You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஞ்சல் தலையில் உங்கள் புகைப்படம் இடம்பெற வெறும் 300 ரூபாய் போதும் - எப்படி தெரியுமா?
- எழுதியவர், ஹேமா ராகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய அஞ்சல் துறை சார்பாக பொதுமக்கள் தங்களுடைய புகைப்படத்தை பயன்படுத்தி அஞ்சல் தலை உருவாக்க எனது அஞ்சல் தலை (My Stamp) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள முதன்மை அஞ்சலகத் தலைவர் பிரகாஷ் எனது அஞ்சல் தலை திட்டத்தை பற்றி நம்மோடு பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கேள்வி: " எனது அஞ்சல் தலை " திட்டம் என்றால் என்ன ?
பதில்: இந்திய அஞ்சல் துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டம் தான் My Stamp " எனது அஞ்சல் தலை " திட்டம். 2011 வருடம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் புகைப்படத்தையோ அல்லது தங்கள் குடும்பத்தினரின் புகைப்படத்தையோ அஞ்சல்துறை அலுவலர்களிடத்தில் கொடுத்து அஞ்சல் தலைகளாக பெற்றுக் கொள்ள முடியும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் எனது அஞ்சல் தலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று எனது அஞ்சல் தலை திட்டத்திற்கான அஞ்சல் படிவத்தை றெ வேண்டும்.
விண்ணப்பத்திற்கான கட்டணம் 300 ரூபாய் செலுத்த வேண்டும். அதன் பின் உங்களுடைய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். பின்னர் அஞ்சல் அலுவலர் மூலம் விண்ணப்பம் வழங்கப்படும்.
அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பொதுமக்கள் தங்கள் புகைப்படத்தையும் வழங்கினால் அன்றே புகைப்படத்தோடு 12 தபால் தலைகள் கொண்ட ஒரு ஷீட் அஞ்சல் தலைகளும் வழங்கப்படும். பொதுக்கள் தாங்கள் புகைப்படத்தோடு எத்தனை அஞ்சல் தலைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியும்.
கேள்வி: My Stamp " எனது அஞ்சல் தலை " திட்டத்தில் விதிமுறைகள் உண்டா ?
பதில்: நிச்சயம் உண்டு. "எனது அஞ்சல் தலை" திட்டத்தில் புகைப்படம் கொடுப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் அஞ்சல்துறையால் வகுக்கப்பட்டுள்ளது.
My Stamp திட்டத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமே அஞ்சல் தலைகளை வெளியிட முடியும். இறந்து போனவர்களுக்கு அஞ்சல் தலைகளை பெற முடியாது.
சட்டவிரோதமான செயல்கள், வன்முறை செயல்கள், புண்படுத்தும் செய்கைகள், ஒழுக்கக்கேடான செயல்கள், நேர்மையற்ற செயல்கள், ஏமாற்றும் தன்மையுள்ள செயல்கள், தேசப்பற்றை அவமதிக்கும் செயல்கள், அரசியல் மற்றும் தனிநபர் தாக்குதல்களை உள்ளடக்கிய செயல்கள் போன்வற்றை முன்னிறுத்தும் எந்த புகைப்படத்தையும் அஞ்சல்தலைகளாக உருமாற்ற முடியாது.
அதேபோல் காப்புரிமை உள்ள புகைப்படத்தை அக்காப்புரிமை அல்லாத ஒருவர் பயன்படுத்த முடியாது. புகைப்படத்தை வழங்கும் பொதுமக்கள் தான் அப்புகைப்படத்திற்கு முழு பொறுப்பானவர்கள்.
எந்த வகையான டெம்ப்ளேட் (Template) நாம் பயன்படுத்த முடியும் ?
இத்திட்டத்தில் பல வகையான டெம்ப்ளேட்கள் (Template) உள்ளன. செங்கோட்டை, தஞ்சை பெரிய கோவில் , பூ வகைகள், தாஜ்மகால், டீசல் என்ஜின், திருமண டிசைன், அஜந்தா குகைகள் என பல்வேறு டெம்ப்ளேட்கள் பொதுமக்கள் தங்கள் புகைப்படத்தை அஞ்சல் தலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
கேள்வி: " எனது அஞ்சல் தலை " திட்டத்தில் தள்ளுபடி உண்டா ?
பதில்: அஞ்சல் துறை சார்பான செயல்படுத்தப்பட்டு வரும் My Stamp " எனது அஞ்சல் தலை " திட்டத்தில் 100 க்கு மேல் அஞ்சல்தலைகளை பெறுபவர்களுக்கு தள்ளுபடியும் உண்டு.
ஒரே டெம்ப்ளேட் கொண்ட 100 ஷீட் அஞ்சல் தலைகள் ஆர்டர் செய்தால் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. மேலும் 101 இல் இருந்து 200 வரை ஒரே டெம்பிளேட் கொண்ட அஞ்சல் தலைகள் பெற விரும்பினால் அதையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.
கார்பரேட் நிறுவனங்கள் " எனது அஞ்சல் தலை " திட்டத்தால் பயன்பெற முடியுமா ?
நிச்சமாக பெறமுடியும். இதற்காக Corporate Customised Mystamp திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சமாக 5,000 அஞ்சல்தலைகளுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும். இதற்கு 20 சதவீத தள்ளுபடியும் உண்டு.
15 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தில் 3 லட்ச ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். 12 லட்ச ரூபாயில் 5,000 அஞ்சல் தலைகளை நிறுவனங்கள் பெற முடியும். இதற்காக தனி விண்ணப்பத்தை அந்தந்த அஞ்சல் இலுவலக தலைமை அதிகாரியிடம் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
கேள்வி: My Stamp அஞ்சல் தலைகளை நாம் பயன்படுத்த முடியுமா ?
தாராளமாக பயன்படுத்தலாம். பன்னிரெண்டு தபால் தலைகள் கொண்ட ஒரு அட்டையில் 60 ரூபாய் மதிப்பிலான அஞ்சல் தலைகள் இருக்கும். அவற்றை பொதுமக்கள் தங்கள் கடித சேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)