ஆசிய ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அஷ்ஃபாக் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்திய மலேசியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று இந்தியாவும் மலேசியாவும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம், TWITTER/HOCKEY INDIA

முன்னதாக கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியாவில் ஹாக்கிக்கு பெயர் போன ஒடிஷாவுக்கு நிகராக சென்னையிலும் ரசிகர்களின் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. ஆட்ட இடைவேளையில் ஒலிக்கவிடப்பட்ட முஸ்தபா முஸ்தபா பாடலுக்கு ரசிகர்கள் உற்சாக நடனம் போட்டனர்.

இந்திய ஹாக்கி அணியில் ஒரே தமிழர்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி

பட மூலாதாரம், Sports Tamil Nadu

இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்கள் ரசிகர்களுக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். தொடர்ந்து இந்திய வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இறுதியாக 'நம்ம பையன்' என குறிப்பிடப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் கார்த்தி செல்வம்.

21 வயதான கார்த்தி செல்வம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். முதல்முறையாக சென்னை மண்ணில் இந்திய அணிக்காக விளையாடுகிறார். உலகத்தரம் வாய்ந்த ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக கோல்களை பதிவு செய்துள்ள கார்த்தி செல்வம் ஓர் இளம் முன்கள வீரர் ஆவார்.

பாக். முயற்சியை முறியடித்த இந்தியா

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் கோல் அடித்தது. ஆனால் பந்து பாகிஸ்தான் வீரரின் உடலில் பட்டதால் இந்தியா ரிவியூ செய்தது. கோல் இல்லை என கூறிய நடுவர், பாகிஸ்தானுக்கு பெனால்டி கார்னர் வழங்கினார். ஆனால் அதை முறியடித்தது இந்தியா

இந்திய அணி அடுத்தடுத்து கோல்

முதல் கால் பகுதியில் கடைசி நிமிடங்களில் இந்திய அணி முதல் கோலை அடித்தது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் முதல் கோலை அடித்தார். பதில் கோலை திருப்ப பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இந்திய வீரர்களின் தற்காப்பு அபாரமாக இருந்தது.

ஆட்டத்தின் பெரும்பகுதியில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் கேப்டன் ஹர்மன்பிரீத் இந்தியாவுக்கான அடுத்த கோலையும் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அத்துடன் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம், TWITTER/HOCKEY INDIA

இடைவேளையில் ஒலித்த முஸ்தபா... முஸ்தபா...

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் இடைவேளையில் மைதானத்தில் காதல் தேசம் படத்தில் இடம் பெற்ற 'முஸ்தபா... முஸ்தபா... ' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதற்கு ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று உற்சாக ஆட்டம் போட்டனர். அதேபோல், வந்தே மாதரம் பாடலும் மைதானத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டது.

இரண்டாவது பாதியிலும் இந்தியா ஆதிக்கம்

இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதன் பலனாக, இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி இந்திய வீரர் ஜக்ரத் சிங், அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் அணி தனது முதல் கோலை அடிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தது. ஆனால், இந்திய அணியின் தற்காப்பை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் இந்திய அணி நான்காவது கோலையும் அடித்தது. பாகிஸ்தான் வீரர்களால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தியது.

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம், TWITTER/HOCKEY INDIA

ஹாக்கியில் ஒடிசாவுக்கு நிகராகிறதா சென்னை?

இந்திய அணி களத்திற்குள் வந்தது முதலே மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கம் அதிர்ந்தது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் முக்கிய லீக் ஆட்டம் என்பதால், அரங்கம் முழுவதுமே ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். கைகளில் மூவர்ணக்கொடி, கன்னங்களில் மூவர்ண பெயிண்ட், மேள தாளம் என ரசிகர்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது மைதானம்.

இந்தியா.. இந்தியா.. என ரசிகர்களின் முழக்கத்திற்கு அணி வீரர்களும் கையசைக்க, அரங்கமே குலுங்கியது. இந்தியாவில் ஒடிசா மாநிலமே ஹாக்கியின் தற்போதைய கோட்டையாக திகழ்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு ஒரு சர்வதேச ஹாக்கி தொடரை நடத்துகிறது. பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட இதர மாநிலங்களில் இருந்து சென்னைக்கு ரசிகர்கள் படையெடுத்திருப்பதும் உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும் தமிழ்நாடு ஹாக்கி மீது கொண்டுள்ள பற்றுதலுக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது.

ரசிகர்களில் ஒருவரான இந்திரஜித்திடம் பேசினோம். "ரொம்ப எனர்ஜெடிக்கா இருக்கு. தமிழ்நாட்டுல முதல்முறையா இப்படி ஒரு மேட்ச் பாக்குறேன். ரொம்ப வருஷம் கழிச்சு தமிழ்நாட்டுல ஒரு ஹாக்கி மேட்ச். எக்ஸைட்டிங்காக இருக்கு" என்றார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

"இந்தியா வேற லெவல் ஆட்டம்"

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காகவே நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து நண்பர்களுடன் வந்திருக்கிறார் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் ஸ்ரீதர். "இந்த மேட்ச்ச எப்படியாவது நேர்ல பார்த்திரனும்னு நேத்து சென்னை வந்தோம். இங்க ரூம் எடுத்துருக்கோம். மேட்ச் பார்த்துட்டு நைட்டே கிளம்பிடுவோம்" என்றார். "பாகிஸ்தான் ஆரம்பத்துல நெருக்கடி கொடுத்தாங்க. இந்தியா கொஞ்சம் மெதுவாதான் ஆடுச்சு. கிடைச்ச பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்தியா பிரமாதமா ஆடுனாங்க. அதை கோலா மாத்துனதுலாதான் நாம ரிலாக்சா ஆட முடியுது" என பேசினார் ஸ்ரீதர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடியதாக கூறுகிறார்சென்னை தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் தாரண்யா.

நம்மிடம் பேசிய அவர், " மேட்ச் முழுமைக்கும் நம்ம கண்ட்ரால் தான்..நல்ல என்ஜாய் பண்ணோம். பாகிஸ்தானும் நல்லாவே ஆடுனாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் நெருக்கடி தந்தாங்க. மற்ற மேட்சில விளையாடினதை விட இந்தியாவோட நல்லாவே போராடுனாங்க" என தெரிவித்தார்.

இந்தியா அபார வெற்றி
படக்குறிப்பு, ஆட்டத்தை நேரில் பார்க்க வந்த ஸ்ரீதர்(இடது) தனது நண்பர்களுடன்

மைதானத்தின் உள்ளே போட்டி நடைபெற்ற ஆடுகளத்தின் முன்பாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) தனக்கு பக்கத்தில் உள்ள பெரிய திரையில் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிர்ந்தார். ரசிகர்களை கண்காணிக்கும்படி அவர்களை நோக்கி அமர்ந்திருந்ததால் களத்தில் நடப்பதை அவரால் அறிய முடியவில்லை. மாறாக அருகில் இருந்த பெரிய திரையில் ஆட்டத்தை அவ்வப்போது ரசித்த வண்ணம் இருந்தார்.

அவரிடம் போட்டி முடிந்த பிறகு பேசினோம்.. "டியூட்டி பார்க்க தான் வந்தோம். மேட்ச் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. இந்தியா செமையா விளையாண்டாங்க. இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்" என்றார் சிரித்தபடி.

இந்தியா அபார வெற்றி

நடப்பு தொடரில் இரு அணிகளும் எப்படி?

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா பலம்வாய்ந்த அணியாக புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. நடப்பு தொடரில் தோல்வியே கண்டிராத இந்தியா, 3 வெற்றிகளையும் 1 டிராவையும் பதிவு செய்து, 10 புள்ளிகள் வைத்திருக்கிறது.

அதே சமயம், பாகிஸ்தான் 2 போட்டிகளில் தோல்வி, 2 போட்டியில் டிரா என தடுமாறி, ஒருவழியாக சீனாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இந்தியா அரையிறுதிக்குள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் தற்போது 4வது இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. அந்த அணிகள் அதே இடத்தில் நீடித்தால் பாகிஸ்தான் தகுதிபெறும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: