தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் 6 பொருட்களை கண்டுபிடித்த பூர்வகுடி அமெரிக்கர்கள்

சன்கிளாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்டிக் பிரதேசத்தில் வாழ்ந்த இன்யூட் மக்களால் பனிக்காலத்தில் ஒளியை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட சன்கிளாஸ்

அமெரிக்காவில் முதன்முதலாக மக்கள் குடியேறி சுமார் 14,000 ஆண்டுகள் ஆகியுள்ளதாக நம்பப்படுகிறது.

ஆர்க்டிக்கின் குளிரான பகுதிகளில் வசிக்கத் தொடங்கிய எஸ்கிமோக்கள் தொடங்கி, சக்திவாய்ந்த அஸ்டெக் மற்றும் இன்கா பேரரசுகள் வரை, பொறியியல், கட்டிடக்கலை மற்றும் கலைத் துறையில் முக்கியமான முன்னேற்றங்களை கொண்டுவந்துள்ளன.

பல நூற்றாண்டுகளாக கண்டுபிடிப்புகள் மெருகேற்றப்பட்டு வளர்ச்சியடைந்தன. ஆனால் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்டோபர் கொலம்பஸின் வருகையைத் தொடர்ந்து, அவற்றில் பல தொழில்நுட்பங்கள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தால் மாற்றப்பட்டன.

ஆயினும், உள்ளூர் பழங்குடி சமூகங்களால் உருவாக்கப்பட்ட சில கண்டுபிடிப்புகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.

இவை பல நூற்றாண்டுகள் கடந்து 21 ஆம் நூற்றாண்டிலும் பயணிக்கின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா மட்டுமின்றி உலகின் அனைத்து பகுதியில் வாழும் மக்களால் இவை தினசரி பயன்படுத்துபடுகின்றன.

அப்படி அமெரிக்க இந்தியர்கள் கண்டுபிடித்த சில முக்கிய கண்டுபிடிப்புகளை இங்கு தொகுத்துள்ளோம்.

1. சன்கிளாஸ்

கண்ணாடி, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனிக்காலத்தில் சூரியனின் பிரதிபலிப்பை எதிர்க்க பயன்படுத்தப்பட்ட கண்ணாடி மற்றும் அதை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்திய பெட்டி

அமெரிக்காவின் ஆர்க்டிக் பகுதியில் வசிக்கும் இன்யூட் (Innuit) பூர்வகுடி மக்கள், குறைந்த வெப்பநிலை, பயிரிட பற்றாக்குறையாக இருந்த நிலங்கள் போன்ற பிரச்னைகளைத் தவிர பனியின் தீவிரத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பனி சூழ்ந்த வெள்ளை மேற்பரப்பில் சூரியனின் பிரதிபலிப்பை எதிர்க்கும் ஒரு வகையான கண்ணாடி, இன்யூட் மக்களின் கலைபடைப்புகளில் உள்ளது. பனியுடன் கூடிய நீண்ட பருவங்களில் உயிர்வாழ உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்ணாடிகள், மரத்தாலோ அல்லது அப்பகுதியில் வாழ்ந்த மிருகங்களின் எலும்புகளாலோ செய்யப்பட்டு இருந்தன.

அதில் இருக்கும் மெல்லிய இடைவெளியின் வழியாக ஒருவர் பார்க்க முடியும். இந்த அமைப்பு அவற்றை அணிந்தவர்களின் கண்களில் ஒளி பிரதிபலிப்பின் தாக்கத்தை குறைக்க உதவியது.

நம் அன்றாட வாழ்கையில் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்க பயன்படுத்தும் சன்கிளாஸ்கள் இதிலிருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டவை.

2. வலி மாத்திரைகள்

ஆஸ்பிரின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த மருத்துவ பயன்பாடு ஆஸ்பிரின் தயாரிக்க உதவியது

இயற்கையை அடிப்படையாக கொண்ட மருந்துகளை பயன்படுத்தும் கலாசாரம் வட அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. அந்த கண்டுபிடிப்புகள் இன்றும் பல சிகிச்சைகளுக்கு அடிப்படையாக உள்ளன.

அவற்றில் ஒன்று ஜிம்சன் பாசி (Jimson weed) எனப்படும் தாவரத்தின் பயன்பாடு ஆகும். இதைக் காயங்களில் தேய்க்கும்போது மயக்கமடைய வைத்து வலியை கட்டுப்படுத்த உதவுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜிம்சன் பாசியை வைத்து ஸ்கோபொலமைன் (scopolamine) உற்பத்தி செய்யப்பட்டது.

இது ஒரு போதைப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தும் நபர் சுயநினைவை இழந்து குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டியது.

பூர்வகுடி அமெரிக்கர்கள் பயன்படுத்திய மற்றொரு தாவரத்தின் மூலமாக இன்று நமக்குத் தெரிந்த வலி மாத்திரைகள் உருவானது.

இதற்கு பயன்படுத்தும் தாவரத்தின் பெயர், பிளாக் வில்லோ. இது அமெரிக்காவில் மட்டுமே வளரும் ஒரு மரம்.

பழங்குடி மக்களால் இந்த மரத்தின் பட்டைகளிலிருந்து சாலிசைலிக் அமிலத்தின் தடயங்களை பிரித்தெடுக்க முடிந்தது.

இதன் குணப்படுத்தும் குணங்களால், எலும்பு, தசை வலியில் இருந்து தீர்வு கிடைக்க வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் வலி நிவாரணியான ஆஸ்பிரினின் மூலப்பொருள் இதை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

3. ரப்பர்

ரப்பர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூர்வகுடி மக்கள் ரப்பர் மரங்களிலிருந்து லேடெக்ஸ் என்ற பொருளை பிரித்தெடுத்து பயன்படுத்தினர்

பல நூற்றாண்டுகளாக பூர்வகுடி அமெரிக்கர்கள், குறிப்பாக மெசோஅமெரிக்காவில் மட்டுமே வளர்ந்த ஒரு சிறப்பு வகை மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட லேடெக்ஸ் எனப்படும் ஒரு பொருளை பயன்படுத்தினர்.

அமேசானில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இந்த பொருளை ‘காட்ச்சூக்’ என்று அழைத்தனர். ‘அழுகை மரம்’ என்பது அதன் பொருள்.

இந்த பொருளை பயன்படுத்தி களிமண் குடுவைகளில் நீர் கசியாமல் இருக்க பூசினர். விளையாட்டுகளில் பயன்படுத்தும் பந்துகளை இதைக் கொண்டு உருவாக்கினர். மேலும் சில பகுதிகளில் காலணியாகவும் இது பயன்படுத்தப்பட்டது.

காலப்போக்கில், ரசாயன முறையில் செயற்கையாக ரப்பர் தயாரிக்கப்பட்டது. ஆனால் பூர்வகுடி அமெரிக்கர்கள் தான் இன்று நாம் பயன்படுத்தும் ரப்பருக்கான வடிவத்தைக் கொடுத்தனர்.

4.கயாக்கிங்

கயாக்கிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக கயாக் பயன்படுத்தப்படுகிறது

அமெரிக்க கண்டத்தின் வடக்கில் வசித்த இன்யூட் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட சவால்களில் மற்றொன்று, அடிக்கடி மாறும் தட்பவெப்ப சூழலுக்கு மத்தியில் உணவைக் கண்டுபிடிப்பதாகும்.

பரந்த கடல் மட்டுமின்றி, ஏரி, ஆறுகளில் ஓடும் தண்ணீரைத் தாண்டி உணவைக் கண்டுபிடிப்பது இந்த மக்களுக்கு சற்று சவாலாக இருந்தது.

எனவே அவர்கள் நீர் நாயின் தோல் மற்றும் திமிங்கல எலும்புகளிலிருந்து ஒரு படகை உருவாக்கினர். நீரில் உந்திச் செல்ல அந்த படகில் துடுப்புகளை பயன்படுத்தி நீரின் மேற்பரப்பில் பயணித்து மீன்களை பிடித்தனர்.

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த படகு கயாக் (qayaq) என்று அழைக்கப்பட்டது. அது பின்னாளில் கயாக் (kayak) என உருமாறியது.

அதன் தனித்துவமிக்க வடிவமைப்பு மற்றும் புதுமையான கட்டுமானத்தின் காரணமாக சில கயாக் 400 ஆண்டுகளை வரை பயன்படுத்தப்பட்டன.

இன்றும், ஆர்க்டிக்கில் வாழும் இன்யூட் பூர்வகுடிகளால் கயாக்கிங் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி ஒலிம்பிக் வரை சென்ற பிரபலமான விளையாட்டாகவும் இது மாறியுள்ளது.

5. தொங்கு பாலம்

பெரு, இன்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரு நாட்டில் இன்கா மக்களால் 200 தொங்குப் பாலங்கள் உருவாக்கப்பட்டன

இன்காக்களும் அவர்களின் சக்திவாய்ந்த சாம்ராஜ்யமும் நம்மிடமிருந்து பெற்ற அதிசயங்களில் ஒன்று, சஸ்பென்ஷன் அல்லது தொங்கு பாலங்கள்.

பெருவிலுள்ள சுமார் 23,000 கிலோமீட்டர்களை உள்ளடக்கிய தஹுவாண்டின்சுய (Tahuantinsuyo) சாலையில் சுமார் 200 தொங்கு பாலங்கள் இருந்தன.

இவை இரண்டு முனைகளில் இருந்து கட்டி இழுத்துவரப்படும் கயிறுகளால் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

இத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான தடயங்கள் உலகின் பிற பகுதிகளில் இருந்தாலும், அமெரிக்க கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே இன்காக்களின் வளர்ச்சியின் அடையாளமாக இவை பார்க்கப்பட்டது.

6. புகையிலை குழாய்

புகையிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புகையிலையை புகைக்க பயன்படுத்தும் பைப்

புகையிலை மற்றும் அதன் பயன்பாடு அமெரிக்க இந்தியர்களால், குறிப்பாக கரீபியன் மற்றும் அமெரிக்க கண்டத்தின் வடக்கில் இருந்து உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

சடங்குகளின்போதும், குழுவாக அமர்ந்து இருக்கும்போதும் இந்த மூலிகையை புகைபிடிக்க ஒரு கருவியை இவர்கள் வடிவமைத்தனர்.

முதலில் இந்தக் குழாய் 'கலுமெட்' என்று அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் மூங்கில் என்பதாகும்.

இது புகையிலை சடங்குகளில் பயன்படுத்தும் கருவியாக பார்க்கப்பட்டது.

காலப்போக்கில் இது இன்று நமக்குத் தெரிந்த குழாயாக உருமாற்றம் அடைந்தது. 19, 20ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மிகவும் பிரபலமாக இருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: