பி.எஃப். கணக்கில் இருந்து இனி முழு பணத்தையும் எடுக்கலாம் - புதிய விதிகள் முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) பணத்தை எடுப்பதற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். புதிய விதிகளின்படி, உறுப்பினர்கள் தங்களுக்கு தேவைப்படும்போது பணத்தை எடுக்க முடியும்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையிலான மத்திய அறங்காவலர் குழுவினர் (CBT), இந்த புதிய விதிகளை வகுத்துள்ளனர்.
இந்த புதிய விதிமுறைகளின்படி, உறுப்பினர்கள் தங்களுடைய மொத்த பிஎஃப் தொகையையும் எடுக்க முடியும், இருப்பினும் குறைந்தபட்ச வைப்புத் தொகை (minimum balance) இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தக்கவைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு 13 வெவ்வேறு விதிகள் தொகுக்கப்பட்டுள்ளன, அவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
(மருத்துவ தேவை, கல்வி, திருமணம்) உள்ளிட்ட அடிப்படை தேவைகள், வீட்டு வசதி மற்றும் சிறப்பு சூழ்நிலைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

பட மூலாதாரம், @ShobhaBJP
முழு பணத்தையும் எடுக்கலாமா?
புதிய விதிகளின்படி, இபிஎஃப் உறுப்பினர்கள் அவர்களின் வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள முழு பணத்தையும் (100%) எடுக்க முடியும், தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பையும் சேர்த்து முழுவதுமாக எடுக்கலாம்.
எனினும், பணம் எடுப்பதற்கு 25% குறைந்தபட்ச வைப்புத்தொகை (minimum balance) தேவை. அதாவது, உங்கள் கணக்கில் ரூ. 4 லட்சம் இருந்தால், அதில் 25% தொகையான ரூ. 1 லட்சத்தை விட்டுவிட்டு மீதமுள்ள தொகையை எடுக்க முடியும்.
ஊழியர்கள் தங்கள் வைப்புத்தொகைக்கு 8.25% விகிதத்தில் கூட்டு வட்டியை (compound interest) அனுபவிக்க அனுமதிப்பதே இதன் நோக்கம். இதன்மூலம், மீதமுள்ள பணம் வருங்காலம் அல்லது ஓய்வுக்குப் பிந்தைய தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.
EPF 3.0 எனும் இந்த புதிய விதிகளின்படி, உங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு காரணத்திற்காகவும் பணம் எடுப்பதற்கான குறைந்தபட்ச சேவை வரம்பு 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இப்போது நீங்கள் எந்த காரணத்துக்காக உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினாலும், நீங்கள் அந்த குறிப்பிட்ட வேலையில் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும் அல்லது உங்களின் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும்.

பட மூலாதாரம், @ShobhaBJP
எத்தனை முறை எடுக்கலாம்?
'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி' என்பது அதன் பெயருக்கேற்ப, உறுப்பினரின் வருங்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கானது.
அதாவது ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் மிக முக்கியமான விஷயங்களுக்காக, பிஎஃப் பணம் எடுக்கப்படுகிறது.
இதில், திருமணம், குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல் அல்லது மருத்துவ சிகிச்சை ஆகியவை அடங்கும்.
ஊழியர்கள் இப்போது கல்வி தேவைக்காக 10 முறை வரையிலும் திருமணத்திற்காக 5 முறை வரையிலும் பணத்தை எடுக்க முடியும்.
முன்னதாக, கல்வி மற்றும் திருமணத்திற்காக மூன்று முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும். அதாவது, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், இப்போது தங்களின் தேவைக்கு ஏற்ப பல சந்தர்ப்பங்களில் பணத்தை எடுக்க முடியும்.
மேலும், பணத்தை எடுக்கும் செயல்முறை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது, அதாவது பகுதியளவு பணம் எடுப்பதற்கு எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
இத்தகைய ஏற்பாடு, பணத்தை எடுக்க கோரும் உறுப்பினர்களுக்கு அதை வழங்கும் செயல்முறை எளிதாகும் என்றும், தங்கள் சொந்தக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க விரும்புவோருக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

காரணம் வேண்டாம்
முன்னதாக, பணத்தை எடுக்கும்போது பேரிடர், தொற்றுநோய், சிறப்பு காரணங்கள் போன்ற காரணங்கள் கொடுக்கப்படும்போது அந்த கோரிக்கை அவ்வப்போது நிராகரிக்கப்படும்.
இப்போது இந்த பிரச்னை இல்லை. உறுப்பினர்களால் சில சூழல்களில் எவ்வித காரணத்தையும் குறிப்பிடாமல் பணத்தை எடுக்க முடியும்.

பட மூலாதாரம், Getty Images
அரசு அல்லது தனியார் துறையில் பணியாற்றும் யாராக இருந்தாலும் அவருக்கு பிஎஃப் கணக்கு இருக்கும்.
அதில், ஊழியரை தவிர்த்து, நிறுவனமும் தன்னுடைய பங்கை அக்கணக்கில் செலுத்தும்.
இபிஎஃப்ஓ மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. எந்தவொரு தொழிலாளருடைய அடிப்படை சம்பளத்திலும் 12% பணம் இந்த கணக்கில் செலுத்தப்படும், நிறுவனத்தின் சார்பாக அதே அளவு (12%) பணம் செலுத்தப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












