தாலிபன் அரசின் தூதரை இந்தியா ஏற்குமா? டெல்லி ஆப்கன் தூதரகத்தில் என்ன நடக்கிறது?

    • எழுதியவர், அபினவ் கோயல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை நாட்டின் பல பெரிய செய்தித்தாள்கள் தங்கள் உள்ளூர் ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளன. இதில் செய்தி முகமையான பிடிஐயும் அடங்கும்.

தூதரகத்தில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பல தூதரக அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் புகும் பொருட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கடிதம் வெளியாகி புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

2021 ஆகஸ்டில் தாலிபன்கள் அஷ்ரப் கனி அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

ஆனால் இந்தியாவில் உள்ள ஆப்கன் தூதரகத்தின் பொறுப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் பணியாற்றி வரும் அஷ்ரப் கனியால் நியமிக்கப்பட்ட தூதர் ஃபரித் மாமுண்ட்தர்சயிடம் உள்ளது.

இந்திய அரசும் தன்னை ஆதரிக்கவில்லை என்று இந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இது தாலிபன் அரசின் உள் விவகாரம் என்று இந்தியா கூறியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன.

தாலிபன் அரசுக்கு என்ன வேண்டும் என்பதுதான் இப்போதைய கேள்வி. இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் மீது அதன் கட்டுப்பாட்டு இல்லையா? கனி அரசால் நியமிக்கப்பட்ட தூதரை அது மாற்ற விரும்புகிறதா?

ஆப்கன் தூதரகத்தில் தாலிபன்கள் பொறுப்பேற்பதை இந்திய அரசு விரும்பவில்லையா? தூதரகம் மூடப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் என்ன பாதிப்பு ஏற்படும்?

தாலிபன் அரசுடன் தூதரின் மோதல்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள தூதரகங்களில் தாலிபன்களின் நியமனங்களை ஏற்க மறுத்துவிட்டன.

இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் இரான் போன்ற சில நாடுகளில் தாலிபன்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகங்கள் செயல்படுகின்றன.

மேலும் ஜனநாயக 'இஸ்லாமிய குடியரசு ஆஃப்கானிஸ்தான்' அரசின் இடத்தில் 'இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான்' கொடி கூட தூதரங்களில் பறக்கிறது. .

ஆனால் 2020 ஆம் ஆண்டு கனி அரசால் நியமிக்கப்பட்ட தூதரான ஃபரித் மாமுண்ட்தர்சய் தற்போதுவரை இந்தியாவில் உள்ள தூதரகத்தில் பணிபுரிகிறார். இருப்பினும் அவர் கடந்த சில மாதங்களாக நாட்டிற்கு வெளியே உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, தாலிபன் அரசு ஃபரித் மாமுண்ட்தர்சய்க்கு பதிலாக தூதரக வர்த்தக ஆலோசகர் காதர் ஷாவுக்கு தூதரகப்பணியின் பொறுப்பை வழங்க முயன்றது.

டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் தொடர்பான விஷயங்களை கவனிக்க தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியே உத்தரவு பிறப்பித்தார். ஆனால் தூதரக ஊழியர்கள் இதை அனுமதிக்கவில்லை, இறுதியில் காதர் ஷா தூதரகத்திற்கு உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

தாலிபன்கள் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் இதைத்தான் செய்தனர். 2022 ஆம் ஆண்டில் கனி அரசால் நியமிக்கப்பட்ட தூதர் ராஜினாமா செய்தார். அதன் பிறகு அங்குள்ள பணி தாலிபன்களால் நியமிக்கப்பட்ட மூத்த தூதரக அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு தாலிபனால் நியமனம் செய்யப்பட்டவருக்கு தூதரக பொறுப்பு வழங்கப்பட்டால், அவர் ஏற்கனவே இருக்கும் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்தர்சய், அஞ்சுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

இவ்வாறான நிலையில் தாலிபன்கள் ஆளும் நாட்டிற்கு திரும்ப விரும்பாத தூதரக அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்தியாவின் நிலை என்ன?

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை பிடித்த பிறகு காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா தற்காலிகமாக மூடியது.

ஆனால் ஒரு வருடம் கழித்து இந்தியா மனிதாபிமான உதவிக்காக ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்பி ஆப்கானிஸ்தானில் தனது தூதரக இருப்பை மீண்டும் நிறுவியது. ஆனால் இந்த தூதரகம் முன்பு போல் செயல்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்திலும் இதே நிலைதான். இது தாலிபன் அரசின் உள்விவகாரம் என்றும், இந்த நியமனம் தொடர்பாக இந்தியா எதுவும் செய்ய முடியாது என்றும் இந்தியா கூறுகிறது.

”இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரின் செல்லுபடியாக்கத்தை ஆப்கானிஸ்தான் அரசு தீர்மானிக்கும், இந்தியா இதைச் செய்ய முடியாது,” என்று ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் எம்எம்ஏஜே அகாடமி ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியர் முகமது சொஹ்ராப் கூறினார்.

“தாலிபன் அரசுக்கு இந்தியா எவ்வளவு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கிறது என்பதுதான் இப்போதைய கேள்வி. அத்தகைய சூழ்நிலையில் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பை தாலிபன் அரசின் ஒருவர் ஏற்பதை இந்தியா விரும்பவில்லை. ஆனால் இந்தியா அதிகாரப்பூர்வமாக இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை,” என்றார் அவர்.

இந்தியாவின் அனுமதியின்றி டெல்லிக்கு தனது தூதரை நியமிப்பது தாலிபன் அரசுக்கு எளிதானது அல்ல.

”இந்தியா தாலிபன்களை அங்கீகரிக்கும் வரை அவர்கள் தங்கள் தூதரை நியமிக்க முடியாது,” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஐரோப்பிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் குல்ஷன் சச்தேவா தெரிவித்தார்.

“இந்தியா ஒப்புக்கொண்டால், அது இந்தியாவின் கொள்கையில் ஒரு மாற்றமாக இருக்கும். இதை தாலிபன் அரசுக்கு இந்தியா அளித்த அங்கீகாரம் என்று சொல்லமுடியாது. ஆனால் இது செயல்பாட்டு உறவில் புதிய இணைப்பாக இருக்கும்,” என்றார் அவர்.

தூதரகம் மூடப்பட்டால் ஏற்படும் இழப்பு

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 100 கோடி அமெரிக்க டாலர்கள். இது இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் ஒரு சதவிகிதம் கூட இல்லை.

தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு இது மேலும் குறைந்துள்ளது. எனவே வர்த்தகக் கண்ணோட்டத்தில் இந்தியாவுக்கு பெரிய இழப்பு ஏதும் இருக்காது.

ஆனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் வாழ்கின்றனர். தூதரகத்தை மூடுவது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

“பல ஆப்கானிஸ்தான் குடிமக்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்று வருகிறார்கள். பாஸ்போர்ட், விசா அல்லது பிற ஆவணங்களை சான்றளிக்க தூதரகத்திற்குச் செல்கிறார்கள். அதை மூடினால் அவர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இவர்கள்தான் தூதரகத்திற்கு வருமானத்தின் ஆதாரம்” என்கிறார் பேராசிரியர் குல்ஷன் சச்தேவா.

தூதரகத்தை மூடுவது மனிதாபிமான நெருக்கடியை அதிகரிப்பதோடு கூடவே இந்தியாவுக்கு பல வழிகளில் சிரமங்களைத் தரக் கூடும்.

சில மாதங்களில் ஆப்கானிஸ்தானும் சீனாவும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிவிட்டதாக பேராசிரியர் முகமது சொஹ்ராப் கூறுகிறார். சீனா அங்கு பெரிய அளவில் முதலீடு செய்வதுடன், இரான் போன்ற நாடுகளுடனான உறவை வலுப்படுத்த மத்தியஸ்தமும் செய்கிறது.

“தாலிபன்களுடன் சீனாவின் வளர்ந்து வரும் நட்பு, அதை இந்தியாவிடமிருந்து தூரமாக்கும். இதனுடன் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் இந்தியாவின் தற்போதைய திட்டங்களின் வேகமும் குறையும். மேலும் தூதரகம் மூலமான அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு வழிமுறைகளும் மூடப்படும். இதற்கு பெயரவில் மதிப்பு உள்ளது. இது இந்தியாவுக்கு இழப்பை ஏற்படுத்தும்,” என்று அவர் தெரிவித்தார்.

முந்தைய தாலிபனுக்கும் இப்போது இருக்கும் தாலிபனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்கிறார் பேராசிரியர் சொஹ்ராப். முந்தைய தாலிபன்கள் அங்கீகாரத்தை விரும்பினர். ஆனால் தற்போதைய தாலிபன் அங்கீகாரத்தைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் உலகமே மெல்லமெல்ல அதை நோக்கி நகர்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)