You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உஜ்ஜைன்: ஆன்மிக பூமியில் பாலியல் வன்கொடுமை - சிறுமிக்கு உதவ யாரும் முன்வராதது ஏன்?
- எழுதியவர், ஷுரைஹ் நியாஸி
- பதவி, பிபிசி இந்திக்காக
மத்திய பிரதேச மாநிலத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவர் இரண்டரை மணிநேரமாக கிழிந்த ஆடைகள் மற்றும் ரத்தக் கறைகளுடன் உதவி கேட்டு அலைந்து திரிந்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு உதவ யாரும் முன்வராத அவல நிலை இருந்துள்ளது. சாலையில் கிடந்த அவரைப் பார்த்த ஒரு நபர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் ஆன்மிக பூமியில் உஜ்ஜைனில் ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் வியாழக்கிழமை தடுப்புக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த மறுநாளே ஆட்டோ டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது இதுதொடர்பாக மொத்தம் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வியாழக்கிழமை காயமடைந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு ஆட்டோ டிரைவர். சம்பவம் நடந்த இடத்தை அடையாளம் காட்டச் செய்ய குற்றம் சாட்டப்பட்டவருடன் போலீசார் அப்பகுதிக்கு வந்திருந்தனர். அப்போது அவர் ஓட முயற்சி செய்தபோது சுவரில் மோதிக்கொண்டார். போலீசார் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
செப்டம்பர் 25ஆம் தேதி உஜ்ஜைனில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மஹாகால் காவல் நிலையப் பகுதியில் உள்ள பட்நகர் சாலையில் உள்ள தண்டி ஆசிரமம் அருகே சிறுமி ஒருவர் காயமடைந்த நிலையில் திங்கள்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டார். அவரது ஆடைகள் ரத்தக் கறையுடன் இருந்தன.
இந்தச் சிறுமி சாவர்கெடி சிம்ஹஸ்தா பைபாஸ் காலனிகளில் சுமார் இரண்டரை மணிநேரம் கிழிந்த உடையில் சுற்றித் திரிந்த போதிலும், உள்ளூர் மக்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் இதுபற்றி தகவல் அளித்த போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான எல்லா சிசிடிவி காட்சிகளையும் போலீசார் சேகரித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளில் என்ன இருக்கிறது?
இந்த சிறுமி மூன்று ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இரண்டு நபர்களுடன் பேசுவதை இந்தக் காட்சிகளில் காண முடிகிறது. அவர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மைனர் பெண் சத்னாவில் வசிப்பவர் என்று காவல்துறை கூறியது. சிறுமியின் வயது 12 என்று காவல்துறை முன்பு சொன்னது. ஆனால் முதல் தகவல் அறிக்கை நகலில் அவரது வயது 15 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
"இந்தச் சிறுமி சத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர். செப்டம்பர் 24 அன்று அவர் வீட்டில் இருந்து காணாமல் போனார். அவர் கடத்தப்பட்டதாக சத்னாவில் உள்ள காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய் சிறு வயதிலேயே அவளை விட்டுச் சென்றுவிட்டார். தந்தை அவ்வளவாக மனநிலை சரியில்லாதவர். சிறுமி தனது தாத்தா மற்றும் மூத்த சகோதரர்களுடன் கிராமத்தில் வசித்து வருகிறார்.
அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறார், அவர் காணாமல் போன பிறகு தாத்தா வழக்கு பதிவு செய்தார். செப்டம்பர் 24 அன்று ஐபிசி பிரிவு 363-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று உஜ்ஜைன் எஸ்பி சச்சின் ஷர்மா கூறினார்.
"பட்நகர் சாலையில் உள்ள தண்டி ஆசிரமத்திற்கு வெளியே சிறுமி இருப்பதை ஆசிரமத்தைச் சேர்ந்த ஆச்சார்யா ராகுல் ஷர்மா கண்டார். அவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். முதலுதவிக்குப் பிறகு சிறுமி இந்தூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.
சத்னாவில் இருந்து ஒரு போலீஸ் குழு இந்தூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதே நேரம் அந்தச் சிறுமி எப்படி உஜ்ஜைனை அடைந்தார் என்பதைக் கூற முடியாத நிலையில் போலீசார் உள்ளனர்.
உஜ்ஜைனில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி மன வளர்ச்சி குன்றியவர். கிராமத்தில் தனது தாத்தா மற்றும் சகோதரர்களுடன் வசித்து வருகிறார் என்று சத்னாவின் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சிவேஷ் சிங் பாகேல் குறிப்பிட்டார்.
பள்ளிக்குச் சென்ற அவர், மாலை வரை அவர் வீட்டிற்கு வராததால், அவரைத் தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரைக் காணவில்லை என்பதால் மறுநாள் புகார் தாக்கல் செய்யப்பட்டதாக பாகேல் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவரைப் பற்றிய தகவல் எல்லா காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது. பின்னர் உஜ்ஜைன் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் அதன் வீடியோ சிறுமியின் தாத்தாவிடம் காட்டப்பட்டது. அவர் சிறுமியை அடையாளம் காட்டினார்.
இந்தச் சம்பவம் உஜ்ஜைனில் மட்டுமின்றி மத்திய பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உதவிக்காக குரல் கொடுத்தபோதிலும் மஹாகால் நகரில் யாரும் உதவிக்கு முன்வரவில்லை.
இந்தச் சிறுமி குறித்து முதலில் போலீசாருக்கு தகவல் கொடுத்தவர் ராகுல் ஷர்மா.
தான் தகவல் கொடுத்த 20 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாக ராகுல் ஷர்மா கூறினார்.
"உஜ்ஜைன் போன்ற நகரத்தில் சிறுமிக்கு உதவி கிடைக்காததற்கு வருந்துகிறேன். மக்கள் உதவி செய்ய முன்வந்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.
அப்போது அந்த சிறுமியால் நிற்கக்கூட முடியவில்லை என்றும் அவர் பேசிய மொழி தனக்குப் புரியவில்லை என்றும் ராகுல் கூறினார்.
சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என்றும் அவருக்கு சிகிச்சை அளிப்பதே தனது முதல் முன்னுரிமையாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் உண்மையிலேயே மனதை உலுக்குவதாக உள்ளது என்று உள்ளூர்வாசியும் செய்தியாளருமான ஜெய் கௌஷல் கூறினார்.
சிறுமிக்கு உதவி கிடைக்காதது பற்றிப் பேசிய அவர், “மக்கள் மத்தியில் அவநம்பிக்கை உணர்வு உருவாகியுள்ளது,” என்கிறார்.
"மக்கள் உதவி செய்ய முன்வருவதில்லை. ஒருவேளை தங்கள் மீது பொறுப்பு சுமத்தப்படும் என்ற பயத்தால் அவர்கள் இப்படி உள்ளனர் என்று தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை தங்களை இழுத்துவிட்டுவிடக்கூடும் என்று மக்கள் நினைக்கிறார்கள்," என்றும் அவர் கூறினார்.
"மஹாகால் லோக் உருவாக்கப்பட்டதில் இருந்து இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் நாம் எந்த அளவிற்குப் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
"அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது, மக்கள் அவருக்கு உதவாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நகரத்தில் இதுபோல நடந்திருக்கக்கூடாது.
உலகம் முழுவதும் உள்ள மக்களின் துன்பங்களை நீக்குபவர் இறைவன் மஹாகால் என்று நம்பப்படுகிறது. அப்படி இருக்கும்போது மக்கள் தயவு தாட்சண்யம் கட்டாமல் இருந்தது அதிர்ச்சியாக உள்ளது,” என்று உஜ்ஜைனை சேர்ந்த அமிதாப் திவாரி கூறுகிறார்.
அரசை தாக்கிய எதிர்க்கட்சியினர்
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ், மாநில அரசைக் கடுமையாக சாடியுள்ளது.
மத்திய பிரதேச அரசு குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "பெண்களை பாதுகாக்கும் விஷயத்தில் மாநில அரசு திறனற்றதாக உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் சம்பவங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது," என்றார்.
முன்னாள் முதல்வர் கமல்நாத்தும் அரசை கடுமையாகச் சாடினார். "இந்தச் சம்பவம் நிர்வாகத்திற்கும் சமூகத்திற்கும் அவமானம். நீங்கள் தொடர்ந்து தேர்தலில் மட்டும் போட்டியிட்டு, பொய்யான அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுவீர்களா என்பதை முதல்வரிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்," என்றார் அவர்.
அதே நேரத்தில், இந்தச் சம்பவத்தில் மைனர் பெண் ஒருவர் ரத்தம் சொட்டும் நிலையில் சாலையில் அலைந்து திரிந்தது துரதிர்ஷ்டவசமானது என்று பாஜகவின் முன்னாள் முதல்வர் உமாபாரதி கூறியுள்ளார். இந்தச் சம்பவம் நமது சமூகத்தின் மீது ஒரு களங்கம் என்றும் தெரிவித்தார்.
மறுபுறம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க எஸ்ஐடி(சிறப்பு விசாரணைக் குழு) அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா போபாலில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்