You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய ரா உளவுத்துறை அதிகாரிகளின் வேலை என்ன? எப்படி உளவு பார்ப்பார்கள்?
இந்தியா, கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்த சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் இந்தியாவின் ரா உளவுத்துறை அமைப்பு இஸ்ரேலின் மொசாத்துடன் ஒப்பிடப்பட்டு பேசப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ரா உளவுத்துறை குறித்த தேடல்களும் அதிகரித்துள்ளன. பலரும் இந்திய ரா உளவுப்பிரிவு எப்படிப் பணியாற்றுகிறது, அதன் பணிகள் என்ன, அதில் வேலைக்கு சேர்வது எப்படி என்பன போன்ற சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
உண்மையில் ரா உளவுப்பிரிவு என்பது என்ன, அதில் பணியாற்ற ஒருவர் என்ன செய்ய வேண்டும், அப்படி பணியில் சேர முடிந்தாலும் அவரால் என்ன சாதிக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் இதோ.
அமெரிக்காவுக்கு சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி (சிஐஏ), பிரிட்டனுக்கு எம்ஐ6, ரஷ்யாவுக்கு எஸ்விஆர், சீனாவுக்கு குவான்பு, பாகிஸ்தானுக்கு ஐஎஸ்ஐ போல இந்தியாவுக்கு அதன் வெளிநாட்டு உளவுத் தகவல்கள் மற்றும் நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் உளவு அமைப்புதான் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் எனப்படும் ரா (R&AW) உளவுப்பிரிவு.
ரா தலைமையகம் எங்குள்ளது, அதன் உயரதிகாரிகளாக இருப்பவர்கள் யார்?
இந்திய ரா உளவுப் பிரிவு, டெல்லியில் உள்ள கேபினட் செக்ரட்டேரியேட் எனப்படும் மத்திய அமைச்சரவை செயலகத்தின் கீழ் நேரடியாக இயங்குகிறது. இதன் தலைமை அதிகாரியை செயலாளர் (ஆர்) என்று அழைப்பார்கள். இவருக்குக் கீழ் சிறப்புச் செயலாளர், கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு தலைமை இயக்குநர் இருப்பார்கள்.
இந்த அதிகாரிகள், இந்திய உள்நாட்டு பாதுகாப்புக்கான உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் ப்யூரோ எனப்படும் ஐபி தலைமையகம் மற்றும் பாதுகாப்பு உளவுப்பிரிவு, ராணுவ உளவுப்பிரிவு உள்ளிட்டவற்றை அங்கமாகக் கொண்ட கூட்டு உளவு அமைப்பு மற்றும் MAC எனப்படும் பல்நோக்கு அமைப்புகள் மையம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து உளவு சேகரித்தல் மற்றும் தகவல் பரிமாற்றப் பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்த கூடுதல் செயலாளர்களுக்கு கீழே நாடுகள் அடிப்படையிலும், பிராந்தியங்கள் அடிப்படையிலும் தனித்தனி பிரிவுகள் இருக்கும். அவற்றை ரா மொழியில் 'டெஸ்க்' என அழைப்பார்கள். ரா செயலாளர், சிறப்புச் செயலாளர் ஆகியோர் பிரதமர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தினசரி அடிப்படையில் நேரடி தொடர்பில் இருப்பார்கள்.
ரா அலுவலகத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன? அதில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்?
டெல்லி தலைமையகத்தில் பாகிஸ்தான் டெஸ்க், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா டெஸ்க், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா டெஸ்க், பிற நாடுகள் டெஸ்க், ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் எனப்படும் சிறப்பு நடவடிக்கைகள் டெஸ்க் என தனித்தனி பிரிவுகள் உள்ளன.
இந்த பிரிவுகள் மட்டுமின்றி, உளவுத்தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் உதவி மூலம் வெளிநாட்டு சந்தேக அமைப்புகள், தனி நபர்களின் தொலைத்தொடர்பு மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தொடர்பு சாதனங்களை இடைமறித்துக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும் மின்னணு மற்றும் தொழில்நுட்பப் பிரிவும் ரா தலைமையகத்தில் உள்ளது.
ரா அமைப்புக்கு தனி விமானம் உள்ளதா?
ஆம் உள்ளது. உயரதிகாரிகளின் அவசரப் பணி, சிறப்பு நடவடிக்கை பணிகளுக்காக இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக விமானங்களை ரா தலைமையகம் அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. ஆனால், எந்தவொரு ஏஜென்டும் தாம் நினைத்த போதெல்லாம் விமானத்தை எடுத்துக் கொண்டு எங்கும் பறந்து தாக்குதல் நடத்தி விட முடியாது.
ரா பிரிவில் வான்வழி உளவு மற்றும் பாதுகாப்புப் பணிக்கென விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி மையம் என்ற ஒரு துறை இயங்கி வருகிறது. இதன் தலைவராக ஒரு சிறப்புச் செயலாளர் இருக்கிறார். மேலும், வெளிநாடுகளில் சிறப்பு நடவடிக்கைகள் குழுவை வழிநடத்தும் பணியைச் செய்யவும் சிறப்புச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி இருக்கிறார்.
ரா அமைப்பின் செயல்பாடுகள் ஏன் வெளியே தெரிவதில்லை?
வெளிநாடுகளில் உளவு சேகரிக்கும் நுட்பமான பணியின் தன்மையைக் கவனத்தில் கொண்டு ரா என்ற உளவு அமைப்பை, ஏஜென்சி என்று அழைக்காமல் கேபினட் அமைச்சரவையின் கீழ் உள்ள பிரிவாக இந்திய அரசு வகைப்படுத்தியிருக்கிறது.
மேலும், ராவின் செயல்பாடுகள், நிதிப் பரிவர்த்தனைகள், கணக்குத் தணிக்கைகள் போன்றவற்றை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக சமர்ப்பிக்கத் தேவையில்லை என்ற சிறப்பு வசதி ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், அதன் நடவடிக்கைகள் உள்தணிக்கைக்கு உள்பட்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பிற அரசுத்துறைகளைப் போல ரா தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிட தகவல் உரிமை சட்டத்தின் இரண்டாம் பகுதி, 24ஆம் பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய அலுவல் கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றில் ரா பிரிவு உயரதிகாரிகள் அல்லது அழைப்பு விடுக்கப்பட்ட அலுவலர்கள் மட்டுமே கலந்து கொள்வர். இதனால் அவர்களின் அடையாளம் மற்றும் செயல்பாடுகள் பொதுவெளியில் பெரிதாகத் தெரிவதில்லை.
இந்தியாவில் வேறு எங்கெல்லாம் ரா அலுவலகம் உள்ளது?
இந்தியாவில் நிர்வாகப் பணிகளை கவனிப்பதற்காக ஏழு மண்டலங்களாக ரா அலுவலகம் பிரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மண்டலம் (ஜம்மு), கிழக்கு மண்டலம் (கொல்கத்தா), தென்மேற்கு மண்டலம் (மும்பை), வடகிழக்கு மண்டலம் (ஷில்லாங்), தெற்கு மண்டலம் (சென்னை), மத்திய மண்டலம் (லக்னெள), மேற்கு மண்டலம் (ஜோத்பூர்) ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.
இது தவிர முக்கிய மெட்ரோ நகரங்களில் வெவ்வேறு பெயர்களில் ரா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அங்கிருந்தபடி அதன் கள ஊழியர்களான ஃபீல்ட் ஏஜென்ட்டுகள் பணியாற்றுகிறார்கள்.
வெளிநாட்டுப் பணியின்போது அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்துடன் இணைக்கப்பட்ட நேரடி பொறுப்பிலோ வேறு அடையாளத்திலோ ரா ஏஜென்ட்டுகள் பணியாற்றுவார்கள்.
ரா பிரிவில் எந்தெந்த பதவிகள் உள்ளன?
செயலாளர், சிறப்புச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், இயக்குநர், துணை இயக்குநர், மாற்றல் அதிகாரிகள், முதுநிலை கள அதிகாரி, கள அதிகாரி, துணை கள அதிகாரி, உதவி கள அதிகாரி, அமைச்சுப் பணியாளர்கள் அடங்குவர்.
இதில் முதுநிலை கள அதிகாரி முதல் உதவி கள அதிகாரி வரையிலான பதவிகளுக்குரியவர்களுக்கான ஆள் சேர்க்கை பெரும்பாலும் நேர்முகத்தேர்வு வழியாக நடத்தப்படும். கேபினட் செக்ரட்டேரியேட் மூலம் இந்த ஆள் தேர்வு இருக்கும்.
இதுதவிர மத்திய, மாநில அரசுப் பணிகளில் தனித் திறமையுடன் விளங்கக் கூடிய அதிகாரிகள், காவலர்கள், படை வீரர்கள் போன்றோரும் ரா களப்பணியில் ஈடுபடுத்த தேர்வு செய்யப்படுவர். பெரும்பாலான நேரத்தில் ரா பிரிவில் சேரத் தகுதியான அதிகாரியை அவர்கள் ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் பணியில் தேர்ச்சி பெறும்போதே ரா அமைப்பு அடையாளம் கண்டுவிடும்.
சில நேரங்களில் யுபிஎஸ்சி, மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று அவர்களுக்கான துறையில் சேர்ந்த பிறகு அவர்களை ரா அமைப்பு அணுகி தங்களுடன் சேர அழைப்பு விடுக்கும். குரூப் 1 அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநில கேடரில் சேர்ந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ரா அமைப்பில் நேரடியாக சேரலாம்.
அவ்வாறு சேர்ந்து ரா அமைப்பிலேயே நிரந்தரமாகப் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ், ஐஏஎஸ் போல 'ஆர்ஏஎஸ்' என்ற தகுதி சேவை குறியீடு வழங்கப்படும். மத்திய அரசு அலுவல்பூர்வ தொடர்புகளில் இந்தக் குறியீடுடன் வரும் பெயர்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும். காரணம் அவர்கள் ரா உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரி அறிந்திருப்பார்.
ரா அமைப்பில் தேர்ச்சி மிகக் கடுமையாக இருக்குமா?
ரா அமைப்பில் கள அதிகாரி அல்லது ஏஜென்ட் ஆக பணியாற்றுவோருக்கான தேர்ச்சியும் பயிற்சியும் கடுமையானதாகவே இருக்கும். அடிப்படையில் அவர்கள் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி மொழிகள் தவிர்த்து மேலும் ஒன்றோ இரண்டோ வெளிநாட்டு மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும்.
ரா உளவு அமைப்பில் சேர்ந்த உடனேயே முதல் ஓராண்டுக்கு அவர்களுக்கான உளவு சேகரித்தல் தொடர்பான சர்வதேச நிலைகள் பற்றிய பயிற்சி தரப்படும். நிதி, பொருளாதார பகுப்பாய்வு, விண்வெளி தொழில்நுட்பம், செயற்கைக்கோள் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, எரிசக்தி பாதுகாப்பு, பன்னாட்டு வெளியுறவுக் கொள்கைகள், தூதரக செயல்பாடுகள் பற்றிய பயிற்சி வழங்கப்படும்.
பிற்காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தில் சாதாரண இளநிலை அதிகாரி போலவோ அங்குள்ள ஏதாவது ஒரு பிரிவின் உதவிச்செயலாளர் அல்லது துணைச் செயலாளர் அல்லது முதல்நிலை, இரண்டாம் நிலை செயலாளர் என்ற போர்வையில் இந்த ரா அதிகாரிகள் பணியாற்றும்போது அவர்கள் தூதரக பணிக்கு இடையே ஆற்ற வேண்டிய உளவு சேகரிப்பு பணி பற்றியும் அதிகாரிகளுக்குப் பயிற்சி தரப்படும். டெல்லியை அடுத்த குர்கானில் இந்த அதிகாரிகளுக்கு உள்ளுறை பயிற்சி, மொழிப்புலமைப் பயிற்சி வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியை முடித்த பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கள அதிகாரிகளுக்கு மேம்பட்ட பயிற்சி என்ற பெயரில் கள உளவுப்பணி பயிற்சி வழங்கப்படும். அசாதாரண சூழ்நிலைகளில் எப்படி பணியாற்றுவது, வெளிநாடுகளில் எப்படி ஊடுருவுவது, அங்கிருந்து தாயகத்துக்கு எப்படி தப்பி வருவது, வெளிநாடுகளில் சிக்கினால் விசாரணையின்போது எப்படி நிலைமையை கையாள்வது, தொடர்புகளை எப்படி உருவாக்குவது, அடையாளத்தை மறைத்து எப்படி வாழ்வது என்பது தொடர்பான பயிற்சிகள், தற்காப்புக்கலை பயிற்சி, ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி போன்றவை வழங்கப்படும்.
உடல் ரீதியிலான பயிற்சிக்காக இவர்கள் உத்தராகண்டில் உள்ள டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் சில மாத பயிற்சிக்கும் அனுப்பி வைக்கப்படுவர்.
ரா அமைப்பில் சாதாரணமாக ஒரு நபரால் சேர முடியுமா அல்லது விண்ணப்பிக்க இயலுமா?
அதற்கு வாய்ப்பு இல்லை. ரா பிரிவில் சேர்வதற்கான ஒரு நுழைவாயிலாக இருப்பது கேபினட் செக்ரட்டேரியேட் நடத்தும் ஃபீல்ட் ஆஃபிசர்ஸ், டெபுட்டி ஃபீல்ட் ஆஃபிசர்ஸ், அசிஸ்டென்ட் ஃபீல்ட் ஆஃபிசர்ஸ் பதவிகளுக்கான நேரடித் தேர்வுகள்தான்.
இது தவிர மத்திய அரசுப் பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ், இந்திய முப்படைகள் மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ஏற்கெனவே பிற பதவிகளுக்கு தேர்வாகி பணியாற்றுபவர்கள், தேசப்பற்று மிக்கவர்களாகவும் ரா அமைப்பின் தேவைக்கு உகந்தவராகவும் இருந்தால், அவர்கள் ராவை தேடிச் செல்ல வேண்டிய தேவையில்லை. அதன் தலைமையகமே அவர்களைத் தேடி வந்து தங்களுடன் இணைத்துக் கொள்ளும்.
ரா அமைப்பு பற்றி சர்ச்சைகள் ஏதும் உள்ளதா?
பிற வல்லரசு நாடுகளில் ஈடுபடும் உளவுப் பணிகளைவிட தனது அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்ற நாடுகளில் ரா அமைப்பின் செயல்பாடுகள் அடிக்கடி விமர்சனத்துக்கு ஆளாவதுண்டு.
இலங்கையில் 1980களில் விடுதலைப் புலிகளுக்கு நிதி மற்றும் ராணுவ பயிற்சி வழங்கியதாக ரா மீது சர்ச்சை எழுந்தது. 2015இல் ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு சீனாவுக்கு அனுசரணையாக இருந்ததால் அதற்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ரா முக்கிய பங்கு வகித்ததாக சர்ச்சை எழுந்தது.
கடந்த 2019இல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய தகவலை ரா பிரிவு முன்கூட்டியே இலங்கையிடம் தெரிவித்து எச்சரித்ததாகவும் அதன் மீது இலங்கை உளவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வெளிவந்த தகவல்கள் இலங்கையில் இப்போதும் சர்ச்சையானதாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல் 1990களில் வங்கதேசத்தில் அதன் முக்கிய தலைவரான ஷேக் ஹசீனா படுகொலை முயற்சியை முறியடித்ததில் ரா உளவுப்பிரிவின் பங்கு முக்கியமானது. 1990களில் அங்கு பாகிஸ்தான் ஆதரவு தலைமை உருவாவதைத் தடுத்ததிலும் ரா பிரிவுக்கு பங்கு உள்ளதாகக் கருதப்படுகிறது.
(குறிப்பு: இந்த தகவல்களை வழங்கிய செய்தியாளர் பரணி தரன், உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான செய்திகளை டெல்லியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து வருபவர்.)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்