You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: மனித புதைகுழியை விசாரித்த தமிழ் நீதிபதி உயிர் பயத்தில் நாட்டைவிட்டு வெளியேறினாரா?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் காரணமாக தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த கடிதம் தொடர்பில் பிபிசி தமிழ், பல்வேறு தரப்புகளை தொடர்புக் கொண்டு வினவியது.
எனினும், நீதிபதி ரீ.சரவணராஜா தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையினால், குறித்த கடிதம் தொடர்பான தகவலை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவிக்கின்றனர்.
தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, நீதிபதி ரீ.சரவணராஜா, கடந்த 23 ஆம் தேதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தையே இவ்வாறு நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நீதி அமைச்சரின் பதில்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா ராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பிபிசிக்கு தெரிவித்தார்.
நீதிபதி ரீ.சரவணராஜாவின் ராஜினாமா கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதா?
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில், போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கருத்து தெரிவித்தார்.
அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிய பாதுகாப்பு, அவருக்கும் வழங்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
''நீதிபதியை தொடர்பு கொள்ள முடியவில்லை"
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
''அவரது தொலைபேசி செயலிழந்துள்ளது. தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முயற்சித்தோம். முடியவில்லை. எங்கே போயுள்ளார் என்பதையும் தேடிக்கொள்ள முடியவில்லை" என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
நீதிபதி ரீ.சரவணராஜா, தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் உள்நாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், நீதிபதி ரீ.சரவணராஜா எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது தொடர்பான தகவல்களை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகளில் முன்னிலையாகும் வழக்கறிஞர்களையும் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு வினவியது.
''நீதிபதி பதவி விலகியமை தொடர்பில் அறிந்தோம். ஆனால், எங்குள்ளார் என தெரியவில்லை." என பதிலளித்தார்கள்.
'இது பௌத்த நாடு என்பதை நீதிபதிக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும்'
தொல்பொருள் திணைக்கள விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு நீதிபதிக்கு தெளிவு அல்லது அதிகாரம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கடந்த ஜுலை மாதம் 7ம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
''குருந்தூர்மலை விகாரையின் தூபியை புனரமைத்து, புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்வதற்கு சென்ற மஹா நாயக்க தேரர்கள் (பிக்குகள்) மற்றும் பக்தர்களை, தமிழ் அரசியல் குண்டர்கள் விரட்டியடித்துள்ளனர். பூவொன்றை கூட வைத்து வழிபட அனுமதிக்கவில்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
''அந்த பிரதேசத்திலுள்ள நீதிபதியின் தீர்மானம் தொடர்பில் எம்மால் திருப்தியடைய முடியாது. தொல்பொருள் திணைக்களத்தின் நிபுணர்களே இந்த தூபியை புனரமைக்கின்றனர்.
அதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் தொடர்பில் கதைப்பதற்கு நீதிபதிக்கு அதிகாரம் மற்றும் தெளிவு கிடையாது. அதிலுள்ள பலகை குறித்து கேள்வி எழுப்புவதற்கு நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது. தொல்பொருள் துறை அதிகாரிகளே அதனை செய்வார்கள்" எனவும் அவர் கூறினார்.
''சில தினங்களுக்கு முன்னர் இந்த தமிழ் இனத்தைச் சேர்ந்த நீதிபதி, குருந்தூர்மலை விகாரைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். நானும் அந்த இடத்தில் இருந்தேன். அந்த இடத்தில் அவர்கள் கலந்துரையாடல்களை நடத்தும் போது, அங்கு புனித யாத்திரை சென்றிருந்த விகாராதிபதி உள்ளிட்ட தேரர்களை இடைநிறுத்தினார்கள். கண்காணிப்பு விஜயத்தின் போது, புனித யாத்திரை வந்ததாக தெரிவித்து, அவர் தேரர்களுக்கு எதிராக செயற்பட்டார்."
''இது பௌத்த நாடு என்பதை நீதிபதிக்கு நாம் நினைவூட்ட வேண்டும்"
''நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில், எனக்கும் கருத்து தெரிவித்த நீதிபதி அனுமதி வழங்கவில்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் அன்றைய தினம் தெரிவித்தார்.
''நீதிபதி ரீ.சரவணராஜா விசாரணை செய்த வழக்குகள்"
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில காலமாகவே பல்வேறு பிரச்னைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக குருந்தூர்மலை விவகாரம் மற்றும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் என பல்வேறு சர்ச்சையான வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக குருந்தூர்மலை பகுதியில் காணப்படும் பௌத்த விகாரை மற்றும் சிவன் ஆலயம் தொடர்பில் எழுந்த பிரச்னை குறித்து நீதிபதி ரீ.சரவணராஜா விசாரணை செய்து வந்தார்.
அத்துடன், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் நீதிபதி ரீ.சரவணராஜா விசாரணை செய்து வந்துள்ளார்.
இவ்வாறான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற இந்த சூழ்நிலையிலேயே, தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து, நீதிபதி ரீ.சரவணராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)