaster norm) எனப்படும், ரேட்டிங்கை மூன்று முறை பெற வேண்டும். வைஷாலி அதனை 2019-ஆம் ஆண்டு முதல் முறையும், 2022-ஆம் ஆண்டு இரண்டாவது முறையும் பெற்றுள்ளார். மூன்றாவது தனது சீரிய ஆட்டத்தின் மூலம் உலக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்லும் கனவை நனவாக முயன்று வருகிறார்.
வைஷாலி கடுமையாக உழைப்பவர் என்றும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்பது அவரது வாழ்நாள் லட்சியம் என்றும் அவரது பயிற்றுநர் ரமேஷ் தெரிவிக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக வைஷாலிக்கு பயிற்சி அளித்து வரும் அவர் வைஷாலி இளம் வயது முதலே செஸ் ஆடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்கிறார். “ வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதில் ஒரு அடி மட்டுமே எடுத்து வைக்க வேண்டியுள்ளது. அது அவரது வாழ்நாள் லட்சியம். நிச்சயம் அதை வெகு சீக்கிரம் பெற்று விடுவார்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
அவர் ஏற்கெனவே பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். தனது மூன்றாவது கிராண்ட் மாஸ்டர் நார்ம்-ஐ லாத்வியாவில் பூர்த்தி செய்ததன் மூலம் இந்த பட்டத்தை அவர் வென்றார். உலகத்தில் உள்ள முதல் 50 பெண் செஸ் வீரர்களில் வைஷாலியும் ஒருவராவார்.
சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் வைஷாலி. அவரது தந்தை கூட்டுறவு வங்கி மேலாளராக பணிபுரிகிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு அவர் உடன் செல்வதில்லை. வீட்டை பராமரித்து வரும் அவரது தாய், தனது இரு பிள்ளைகளுடன் அவர்களின் போட்டிகளின் போது உடனிருந்து ஆதரவு அளித்து வருகிறார்.
இளம் வயதில், வீட்டில் இருக்கும் நேரத்தை உபயோகமாக செலவழிக்க வேண்டும் என்பதற்காக வைஷாலியின் பெற்றோர்கள் அவரை வீட்டுக்கு அருகில் உள்ள செஸ் வகுப்புகளுக்கு அனுப்பினர். அப்போது தான் வைஷாலிக்கு செஸ் அறிமுகமானது. தனது ஆறாவது வயது முதல் ஆட தொடங்கிய வைஷாலி கடந்த பதினாறு ஆண்டுகள் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார். முதன் முதலில் சென்னையில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் பங்கேற்று வென்ற வைஷாலி, அதன் மூலம் பெற்ற உந்துதலில் தொடர்ந்து ஆட தொடங்கினார்.
சென்னையில் சதுரங்கத்துக்கு போதுமான வசதிகள் இருந்தாலும், ஆரம்ப நாட்களில் சதுரங்க பயிற்சி மேற்கொள்ளவும், பயணச் செலவுகள் போன்றவைகளால் நிதி நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளார். வைஷாலியின் ஆரம்ப நாட்களில் பயிற்சி மேற்கொள்ள அவரிடம் கணிணி இல்லை. சதுரங்கத்தின் அடிப்படை அறிவைக் கற்றுக் கொள்ள பெரும்பாலும் புத்தகங்களைத் தான் நம்பி இருக்க வேண்டி இருந்தது.
2012-ஆம் ஆண்டு உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தான் வைஷாலிக்கு ஸ்பான்சர்கள் மூலம் ஒரு மடிக்கணிணி கிடைத்தது. அது தான் வைஷாலியை ஒரு நல்ல சதுரங்க வீராங்கனையாக மேம்படுத்தியது.
அவரது பள்ளியும் கல்லூரியும் அவரது செஸ் ஆர்வத்துக்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை. அவருக்கு தேவையான ஊக்கத்தை தொடர்ந்து அளித்து வந்துள்ளன.நடைபெற்று வரும் ஆசிய போட்டிகளில் பத்து பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் வைஷாலி. இந்த போட்டிகளில் விளையாடுவது மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற முடியாது என்றாலும் இந்தியாவுக்காக விளையாடுவது பெருமையானதே என்கிறார் பயிற்றுநர் ரமேஷ்.
“கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவது இந்த போட்டிகளின் மூலம் சாத்தியமாகாது. இவை டி20 போல வேகமாக விளையாடும் ஆட்டங்கள். டெஸ்ட் போட்டி போல மெதுவாக ஆடும் வேறு சில போட்டிகளின் மூலமே அவர் மூன்றாவது கிராண்ட் மாஸ்டர் நார்ம் பெற முடியும்” என்கிறார் அவர்.
ஒரு போட்டிக்காக மட்டும் என வைஷாலி எப்போதும் தன்னை தயார் செய்துக் கொள்வதில்லை. செஸ் ஆடுவது அவருக்கு தினசரி பழக்கமாக உள்ளது. “தினமும் உணவு உண்ணுவதை போல தான் செஸ் ஆடுவது வைஷாலிக்கு. தேர்வு நேரத்தில் மட்டுமே கூடுதலாக சாப்பிட மாட்டோம் இல்லையா? அதே போல தான் அவரது தயாரிப்புகளும்,” என்கிறார் ரமேஷ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்