பெர்லின் சுவர்: நகரை இரண்டாக பிரித்து சுவர் எழுப்பப்பட்டது ஏன்? இரும்புத்திரை விலகியது எப்படி?

(இன்று, அக்டோபர் 3, கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளுக்கிடையே இரும்புத்திரை விலகி, அவை ஒன்றிணைந்த நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.)

உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் பெரும்பாலும் வேகமாக நகர்ந்தாலும், ஆழமான நீடித்த தாக்கத்தைக் கொண்டிருப்பவை.

ஆனால் நவீன உலக வரலாற்றில், 1989-இல் நிகழ்ந்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நிகழ்வினைப் போல மிக வேகமாகவும், ஆனால் மிகவும் நீடித்த எதிர்வினைகளையும் கொண்ட இன்னொரு நிகழ்வைப் பார்ப்பது கடினம்.

ஒரு அதிகார விபத்தின் காரணமாக பெர்லின் சுவர் சற்றே இடிந்து விழுந்தது. ஆனால் சோவியத் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணியை சரிவின் விளிம்பிற்குத் தள்ளிய, புரட்சிகளால் அது முற்றிலுமாக வீழ்ந்தது. இது ஒரு புதிய உலகதிற்கான கட்டமைப்பை உருவாக்கியது.

நவீன உலகின் இந்த பெரும் வரலாற்று நிகழ்வு எப்படி நடந்தது?

பெர்லின் சுவர் எதற்காகக் கட்டப்பட்டது?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பா சோவியத் யூனியன் மற்றும் அதன் முன்னாள் மேற்கத்திய நட்பு நாடுகளால் பிரிக்கப்பட்டது. சோவியத் யூனியன் படிப்படியாக கிழக்கை மேற்கிலிருந்து பிரித்து ஒரு ‘இரும்புத்திரை’ அமைத்தது.

தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி ஆக்கிரமிப்பு சக்திகளால் பிரிக்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் மேற்கு ஜெர்மனியில் ஆதிக்கம் செலுத்தின. சோவியத் ஒன்றியம் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்தது. ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும் கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஐரோப்பாவில் சோவியத் யூனியனின் காலடியாக மாறியது.

பெர்லின் நகரம் நான்கு வழிகளாகப் பிரிக்கப்பட்டது. நகரின் மேற்கில் பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க மண்டலங்கள் அமைந்தன. கிழக்கில் சோவியத் மண்டலம்.

மேற்கு பெர்லின் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியால் சூழப்பட்ட ஒரு தீவாக மாறியது.

கிழக்கு பெர்லின் மூலம் மக்கள் மேற்குக்குச் சென்றதால், அதைத்தடுக்க 1961-ஆம் ஆண்டு பெர்லின் சுவர் கட்டப்பட்டது.

இரும்புத்திரை விலகியது எப்படி?

1980-களில், சோவியத் யூனியன் கடுமையான பொருளாதாரச் சிக்கலையும் பெரும் உணவுப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டது.

1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யுக்ரேனில் உள்ள செர்னோபில் மின் நிலையத்தில் ஒரு அணு உலை வெடித்தபோது, அது கம்யூனிச முகாமிற்கு வரவிருந்த சரிவின் அடையாளமாக அமைந்தது.

1985-இல் அதிகாரத்தை கைப்பற்றிய ஒப்பீட்டளவில் இளம் சோவியத் தலைவரான மிகைல் கோர்பச்சேவ், ‘கிளாஸ்னோஸ்ட்’ (திறந்த மனப்பான்மை) மற்றும் ‘பெரெஸ்ட்ரோயிகா’ (மறுசீரமைப்பு) சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

ஆனால் நிகழ்வுகள் அவர் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நகர்ந்தன.

கம்யூனிசக் கூட்டணியில் சீர்திருத்த இயக்கங்கள் ஏற்கனவே கிளர்ந்தெழுந்திருந்தன. போலந்திலும், ஹங்கேரியிலும் ஜனநாயகம் வேண்டி, கம்யூனிச அரசுகளுக்கெதிராக மக்கள் கிளர்ச்சிகள் நடந்தன.

1989-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் கிளர்ச்சி அலை கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதும் பரவியது.

இரும்புத்திரையில் விரிசல்கள் விழத்துவங்கின.

இரும்புத்திரை முழுவதும் எப்படி விலகியது?

இதன் தொடர்ச்சியாக, 1989-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, கிழக்கு பெர்லினில் கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் கூடி கிழக்கு ஜெர்மனியின் அரசாங்கத்திற்கெதிராக ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

கிழக்கு ஜெர்மனியின் தலைவர்கள் எல்லைகளைத் தளர்த்துவதன் மூலம் போராட்டங்களை அமைதிப்படுத்த முயன்றனர். அவர்கள் கிழக்கு ஜெர்மனி மக்களுக்கு மேற்கிற்குச் செல்லும் பயணத்தை எளிதாக்கினர். ஆனால் அவர்கள் எல்லையை முழுமையாக திறக்க விரும்பவில்லை.

இப்போராட்டத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு, மேற்கு ஜெர்மனியிலிருந்து, கம்யூனிச நாடான கிழக்கு ஜெர்மனியைப் பிரிக்கும் பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது.

இந்த மாற்றம் மிகவும் சிறியதாக இருக்கும்படி திட்டமிடபட்டது. ஆனால் அது நிகழ்த்தபட்ட விதம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது.

அந்தச் சம்பவம் எப்படி நிழந்தது?

சுவர் வீழும் முன் என்ன நடந்தது?

மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனிகளுக்கிடையே இரும்புத்திரையாக இருந்த பெர்லின் சுவர், அதுவரை கிழக்கு ஜெர்மனி மக்களை மேற்குக்கு எளிதாகச் செல்ல முடியாதபடித் தடுத்து வைத்திருந்தது.

இதைத் தளர்த்துவதற்கான புதிய விதிகள் பற்றிய குறிப்புகளைச் செய்தித் தொடர்பாளர் குந்தர் ஷபோவ்ஸ்கி (Günter Schabowski) நவம்பர் 9-ஆம் தேதி ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரக்க வாசித்தார். அதைக் கேட்டச் செய்தியாளர்கள் திகைத்துப் போனார்கள்.

"இனி நாட்டிற்கு வெளியே பயணிக்கத் தனிநபர்கள் எந்த முன்நிபந்தனைகளும் இன்றி விண்ணப்பிக்கலாம்," என்று அவர் கூறினார். ஆச்சரியமடைந்த பத்திரிகையாளர்கள் மேலும் விவரங்கள் கேட்டுக் கூச்சலிட்டனர்.

ஷாபோவ்ஸ்கி தனது குறிப்புகளை மீண்டும் வாசித்துவிட்டு, தனக்குத் தெரிந்தவரை, அந்த விதி உடனடியாக நடைமுறைக்கு வருவதாகக் கூறினார்.

உண்மையில் விசா விண்ணப்பங்கள் அதற்கு அடுத்த நாள் தான் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

‘கதவைத் திற!’

ஆனால் இச்செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதும், கிழக்கு ஜெர்மானியர்கள் அதிக எண்ணிக்கையில் எல்லையில் கூடினர்.

அன்று மாலை எல்லைக் காவல் பொறுப்பிலிருந்த காவலர் ஹரால்ட் ஜாகர், 2009-ஆம் அண்டு ஒரு ஜெர்மானிய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தான் அந்தச் செய்தியாளர் சந்திப்பைப் பெரும் குழப்பத்துடன் பார்த்ததாகக் கூறினார்.

அதன்பின் ஒரு பெரும் கூட்டம் பெர்லின் சுவரை நோக்கி வருவதைப் பார்த்தார்.

ஜாகர் பரபரப்பாகத் தனது மேலதிகாரிகளை அழைத்தார். ஆனால் அவர்கள் பெர்லின் சுவரில் இருந்த கேட்டைத் திறக்கவோ, கூட்டத்தைத் தடுக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தவோ எந்த உத்தரவும் கொடுக்கவில்லை.

எல்லையில் ஒரு சில காவலர்கள் மட்டுமே இருந்தனர். நூற்றுக்கணக்கான கோபமான குடிமக்களை எதிர்கொள்ள அவர்களால் முடிந்திருக்காது.

உலகமே பார்த்த உணர்ச்சிகரமான தருணம்

"துப்பாக்கிச் சூடு நடக்காமலேயே, கைகலப்புகளிலும் கூட்ட நெரிசலிலும், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம்," என்று ஜாகர் கூறினார்.

அதனால்தான் அவர் தனது காவலர்களுக்கு கேட்டைத் திறக்கும் படி ஆணையிட்டார்.

திறக்கப்பட்ட கேட்டின் வழியே ஆயிரக்கணக்கானோர் நுழைந்து மேற்கு ஜெர்மனி பக்கம் சென்றனர். பலர் பெர்லினின் பிராண்டன்பேர்க் வாயிலில் உள்ள சுவரில் ஏறி, அதைச் சுத்தியல் மற்றும் கோடாரிகள் கொண்டு தகர்க்கத் துவங்கினர்.

மேற்கு ஜெர்மனி மக்களின் இந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், ஆனந்தக் கண்ணீரையும் உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் பார்த்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)