கத்தாரை பாகிஸ்தானுடன் ஒப்பிடும் நெதன்யாகு - இதற்கு எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், PMO/ISRAEL
கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியாயப்படுத்தி பேசியுள்ளார். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட 9/11 தாக்குதலின் 24 வது ஆண்டு நிறைவு தினத்தில் அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில் இந்த தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இருந்த அந்த வீடியோ செய்தியில், நெதன்யாகு பாகிஸ்தான் மற்றும் ஒசாமா பின்லேடனையும் குறிப்பிட்டார்.
9/11 தாக்குதலை தொடர்ந்து அல்கொய்தாவை துரத்திச் சென்றபோது பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனையும் அமெரிக்கா கொன்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தோஹா தாக்குதலை மேற்கோள் காட்டிய அவர், கத்தார் உட்பட பிற நாடுகளை தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார், இல்லையெனில் இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே 2 அன்று பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் அமெரிக்க கடற்படையினரால் கொல்லப்பட்டார்.
தோஹா தாக்குதல் தொடர்பாக, இஸ்ரேலிய ராணுவம் "அக்டோபர் 7 -ம் தேதி நடந்த கொடூரமான படுகொலைக்கு நேரடியாக பொறுப்பானவர்களை" குறிவைத்ததாக கூறியது.
தோஹாவில் உள்ள அதன் பேச்சுவார்த்தை தூதுக்குழுவின் உறுப்பினர்கள் குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் கூறினாலும், அவர்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக தப்பினர்.
இந்த தாக்குதலில் ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
நெதன்யாகு என்ன கூறினார்?

பட மூலாதாரம், AFP via Getty Images
நெதன்யாகுவின் வீடியோ செய்தியை இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டது.
அந்த வீடியோவில் , "செப்டம்பர் 11 அன்று, இஸ்லாமிய பயங்கரவாதிகள் அமெரிக்க மண்ணில் அது வரை இல்லாத மிக மோசமான அட்டூழியத்தை செய்தனர். செப்டம்பர் 11 போன்ற ஒன்று எங்களுக்கும் நடந்தது. அக்டோபர் 7 -ம் தேதியை நாங்கள் நினைவில் கொள்வோம். அன்றைய தினம், இஸ்லாமிய பயங்கரவாதிகள் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை முன்னெடுத்தனர்.
9/11க்குப் பிறகு அமெரிக்கா என்ன செய்தது? கொடூரமான குற்றங்களுக்கு பொறுப்பான பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை வேட்டையாடுவதாக அது உறுதியளித்தது. அரசாங்கங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, " என்று அவர் கூறினார்.
தோஹா தாக்குதலை நியாயப்படுத்திய நெதன்யாகு, "நாங்கள் நேற்று அதையே தான் செய்தோம். அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு காரணமாக இருந்த பயங்கரவாதிகளை நாங்கள் பின்தொடர்ந்தோம். அதை நாங்கள் கத்தாரில் செய்தோம்.
கத்தார் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது, ஹமாஸுக்கு நிதியளிக்கிறது, பயங்கரவாதத் தலைவர்களுக்கு ஆடம்பரமான அரண்மனைகளை வழங்குகிறது, கத்தார் அவர்களுக்கு எல்லாவற்றையும் வழங்குகிறது" என்று பேசினார்.
"ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாதிகளைப் பின்தொடர்ந்து, பின்னர் பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனைக் கொன்றது, அமெரிக்கா செய்ததை நாங்கள் செய்தோம்" என்று நெதன்யாகு கூறினார்.
அவர் கூறுகையில், "இப்போது உலகின் பல நாடுகள் இஸ்ரேலை கண்டிக்கின்றன. அவர்கள் வெட்கப்பட வேண்டும். அமெரிக்கா ஒசாமா பின்லேடனை கொன்ற பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்? ' ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன நடந்தது?' என்று அவர்கள் கேட்டார்களா?
ஹமாஸ் தலைவர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கத்தார் மற்றும் பிற நாடுகளை நெதன்யாகு எச்சரித்தார். 'நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால், நாங்கள் செய்வோம்.' என்று நெதன்யாகு பேசினார்.
கத்தாரின் பதில் என்ன?

தோஹா தாக்குதலை அல்-கொய்தாவுடன் ஒப்பிட்டு நெதன்யாகு பேசியதை கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
"இது இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, எதிர்காலத்தில் இறையாண்மையை மீறுவதை நியாயப்படுத்தும் வெட்கக்கேடான முயற்சியும் கூட" என்று அமைச்சகம் கூறியது.
ஹமாஸ் உறுப்பினர்களுக்கு விருந்தளிப்பது கத்தாரின் மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்பதை நெதன்யாகு முழுமையாக அறிந்திருந்தார் என்றும், இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கையால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், "ஹமாஸ் தூதுக்குழுவுக்கு கத்தார் ரகசியமாக அடைக்கலம் அளித்தது என்ற நெதன்யாகுவின் குற்றச்சாட்டு, முழு உலகத்தாலும் கண்டிக்கப்பட்ட ஒரு குற்றத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்." என்றும் கூறியது.
கத்தார் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகள் நடந்தாலும், பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான நடுநிலையான சர்வதேச பங்காளியாக தொடர்ந்து செயல்படும் என்று கூறியுள்ளது.
கத்தார் தனது இறையாண்மை மற்றும் பிராந்தியத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறியது.

'கத்தார் பாகிஸ்தான் அல்ல, இஸ்ரேல் அமெரிக்கா அல்ல'
இஸ்ரேலிய பிரதமர் தனது அறிக்கையில் இரண்டு முறை பாகிஸ்தானைக் குறிப்பிட்ட பின்னர், சமூக ஊடகங்களில் பலரும் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.
"பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று நெதன்யாகு கத்தாரை எச்சரிக்கிறார் என்று மன்சூர் அகமது குரேஷி என்பவர் பதிவிட்டுள்ளார்.
"தோஹாவில் இஸ்ரேல் தாக்குதலை நியாயப்படுத்தும் போது அவர் இரண்டு முறை பாகிஸ்தானைக் குறிப்பிட்டது ஆச்சரியமாக இருக்கிறது" என்று அவர் எழுதியிருந்தார்.
மற்றொரு நபர் , "கத்தார் பாகிஸ்தான் அல்ல, இஸ்ரேல் அமெரிக்கா அல்ல" என்று எழுதினார்.
மற்றும் ஒருவர், "9/11 உடன் உங்களை இணைத்து, மற்றொரு நாட்டின் மீதான உங்கள் பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்த அதைப் பயன்படுத்துவது சரியல்ல." என பதிவிட்டார்.
கத்தாரில் பாகிஸ்தான் பிரதமர்

பட மூலாதாரம், X/@PakPMO
இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கத்தாருக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த வியாழக்கிழமை கத்தார் புறப்பட்டு சென்றார்.
அவரது பயணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்த தகவல்களின் படி, "பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு உயர்மட்ட தூதுக்குழுவுடன் இஸ்லாமாபாத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "தோஹா மீதான இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களை அடுத்து கத்தாருடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக அவரது பயணம் அமைந்துள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












