You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்ற 3 பெண் அர்ச்சகர்களின் பின்னணி என்ன? எதிர்ப்புகளை கடந்து சாதித்தது எப்படி?
- எழுதியவர், பிரபாகர் தமிழரசு
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ் நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் முதல் முறையாக மூன்று பெண்கள் அர்ச்சகர்களாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு, 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தினை அமல்படுத்துவோம் எனக்கூறினர்.
அதன்படி, கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்த மாணவர்கள், தமிழ் நாடு முழுவதும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் படித்தனர்.
அவர்களில், தேர்ச்சி பெற்ற 98 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் வைணவ முறைப்படி பயிற்சி பெற்ற மூன்று பெண்கள் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளனர்.
தமிழ் நாட்டின் வரலாற்றில், இவர்கள் தான் முதல் முறையாக பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள். வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து, இளநிலை வைணவ அர்ச்சகராக தேர்ச்சி பெற்று, அடுத்த ஓராண்டு கள பயிற்சிக்காக காத்திருக்கும் மூன்று மாணவிகளிடமும் அவர்களின் கடந்த ஓராண்டு பயணம் குறித்து பிபிசி பேசியது.
"முதல் முறை என்றால் சவால் இருக்கத்தான் செய்யும்"
“எதையும் முதல் முறையாக தொடங்கும்போது நிச்சயம் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதை கைவிட முடியாது,” என தன் அனுபவத்தை பகிர்ந்தார் ரம்யா.
கணிதத்தில் இளநிலை அறிவியல் படித்துள்ள 23 வயதான ரம்யா, கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர்.
“எப்போதும் கடவுள் மீது பக்தி இருக்கும். ஆனால், கல்லூரியில் படிக்கும்போது, என்னுடன் படித்த கிருஷ்ணவேணி மூலம்தான் இந்த பயிற்சி வகுப்பு குறித்து கேள்விப்பட்டேன். உடனே என் வீட்டில் தெரிவித்தேன். அவர்களும் எந்த எதிர்ப்புமின்றி சம்மதம் தெரிவித்தனர்,” என்றார் ரம்யா.
ஆனால், பெற்றோர் மற்றும் சுற்றத்தினரின் சம்மதமும் உதவியும் இருந்தபோதும், சிலர் அவரின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
“பேசுபவர்களை நாம் நிறுத்த முடியாது. ஆரம்பத்தில் அங்கொருவரும் இங்கொருவருமாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதல் முறை என்பதால் எதிர்ப்பு இருக்கும் என்று தெரியும். இவற்றை எல்லாம் எளிதில் கடக்க, பயிற்சி பள்ளியில் ஆசிரியர் மிகவும் உறுதுணையாக இருந்தார்,” என்றார் ரம்யா.
பெண்களாலும் அர்ச்சகராக முடியும் என அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி ஆசிரியர் ஊக்குவித்ததாகக் கூறும் ரம்யா, “உடன் படித்த மாணவர்களும் எந்த பேதமும் காண்பிக்கவில்லை. அவர்கள் சக மாணவர்களைப் போலவே எங்களைப் பார்த்தனர். அது மிகப்பெரிய பலமாக இருந்தது,” என்றார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ரம்யாவின் பெற்றோர் கூலி வேலை செய்து வருவதாக கூறிய அவர், பயிற்சி முடிந்ததும் தங்களுக்கு அறநிலையத் துறையின் கோயில்களில் பணி வாய்ப்பு வழங்கினால், பொதுவெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்தது போல் இருக்கும், என்றார்.
“நாங்கள் கருவறைக்குள் செல்கிறோம் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது. பொருளாதார பயனுக்காக இந்த பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்றாலும், இந்த முன்னெடுப்பு மக்கள் மத்தியில் சென்றடைந்து நல்ல விளைவை ஏற்படுத்த கோயிலில் பணி அமர்த்தினால் நன்றாக இருக்கும்,” என்றார் அவர்.
"தொடர் பயிற்சியால் தேர்ச்சி பெற முடிந்தது"
ரம்யாவின் கல்லூரி தோழியான கிருஷ்ணவேனியும், இவருடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து இளநிலை வைணவ அர்ச்சகராக தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
“எங்கள் குடும்பத்தில் என் தந்தையும் தாத்தாவும் ஊர் கோயில்களில் பூஜை செய்பவர்கள். அவர்கள் முறையாக படிக்கவில்லை. அதனால், நான் முறையாக படித்து, அர்ச்சகராகி கருவறைக்குள் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன்,” என அர்ச்சகராவதற்கு எனக்கு இருந்த நீண்ட கால ஆசையை பகிர்ந்தார்.
பயிற்சியின் தொடக்கத்தில் சிறிது கடினமாக இருந்ததாகக் கூறும் கிருஷ்ணவேனி, பின் பயிற்சியால் பழகிவிட்டதாக கூறினார்.
“காலை 7 மணிக்கு தொடங்கும் பயிற்சி வகுப்பு மாலை 7 மணி வரை நடைபெறும். கல்லூரி முடித்து பின், இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்திருந்ததால், ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தது. ஆனால், அது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் உடன் இருந்த மாணவர்களின் ஊக்கத்தால், பழகிவிட்டது. இப்போது, நான் ஒரு முழு அர்ச்சகராகிவிட்டேன் என்பது பெருமையாக உள்ளது,” என்றார் கிருஷ்ணவேனி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த கிருஷ்ணவேனி, அடுத்து நடக்கவிருக்கும் களப் பயிற்சிக்காக காத்திருக்கிறார்.
ஆனால், இவர்களைப்போல அர்ச்சகர் குறித்து எந்த அறிமுகமும் இல்லாமல் இருந்துள்ளார் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்த ரஞ்சிதா.
பெரியகோயிலில் பயிற்சி பெற காத்திருக்கும் அர்ச்சகர் ரஞ்சிதா
அரசுப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து, அரசுக்கல்லூரியில் விஸ்காம் (இளநிலை காட்சித்தொடர்பியல்) படித்து முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் ரஞ்சிதா.
“அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், குறிப்பாக பெண்களும் அர்ச்சகராகலாம் என கேள்விப்பட்டு, பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். ஒரு வருடம் படித்ததில், நிறைய விஷயங்கள் கற்றக்கொண்டேன். தற்போது சான்றிதழும் வாங்கிவிட்டேன்,” என தன் பயணத்தின் ஆரம்பம் குறித்து பகிர்ந்தார் ரஞ்சிதா.
அடுத்து நடக்கவிருக்கும் களப் பயிற்சியில். தஞ்சை பெரியகோவிலில் பணியமர்த்த கோரியுள்ளதாக கூறிய ரஞ்சிதா, “கடந்த ஒராண்டில் படித்த அனைத்தும் அங்கு வெளிப்படுத்த வாய்ப்பாக இருக்கும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அனைத்து தரப்பினரும் கோயிலுக்குள் செல்ல முடியாது என்ற சூழலில் இருந்து, தற்போது அனைத்து தரப்பினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்பது மட்டுமின்றி, பெண்கள் உட்பட கற்றுக்கொண்ட அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார் ரஞ்சிதா.
பட்டியலினத்தை சேர்ந்த ரஞ்சிதா, அவர்களது குடும்பத்தின் முதல் பட்டதாரி என்கிறார் ரஞ்சிதாவின் தாய் உமா.
கோயிலுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து கருவறை வரை சென்ற ரஞ்சிதா
“ரஞ்சிதா உடன் படித்த அனைவருமே பன்னரண்டாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார்கள். ரஞ்சிதா மட்டும்தான் ஒரு பட்டம் பெற்றுள்ளார். தற்போது அர்ச்சகராகவும் தேர்ச்சி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது,” என்றார் அவர்.
ரஞ்சிதாவின் முடிவுக்கு முழுமையாக உடன்படுவதாக கூறும் உமா, “ஊரில் இருப்பவர்கள் இதெல்லாம் தேவையா என்பது போலத்தான் பேசினார்கள். ஆனால், என் மகள் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள், நாங்கள் அதற்கு சம்மதித்தோம்.
மற்றவர்கள் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் அவரை படிக்க அனுப்பினோம்,”என்றார் உமா.
விவசாய கூலித்தொழிலாளியாக உள்ள உமாவும், அவரது மற்ற குழந்தைகளும்தான் ரஞ்சிதாவை படிக்க வைத்ததாக கூறினார் ரஞ்சிதா.
தன் மகள் அர்ச்சகராகத் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறிய ரஞ்சிதாவின் தந்தை நடராஜ்,“தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள்ளே செல்ல முடியாத காலத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவர் அச்சகராகியிருக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
பயிற்சிப்பள்ளியிலும் அவர் கேட்டதைப்போல பெரிய கோயிலில் கிடைத்தால், அவள் ஆசை நிறைவேறும்,”என்றார் நடராஜ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்