You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் விவசாயத்தை அழிக்கும் பூனைவால் கோரைப் புல்
- எழுதியவர், சுஜாதா நடராஜன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு விவசாயம் செய்யவிடாமல், பூதாகரமாக பரவி வளர்ந்து நிற்கும் பூனை வால் கோரையை அழிக்க முடியாமல் விவசாயிகள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எதிர்காலத்தில் விவசாயத்தையே கைவிட வேண்டிய சூழ்நிலையை மாற்ற தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பத்தூர் வட்டார விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி மே மாதம் வரை மூன்று பருவ காலங்களில் குருவை சம்பா தாலடி என முப்போகம் விவசாயம் செய்வது வழக்கம்.
ஆனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒன்றான திருப்பத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாத காலங்களில் பெய்கின்ற மழை பருவத்தில் மட்டும் நெல், கரும்பு, மக்காச்சோளம் , கேழ்வரகு, வேர்க்கடலை, தக்காளி போன்றவை பயிரிட்டு ஒருபோகம் விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காலம் காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மத்தியில் எப்பொழுதுமே கண்டிராத வகையில் பூதாகரமாக வளர்ந்து வரும் கோரையினால் கடந்த மூன்று ஆண்டு காலமாக விவசாயம் செய்யும் போது பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
நீரோடையிலிருந்து அடித்து வரப்பட்ட தண்ணீரினால் கோரை விதையின் காரணமாக விவசாய நிலங்களில் பூனைவால் கோரை பயிர் பரவலாக வளர தொடங்கி ஆள் உயரத்திற்கு தற்பொழுது வளர்ந்து நிற்கிறது.
இந்தக் கோரை பயிரின் காரணமாக வேறு எந்த ஒரு பயிரை வைத்தாலும் நிலத்தில் அது வருவதில்லை. அனைத்து சத்துக்களையும் கோரை பயிர் எடுத்துக் கொள்வதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த பயிரை ட்ராக்டர் ஒட்டி அளித்தாலும் மறுபடியும் முளைப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதை அழிப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ஆயிரம் கணக்கான ரூபாய் செலவிடுவதாகவும் செலவழித்தும் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை என்று விவசாயிகள் பலரும் ஒரே கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
பூனைவால் கோரைப் புல்லின் தீமைகள்
இந்தக் கோரை பயிர் பார்ப்பதற்கு கம்பு பயிரை போல இருந்தாலும் சுமார் 5 அடிக்கும் உயரமாக வளர்ந்து நின்று முதிர்ந்த நிலையில் இலவம் பஞ்சு போல் பஞ்சுகள் வெளியாகி காற்றில் பறந்து எந்த திசையில் எல்லாம் செல்கிறதோ அந்த திசையில் எல்லாம் விவசாய நிலங்களில் விழுந்து விதையாகி, வளர்ந்து வருகிறது.
மேலும் அதனுடைய வேர் மண்ணிற்கு அடியில் நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்துக்கு வளரும் தன்மை உடையது. ஜல்லி வேரை போல் இருப்பதால் எந்தெந்த திசையில் எல்லாம் பரவி செல்கிறதோ அதன் மூலமும் இதன் வளர்ச்சி அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.
கோரைப் புல்லில் இருந்து இலவம் பஞ்சு போல் பஞ்சு வெளியாகி அது காற்றின் மூலம் பரவத் தொடங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கை கால் முகம் ஆகியவற்றில் படும்பொழுது அரிப்பு தன்மை ஏற்படுகிறது. கண்களில் இந்த பஞ்சு விழும் பொழுது கண் பெரிதளவு பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பூனைவால் கோரை பயிரின் நன்மைகள்
இதனைக் கொண்டு வந்தவாசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கோரை பயிர் பாய் , கூடை போன்ற பொருட்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு சில வியாபாரிகள் இதனை கொண்டு பயனடைந்து வருகின்றனர். இந்தக் கோரையை ஒரு சில இடங்களில் நன்னீர் மூலமாக கூடை பாய் தயாரிப்பதற்காக வளர்க்கவும் செய்கின்றனர்.
ஆற்றோரப் படுகைகளில் மண்டி நிற்கும் கோரை
இந்த பூனை வால் கோரை பயிர் ஆரம்ப காலகட்டத்தில் ஆற்றுப் பகுதியில் வளரக்கூடிய நன்னீர் பயிராக இருந்தாலும் தற்பொழுது விவசாய நிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி வேறு பயிர்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகிறது.
இது தீ வைத்து கொளுத்தி விட்டாலும் அழிவதில்லை. ஒரு பயிரை சுற்றி மேலும் பல பயிர்கள் வளர்கிறது. கோடை காலங்களில் காய்ந்து கருகினாலும் மீண்டும் மழை பெய்கின்ற பொழுது புத்துயிர் பெற்று வந்துவிடுகிறது. நம்முடைய மாவட்டத்தில் மழை காலத்தில் தான் விவசாயம். அதுவே தடைபட்டு விட்டால் வேறு பருவ காலங்களில் விவசாயம் செய்ய முடியாது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசி அந்த பகுதியைச் சேர்ந்த கோகிலா, "மழை வந்து ஏரி உடைந்ததில் வந்த ஆற்று தண்ணீரில் அடித்து வரப்பட்ட கோரையினால் தற்பொழுது எங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு நெல் கரும்பு கம்பு கேழ்வரகு உள்ளிட்ட பல பயிர்களை நாங்கள் பயிரிட்டு வந்தோம். எனக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆகின்றது இதுவரை நாங்கள் இப்படி ஒரு பயிரை கண்டதில்லை கடந்த மூன்று ஆண்டு காலமாகத்தான் இந்த பயிர் அதிக அளவில் பரவலாக காணப்பட்டு வருகிறது", என்றார்.
ஆள் உயரத்திற்கு வளரக்கூடிய பயிர் என்பதால் அதற்குள் விஷப்பூச்சிகள் அதிக அளவில் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
"ஒரு ஏக்கர் பயிரிட்டு இருந்தால் ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை எங்களுக்கு லாபம் வந்திருக்கும். தற்பொழுது எங்களால் பயிர் செய்ய இயலாமல் போனதால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்."
அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோகிலா கோரிக்கை விடுத்தார்.
கண்ணில் பஞ்சு விழுந்து மருத்துவர்களிடம் காண்பித்தால் இது ரொம்ப வீரியமிக்க ஒன்று என்று கூறுகின்றனர்.
"விவசாயங்கள் செழிப்பாக வளரக்கூடிய இடம் இது. தண்ணீருக்கும் பஞ்சமில்லை. இருந்தாலும் இப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் யாராலும் விவசாயம் செய்ய முடியவில்லை" என்று பூவரசி பிபிசியிடம் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு நஷ்டம்
நீர்நிலைகளில் வளரக்கூடிய கோரையை பூங்கோரை என்று சொல்வார்கள் . கொட்டாங்கோரை நிலங்களில் வளரும். இது விவசாயத்திற்கு பாதிப்பாக இருக்கிறது என கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி கூறினார்.
"ஏரிகள், குளம், குட்டை, கண் மாயிகள் உள்ளிட்ட பகுதிகளில் மண் அரிப்பை தடுப்பதற்காக கோரைகள் அங்கு வளரும் இந்தக் கோரையின் பூக்களில் அனைத்துமே காற்றில் பறக்கும் தன்மை உடையது. அடியில் வளரக்கூடிய கோரையை அறுத்து எடுத்தால் மட்டுமே கோரை வளர்வதை தடுக்க முடியும். இல்லையெனில் காற்றின் மூலம் பரவி அனைத்து இடங்களிலும் ஊடுருவிச் சென்று விழும் இடங்களில் கோரை புதியதாக முளைக்கும். அதில் நான்கிலிருந்து ஐந்து அடி வரை அடியில் கிழங்கு வளரும். இதனை ஏர் உழுவதன் மூலம் மட்டுமே இதனை சரி செய்ய இயலும்."
"வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலங்கள் அனைத்துமே தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் வரக்கூடிய கோரைகள். அதிக அளவு வளரும் இந்தக் கோரையை முதிர்வு அடைவதற்கு முன்பு அறுவடை செய்தால் மறுபடியும் வளர்வதற்கு வாய்ப்பில்லை. முதிர்ந்த பிறகு காற்றில் பறக்கக்கூடிய தன்மை கொண்டதால் விதைகள் பரவும் இடங்களில் எல்லாம் இந்த செடிகள் முளைத்து விடும் இது அதிக அளவு உப்பு தண்ணி மண்ணில் வளரக்கூடிய தன்மை உடையது."
கோரையை ஒழிக்க அரசின் மானியம்
தரிசு நிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கோரை பயிர் மட்டும் இன்றி அனைத்து களைப் பயிர்களும் வருவதை தடுக்க முடியும் என்று பிபிசி தமிழிடம் பேசிய வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தெரிவித்தார்
"ஒரு ஏக்கருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியமாக அளித்து வருகிறது. கோரையை அழிப்பதற்கு வீக் என்ற தெளிப்பானைக் கொண்டும் அல்லது உப்பு கரைசலை பயன்படுத்தியும் கோரையை அழிக்க முடியும்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்