You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடாவில் இந்திய விசா சேவை நிறுத்தப்பட்டதால் இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கனடா நாட்டுக் குடிமக்களுக்கு விசா வழங்கும் சேவைகளை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இதனால், இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
கனடா - இந்தியா இடையிலான ராஜதந்திர உறவுகள் மோசமடைந்திருக்கும் நிலையில், கனடாவில் உள்ள இந்தியத் தூதரம் விசா வழங்கும் சேவைகளை நிறுத்தியுள்ளது. நடைமுறைக் காரணங்களால் இந்த சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கனடாவில் இந்திய விசா வழங்கும் சேவைகளை பி.எல்.எஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தியத் தூதரகம் வழங்கிவருகிறது. அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் இன்று காலை வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், "இந்தியத் தூதரகத்தில் இருந்து ஒரு முக்கியச் செய்தி: நடைமுறை காரணங்களுக்காக 2023 செப்டம்பர் 21ஆம் தேதி முதல் இந்திய விசா வழங்கும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. கூடுதல் செய்திகளுக்கு பிஎல்எஸ் இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள்" என்று கூறப்பட்டிருக்கிறது.
காலிஸ்தான் ஆதரவு சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியதிலிருந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்திருக்கின்றன.
இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கின்றன.
தற்போது விசா சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதற்கும் இரு நாட்டு உறவுகள் மோசமடைந்திருப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது இதுவரை தெளிவாகவில்லை.
கனடாவில் வழங்கப்படும் இந்திய விசாக்களின் வகைகள்
கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் பல விதமான விசாக்களை வழங்குகிறது.
- Entry Visa: இதில் Entry Visa இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படுகிறது. இதில் இந்தியர்கள் ஒரு முறை வந்து செல்ல முடியும்.
- Business Visa: தொழில் மற்றும் வர்த்தம் தொடர்பான பணிகளுக்காக இந்தியாவுக்கு வர விரும்பும் கனடா நாட்டுக் குடிமக்கள் மற்றும் கனடாவில் நீண்ட காலம் வசிக்கக்கூடிய அனுமதி பெற்ற பிற நாட்டவருக்கு Business Visa வழங்கப்படுகிறது.
- Tourist Visa: இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ளவிரும்பும் கனடியர்களுக்கு Tourist Visa வழங்கப்படுகிறது. இப்போது பல வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த விசாவைப் பெற முடியும்.
- Employment Visa: இந்தியாவில் வேலை பார்க்க விரும்புவோர், தன்னார்வப் பணிகளில் ஈடுபட விரும்புவோருக்கு Employment Visa வழங்கப்படுகிறது. இந்த விசா, கனடா நாட்டுக் குடிமக்கள் மற்றும் கனடாவில் நீண்ட காலம் வசிக்கும் அனுமதி பெற்ற பிற நாட்டவருக்கு வழங்கப்படும்.
- Medical Visa: இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்புவோருக்கு Medical Visa வழங்கப்படுகிறது. இது நோயாளிகளுக்கும் நோயாளிகளுடன் வருபவர்களுக்கும் வழங்கப்படும். 3 மாத காலத்திற்கு இந்த விசாவில் இந்தியாவில் இருக்கலாம்.
- Film Visa: இந்தியாவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள விரும்புவோருக்கு Film Visa வழங்கப்படுகிறது.
- Student Visa: அதேபோல, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்க விரும்புவோருக்கு Student Visa வழங்கப்படுகிறது. படிப்பு முடியும்வரை பல முறை இந்தியாவுக்கு வந்து செல்ல முடியும்.
- Conference Visa: இந்தியாவில் நடக்கும் ஏதாவது மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கேற்க விரும்புவோருக்கு Conference visa வழங்கப்படுகிறது. மாநாட்டு காலத்தில் ஒரு முறை வந்துசெல்லக்கூடிய வகையில் இந்த விசா வழங்கப்படும்.
கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்ன?
விசா சேவை நிறுத்தப்பட்டிருப்பதால், தொழில், வர்த்தகம் தொடர்பான பணிகளுக்காக இந்தியா வர விரும்புவோர் விசா பெற முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, கனடாவுக்குச் சென்று அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களும் இந்தியா வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. காரணம், இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் குடியேறி அந்நாட்டு குடிமக்களானவர்கள், இந்தியா வர விசா பெற வேண்டும்.
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவுக்கு அடிக்கடி வர விரும்பினாலோ, இந்தியாவுடன் தொடர்ச்சியான உறவைப் பேண விரும்பினாலோ, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பதற்கான Overseas Citizens of India (OCI) என்ற அட்டையை அவர்களுக்கு வழங்குகிறது இந்தியா. வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்ற இந்தியர்கள் இந்த அட்டையைப் பெற, தனியே விண்ணப்பிக்க வேண்டும். அப்படிப் பெற்றவர்கள், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வந்துசெல்ல முடியும்.
ஆனால், இந்த அட்டையைப் பெறாதவர்கள் இந்தியாவுக்கு வந்து செல்ல இந்திய விசாவைப் பெற வேண்டும். இப்போது அதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியர்கள் உடனடியாகச் சந்திக்கக்கூடிய சிக்கல் என்ன?
இந்தியாவுக்கான விசா சேவைகளை கனடாவில் நிறுத்துவதன் மூலம், இந்தியாவுக்கு தொழிலுக்காக, சுற்றுலாவுக்காக, வர்த்தகத்திற்காக, நெருங்கிய உறவினர்களைப் பார்க்க வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
அதேபோல, OCI அட்டையைப் பெறாத இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் இந்தியாவுக்கு வந்து செல்வதில் சிக்கல் ஏற்படும். ஆகவே சிக்கல் என்பது கனடியர்களுக்கு மட்டுமல்ல. கனடா குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கும் இருக்கும். அப்படியான பின்னணியில் இந்தியா விசா சேவைகளை நிறுத்தியிருப்பதுதான் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
மேலும், OCI அட்டையைப் பெற ஒருவர் விரும்பினாலும் அவற்றை உடனடியாகப் பெர முடியாத சூழல் இருப்பதை அங்கிருக்கும் இந்தியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கனடா நாட்டு குடியுரிமையைப் பெறும் இந்தியர்கள் மூன்று மாதங்களுக்குள் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அளித்து, அதனை 'கேன்சல்' செய்ய வேண்டும். பிறகுதான் OCI அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால், அப்படி விண்ணப்பித்த காலத்திலிருந்து சுமார் 5 முதல் ஏழு மாதங்களுக்குப் பிறகே இந்த அட்டை கிடைக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கு வர விரும்பினால், Entry Visaவைத்தான் இந்தியர்கள் பெறவேண்டியிருக்கும். இப்போது அதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
‘ராஜதந்திர அதிருப்தியைக் காட்டுவதற்கான அடையாளம்’
இது குறித்துப் பேசிய லயோலா கல்லூரியின் பேராசிரியரான கிளாட்சன் சேவியர், இரு நாடுகளுக்கிடையே முரண்பாடு ஏற்படும்போது, மெல்லமெல்ல இரு நாடுகளும் அந்த அதிருப்தியை பல விதங்களில் காட்ட ஆரம்பிப்பார்கள், என்றார்.
“முதற்கட்டமாக தூதர் ஒருவரைத் திருப்பி அனுப்புவார்கள். பிறகு விசா வழங்குவதை நிறுத்துவார்கள். உச்சகட்டமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்படும்வரை இது செல்லும்."
“கனடாவுடனான உறவைப் பொறுத்தவரை இப்போது விசா வழங்குவதை நிறுத்தியிருக்கிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வர விரும்பும் கனடியர்களுக்கும் கனடா நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற இந்தியர்களுக்கும் இது மிகப் பெரிய அசௌகர்யத்தையும் ஏற்படுத்தும். விசா பெறுவதற்கான நடைமுறைகளைப் பூர்த்திசெய்ய பலர் இன்றைக்கோ, நாளைக்கோ, அடுத்த வாரமோ நேரம் பெற்றிருப்பார்கள். இப்போது திடீரென அவையெல்லாம் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஏற்கனவே விசா வாங்கியவர்களுக்குப் பிரச்சனை இல்லை. இந்தியா தனது அதிருப்தியைக் காட்டுவதற்கான ஒரு அடையாளச் சின்னமாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது வெகு நாட்களுக்கு நீடிக்காது என்றே நம்பலாம்," என்கிறார் கிளாட்சன் சேவியர்.
OCI அட்டை பெற்றவர்களுக்கு பிரச்னை இருக்குமா?
விசா வழங்குவதை நிறுத்தவது மட்டுமல்லாமல், ஓசிஐ அட்டை பெற்றவர்கள் இந்தியாவுக்கு வருவதையும் தடைசெய்ய வேண்டுமென சிலர் சமூக வலைதளங்களில் கோர ஆரம்பித்துள்ளனர்.
"சிலர் ஓசிஐ கார்டையும் தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே இந்தக் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை. இதற்கு அரசு செவிசாய்க்கக்கூடாது" என்கிறார் கிளாட்ஸன்.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த மோதலை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் கூர்ந்து கவனிப்பதை சுட்டிக்காட்டும் கிளாட்ஸன் சேவியர், கனடா - இந்தியா உறவுகளில் ஏற்படும் பாதிப்பு, இந்த இரு நாடுகளோடு மட்டும் நின்றுவிடாது என்பதைத்தான் காட்டுகிறது என்கிறார்.
கனடாவில் இந்தியர்கள் நீண்டகாலமாகவே வசித்துவருகிறார்கள். நீண்ட காலத்திற்கு முன்பே கனடாவுக்குச் சென்று அங்கேயே குடியேறிவிட்ட இந்தியர்களின் வம்சாவளியினரையும் சேர்த்தால் 2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 18 லட்சத்து 58 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இது கனடா நாட்டின் மக்கள் தொகையில் 5.11% இருக்கிறது.
‘விசா பெற மாற்று வழி இல்லை’
இதனால், எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்றும், கனடாவில் தற்போதைய சூழல் என்ன என்பது குறித்தும் அறிந்துகொள்ள, கனடா வாழ் மூத்த ஊடகவிலயலாளர் ரமணன் சந்திரசேகர மூர்த்தியிடம் பிபிசி தமிழ் பேசியது.
பிபிசி தமிழிடம் பேசிய ரமணன் சந்திரசேகர மூர்த்தி, ‘‘பல நாடுகள் Outsource நிறுவனங்களை வைத்து தான் விசாவுக்கான சேவை வழங்கி வருகிறது. தற்போது, கனடாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், தங்கள் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இந்திய அரசு கனடா மக்களுக்கு விசாவுக்கான சேவை வழங்கும் பிஎல்எஸ் நிறுவனத்தின் சேவையை தடை செய்துள்ளது,” என்றார்.
மேலும் பேசிய அவர், “கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த டாட்டா கன்சல்டிங் நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள் தொழில் செய்கின்றனர். கனடாவை சேர்ந்த பலரும் தொழில் ரீதியிலும், சுற்றுலாவுக்காகவும் இந்தியா வந்து செல்கின்றனர். விசா சேவையை இந்திய அரசின் சார்பிலான நிறுவனம் ரத்து செய்துள்ளதால், இந்தியா வர நினைக்கும் கனடா மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். விசா வைத்துள்ள இந்தியர்களுக்கு பாதிப்புகள் இல்லை. கனடாவில் குடியுரிமை பெற்றுள்ளவர்கள், மற்ற நாட்டில் இருந்து கனடாவில் வந்து குடியுரிமை பெற்றவர்கள், இந்தியா வருவதற்குத்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் விசா பெறுவதற்கு மாற்று வழியும் இல்லை,’’ என்றார்.
‘இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’
இந்தியா – கனடா பிரச்சினையால் பதற்றம் அதிகரித்து வருவதால், இந்தியர்கள் பாதுகாப்பு எப்படி உள்ளது? என்ற கேள்வியை ஊடகவியலாளர் ரமணன் சந்திரசேகர மூர்த்தியிடம் முன்வைத்த போது, கனடா அரசாங்கத்தில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்துறை அமைச்சர் போன்ற அதிகாரமிக்க பதவிகளை வகிப்பதால், அவர்கள் கனடா அரசியலை தீர்மானிக்கும் அளவு செல்வாக்குடன் உள்ளனர், என்றார்.
“கனடா அரசு இந்த பிரச்சினையைத் தீவிரமாக விசாரிக்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியைக்காட்டிலும், எதிர் அணியில் உள்ள புதிய ஜனநாயகக்கட்சிக்கு சீக்கியர்களின் ஆதரவு அதிகமுள்ளதால், சீக்கியத்தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலைச்சம்பவத்தை வைத்து அரசியல் செய்து, சீக்கியர்களின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான், மக்களவையில் வைத்தே இந்தியா மீது கனடா பிரதமர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்,” என்றார்.
மேலும், “இது இருநாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை கிளப்பியுள்ளதே தவிர, மக்கள் மத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. கனடாவில் உள்ள சீக்கிய மக்கள் இந்திய அரசின் மீது கோபத்தில் உள்ளார்களே தவிர, இங்குள்ள இந்தியர்கள் மீது அவர்களுக்கு எந்தக்கோபமும் இல்லை. இந்தியர்கள், தமிழர்கள் என அனைவரும் இங்கு பாதுகாப்பாகத்தான் இருக்கின்றனர்,” என்றார்.
(கூடுதல் தகவல்கள் – ச பிரசாந்த்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்