You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்று கோபுரம் புனரமைக்கப்பட்ட கோவில் எது தெரியுமா?
- எழுதியவர், சு.மகேஷ்
- பதவி, பிபிசிக்காக
லாட்டரி சீட்டுகளுக்கு தமிழகத்தில் தடை உள்ளது. ஆனால் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோவிலின் ராஜகோபுர புனரமைப்பிற்காக, 148 ஆண்டுகளுக்கு முன்னர் பரிசு சீட்டு (லாட்டரி சீட்டு) விற்று பணம் திரட்டப்பட்டது என்றால் நம்பமுடிகிறதா?
ஆம். பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்காகத் தான் இது நடந்தது. இக்கோவிலின் ராஜ கோபுர புனரமைப்பு பணிகளுக்காக 1875ல் லாட்டரி சீட்டு விற்று திருப்பணி நிதி திரட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் பழையாற்றின் கரையில் உள்ள சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில்.
இக்கோவிலின் மூலவர் தாணுமாலையன் என்று அழைக்கப்படுகிறார். ஸ்தாணு என்ற சிவனையும், மால் ஆகிய திருமாலையும், அயன் என்ற பிரம்மாவையும் குறிக்கும் மும்மூர்த்திகள் கோவில் இது.
அகலிகையால் ஏற்பட்ட சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்றதாக கோவில் தலபுராணம் விவரிக்கிறது.
134 அடி உயர ராஜ கோபுரம்
வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை எழுதி 1953ல் வெளிவந்துள்ள ’The Suchinduram Temple – A Monograph’ புத்தகத்தில் சுசீந்திரம் ஆலய ராஜகோபுரத்தின் உயரம், தரைமட்டத்திலிருந்து கலசம் வரை 134 அடி 6 அங்குலம் (136 feet 6 inch) என்றும், கோபுரம் ஏறத்தாழ 5,400 சதுர அடி பரப்பளவில் (90 அடி நீளம் மற்றும் 60 அடி அகலம்) அமைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் உள்ள எந்த கோவிலிலும் சுசீந்திரம் ராஜகோபுரத்தை போன்ற மிக நேர்த்தியான மிக அழகான கோபுரம் இல்லை என்று பெருமை கொள்ளலாம் என்றும் நூல் ஆசிரியர் கே.கே.பிள்ளை இந்த கோபுரத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உயர்ந்த ராஜகோபுரம் உள்ள கோவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தான். சுசீந்திரம் ஊரை சுற்றியுள்ள காக்குமூர், குறிச்சி, பறக்கை தேரூர் போன்ற கிராமங்களிலிருந்து சுசீந்திரம் கோபுரம் தரிசிப்பதற்கு ஏற்றவாறு இருக்கிறது, என நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான முனைவர் அ.கா.பெருமாள் தனது ’தாணுமாலயன் ஆலயம் -சுசீந்திரம் கோவில் வரலாறு’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
பி.பி.சி., தமிழிடம் பேசிய அ.கா.பெருமாள், சுசீந்திரம் கோவில் ராஜகோபுர அதிஷ்டானப் பகுதியை, மலையாள ஆண்டு 720 (1544 AD) ல் விஜயநகர படைத்தலைவர் விட்டலரும் அவருடைய தம்பியும் அமைத்ததாக கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. கோபுரம் அதிஷ்டானம் கட்டப்பட்டு 344 ஆண்டுகள் எந்த வளர்ச்சியுமின்றி அப்படியே இருந்திருக்கிறது.
பின்னர் 1881-ல் அப்போதைய திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் மன்னரான விசாகம் திருநாள் கோபுரம் கட்டும் பணிகளை துவங்கியுள்ளார்.
சுசீந்திரம் கோவில் கோபுர பணி ஆரம்பித்த 4 ஆண்டுகளில் (1885) விசாகம் திருநாள் மன்னர் இறந்து விட்டார். அடுத்து வந்த மன்னர் மூலம் திருநாள் காலத்தில் மலையாள ஆண்டு 1003, ஆனி மாதம் 21 ஆம் தேதி (கி.பி. 1888) கோபுர பணி நிறைவடைந்துள்ளது என்றார் முனைவர் அ.கா.பெருமாள்.
வட்டப்பள்ளி ஸ்தானிகர்
மலையாள மொழியில் வட்டம் என்றால் ஏற்பாடு அல்லது தயாரிப்பு என்றும் பள்ளி என்றால் கோவில் என்றும் வழங்கப்படுகிறது. வட்டப்பள்ளி என்றால் கோவில் ஏற்பாடுகளை கவனிப்பவர் என்று பொருள்.
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் சடங்குகள் மற்றும் திருவிழாக்களை மேலாண்மை செய்யும் பரம்பரை நிர்வாகிகள் தான் வட்டப்பள்ளி ஸ்தானிகர்கள்.
சுசீந்திரத்திலேயே நிரந்தரமாக தங்கி இருக்கும் வட்டப்பள்ளி ஸ்தானிகர்கள் கோவிலில் கொடி ஏற்றுதல், கோவில் விழாவில் வாகனத்துடன் வருதல் போன்ற உரிமைகளை பெற்றிருந்தனர். ஒரு காலத்தில் கோவிலின் திறவுகோல், கோவில் அணிகலன்கள், விலை உயர்ந்த பாத்திரங்கள் எல்லாமே இவர்களின் பொறுப்பில் தான் இருந்தன, என்று கே.கே.பிள்ளையின் ‘The Suchinduram Temple – A Monograph‘ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுசீந்திரம் வட்டப்பள்ளி மடத்தை சேர்ந்தவர்கள் சமஸ்கிருதம் மற்றும் மலையாள மொழியில் புலமை பெற்றவர்கள் என்றும், அவர்களில் சிலர் ஜோதிடம் மற்றும் மருத்துவத்துறையிலும் கை தேர்ந்தவர்கள் என்றும் அந்நூலில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கோவில் புனரமைப்பிற்கு பணம் திரட்ட லாட்டரி விற்பனை
இன்றைய கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் 1728 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் ராஜ்ஜியத்த்தின் ஆட்சியின் கீழ் இருந்தது.
திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்த ஆயில்யம் திருநாள் காலகட்டத்தில் சுசீந்திரம் கோவில் கோபுரம் புனரமைப்பிற்காக அன்றைய மதிப்பில் ரூபாய் 70,000 தேவைப்பட்டுள்ளது.
1875 காலகட்டத்தில் சுசீந்திரம் வட்டப்பள்ளி மடத்தின் ஸ்தானிகராக இருந்தது பாச்சு மூத்தது என்ற பரமேஸ்வர சர்மா. இவர் திருவிதாங்கூர் மன்னர்களின் முக்கிய ஆலோசகராக இருந்துள்ளார். இவர் தான் லாட்டரி விற்று நிதி திரட்டி கோபுர திருப்பணிகளை மேற்கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் மன்னருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
"லாட்டரி ஆலோசனையை மன்னருக்கு வழங்கிய பாச்சு மூத்தது என்ற பரமேஷ்வர சர்மா எங்கள் குடும்பத்தில் 6 தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்தவர்," என்றார் சுசீந்திரம் வட்டப்பள்ளி மடத்தின் தற்போதைய ஸ்தானிகரான ஆயுர்வேத மருத்துவர் ஷிவ பிரசாத்.
இது குறித்து பி.பி.சி. தமிழிடம் ஷிவ பிரசாத் கூறும் போது, "மலையாள ஆண்டு 1050 ல் (1875 AD) தான் லாட்டரி விற்பதற்கான உத்தரவை மன்னர் வழங்கியுள்ளார். மன்னர் வழங்கிய அந்த உத்தரவு இன்றும் சுசீந்திரம் வட்டப்பள்ளி மடத்தில் உள்ளது.
கோபுர திருப்பணிக்காக மொத்த மதிப்பீட்டில், ரூபாய் 30 ஆயிரத்தை அரசு சார்பில் வழங்குவதாகவும் மீதம் உள்ள ரூபாய் 40 ஆயிரத்தை லாட்டரி விற்று திரட்டலாம் என்றும் முடிவு செய்துள்ளனர். ஒரு லாட்டரி சீட்டின் விலை அன்றைய மதிப்பில் ஒரு ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளனர்," என்றார் அவர்.
சுசீந்திரம் வட்டப்பள்ளி மடத்தின் தற்போதைய ஸ்தானிகர் மருத்துவர் ஷிவ பிரசாத்தின் தந்தை காலம்சென்ற பரமேஷ்வர ஷர்மாவும் ஆயுர்வேத மருத்துவர். இவர்களது பூர்வீகம் கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் பகுதி.
லாட்டரி விற்பனை தொடர்பாக சுசீந்திரம் வட்டப்பள்ளி மடத்தில் உள்ள மன்னர் வழங்கிய உத்தரவு மலையாள மொழியில் எழுதப்பட்டுள்ளது.
எத்தனை லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டன, லாட்டரி குலுக்கலில் யார் வெற்றி பெற்றார்கள், என்பது குறித்தான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கபெறவில்லை, என்றார் அ.க. பெருமாள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்