காலிஸ்தான் இயக்கத்திற்கு கனடா, அமெரிக்கா, பிரிட்டனுடன் உள்ள தொடர்பு என்ன?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று மணிநேரம் தொடர்ந்த உரைகள் அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சலிப்பை ஏற்படுத்தியது.

ஒருங்கிணைப்பாளர் நன்றியுரைக்கு தயாராகிக்கொண்டிருந்தார், அங்கிருந்த மக்களும் மதிய உணவுக்கான நேரம் வந்துவிட்டது என்ற நம்பிக்கையில் எழுந்து நின்றனர்.

அப்போது, இரு நபர்கள் அரங்கின் பின்னால் இருந்து ஓடி வந்து மேடைக்கு தாவினர். இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் சில காகிதங்களைக் கிழித்தெறிந்துவிட்டு உடனடியாக அங்கிருந்து ஓடிச் சென்றனர்.

அடுத்த நாள், 'தி ட்ரிப்யூன்' நாளிதழின் ஆசிரியரும் பிரபல பத்திரிகையாளருமான பிரேம் பாட்டியா, பல்கலைக்கழக மாநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் தீவிரமானது என்று எழுதினார். ட்ரிப்யூன் வாசகர்கள் அதுவரை கேள்விப்படாத 'காலிஸ்தான்' என்ற வார்த்தையையும் அவர் பயன்படுத்தினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளில், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறினர். இவர்களில் சிலர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே இந்த நாடுகளில் குடியேறியவர்கள்.

தாடியை வெட்ட வேண்டும், தலைப்பாகை அணிவதை நிறுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் வற்புறுத்தத் தொடங்கியதில் இருந்து இவர்களின் பிரச்னைகள் தொடங்கின.

இதையடுத்து, இந்திய தூதரகத்தில் அவர்கள் புகார்களை அளித்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த இந்திய தூதரகம், உள்ளூர் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு தீர்வு காணும்படி அறிவுறுத்தியது.

ராவின் முன்னாள் கூடுதல் செயலாளர் பி ராமன், சீக்கிய பிரிவினைவாதம் குறித்து தனது நூலில், “வெளிநாட்டு அரசுகளிடம் சீக்கியர்களின் பிரச்னைகள் தொடர்பாக எழுப்ப இந்திய அரசு தயக்கம் காட்டுவது பிரிட்டன், அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களின் ஒரு பிரிவினரிடையே தங்களின் மத உரிமைகளைப் பாதுகாக்கத் தனி நாடு தேவை என்ற உணர்வை ஏற்படுத்தியது,” எனக் குறிப்பிடுகிறார்.

மேலும், “பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சரண் சிங் பாஞ்சியின் தலைமையில் சீக்கிய தன்னாட்சி இயக்கத்தைத் (Sikh Home Rule League) தொடங்கினர். அதேபோல், அமெரிக்காவை சேர்ந்த சில சீக்கிய விவசாயிகள் 'யுனைடெட் சீக்கியர் அப்பீலை' நிறுவினர்.

ஆனால் பெரும்பாலான சீக்கியர்கள் இந்த அமைப்புகளில் இருந்து விலகி இருந்தனர். சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற இந்தக் கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை,” என்றும் ராமன் தனது நூலில் கூறுகிறார்.

காலிஸ்தான் இயக்கமும் பாகிஸ்தானின் உதவியும்

கடந்த 1967 மற்றும் 1969க்கு இடையில் பஞ்சாப் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பின்னர் பஞ்சாபின் நிதி அமைச்சராகவும் இருந்த ஜக்ஜித் சிங் சௌகான், சில காலங்களுக்குப் பிறகு லண்டனில் குடியேறினார். அங்கு அவர் சீக்கிய தன்னாட்சி இயக்கத்தின் உறுப்பினராக மட்டுமல்லாமல் அதன் தலைவராகவும் ஆனார்.

பின்னர் சீக்கிய தன்னாட்சி இயக்கத்தின் பெயரை காலிஸ்தான் இயக்கம் என மாற்றினார். அவர் பிரிட்டனுக்கு செல்வதற்கு முன்பே, பாகிஸ்தான் தூதரகம், லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆகியவை சீக்கிய தன்னாட்சி இயக்கத்துடன் தொடர்பில் இருந்தன.

ராவின் முன்னாள் கூடுதல் செயலாளரான பி ராமன், தனது 'கவ் பாய்ஸ் ஆஃப் ரா'(kaoboys of R&AW) என்ற புத்தகத்தில், “பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் யாஹ்யா கான், ஜக்ஜித் சிங் சௌகானை பாகிஸ்தானுக்கு அழைத்தார். அங்கு அவர் அன்புடன் வரவேற்கப்பட்டு பஞ்சாபின் சீக்கியத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.

இந்தப் பயணத்தின்போது பாகிஸ்தானின் குருத்வாராக்களில் வைக்கப்பட்டிருந்த புனித சீக்கிய ஆவணங்களை அவருக்கு அரசு நிர்வாகம் வழங்கியது. அவற்றை தன்னுடன் பிரிட்டனுக்கு எடுத்துச் சென்ற ஜக்ஜித் சிங் சௌகான் தன்னை சீக்கியர்களின் தலைவராக சித்தரித்துக்கொள்ள பயன்படுத்தினார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

காலிஸ்தான் அதிபராக அறிவிக்கப்பட்ட ஜக்ஜித் சிங் சௌகான்

கடந்த 1971ஆம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவதற்கு முன், இந்திரா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரத்தை ‘ரா’ தொடங்கியது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியாவில் சீக்கியர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களையும் வெளிநாட்டில் உள்ள சீக்கியர்களின் பிரச்னைகளில் இந்தியா அலட்சிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் CIA, ISI ஆகியவை பிரசாரம் மேற்கொண்டன.

ஜக்ஜித் சிங் சௌகான் நியூயார்க் நகரத்திற்குச் சென்று உள்ளூர் ஊடகங்களைச் சந்தித்து காலிஸ்தான் இயக்கத்தைப் பற்றித் தெரிவித்தார். அந்தக் கூட்டங்கள் அப்போது ஹென்றி கிஸ்ஸிங்கரின் தலைமையில் இருந்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் இருந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டன.

டெர்ரி மிலியுஸ்கி தனது, ‘ரத்தத்திற்கு ரத்தம்: உலகளாவிய காலிஸ்தான் திட்டத்தின் ஐம்பது ஆண்டுகள்’(blood for blood:fifty years of the global khalistan project) என்ற புத்தகத்தில், “அக்டோபர் 13, 1971 அன்று, ஜக்ஜித் சிங் சௌகான் நியூயார்க் டைம்ஸில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு அமைவதற்கான முன்னெடுப்பைத் தொடங்குவது தொடர்பாக விளம்பரம் செய்தார்.

இதுமட்டுமின்றி, அவர் தன்னை காலிஸ்தான் அதிபராகவும் அறிவித்தார். பின்னர், ‘ரா’வின் விசாரணையில், இந்த விளம்பரத்திற்கான செலவை வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ஏற்றுக்கொண்டது தெரிய வந்தது,” என்று குறிப்பிடுகிறார்.

காலிஸ்தானி ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள்

இதற்கிடையில், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சீக்கிய இளைஞர்கள் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, தால் கல்சா மற்றும் பாபர் கல்சா போன்ற பல அமைப்புகளை நிறுவினர். அவர்கள் அனைவரும் ஜக்ஜித் சிங் சௌகானை ஓரங்கட்டிவிட்டு காலிஸ்தானை நிறுவுவதற்கான வன்முறை இயக்கத்தை ஆதரித்தனர்.

இதற்கிடையே, இந்திரா காந்தி ஆட்சியை பறிகொடுத்த பின்னர் சௌகான் இந்தியா வந்தார். ஆனால் 1980இல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சௌகான் மீண்டும் பிரிட்டன் புறப்பட்டு சென்றார்.

“எழுபதுகளின் முடிவில், ஐஎஸ்ஐ சௌகானுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துக்கொண்டு பிற புதிய அமைப்புகளை ஊக்குவிக்கத் தொடங்கியது. தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சௌகான் கனடாவில் காலிஸ்தானுக்கான கரன்சி நோட்டுகளை விற்கத் தொடங்கினார். தபால் தலைகளை அச்சிட்டு அவற்றைப் பிரபலப்படுத்தினார்,” என்று டெர்ரி மிலியுஸ்கி தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

“மேலும் ஒட்டாவா சென்ற சௌகான், அங்கு சீன தூதரக அதிகாரிகளைச் சந்தித்து காலிஸ்தான் இயக்கத்திற்கு சீனாவின் உதவியைக் கோரினார். ஆனால், சீன அதிகாரிகள் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் சௌகானுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொண்டது. ஆனால், அவர் மீதான அமெரிக்காவின் ஆர்வம் அப்படியே இருந்தது.”

இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்காவில் புதிய சீக்கிய தலைவர் ஒருவரின் செயல்பாடு அதிகரித்தது. அவர் பெயர் கங்கா சிங் தில்லான். பஞ்சாப் போலீஸ் அதிகாரியாக இருந்த இவர், அமெரிக்கா சென்று வாஷிங்டனில் குடியேறினார்.

இது தொடர்பாக பி.ராமன் தனது புத்தகத்தில் குறிப்பிடும்போது, “அமெரிக்காவை அடைந்த பிறகு, அவர் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியா உல் ஹக்கின் மனைவியின் நெருங்கிய நண்பரான கென்ய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியப் பெண்ணை மணந்தார். தனது மனைவியின் உதவியுடன், தில்லன் ஜெனரல் ஜியாவின் நெருங்கிய நண்பரானார்,” என்கிறார்.

“அவர் வாஷிங்டனில் நன்கானா சாஹேப் அறக்கட்டளையை நிறுவி, அடிக்கடி பாகிஸ்தானுக்கு செல்லத் தொடங்கினார். ஜியாவும் தில்லான் குடும்பமும் மிகவும் நெருக்கமாகிவிட்டதால், ஜியா வாஷிங்டனுக்கு செல்லும் போதெல்லாம், அவரது உடல்நலம் குன்றிய மகள் ஹோட்டலில் அவருடன் தங்காமல் தில்லான் குடும்பத்துடன் தங்குவார்.”

கடத்தப்பட்ட இந்திய விமானம்

செப்டம்பர் 29, 1981 அன்று, சீக்கிய தீவிரவாதிகள் இந்திய விமானத்தை கடத்தி லாகூருக்கு கொண்டு சென்றனர். பயணிகளை விடுவித்து, பாதுகாப்பு அமைப்புகளிடம் சரணடையுமாறு தீவிரவாதிகளிடம் பாகிஸ்தான் நிர்வாகம் சமாதானம் பேசியது.

இதையடுத்து, கடத்தப்பட்ட விமானம் பயணிகளுடன் இந்தியா திரும்பியது. ஆனால் சரணடைந்த கடத்தல்காரர்கள் நன்கானா சாஹேப் குருத்வாராவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

ஜியா உல் ஹக்கின் அரசாங்கம் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்தது. முழுமையான விசாரணைக்குப் பிறகு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அவர் உறுதியளித்தார். விசாரணைக்குப் பிறகு, அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் அவர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, நன்கானா சாஹேப் குருத்வாராவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபரான கஜேந்திர சிங், குருத்வாராவில் தங்கியிருந்தபோதே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்களிடம் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து பிரசாரம் செய்தார்.

துபாய்க்கு சென்ற ரொமேஷ் பண்டாரி

இதைத் தொடர்ந்து, சீக்கிய தீவிரவாதிகள் மூன்று இந்திய விமானங்களை ஒன்றன் பின் ஒன்றாக கடத்திச் சென்றனர். பாகிஸ்தான் நிர்வாகம் இந்த விமானங்களை அங்கு தரையிறங்க அனுமதித்ததோடு இந்தியாவுக்கு எதிராக அவர்கள் பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக கடத்தல்காரர்கள் - ஊடகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையும் நடத்த ஏற்பாடு செய்தது.

பின்னர் பயணிகளை விடுவிக்கும்படி அவர்களை பாகிஸ்தான் சமாதானப்படுத்தியது. கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் சிறைக்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக குருத்வாராவில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஆகஸ்ட் 24, 1984 அன்று தீவிரவாதிகள் ஐந்தாவது முறையாக இந்திய விமானத்தைக் கடத்தியபோது, முந்தைய சந்தர்ப்பங்களில் கடத்தல்காரர்களை நடத்திய விதம் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் சில பகுதிகளில் விமர்சனம் கிளம்பியதால், இந்த முறை பாகிஸ்தான் அரசு முற்றிலும் மாறுபட்ட கொள்கையைப் பின்பற்றியது.

“விமானம் லாகூரில் தரையிறங்கியபோது, தீவிரவாதிகள் உண்மையான ஆயுதத்திற்குப் பதிலாக பொம்மை துப்பாக்கியைக் காட்டி விமானத்தை கடத்தி வந்திருப்பதை ஐஎஸ்ஐ அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர்கள் தீவிரவாதிகளுக்கு ரிவால்வரை கொடுத்து துபாய்க்கு செல்லும்படி கூறினர்.

விமானம் துபாயில் தரையிறங்கியதும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் தீவிரவாதிகளிடம் இந்திய அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவர முயன்றனர்,” என்று ராமன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுபற்றி இந்திய அரசுக்குத் தெரிந்தவுடன் ஐபி, ரா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை துபாய்க்கு அனுப்பி வைத்தனர். துபாய் அதிகாரிகள் இந்திய குழுவுக்கு ஒத்துழைக்காததால், துபாய் அரச குடும்பத்துடன் ஆழமான உறவைக் கொண்டிருந்த வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை இந்திரா காந்தி துபாய்க்கு அனுப்பினார்.

சீக்கிய தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைத்த துபாய்

இதுகுறித்து விவரிக்கும் பி.ராமன், “ஒரு மேற்கத்திய நிறுவனத்தின் விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டு துபாய்க்கு அனுப்பப்பட்டது. இந்திய குழுவினர் அனைவரும் விமானத்திற்குள் இருந்தனர். கடத்தல்காரர்களிடம் அமெரிக்காவில் இருந்து விமானம் வந்துள்ளதாகவும் அவர்களின் விருப்பப்படி அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாகவும் துபாய் அதிகாரிகள் பொய் சொனனார்கள்.

அதன்படி விமானத்துக்கு அவர்களை அழைத்து வந்த அதிகாரிகள், தீவிரவாதிகளை அவர்களுடைய துப்பாக்கிகளுடன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விமானத்துக்குள் வந்ததும்தான் தாங்கள் அமெரிக்காவுக்கு பதிலாக இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படப் போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரிந்தது,” எனக் கூறியுள்ளார்.

கடத்தல்காரர்களிடம் இருந்த ரிவால்வர் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. ‘ரா’அந்த ரிவால்வரின் விவரங்களை ஜெர்மன் புலனாய்வு நிறுவனத்திற்கு அனுப்பி, இந்த ரிவால்வர் யாருக்கு விற்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கச் சொன்னது. இந்த ரிவால்வர் பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி என்று ஜெர்மன் உளவுத்துறை நிறுவனம் ‘ரா’விடம் கூறியது.

இந்தியா இந்த விவரங்களை அமெரிக்காவிடம் கொடுத்து, இந்த ஆதாரத்தின் அடிப்படையில் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரியபோது, அதற்கு அமெரிக்கா சம்மதிக்கவில்லை. ஆயுதத்தை தீவிரவாதிகளிடம் பாகிஸ்தான் அதிகாரி ஒப்படைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரிவால்வர் கடத்தல்காரர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரியால் வழங்கப்பட்டது என்பதை விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் நேரில் கண்ணால் பார்த்ததாக தெரிவித்தார்.

கடத்தல்காரர்கள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதால் தாங்கள் பிடிபடுவோம் என்று காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பயம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய விமானங்கள் கடத்தப்படுவது முற்றிலும் நின்றுபோனது.

உத்தியை மாற்றிக்கொண்ட காலிஸ்தான் தீவிரவாதிகள்

இதற்குப் பிறகு, சீக்கிய தீவிரவாதிகள் பல அழிவு நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களை நாடத் தொடங்கினர். பல இடங்களில், வெடிகுண்டு தாக்குதலுக்கு ரிமோட் கண்ட்ரோல், டைம் பாம் போன்றவை பயன்படுத்தப்பட்டன. அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், அப்பாவி பொதுமக்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர்.

வன்முறையின் தாக்கம் பஞ்சாபை தாண்டி டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தொடக்கத்தில் காலிஸ்தானி தீவிரவாதிகளுக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை. ஆனால் 1980களில் அவர்கள் சில பிரிவினரின் ஆதரவைப் பெற ஆரம்பித்தனர்.

கடந்த 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளை காலிஸ்தானி பிரிவினைவாதிகள் கைவினை வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து சீர்குலைக்க முயன்றுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனால் டெல்லி செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டும் டெல்லி நோக்கி வரும் ஒவ்வொரு சீக்கியரிடமும் சோதனை நடத்தப்பட்டது.

தலைப்பாகையிலும் சோதனை செய்யப்பட்டதால், பல சீக்கியர்கள் இந்த சோதனையை அவமானகரமானதாகக் கருதினர். கோபமடைந்த சீக்கியர்களில் பலரின் அனுதாபங்கள் காலிஸ்தானிகளை நோக்கித் திரும்பியது.

உளவு அமைப்பான ராவின் சிறப்புச் செயலாளராக இருந்த ஜிபிஎஸ் சித்து, ‘தி காலிஸ்தான் சதி’ என்ற தனது புத்தகத்தில், “இக்காலத்தில், லண்டனில் வசித்து வந்த ஜக்ஜித் சிங் சௌகான், முதலில் பாங்காக் சென்றார். பஞ்சாபின் காலிஸ்தானி ஆதரவாளர்களைச் சந்திக்க முடியும் என்பதால் அங்கிருந்து காத்மாண்டு சென்றார்.

‘ரா’ உளவாளிகள் பாங்காக் மற்றும் காத்மாண்டுவில் அவரைக் கண்காணித்தனர். அவரைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா நேபாளிடம் கோரிக்கை விடுத்தது, ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. நேபாள நிர்வாகம் சௌகானை பிடித்தது, ஆனால் அவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்குப் பதிலாக பாங்காக்கிற்கு அனுப்பியது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொற்கோயிலை தலைமையிடமாக மாற்றினர்

இதற்கிடையில், காலிஸ்தான் தீவிரவாதிகள் பொற்கோவிலை தங்கள் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கினர். ஏப்ரல் 26, 1983 அன்று, பஞ்சாப் டிஐஜி ஏஎஸ் அத்வால் பொற்கோயிலில் இருந்து வெளியே வரும் போது படுகொலை செய்யப்பட்டார்.

அந்த நேரத்தில், கியானி ஜைல் சிங் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் காலிஸ்தான் ஆதரவாளர்களிடையே பிளவை உருவாக்க ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவின் உதவியைப் பெற்றிருந்தார். ஆனால் பிந்திரன்வாலே அவரது கையை உதறிவிட்டு காலிஸ்தானிகளின் தலைவராக ஆனார்.

அவர் தனது ஆதரவாளர்களுடன் பொற்கோவிலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

ராஜீவ் காந்தி மற்றும் அவரது நெருங்கிய நபர்கள் இருவரும் அகாலிதள தலைவர்களுடன் ‘ரா’இன் டெல்லி விருந்தினர் மாளிகையில் ரகசிய சந்திப்பு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

காலிஸ்தான் ஆதரவாளர்களை பொற்கோவிலை விட்டு வெளியேறுமாறு கூற முடியாத தங்களின் இயலாமையை அகாலி தலைவர்கள் வெளிப்படுத்தினர். இது முதலில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரிலும் பின்னர் இந்திரா காந்தியின் கொலையிலும் உச்சக்கட்டத்தை அடைந்தது.

மக்களின் ஆதரவை இழக்கத் தொடங்கிய காலிஸ்தான் இயக்கம்

ஆனால், 1980களின் இறுதியில் காலிஸ்தான் இயக்கத்தில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்தன. உண்மையில், இது 1988ஆம் ஆண்டு மே 10-18ஆம் தேதி வரை நடந்த ஆபரேஷன் பிளாக் தண்டர்-2 மூலம் தொடங்கியது.

காலிஸ்தான் தீவிரவாதிகள் கொள்ளையடித்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கடத்தல், சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடத் தயங்குவதில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.

பஞ்சாபின் முன்னாள் தலைமைச் செயலாளரான ரமேஷ் இந்தர் சிங், 'பஞ்சாப் புளூ ஸ்டாருக்கு முன்னும் பின்னும் கொந்தளிப்பு' என்ற புத்தகத்தில் இது தொடர்பாகக் குறிப்பிடும்போது, “மதத்தின் மெசியாக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உண்மையில் குற்றவாளிகள் என்று மக்கள் உணர்ந்தனர். அவர்கள் மதத்திற்காக துப்பாக்கிகளை எடுக்காமல் மாறாக, தனிப்பட்ட பேராசையை தீர்த்துக்கொள்ள எடுத்தனர்.

இதன் விளைவாக சாமானியர்களின் அனுதாபத்தை அவர்கள் இழந்தனர். மறைந்து வாழ்வதற்கு புகலிடம் கொடுத்த விவசாயிகளின் ஆதரவு படிப்படியாகக் குறையத் தொடங்கியது,” என்கிறார்.

பல தீவிரவாத தலைவர்கள் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்துள்ளனர்.

ரமேஷ் இந்தர் சிங் இதுகுறித்து, “பாபர் கல்சாவின் தலைவரான சுக்தேவ் சிங் பாப்பர் தனது இரண்டாவது மனைவியுடன் பாட்டியாலாவில் ஒரு ஆடம்பரமான வீட்டில் வசித்தது தெரிய வந்தபோது அவர் மீதான பிம்பம் சரியத் தொடங்கியது,” என்று குறிப்பிடுகிறார்.

ஹரிஷ் பூரி, பரம்ஜித் சிங் ஜட்ஜ் மற்றும் ஜக்ரூப் சிங் சௌகான் ஆகியோர், 'பஞ்சாபில் பயங்கரவாதம், அடித்தட்டு எதார்த்தத்தைப் புரிந்துகொள்வது' (Terrorism in Punjab: Understanding Grassroots Reality) என்ற தங்களின் புத்தகத்தில், “1991இல் 205 தீவிரவாதிகளின் சமூகப் பொருளாதார விவரத்தை ஆய்வு செய்தபோது, அவர்களில் பெரும்பாலோர் எளிதாக பணத்தை ஈட்டியது கண்டறியப்பட்டது. அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். இவர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியினரிடம் நிறைய பணம் இருந்தது,” எனக் குறிப்பிடுகின்றனர்.

கட்டுப்பாடுகள் விதிப்பு

தங்கள் மீதான எண்ணத்தை மேம்படுத்த, காலிஸ்தானி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் நடத்தை நெறிமுறைகளை வெளியிட்டனர். அதில் பெண்கள் நவநாகரீக ஆடைகளை அணியக்கூடாது மற்றும் புருவ முடிகளைத் திருத்தக் கூடாது, ஆண்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

திருமணங்களில் நடனம், இசை தடை செய்யப்பட்டதோடு திருமண நிகழ்வுக்கான விருந்தினர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைக்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு காவி, வெள்ளை அல்லது கருப்பு ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த விதிகளை மீறுபவர்கள் உயிருடன் எரிக்கப்படுவார்கள் என்று காலிஸ்தான் கமாண்டோ படை போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.

அழகு நிலையங்கள் செயல்படவும் பெண்கள் சேலை மற்றும் ஜீன்ஸ் அணிவதற்கும் இவர்கள் தடை விதித்தனர். சீக்கியப் பெண்கள் தங்கள் தலையை மூடிக் கொள்ளுமாறும், நெற்றியில் குங்குமம் மற்றும் வெண்ணிறம் பூசக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். வாகனங்களின் நம்பர் பிளேட்களில் பஞ்சாபி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

இருப்பினும், பஞ்சாபில் இருந்து வெளியே செல்லும்போது சிக்கல்களை சந்திக்கத் தொடங்கியதால் இந்தக் கட்டுப்பாடுகளை லாரி ஓட்டுநர்கள் விரும்பவில்லை. இதுபோன்ற காரணங்களால் மக்களின் ஆதரவை காலிஸ்தான் ஆதவாளர்கள் இழக்கத் தொடங்கினர்.

பலவீனமடைந்த தீவிரவாதிகளின் தலைமை

இதன் விளைவாக, பாதுகாப்பு அமைப்புகள் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்குள் நுழையத் தொடங்கின. உளவுத்துறை அதிகாரிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மூன்று பந்திக் கமிட்டிகளின் (மதக் குழு) தலைவர்களான டாக்டர். சோஹன் சிங், குர்பச்சன் சிங் மனோச்சல் மற்றும் வாசன் சிங் ஜாபர்வால் ஆகியோரைத் தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.

அமெரிக்காவில் வாழும் கங்கா சிங் தில்லான் போன்ற காலிஸ்தானியர்களின் செல்வாக்கும் தொடர்ந்து மறைந்துகொண்டே வந்தது. பிரிவினைவாதிகளின் தலைமை படிப்படியாக பலவீனமடையத் தொடங்கியது. இதன் விளைவாக தீவிரவாதிகளின் எண்ணிக்கையும், புதிய ஆட்சேர்ப்பும் குறையத் தொடங்கியது.

“தீவிரவாதிகளின் எண்ணிக்கை 1500ஐ தாண்டவில்லை. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் அழுத்தம் காரணமாக, அவர்களின் செயற்பாட்டாளர்கள் குறையத் தொடங்கினர்.

எனவே, வன்முறை இயக்கம் முடிவுக்கு வந்தது. 1988இல், 372 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 1989இல் 703 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், 1990இல் 1335, 1991இல் 2300 மற்றும் 1992இல் 2110 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 1993 வரை, 916 தீவிரவாதிகள் காவல்துறையினரிடம் சரணடைந்தனர்,” என்று ரமேஷ் இந்தர் சிங் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

முடிவுக்கு வந்த தீவிரவாத நடவடிக்கைகள்

தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களை ஒழிக்கும் பட்டியலை தயாரித்த பஞ்சாப் காவல்துறை அதற்கான பணிகளைத் தொடங்கியது.

பஞ்சாபில் சுமார் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதில் இருந்தே தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையின் அளவை மதிப்பிட முடியும்.

இது தவிர, சுமார் 40 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்களும் பஞ்சாப் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் பஞ்சாப் காவல்துறைக்கு உதவும் பொறுப்பு வழங்கப்பட்டது.

ராணுவ நடவடிக்கை முதலில் லெப்டினன்ட் ஜெனரல் ஜி.எஸ்.கிரேவால் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.எஸ் சிப்பர் ஆகியோரால் வழிநடத்தப்பட்டது, அதன் பிறகு ஜெனரல் வி.பி. மாலிக் தலைமை தாங்கினார்.

இவற்றின் விளைவாக காலிஸ்தான் இயக்கம் பலவீனம் அடையத் தொடங்கியது. 1992இல் 1518 பொதுமக்கள் தீவிரவாதிகளின் கைகளில் கொல்லப்பட்ட நிலையில், 1994இல் இந்த எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது.

ஆகஸ்ட் 31, 1995 அன்று, காலிஸ்தான் தீவிரவாதிகள் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங்கை கொன்றனர். பஞ்சாபில் அவர்களால் கடைசியாக நடந்த பெரிய வன்முறைச் சம்பவம் இது.

இதற்குப் பிறகு, ஆங்காங்கே நடந்த வன்முறை சம்பவங்களைத் தாண்டி காலிஸ்தான் தீவிரவாதிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: