You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத்தீவு, பாலி போல வியக்க வைக்கும் தமிழ்நாட்டு சுற்றுலாத் தலங்கள்
இன்று (செப்டம்பர் 27) உலக சுற்றுலா தினம்.
சுற்றுலா செல்ல யாருக்குத்தான் பிடிக்காது. நிற்க நேரமில்லாமல் அவசரகதியாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகத்தில் நீண்ட விடுப்பு கிடைக்காதா, எங்காவது சுற்றுலா செல்ல முடியாதா என்று ஏங்காதவர்கள் இருக்க முடியுமா என்ன?
ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு கனவு சுற்றுலாத்தலம் இருக்கும். சிலருக்கு அது மாலத்தீவாக இருக்கலாம், சிலருக்கு அந்தமானின் ஹேவ்லாக் தீவாக இருக்கலாம், சிலருக்கு இந்தோனீசியாவின் பாலியாக இருக்கலாம், சிலருக்கு இந்தியாவின் மணாலியாக, சிம்லாவாக, கோவாவாக இருக்கலாம்.
ஆனால், சில நேரங்களில் நேர மற்றும் பண நெருக்கடி நம் விருப்பத்திற்கு தடங்கலாக அமைந்துவிடுவது உண்டு.
சரி, கனவு சுற்றுலா தலத்திற்கு செல்ல முடியவில்லை என்பதற்காக சுற்றுலா செல்லும் ஆசையை விட்டுவிட வேண்டுமா என்ன?
நிச்சயம் இல்லை, நம்மைச் சுற்றியே ஏராளமான சுற்றுலாதலங்கள் உள்ளன. ஒரு நாள், இரண்டு நாள் விடுப்பு கிடைத்தால்கூட குறைந்த பட்ஜெட்டில் எளிதாக சென்றுவரக்கூடிய பல சுற்றுலா தலங்கள் நம் தமிழ்நாட்டிலேயே, தமிழ்நாட்டைச் சுற்றியும் உள்ளன.
அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
குருசடை தீவு
ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சுமார் 9 கிமீ தூரத்தில் தெற்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது குந்துகால் மீனவ கிராமம். குந்துகால் மீனவ கிராமம் அருகே கடலுக்குள் அமைந்துள்ளது குருசடை தீவு.
குருசடை தீவுக்குச் செல்ல ராமநாதபுரம் வனத்துறை மண்டபம் வனச் சரகத்தின் கீழ் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படகில் பயணிக்கும்போது கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறை, கடல் குதிரை, துள்ளிக் குதிக்கும் டால்பின்கள், மீன்கள் மற்றும் இதர கடல்சார் உயிரினங்கள், தாவரங்கள் போன்றவற்றைக் கண்டு ரசிக்கலாம். கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலை நிலவினால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படும்.
பழவேற்காடு ஏரி
ஒடிஷாவில் உள்ள சில்கா ஏரிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி இது. சென்னையில் இருந்து சுமார் அறுபது கி.மீ. தூரத்தில் ஆந்திர மாநில எல்லையில் இந்த ஏரி அமைந்திருக்கிறது. பழவேற்காடு ஏரிக்கு எதிரே உள்ள பழங்கால கலங்கரை விளக்கம் பார்க்கத்தகுந்த ஒன்று.
அக்டோபர் முதல் மார்ச் மாதம்வரை, வலசை செல்லும் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கே வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் பூ நாரைகளை பெரும் எண்ணிக்கையில் இங்கே காண முடியும்.
வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் பழைய கிறிஸ்தவ தேவாலயம், பாழடைந்த கோட்டையின் பகுதிகள், 1631 முதல் 1655வரையிலான டச்சுக்காரர்களின் கல்லறைகள் ஆகியவற்றைப் பார்வையிடலாம். இங்கு செல்ல சென்னையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ரயில் மூலம் சென்றால், தடா ரயில் நிலையத்தில் இறங்கி, சுமார் பத்து கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.
குண்டாறு அணை
குற்றாலத்திலிருந்து 13கி.மீ. தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு அணைக்கட்டு. இது 1983ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தென்மாவட்டத்தில் திருமண போட்டோ ஷூட்டுகளுக்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது குண்டாறு அணை. இந்த அணையை ஒட்டி இருக்கும் மலையில் இயற்கை எழில் கொஞ்சும் சில ஆள் அரவமற்ற அருவிகள் உள்ளன. கரடுமுரடான மலை ஏற பிடிக்கும், கூட்டமில்லாத அருவியில் குளிக்க பிடிக்கும் என்றால் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இதைக் குறித்து வைக்க மறந்துவிடாதீர்கள்.
பரளிக்காடு சூழல் சுற்றுலா
கோவையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரளிக்காடு கிராமம். இங்கு வனத்துறையால் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி. பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து மற்றும் ஆற்றுக் குளியல் என இயற்கையோடு இங்கு இரண்டறக் கலக்கலாம்.
அலம்பரைக் கோட்டை
1736 முதல் 1740 வரை முகலாயப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை 15 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கலாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டது. கோட்டையின் பெரும் பகுதி கடலுக்குள் சென்றுவிட்ட நிலையில், மீதமுள்ள கோட்டைப் பகுதிகள் மணல் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் கோட்டையின் இடிபாடுகள், பார்வையாளர்களைக் கடந்த காலத்திற்கே அழைத்துச் செல்பவை.
தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிதாமகன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்தக் கோட்டையில் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து சுமார் 105 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கடப்பாக்கம் என்ற கிராமத்திற்குச் சென்று, அங்கிருந்து கிழக்கு நோக்கி 3 கி.மீ. தூரம் பயணம் செய்தால் இந்தக் கோட்டையை அடையலாம்.
கும்பாவுருட்டி அருவி
குற்றாலத்திலிருந்து 29கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. குற்றாலம்-அச்சன்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்தால் கேரள எல்லையை அடையலாம். அங்கிருக்கும் கேரள வனத்துறையின் சோதனைச் சாவடியில் உங்கள் வாகனம் குறித்த விவரங்களைப் பதிவு செய்த பின், கும்பாவுருட்டி அருவிக்கான மலைப் பயணம் தொடங்கும். அதிர்ஷ்டம் இருந்தால் மான்கள், மிளாக்கள், அரிய வகை பாம்புகள், காட்டு அணில்களை இந்த பயணத்தில் நீங்கள் பார்க்கலாம். இங்கு பயணிப்பது ஊட்டி, மசினகுடி சாலைகளில் பயணிக்கும் உணர்வை தரும். கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் என்பதால் சொந்த வாகனங்களில் செல்பவர்கள் சற்று கவனமாக செல்லுங்கள்.
பாலருவி
குற்றாலத்திலிருந்து 27கி.மீ. தூரத்தில் கேரளாவின் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது பாலருவி. புளியரை வழியாக கேரள எல்லையைக் கடந்து செங்கோட்டை-புனலூர் சாலையில் தொடர்ந்து பயணித்தால் ஆரியங்காவு ஊரை அடையலாம். அங்கிருந்து இந்த அருவிக்கு செல்லலாம். அருவி அமைந்திருக்கும் காட்டுப் பகுதிக்கு கேரளா வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். ஜூலை-செப்டம்பர் மாதங்களில் சென்றால், 300 மீட்டர் உயரத்திலிருந்து பால் நிறத்தில் தண்ணீர் விழுவதைப் பார்த்து ரசிக்கலாம்.
உவரி மற்றும் மணப்பாடு
கும்பாவுருட்டி அருவிசுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு அமைதியான கடலோர கிராமத்தில் அமர்ந்து கடலை ரசிக்க விரும்பினால், உவரி மிகச் சிறந்த இடம். உவரியின் கப்பல் மாதா கோயில் உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம். அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வந்து செல்லும் ஒரு இடமாக இந்த ஆலயம் உள்ளது. போர்த்துகீசிய மற்றும் ஸ்பானிஷ் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்ட சில கட்டிடங்கள், தேவாலயங்களை இங்கு பார்க்க முடியும். குற்றாலத்திலிருந்து 116கி.மீ. தூரத்தில் உள்ளது உவரி.
அகஸ்தியர் அருவி
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். பாபநாசத்தில் சிவன் கோயிலை தாண்டி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வரும். அங்கிருந்து அகஸ்தியர் அருவிக்கான மலைப்பாதை தொடங்கும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இங்கு தண்ணீர் மிகக் குளிர்ச்சியாகவும், மூலிகைகளின் மணத்துடனும் இருப்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.
மாஞ்சோலை
3500 அடி உயரத்தில் நான்குபக்கங்களும் உயரமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம் மாஞ்சோலை. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாக பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாக 3 மணி நேரம் பயணித்தால் இந்த இடத்திற்கு செல்லலாம். இங்கு தேயிலைத் தோட்டங்கள், பசுமை மாறாக் காடுகள் நிறைந்துள்ளன. மாஞ்சோலை சுற்றுலா தலம் அல்ல, முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைத்து பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதி வசதிகள் எதுவும் இல்லை. காலையில் சென்று பார்த்துவிட்டு மாலையில் திரும்பி விட வேண்டும். மாஞ்சோலை அரசுப் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்ட வாட்ச் டவரில் ஏறி நின்று பார்த்தால் நான்கு பக்கங்களும் இயற்கை எழில் கொஞ்சும் மலை காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
பிச்ச மூப்பன் வலசை கண்ணாடி படகு சவாரி
மன்னார் வளைகுடா கடலில் வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினங்களை பொது மக்கள் கண்டு ரசிக்க ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையின் கீழ் இயங்கி வரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் சார்பில் ஏர்வாடி அருகே உள்ள பிச்சை மூப்பன் வலசை கடற்கரை கிராமத்தில் இருந்து அரை நாட்டிக்கல் தொலைவில் உள்ள மணல் திட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர சுற்றுலா கண்ணாடிப் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி படகு சவாரி கடலுக்கு நடுவில் உள்ள ஒரு மணல் திட்டிற்கு செல்லும். அங்கு சென்றதும் சுற்றுலா பயணிகள் படகில் இருந்து இறக்கி விடப்படுவார்கள். சுற்றுலா பயணிகள் மணல் திட்டில் கரை ஒதுங்கியுள்ள பவளப்பாறைகளைக் கண்டு ரசிப்பதுடன் கடலில் இறங்கி மகிழலாம்.
பின்னர் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றிக்கொண்டு படகுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் மூலம் அந்த மணல் திட்டைச் சுற்றி வாழ்ந்து வரும் கடல் வாழ் உயிரினங்களை வனத்துறையினர் சுற்றிக் காட்டுகின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில் எளிதாக செல்ல முடியும் என்பது ஒரு சிறப்பாக இருந்தாலும், ‘வாழா என் வாழ்வை வாழவே, தாழாமல் மேலே போகிறேன்...’ என 96 பட விஜய் சேதுபதி போல இன்ஸ்டா ரீல்ஸ் செய்து அசத்தவும் இவை ஏற்ற இடங்கள் என்பது கூடுதல் சிறப்பு.
இனியும் என்ன தாமதம்? கனவு சுற்றுலா தலத்திற்கு செல்லும் முன் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்...
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்