புதினுடன் சந்திப்பு முடிந்ததும் கிம் ஜாங் உன் இருக்கையை வட கொரிய குழு சுத்தம் செய்தது ஏன்?

புதின் - கிம் சந்திப்பு, சீனா, வட கொரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவில் எஸ்சிஓ கூட்டத்திற்கு முன்பு வட கொரியாவின் உயர் தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சந்திப்பு
    • எழுதியவர், பாரத் ஷர்மா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிக அளவு விவாதிக்கப்படும் ஒரு உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஆகும்.

இந்த இரு தலைவர்களின் சந்திப்பில் நடந்த உரையாடல்கள் விவாதிக்கப்படுகிறது, ஆனால் அதைவிட அதிக கவனம் ஈர்த்திருப்பது இந்த சந்திப்பு முடிந்த பிறகு நடந்த ஒரு நிகழ்வு. சந்திப்பு முடிந்து இரு தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டதும், வட கொரியாவின் ஊழியர்கள் கிம் ஜாங் உன் உட்கார்ந்திருந்த இருக்கையின் அருகே வந்தனர்.

அவர்கள் கையில் துணி இருந்தது, அவர்களின் நோக்கம் - கிம் ஜாங் உன் தொட்ட ஒவ்வொரு பொருளையும் கவனமாக சுத்தம் செய்வதுதான். அவர் உட்கார்ந்திருந்த இருக்கை மிகவும் கவனமாக சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் ஏன்?

இது வெளிநாட்டு அல்லது எதிரி நாடுகளின் உளவாளிகளின் திட்டங்களை தோல்வியடையச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் வட கொரிய தலைவருடைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று நிபுணர்கள் கூறுவதாக ராய்ட்டர்ஸ் முகமையின் செய்தி கூறுகிறது.

இருப்பினும், கிம் ஜாங் உன் மற்றும் விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இடையே நட்பு உறவு உள்ளது. வட கொரியாவுடன் நல்லுறவு பேணும் வெகு சில நாடுகளில் ஒன்றான சீனாவில் இது நடைபெற்றது.

கிரெம்ளின் செய்தியாளர் அலெக்ஸாண்டர் யுனாஷேவ், வட கொரியாவின் இரண்டு ஊழியர்கள் கிம் ஜாங் உன் மற்றும் புதினை வரவேற்கும் அறையை சுத்தம் செய்யும் காணொளியை டெலிகிராமில் பகிர்ந்திருக்கிறார். அவர் உட்கார்ந்திருந்த இருக்கையின் சாயும் பகுதி மற்றும் கைகளை வைக்கும் பகுதியும் சுத்தம் செய்யப்பட்டது.

கிம் ஜாங் உன் இருக்கை அருகில் வைக்கப்பட்ட மேசை சுத்தம் செய்யப்பட்டது. அந்த மேசையில் வைக்கப்பட்ட கண்ணாடி அங்கிருந்து அகற்றப்பட்டது.

"சந்திப்பு முடிந்தவுடன், வட கொரிய தலைவருடன் வந்த ஊழியர்கள் கிம் ஜாங் உன் அங்கு இருந்ததற்கான அறிகுறிகள் அனைத்தையும் மிகவும் கவனமாக அழித்துவிட்டனர்," என அந்த செய்தியாளர் தெரிவித்தார்.

கிம் ஜாங் உன் சிறப்பு ரயிலில் கழிப்பறையும் வந்ததா?

புதின் - கிம் சந்திப்பு, சீனா, வட கொரியா

பட மூலாதாரம், Disney via Getty Images

படக்குறிப்பு, கிம் ஜாங் உன்னின் சிறப்பு ரயிலில் அவரது கழிப்பறையும் கொண்டு வரப்பட்டது

கிம் ஜாங் உன் தனது முந்தைய வெளிநாட்டு பயணங்களைப் போலவே இந்த முறையும் பச்சை ரயிலில் அவரது சிறப்பு கழிப்பறையை பேக் செய்து சீனாவுக்கு கொண்டு வந்ததாக தென்கொரிய மற்றும் ஜப்பான் உளவு நிறுவனங்கள் கூறியதாக ஜப்பானின் நிக்கெய் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஸ்டிம்சன் மையத்தில் வட கொரிய தலைவர்களின் நிபுணர் மைக்கல் மேடன், கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் ஆட்சியில் இருந்தே இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் வட கொரியாவின் நிலையான நடவடிக்கையாக இருப்பதாக கூறினார்.

"இந்த சிறப்பு கழிவறைகள், மலம், குப்பைகள் மற்றும் புகையிலை முனைகளை வைக்கும் குப்பை பைகள் போன்றவற்றின் மாதிரிகளை வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் எடுத்து பரிசோதனை செய்ய முடியாதபடி பாதுகாக்கப்படுகின்றன. இவை அனைத்திலிருந்தும் கிம் ஜாங் உன்னின் மருத்துவ நிலை பற்றிய சில தகவல்கள் கிடைக்கலாம். இதில் முடி அல்லது தோலின் சிறு பகுதிகளும் அடங்கும்," என அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

வட கொரியா தனது தலைவர்களுடன் தொடர்புடைய எந்த தகவலையும் வெளியிட விரும்பாததற்கான காரணம் பற்றிய கேள்விக்கு, வட கொரியா மிகவும் ரகசியமான நாடு என்பதால் தன்னைப் பற்றியும் மற்றும் தனது உயரிய தலைவரைப் பற்றியும் எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை என டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கொரிய மொழி மற்றும் ஆய்வுகளில் பேராசிரியராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற வைஜயந்தி ராகவன் கூறினார்.

" வட கொரியாவின் மிகப்பெரிய தலைவருடன் தொடர்புடைய தகவல்கள் அவர்களுக்கு மிகவும் முக்கியம். அவரது உணவு முதல் கழிவுகள் வரை யாரிடமும் கிடைக்காமல் பாதுகாக்க விரும்புகின்றனர். கிம் ஜாங் உன் நடத்தும் அரசியல் மற்றும் அவரது நாட்டின் கொள்கைகள் காரணமாக, நாட்டிற்குள் மற்றும் வெளியே இருந்து சில அபாயங்கள் ஏற்படும் பயம் உள்ளது. எனவேதான் அவர் மற்ற நாடுகளுக்கும் தனது சொந்த சிறப்பு ரயிலில் செல்கிறார்," என வைஜயந்தி பிபிசியிடம் கூறினார்.

டி.என்.ஏ பற்றிய விவாதம் ஏன்?

புதின் - கிம் சந்திப்பு, சீனா, வட கொரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டி.என்.ஏ ஒரு மரபணு குறியீடு ஆகும், இது எந்தவொரு உயிரினத்திற்கும் தனிப்பட்ட அடையாளத்தை அளிக்கிறது.

இப்போது கிம் ஜாங் உன்னின் இருக்கையை சுத்தம் செய்வது தொடர்பான கேள்விக்கு திரும்புவோம். அவரது ஊழியர்கள் உண்மையில் எதை சுத்தம் செய்தார்கள், ஏன்? ஊடக செய்திகள் இது கிம் ஜாங் உன்னின் டி.என்.ஏ மாதிரி அங்கிருந்து எடுக்கப்படுவதை தடுப்பதற்காக செய்யப்பட்டதாக கூறுகின்றன. இந்த பதிலிலிருந்து மற்றொரு கேள்வி எழுகிறது - டி.என்.ஏ என்றால் என்ன மற்றும் இது ஏன் இவ்வளவு முக்கியமானது?

டி.என்.ஏ-யின் முழு பெயர் டீ ஆக்ஸி ரைபோ நியூக்ளிக் அமிலம் (deoxyribonucleic acid). இது ஒரு மரபணு குறியீடு (genetic code) ஆகும், இது எந்தவொரு உயிரினத்திற்கும் தனிப்பட்ட அடையாளத்தை வழங்கும் மரபணுக்களை உருவாக்குகிறது. இது இரண்டு நீண்ட நூல்களால் ஆன சுழல் போல் தோன்றும் ஒரு வேதிப்பொருள்.

இது இரட்டை சுருள் (double-helix) கட்டமைப்பைக் கொண்டது. இதில் மரபணு குறியீடு (genetic code) என்று அழைக்கப்படும் மரபணு தகவல்கள் (genetic information) உள்ளன. கருவுறுதல் (fertilization) நிகழும் போது, இந்த டி.என்.ஏ பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது.

வல்லுநர்கள் டி.என்.ஏவை "வாழ்க்கைக்கான வரைபடம்" (blueprint of life) என்றும் அழைக்கின்றனர். ஒவ்வொரு மனிதனின் விரல் ரேகைகளும் வேறுபடுவது போலவே, ஒவ்வொரு மனிதனின் டி.என்.ஏயும் வேறுபடுகிறது. ஒவ்வொரு நபரிடமும் மூன்று பில்லியனுக்கும் மேற்பட்ட வெவ்வேறு டி.என்.ஏ அடிப்படை ஜோடிகள் (DNA base pairs) உள்ளன. ஒரே தோற்றம் கொண்ட இரட்டையர் (identical twins) தவிர மற்ற ஒவ்வொருவரின் டி.என்.ஏவும் வித்தியாசமானது. இது போன்ற விஷயங்களில் ஒருவரது டி.என்.ஏவும் அவரது இரட்டையரின் டி.என்.ஏவும் ஒரே மாதிரியாக இருக்கும்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி பயிற்றுவிக்கும் உதவி பேராசிரியர் டாக்டர் ஹரேன் ராம் சியாரி, டி.என்.ஏ ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சில பண்புகள் அல்லது அம்சங்களை (characteristics or features) கடத்துகிறது என்று கூறுகிறார்.

எளிய வார்த்தைகளில் சொல்வதானால் டி.என்.ஏ எங்கள் உடலுக்கு ஒரு அறிவுறுத்தல் கையேடு (instruction manual) போலவும், உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அவசியமானதாகவும் உள்ளது. இது நமது கண்களின் நிறம், முடியின் நிறம் போன்றவற்றை தீர்மானிக்கிறது.

நமது உடல் லட்சக்கணக்கான செல்களால் ஆனது மற்றும் இந்த டி.என்.ஏ ஒவ்வொரு செல்லின் உட்கருவில் (nucleus) உள்ளது. இது A, T, C, G போன்ற நான்கு குறியீடுகளால் (characters) ஆனது மற்றும் அவை அனைத்தும் ஜோடிகளை உருவாக்குகின்றன, எடுத்துக்காட்டாக AT அல்லது GC ஜோடி. இவை அடிப்படை ஜோடிகள் (base pairs) என்று அழைக்கப்படுகின்றன.

புதின் - கிம் சந்திப்பு, சீனா, வட கொரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு கூட்டத்தின்போது கிம் ஜாங் உன்

வடகொரிய தலைவரின் டி.என்.ஏவை பாதுகாக்கும் வகையில் இருக்கை மற்றும் பிற பொருட்கள் சுத்தம் செய்யப்படுகின்றன என்றால், அங்கு டி.என்.ஏ எங்கே இருந்தது என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில், ஒரு நபரின் டி.என்.ஏவை முடி வேர்கள் (hair follicles), தோல் செல்கள் (skin cells), எச்சில் (saliva) போன்றவற்றிலிருந்து பெற முடியும். முடி வேர்கள் என்பது முடியின் அடிப்பகுதியில் உள்ள பகுதியாகும், அதாவது வேரைப் போல உள்ளது.

முடி விழும்போது, அதுவும் சேர்ந்து தலையில் இருந்து நீங்கிவிடுகிறது.

"உங்கள் முடியின் எந்த பகுதியும் இருக்கையின் மீது விட்டுவிட்டால், அதிலிருந்து டி.என்.ஏவை பெற முடியும். இதைத் தவிர, எங்கள் உடலின் தோலின் சில மிக நுண்ணிய துகள்கள் விழுந்தால், அவற்றிலிருந்தும் டி.என்.ஏவை அணுக முடியும். இந்த இரண்டு விஷயங்களைத் தவிர, ஒரு நபர் பேசும்போது பேச்சின் போது எச்சிலின் சில துளிகள் வெளியே விழுகின்றன. இவற்றிலிருந்தும் டி.என்.ஏவை பெற முயற்சி செய்யலாம்." டாக்டர் ஹரேன் ராம் சியாரி விளக்குகிறார்.

டி.என்.ஏவை பாதுகாக்க போராட்டம் ஏன்?

புதின் - கிம் சந்திப்பு, சீனா, வட கொரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் ஜாங் உன் மற்றும் விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதாகத் தோன்றுகிறது.

இதற்கு பதிலளித்த மருத்துவர் சியாரி, "யாராவது ஒரு நபரின் டி.என்.ஏவை பெற்றிருந்தால், அந்த நபருக்கு மரபணு நோய் உள்ளதா என்பதை கண்டறிய முடியும். குடும்பத்தில் ஏதேனும் நோய் உள்ளது மற்றும் அது தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது என்றால், அதுவும் கண்டறியப்படலாம்" என்று கூறினார்.

"இதைத் தவிர, உடலில் எந்தவொரு மருந்து அல்லது நோய் எதிர்ப்பு மருந்துக்கு ஒவ்வாமை உள்ளதா என்பது பற்றிய தகவலும் பெற முடியும். டி.என்.ஏவிலிருந்து பலவற்றை அறிய முடியும், ஆனால் மரபணு நோய்கள் முதலில் கண்டறியப்படும். டி.என்.ஏவைப் பயன்படுத்தி குடும்பம் பற்றிய தகவலை அறிய முடியும், குடும்பத்தில் தலைமுறைதலைமுறையாக வரும் மரபணு நோய்கள், குறைபாடுகள் அல்லது பிற மரபணு குறைபாடுகள் பற்றிய தகவல்களை பெற முடியும்," என டாக்டர் சியாரி கூறினார்.

புதின் - கிம் சந்திப்பு, சீனா, வட கொரியா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டி.என்.ஏ ஒரு நபரின் உடல் நிலை எப்படி உள்ளது என்பதையும் கூற முடியுமா? இதற்கு பதிலளித்த அவர், "தற்போது நபர் ஆரோக்கியமாக உள்ளாரா அல்லது நோயுற்றவரா என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. டி.என்.ஏக்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எனவே உடல் நிலையை துல்லியமாக கண்டறிய முடியாது. ஆனால் நோய்களை உறுதியாக கண்டறிய முடியும்."

கிம் ஜாங் உன் பயன்படுத்துவதற்கு பின் மட்டுமல்லாமல் பயன்படுத்துவதற்கு முன்பும் அனைத்து பொருட்களையும் அவரது குழு மிகவும் கவனமாக சுத்தம் செய்கிறது.

2018-ல் தென்கொரிய அதிபரை சந்தித்த போதாகட்டும், 2023-ல் ரஷ்ய அதிபரை சந்தித்த போதாகட்டும் அவரது இருக்கையை அவரது குழு ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்ததையும் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு ஸ்கேன் செய்ததையும் காண முடிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு