You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சேலம் மத்திய சிறைக்குள் சாராய ஊறலா? வட மாநில கைதிகளின் செயலால் அதிர்ச்சி
- எழுதியவர், சுரேஷ் அன்பழகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சேலம் மாநகரில் உள்ள சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் சிலர் தங்களுக்கு கிடைத்த பழங்களை வைத்து சாராய ஊறல் போட முயற்சி செய்ததாக காவல்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
இதையடுத்து வெளிமாநிலத்தைச் சேர்ந்த 10 கைதிகளுக்கு சிறைக்குள் வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிறைக்கைதிகள் கூட்டாக சேர்ந்து வாளியில் பழங்களை வெட்டி ஊற வைத்தது எதற்காக?
சேலம் மத்திய சிறையில் என்ன நடந்தது? காவல்துறை சிறை கண்காணிப்பாளர் என்ன சொல்கிறார்?
சிறைக்குள் போதைப் பொருள்
சேலம் மத்திய சிறையில் 200க்கும் மேற்பட்ட குண்டர் சட்டம் பாய்ந்த கைதிகள் உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 900க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டு, இவர்கள் சிகரெட், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை சிறைக்காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஆனால் அவ்வப்போது சிறையில் நடக்கும் சோதனையின் போது, கைதிகளிடம் இருந்து பீடி, சிகரெட், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுகின்றன.
இதேபோல நடத்தப்பட்ட சோதனையின் போது சேலம் மத்திய சிறையில் கிடைத்த பொருட்கள் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சிறைக்குள் சாராயமா?
ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் மதி(வயது - 28), பிரதாப் நாயக்(29), ரதி சியாம் பய்ராகி(28), பாக்பேட் பிஸ்வால் (25), ராஜீ மகி (30), பரத்குமார் (24), நீலகண்ட நாயக் (29), தம்புரு பாண்டே (26) ஆகிய 8 பேரை கடந்த ஜூலை இறுதியில் காட்பாடி காவல்துறையினர் போதை சாக்லெட் கடத்தியதாக கைது செய்து விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதே போல மற்றொரு வழக்கில் போதை பொருட்கள் கடத்தியதாக, பீகாரை சேர்ந்த நாமமண்ட் குட்டி, சுபாஷ் தாஸ் ஆகியோரையும் சேலம், நாமக்கல் மாவட்ட போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் அனைவரும் சிறையின் 8ஆவது பிளாக் பகுதியில் உள்ள அறை எண் 32, 33 ஆகிய அறைகளில், அறைக்கு தலா 5 பேர் வீதம் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறைக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்கள் இவர்களின் அறைக்குள் ஆப்பிள், கொய்யா உள்ளிட்ட பழங்களை வெட்டிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளது.
இதையடுத்து அந்த கைதிகளின் அறையில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வாளியில் வெட்டி வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் பழத்துண்டுகள் மற்றும் சில ஆப்பிள்களையும் காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.
சாராய ஊறலுக்கு திட்டமா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல சேலம் சிறையிலிருந்த ஆயுள் தண்டனை கைதிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு உறவினர்கள் மூலம் வழங்கப்பட்ட பழங்களை பாட்டிலில் அடைத்து மண்ணுக்குள் புதைத்து வைத்து சாராய ஊறல் செய்த சம்பவம் இங்கு நடந்துள்ளது.
இதையடுத்து சிறைக்குள் மீண்டும் சாராய ஊறல் வைக்க கைதிகள் திட்டமிட்டு இருக்கலாம் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது பிடிப்பட்ட 109 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இரவு உணவின் போது சப்பாத்திக்கு சைடு டிஸ்சாக பழங்களை சுத்தம் செய்து தயார் செய்வதாக, கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட வடமாநில கைதிகள் 10 பேரையும் அவர்களது வழக்கறிஞரைத் தவிர வேறு எந்த உறவினர்களும் சந்திக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.
"இந்த 10 பேரும் அடுத்த மூன்றரை மாதங்களுக்கு வெளிநபர்கள் யாரையும் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது," என பிபிசி தமிழிடம் பேசிய சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்து பேரும் தற்போது தனித்தனி அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிறைக்குள் என்ன நடந்தது?
சேலம் மத்திய சிறைக்குள் பழங்களை வைத்து கைதிகள் என்ன செய்ய முயற்சி செய்தார் என பிபிசியிடம் பேசிய சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் வினோத் விவரித்தார்.
"வட மாநிலத்தைச் சேர்ந்த 10 பேரில் ஒருவரை அவரது உறவினர்கள் பார்க்க வந்தபோது ஆப்பிள், கொய்யா பழங்கள் வாங்கி வந்துள்ளனர். சப்பாத்தி தங்களுக்கு ஒத்து வரவில்லை எனக் கூறி, பாத்ரூமில் இருந்த பக்கெட்டில் ஆப்பிள், பச்சை மிளகாய் ஆகியவற்றை வெட்டிப்போட்டு வைத்துள்ளனர்", என்று அவர் கூறினார்.
"இந்த கைதிகள் செய்த ஏற்பாட்டை, காவலுக்கு இருந்த சிறப்புப்படை காவலர்கள் பார்த்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது முறையாக பதிலளிக்கவில்லை. இதற்கு முன்பே சாராய ஊறல் சம்பவம் நடந்துள்ளதால், சந்தேகத்தின்பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். சிறைக்குள் பிற கைதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன."
வேறு கைதிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என சிறை கண்காணிப்பாளர் கூறினார்.
சிறைக்குள் ஏன் இப்படி நடக்கிறது?
சிறைக்கு செல்லும் தண்டனை குற்றவாளிகளை விட விசாரணை குற்றவாளிகளுக்கு சில கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இப்படி விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படும் போது பல்வேறு வழிகளில் போதைப் பொருட்களை சிறைக்குள் கொண்டு வர கைதிகள் முயற்சி செய்வார்கள் என பிபிசியிடம் பேசிய ஓய்வுப்பெற்ற காவல்துறை துணை ஆணையர் ராஜாராம் தெரிவித்தார்.
“சிறைக்குள் சாராயம் தயாரிக்க முயற்சி செய்வது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். ஆனால் சிறைக்குள் கஞ்சா, சிகரெட், போதை பவுடர் போன்றவற்றை வெளியிலிருந்து வரும் சில கைதிகள் சிறைக்குள் கொண்டு வருவார்கள். இவர்களை சோதனை செய்து தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்வது தான் வார்டன்களின் பணி.”
சிறைத்துறையில் இருக்கும் காலியிடம் காரணமாக, ஊழியர்களுக்கும் கூடுதல் பனிச்சுமை உள்ளது. அதனால் சிறைக்குள் பாதுகாப்பு பணியிலிருக்கும் வார்டன், காவலர்கள் பல இடங்களில் சமரசத்திற்கு உள்ளாகின்றனர். இதன் வெளிப்பாடுதான் ஒரு சில மத்திய சிறைகளில் கைதிகள் செல்போன்களை பயன்படுத்தியதற்கு காரணம் என்கிறார், ராஜாராம்.
சிறைக்குள் இருக்கும் தனிமை காரணமாக கைதிகள் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜாராம், கைதிகளுக்கு விளையாட மைதானம், நூலகம், தொலைக்காட்சி என பல வசதிகள் சிறைக்குள் உள்ளன. மேலும் மனவுளைச்சலில் இருக்கும் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியும், நன்னெறி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சிகள் அவர்களுக்கு உதவக்கூடும் என்றார்.
“சிறைக்குள் இருக்கும் காலத்தை பயன்படுத்தி கைத்தொழில் கற்பது, கல்வி கற்பது, புத்தகம் எழுதுவது போன்ற பணிகளையும் சில கைதிகள் மேற்கொள்கின்றனர். இவர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு கைதிகள் விடுதலைக்கு பிறகு வாழ்வில் முன்னேற சிறைக்காலத்தை பயன்படுத்தவேண்டும்.”
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)