You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்ரிக்கா தொடங்கி ஆசியா, ஐரோப்பா வரை பரவிய உறவுகளை இவர் கண்டுபிடித்தது எப்படி?
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகை, சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஆதி மனிதர்களின் வரலாற்று ஆதாரங்கள் நிறைந்த இந்தக் குகையின் வரலாற்றை கான்ஸ் திரைப்பட விழா வரைக்கும் கொண்டு சென்றார் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா.
இந்த குடியம் குகை குறித்த ஆவணப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு மரபணு ஆய்வு, ரமேஷ் யந்த்ராவுக்கு இங்கிலாந்தை சேர்ந்த ஜாஸ்மின் ரோஸ் என்பவருடன் ஐந்து தலைமுறைகள் முந்தைய மரபணுத் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடிக்கவும் உதவியுள்ளது.
இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், சொந்த நாட்டிலேயே அந்நியரை போல் வாழ்வதாக உணர்ந்தவர் ஜாஸ்மின் ரோஸ். தனது பூர்வீகத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் வளர்ந்த அவர், தனது குடும்ப வரலாற்றைத் தேடத் தொடங்கினார்.
அப்படித் தனது பின்னணியைத் தேடிக் கொண்டிருந்த அவருக்கும், தமிழ்நாட்டில் வாழும் இயக்குநர் ரமேஷ் யந்த்ராவுக்கும் மரபணுத் தொடர்பு இருப்பது எப்படி?
ஒருவரது மரபணுவை வைத்தே, அவரது குடும்ப வரலாற்றை மட்டுமின்றி, அவரது ஆதிகால வரலாற்றையும் கண்டுபிடிக்க முடியுமா? இங்கு விரிவாகக் காண்போம்.
குடியம் ஆவணப்பட முயற்சியில் தொடங்கிய மரபணு ஆய்வு
தனது டிராக்டர் முழு நீள திரைப்படத்திற்கான படப்பிடிப்புப் பணியில் இருந்த ரமேஷிடம் குடியம் ஆவணப்படத்திற்காக அவர் செய்துகொண்ட மரபணு ஆய்வு குறித்துப் பேசினோம்.
“குடியம் குகை குறித்த ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்திற்காக மரபணு ஆய்வு குறித்த சில உதவிகள் தேவைப்பட்டன.”
இந்நிலையில், அங்குள்ள கற்கால கருவிகள் தொடர்பான மரபணு ஆய்வில் என்னென்ன தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதைத் தேடத் தொடங்கினார் ரமேஷ்.
அப்போது, ஒரு குறிப்பிட்ட மனிதரின் மரபணுவை வைத்து அவரது தனிப்பட்ட வரலாற்றை, அவரது மூதாதையர்கள் யார், யார், எங்கிருந்து வந்தார்கள் என்பன உட்பட பல தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை அவர் தெரிந்துகொண்டார்.
அதுமட்டுமின்றி, ஒருவரது பூர்வீகத்தைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி, தற்போது வாழும் உலக மக்களிடையே தன்னுடைய மரபணுவுடன் தொடர்புள்ள மரபணுவைக் கொண்டவர்களையும் கண்டுபிடிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டார்.
இதுகுறித்துத் தெரிந்துகொண்ட போது, “எனக்கு இந்த ஆய்வை குடியம் குகை ஆவணப்படத்திற்காக மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அந்தப் பணிகளுக்கான முன்னோட்டமாக எனது மரபணு மாதிரிகளையே அமெரிக்காவில் உள்ள ஒரு மரபணு ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன்,” என்று விளக்கினார் ரமேஷ் யந்த்ரா.
ஐந்து தலைமுறைகளுக்கு முன்பே தொடங்கிய தொடர்பு
இந்த முயற்சியின்போது ஆச்சர்யமளிக்கும் விதமாக, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், சிங்கப்பூர் எனப் பல்வேறு நாடுகளில் ரமேஷுடைய மரபணுவுடன் தொடர்புடைய மரபணுக்களை கொண்டவர்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
“என் பூர்வீகமே இங்குதான் என்பதால், தென்னிந்திய நிலப்பரப்பில் வாழும் மக்களோடு மரபணு ரீதியாக ஒற்றுமை தென்படுவதில் எனக்கு ஆச்சர்யமில்லை. ஆனால், அதையும் தாண்டி ஐரோப்பாவில் வாழும் நபர்களுடனும் எனக்கு மரபணு ஒற்றுமை இருப்பதை இந்த ஆய்வில் அறிந்துகொண்டபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது,” என்கிறார் ரமேஷ் யந்த்ரா.
இப்படித்தான் ரமேஷுக்கு பிரிட்டனில் இருக்கும் ஜாஸ்மின் ரோஸ் அறிமுகமானார். குடும்பப் பின்னணியிலும் சரி, தோற்றத்திலும் சரி எந்தவிதத்திலும் தமிழ்நாட்டுடன் கொஞ்சமும் தொடர்பே இல்லாதவராக இருந்த அவரது மரபணுவுக்கும், ரமேஷின் மரபணுவுக்கும் இடையே எப்படி ஒற்றுமை இருந்தது என்று அவர்கள் இருவருமே ஆச்சர்யப்பட்டனர்.
ஜாஸ்மின் ரோஸின் ஒட்டன், அதாவது ஐந்து தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த அவரது தாத்தாவுக்கு தாத்தா இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெயர் ஜேம்ஸ் நானயக்கார.
இந்த ஜேம்ஸ் நானயக்காரவின் மனைவி தமிழர். இவர்களுடன் மரபணு தொடர்பு இருக்கும் மற்றொரு பெண்ணான எஸ்தர் என்பவர் சிங்கப்பூரில் இருக்கிறார். அவருடன் கிடைத்த மரபணு ஒற்றுமையைக் கொண்டு அவரது பின்னணியைத் தேட முயன்றுள்ளார் ஜாஸ்மின்.
இந்தத் தேடலை இன்னொரு புறம் ரமேஷ் யந்த்ராவும் முன்னெடுத்தார். அப்போது எஸ்தர் எழுதிய ஒரு கவிதை அவருக்குக் கிடைத்துள்ளது. அந்தக் கவிதையின் மூலமாகத்தான் ஜேம்ஸ் நானயக்காரவின் மனைவி ஒரு தமிழ்ப்பெண் என்பது இவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.
இதன்மூலம், ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு சிங்கள ஆண் ஒருவருக்கும் தமிழ்ப் பெண் ஒருவருக்கும் இடையே நடந்த திருமணத்தின் மூலம், உருவான உறவுக் கிளையில், இப்போது பிரிட்டனை சேர்ந்த ஜாஸ்மின் ரோஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ் யந்த்ரா இருவருக்கும் மரபணுத் தொடர்பு தொடங்கியிருப்பது தெரிய வந்தது.
இப்படியாக, தனது வரலாற்றின் வேர்களைத் தேடிக் கொண்டிருந்த ஜாஸ்மின் ரோஸும், ரமேஷ் யந்த்ராவும் தங்களுடைய மரபணு சோதனையின் மூலம் தற்போது புதிய சகோதரத்துவத்தை அடைந்துள்ளனர். குடியம் குகை ஆவணப்பட முயற்சியில் ரமேஷ் யந்த்ரா கண்டம் விட்டு கண்டம் தாண்டிய தனது ரத்த சொந்தங்களை இன்று அறிந்து கொண்டிருகிறார். மேலும் தனது வரலாற்று வேர்களை அவர் தேடிக் கொண்டிருக்கிறார்.
மரபணுவை வைத்து வரலாற்றை கண்டறிவது சாத்தியமா?
மரபணுவை வைத்து நமது வரலாற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார் மரபணு விஞ்ஞானி தங்கராஜ்.
இத்தகைய ஆய்வுகளில், தாய்வழி வரலாறு, தந்தைவழி வரலாறு என்று தனித்தனியாக பிரித்துக் கண்டறிய முடியும் என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் செல்லுலார் மற்றும் மூலக்கூறு அறிவியலுக்கான மையத்தில் மரபணு விஞ்ஞானி தங்கராஜ்.
“இதில் சில வகைகள் உள்ளன. உதாரணத்திற்கு, மைட்டோகாண்ட்ரியன் டி.என்.ஏ எனப்படும் தாய்வழி மரபணுவை வைத்து ஆய்வு செய்வது ஒரு வகை. மற்றொன்று, Y குரோசோம்களை வைத்து நடத்தப்படும் ஆய்வு. இது ஆண்களில் மட்டுமே இருக்கக்கூடிய மரபணு. இதை வைத்து தந்தை வழி வரலாற்றைக் கண்டுபிடிக்கலாம்.
இதுபோல் சில ஆய்வு முறைகளின் மூலம் மரபணுக்களின் சில குறிப்பிட்ட உருமாற்றங்களை வைத்து மனிதர்களின் மரபணு வரலாற்றைக் கண்டுபிடிக்க முடியும்,” என்று அவர் விவரிக்கிறார்.
“மனித இனம் ஆப்ரிக்காவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது என நமக்குத் தெரியும். ஆகவே நமது மைட்டோகாண்ட்ரியன் டி.என்.ஏ.வின் வேர் அங்குதான் தொடங்குகிறது.
அதற்குப் பிறகு சில உருமாற்றங்கள் மரபணுவில் தானாக நடக்கும். அந்த உருமாற்றங்களைப் பொருத்து மனித மரபணுக்கள் பல்வேறு கிளைகளாகப் பிரிந்தன. இந்த மரபணுக்களை வைத்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மரபணு தொடர்பைக்கூட நம்மால் கண்டறிய முடியும்,” என்று விளக்குகிறார் தங்கராஜ்.
இதற்குச் சான்றாக அவர்கள் மேற்கொண்ட அந்தமான் பழங்குடிகள் குறித்த ஆய்வை மேற்கோள் காட்டினார். அந்தமான் பழங்குடிகளின் தோற்றம் ஆப்ரிக்காவில்தான் என்றாலும்கூட, அவர்கள் அங்கிருந்து சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இடம் பெயர்ந்து வந்துவிட்டார்கள் என்பதை “இத்தகைய மரபணு ஆய்வின் மூலமாகத்தான் கண்டறிந்ததாக” தங்கராஜ் தெரிவித்தார்.
‘ஒருவரின் வரலாற்றைக் கூற ஒரு துளி ரத்தம் போதும்’
இங்கிலாந்தில் இருக்கும் ஜாஸ்மின் ரோஸ், தமிழ்நாட்டில் இருக்கும் ரமேஷ், இருவரது மரபணுவை ஒப்பிடும்போது, இருவருக்கும் மரபணு ஒற்றுமை இருப்பது தெரிய வந்தது. ஆனால், ரமேஷின் வம்சாவளி ஆப்ரிக்க கண்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மூதாதை வழி வந்தவர்கள் என்பது வரைக்கும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அது எப்படி சாத்தியமானது என்ற கேள்வியை தங்கராஜிடம் முன்வைத்தோம்.
“சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து செல்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர்கள் அங்கு சென்ற பிறகு, அடுத்தடுத்த தலைமுறைகளில் மரபணுவில் மாறுபாடுகள் நிகழும்.
ஆனால், அவர்களது மரபணுவில், தென்னிந்தியாவில் இருந்து சென்ற அவர்களது மூதாதையின் மரபணுவின் அடையாளம் புதைந்திருக்கவே செய்யும். அதை வைத்து அவர்களது பூர்வீகம் தென்னிந்தியாவிலும் உள்ளது என்பதை நம்மால் கூற முடியும். இதேபோலத்தான் அவர்களது ஆதிகால மூதாதை வரலாற்றையும் கண்டுபிடிப்பார்கள்,” என்று விவரித்தார்.
அதுமட்டுமின்றி இதற்கு ஒரு துளி ரத்தம், ஒரு முடி அல்லது சிறிய எலும்பு மாதிரி போன்ற ஏதாவது ஒன்று இருந்தாலே போதும் எனக் கூறும் தங்கராஜ், அதிலுள்ள மரபணுவை வைத்தே அவர்களது வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியும் என்றார்.
இதே ஆய்வுமுறையில் கடந்த 2013ஆம் ஆண்டில் கோவாவில் இருந்த 400 ஆண்டுகள் பழமையான எலும்பு மாதிரிகள் ஜார்ஜியா ராணி ஒருவருடையது என்பதும் மரபணு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜார்ஜியாவை சேர்ந்த ராணி கெடெவன் 1624ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரது உடல் எச்சங்கள் கோவாவில் இருந்த ஒரு பழங்கால தேவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த எலும்பு கண்டுபிடிக்கப்பட்டபோது அது யாருடையது என உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.
அந்த ஆய்வின்போது, “400 ஆண்டுகள் பழமையான அந்த எலும்புகளை ஆய்வு செய்தபோது, பல்வேறு பகுதிகளில் கிடைத்த மரபணு மாதிரிகளுடன் ஒப்பிட்டோம். அப்போது ஜார்ஜியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மரபணுக்களுடன் அவரது மாதிரிகள் ஒத்துப்போயின.
ஆய்வின் முடிவில் அது ஜார்ஜியாவை சேர்ந்த ராணி கெடெவனின் எலும்புகள் என்பது உறுதிசெய்யப்பட்டது,” என்று அந்த ஆய்வில் பங்குபெற்ற மரபணு விஞ்ஞானி தங்கராஜ் விவரித்தார்.
பூர்வீகம் தெரியாமல் தவிக்கும் தாயும் மகளும்
ஜாஸ்மின் ரோஸின் அம்மா 60 வயதைக் கடந்தவர். அவர் இலங்கையில் பிறந்து, அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்றவர், பிறகு 1960களின் தொடக்கத்தில் இங்கிலாந்து சென்றுவிட்டார்.
“என் அம்மா 3 வயதாக இருக்கும்போதே இங்கிலாந்துக்கு வந்துவிட்டார். அவர் அறியாத வயதிலேயே தனது பூர்வீக வேர்கள் வெட்டப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதால், அவரது குடும்பப் பின்னணி தெரியாமலேயே வளர்ந்துள்ளார். அதோடு அதைத் தேடுவதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்கும் பலன் எதுவும் கிடைக்கவில்லை,” என்று வருந்துகிறார் ஜாஸ்மின்.
ஜாஸ்மின் ரோஸுக்கும் தனது வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.
“என் ஆன்மாவில் எப்போதும் ஒரு வெற்றிடம் இருந்துகொண்டே இருப்பதைப் போல் நான் உணர்ந்துள்ளேன். எனது பூர்வீகம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாமல் இருந்தது. என் அம்மாவுக்கும் அது தெரிந்திருக்கவில்லை. அதை நினைத்து அவரது முகத்தில் எப்போதுமே சோகம் கவிழ்ந்திருக்கும்.
அதுமட்டுமின்றி, நான் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவளாக இருந்தாலும் அப்படி நடத்தப்பட்டதாக நான் உணரவில்லை. எப்போதும் ஓர் அந்நியரைப் போலவே நான் பார்க்கப்பட்டேன். ஆகையால் என் மூதாதையர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, என் குடும்ப வரலாற்றைத் தெரிந்துகொள்ள நான் முயன்றேன்,” என்று வீடியோ கால் மூலமாக பிபிசி தமிழிடம் பேசிய ஜாஸ்மின் ரோஸ் தெரிவித்தார்.
குடும்ப வரலாற்றைத் தெரிந்துகொள்ள முயல்வது ஏன்?
தனது குடும்ப வரலாற்றைத் தெரிந்துகொள்வது தனக்கு வாழ்வின் மீதான ஒரு பிடிப்பைக் கொடுக்கும் என நம்புகிறார் ஜாஸ்மின் ரோஸ். இந்த முயற்சியின்போது தான், இரு வேறு கண்டங்களில், இரு வேறு நாடுகளில், இதுவரை ஒருவருக்கு ஒருவர் எந்தவிதத் தொடர்புமே இல்லாமல் வாழ்ந்த ரமேஷ் யந்த்ராவும் ஜாஸ்மின் ரோஸும் அறிமுகமாகியுள்ளனர்.
இப்போது அவர்கள் தங்களுக்குள் ஒரு சகோதரத்துவத்துடன் பழகி வருவதோடு, ஜாஸ்மின் தனது வரலாற்றைத் தெரிந்துகொள்ள, தன்னால் இயன்ற முயற்சிகளையும் ரமேஷ் யந்த்ரா எடுத்து வருகிறார்.
ஜாஸ்மின் ரோஸின் தாயாருடைய குடும்பம் தொடர்பான எந்தவிதமான ஆவணப் பதிவுகளுமே இதுவரை கிடைக்கவில்லை. ஜாஸ்மினுடைய பாட்டி இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் தாத்தா பஞ்சாபை சேர்ந்தவர் என்பதும் மட்டுமே இதுவரை தெரிய வந்துள்ளது.
அதுபோக தாய்வழி குடும்பத்தில் ஜேம்ஸ் நானயக்கார என்று தனக்கொரு மூதாதையர் இருந்தது தெரிய வந்துள்ளது. இது தவிர வேறு எதுவும் ஜாஸ்மினுக்கோ அவரது தாயாருக்கோ தெரியவில்லை.
“என் பூர்வீகம் தமிழ், சிங்களம், பஞ்சாபி என மூன்றிலுமே இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால், எனது வரலாற்றின் வேர் எங்கே உள்ளது என்பது குறித்த உறுதியான ஆதாரமோ தகவலோ இதுவரை கிடைக்கவில்லை,” என்று குரலில் வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார் ஜாஸ்மின்.
தாய்வழியில் சிங்கள பூர்வீகம் கொண்ட ஜாஸ்மின் மற்றும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் இவர்கள் இருவருக்கும் மரபணுத் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு, ஜாஸ்மினின் ஐந்து தலைமுறைக்கு முந்தைய மூதாதையரான ஜேம்ஸ் நானயக்காரவிடம் தென்படுகிறது.
இதன்மூலம், ரமேஷ் யந்த்ராவின் மூதாதையர்களில் யாரேனும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்குச் சென்றிருந்து, அங்கு அவர்களுக்கு ஜேம்ஸ் நானயக்காரவின் குடும்பத்துடன் உறவு ஏற்பட்டிருக்க வேண்டும். இதுவே, இவர்கள் இருவரது மரபணுவில் ஒற்றுமை தென்படுவதற்கான காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று மரபணு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
“என் வரலாறு சிங்களம், பஞ்சாபி இரண்டிலும் இருப்பதை முன்பே தெரிந்துகொண்டேன். ரமேஷின் மரபணுவுடன் எனக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு மூலம் எனது வரலாறு தமிழ்நாட்டிலும் இருப்பதை உணர்ந்துள்ளேன்.
நான் இந்த மூன்று கலாசாரங்களை பற்றியும், அதிலுள்ள உணவுகள், மத நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எனது பூர்வீகத்துடன் நான் என்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள மிகுந்த பிரயத்தனம் மேற்கொள்கிறேன்.
ரமேஷ் குறித்து தெரிய வந்தபோது என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். எங்களது பூர்வீகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்,” என்று தங்கள் குடும்ப வரலாற்றைப் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் ஜாஸ்மின், இப்போது கண்களின் மெல்லிய நம்பிக்கைக் கீற்று வீசக் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)