ஆர்சிபி கடந்த கால தவறுகளை சரிசெய்ய என்ன மாற்றங்களை செய்துள்ளது? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
2025 ஐபிஎல் டி20 சீசனில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் முக்கியமானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி(RCB). இந்த எதிர்பார்ப்பு அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலிக்காக மட்டுமல்ல, இந்த முறையாவது ஆர்சிபி கோப்பையை வென்றுவிடாதா என்ற எதிர்பார்ப்புதான்.
ஏனென்றால், இதுவரை நடந்து முடிந்துள்ள 17 தொடர்களில் ஒருமுறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை முத்தமிடமுடியவில்லை. 2009, 2011, 2016-ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை சென்றும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இன்று தொடங்கும் 18-வது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த கால தவறுகளை சரி செய்து ஆர்சிபி அணி இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பிரமிப்பை ஏற்படுத்திய 2024 சீசன்
2024 சீசனில் லீக் சுற்றில் முதல் 8 போட்டிகளில் 7 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த ஆர்சிபி அணி, அதன்பின் பிரமிக்கத்தக்க வெற்றி பெற்று, சிஎஸ்கே அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.
ஆர்சிபி-சிஎஸ்கே இடையிலான கடைசி லீக் ஆட்டம் இறுதிப்போட்டிக்கு நிகராக உச்சக்கட்ட பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. சிஎஸ்கே அணியை நிகர ரன்ரேட்டில் முந்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதை ஆர்சிபி அணி கோப்பையை வென்றதுபோல் கொண்டாடியது.

பட மூலாதாரம், Getty Images
2025 சீசனில் புதிய கேப்டனுடன் ஆர்சிபி
2025 சீசனில் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையில் ஆர்சிபி அணி களமிறங்குகிறது. இளம் வீரர் பட்டிதார், ஜாம்பவான்கள் கோலி, டூபிளசிஸ் தலைமையில் விளையாடியவர். இன்று கோலியை இயக்கும் பொறுப்புக்கு வந்துவிட்டார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பட்டிதாருக்கு கேப்டன் அனுபவம் என்பது குறைவுதான். 2024-25-ல் சயத் முஸ்டாக் அலி தொடரில் இறுதிப்போட்டிவரை அணியை அழைத்துச் சென்ற அனுபவம் உள்ளது.
இளம் வீரர் பட்டிதாரிடம் கோப்பையை வெல்லக்கூடிய மிகப்பெரிய பொறுப்பை ஆர்சிபி அணி நிர்வாகம் வழங்கியுள்ளது. உண்மை என்னவென்றால், அணியில் விராட் கோலியைக் கடந்து கேப்டன் பொறுப்புக்கான வீரர்கள் அணியில் இல்லை என்பதுதான்.
கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் அந்த பொறுப்புக்கென அனுபவம் வாய்ந்த எந்த வீரரையும் ஆர்சிபி அணி வாங்கவில்லை. சிஎஸ்கே அணியில் கெய்க்வாட்டிடம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டாலும், கடிவாளம் தோனியிடம் இருப்பதைப் போல் பட்டிதாரை பின்னிருந்து கோலி இயக்கலாம்.
இந்த முறை ஏலத்தில் ஆர்சிபிஅணி வீரர்களின் ஆளுமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வீரர்களின் "ரோல்" மட்டுமே கவனமாகக் கொண்டு செயல்பட்டது. அதேசமயம், அனுபமில்லாத கேப்டன்ஷிப் என்பது அந்த அணிக்கு ஒரு குறையாகவே இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
கோலிக்கு டிவில்லியர்ஸ் கூறும் யோசனை
ஆர்சிபி அணியும், விராட் கோலியும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. கடந்த சில சீசன்களாகவே கோலி சிறப்பாக ஆடினாலும் அவரின் ஸ்ட்ரைக் ரேட், அவரின் அதீத நிதான ஆட்டம் டி20 போட்டிக்கு சரிவருமா என்ற கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்பிவிட்டது. கடந்த சீசனில் 15 இன்னிங்ஸ்களில் 741 ரன்களும், 2023 சீசனில் 639 ரன்களும் சேர்த்தாலும் அவரின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்துக்குள்ளானது.
ஆனால், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வு பெற்றுவிட்டால், இனிமேல் எந்தவிதமான அழுத்தமின்றி விளையாடலாம், ஸ்ட்ரைக் ரேட் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கோலியின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனம் பற்றி டிவில்லியர்ஸ் கூறுகையில் "விராட் கோலி ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாடினாலே போதுமானது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தும் அளவு விளையாட வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். தொடக்க வீரர் பில்சால்ட் அதிரடி ஆட்டக்காரர் என்பதால் கோலி ஸ்ட்ரைக்ரேட் பற்றி யோசிக்க வேண்டாம், ஸ்மார்ட்டாக ஆடி களத்தில் நின்று ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தாலே போதுமானது" எனத் தெரிவித்தார்.
ஆதலால், இந்த முறை கோலிக்கு பேட்டிங்கில் பெரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் சுமாரான ஆட்டக்காரர்கள் அணியில் இல்லை. மாறாக வலுவான நடுவரிசை, ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் கோலி தனது இருப்பை மட்டும் வெளிப்படுத்தி 'ஸ்மார்ட் ப்ளே' செய்தாலே போதுமானது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
"சிஎஸ்கே போல் ஆர்சிபி இல்லை"
ஆர்சிபி அணியில் கடந்த 17 சீசன்களில் எண்ணற்ற வெளிநாட்டு வீரர்கள், உள்நாட்டு நட்சத்திர வீரர்கள் இருந்த போதிலும் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அந்த அணி ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது 2 அல்லது 3 வீரர்கள் மீதுதான் கவனத்தைச் செலுத்துகிறது என்று விமர்சிக்கப்படுகிறது.
ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியில் இருந்தவருமான சுழற்பந்துவீச்சாளர் சதாப் ஜகாதி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் " ஐபிஎல் என்பது அணியாக சேர்ந்து விளையாடும் ஆட்டம். கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், அணி வீரர்கள் ஒருங்கிணைந்து ஆடவேண்டும். 2 அல்லது 3 வீரர்கள் நிச்சயமாக கோப்பையை வென்றுதரமுடியாது அவர்களால் உதவவும் முடியாது. சிஎஸ்கே அணியில் வலிமையான வீரர்கள் குழுவாக இருந்தனர், பல கோப்பையை வென்றதற்கு அணியாக கூட்டு முயற்சியுடன் செயல்பட்டதுதான் காரணம். அணி நிர்வாகம், ஓய்வறை சூழல் அனைத்தும் வேறுபட்டு இருந்தது. வீரர்கள் சிறந்தவர்களாக இருந்தாலும், வீரர்களுக்குள் நட்புறவு, பரஸ்பர நம்பிக்கை, கூட்டாக சேர்ந்து செயல்படுதல் இல்லை." என கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
வலுவான அணியாக ஆர்சிபி
ஆர்சிபி அணியில் நீண்ட காலம் இருந்த முகமது சிராஜ், மேக்ஸ்வெலை கழற்றிவிடப்பட்டுள்ளனர். ரூ.12.50 கோடி கொடுத்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டை அந்த அணி வாங்கியுள்ளது.
புதிய பந்திலும், டெத் ஓவரிலும் ஹேசல்வுட் அனுபவம் ஆர்சிபிக்கு பலமாக இருக்கும். அதேபோல கொல்கத்தாவிடம் இருந்து பில் சால்ட்டை ரூ.11.50 கோடி கொடுத்து வாங்கியது ஆர்சிபி. ஐசிசி டி20 பேட்டர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் பில் சால்ட் அதிரடி தொடக்க ஆட்டத்துக்கு தகுதியானவர் என்பதால் வாங்கியது.
இதுதவிர ஜிதேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கு சிஎஸ்கே, டெல்லி, லக்னெள அணியுடன் கடும் பேரத்துக்குப் பின் வாங்கியது. வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை ரூ.1 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது. புவனேஷ்வர் குமாரின் அனுபவம், புதிய பந்தில் ஸ்விங் செய்யும் திறன், யார்க்கர்கள் நிச்சயம் ஆர்சிபிக்கு கைகொடுக்கும். இதுதவிர யாஷ் தயால் டெத்ஓவரில் சிறப்பாக பந்துவீச தக்கவைக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கவனம் ஈர்க்கும் வீரர்கள்
ஆர்சிபி அணியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தல், ஜம்மு காஷ்மீர் வேகப் பந்துவீச்சாளர் ராசிக் சலாம் இருவருமே முக்கியத்துருப்புச்சீட்டுகளாக இருப்பார்கள்.
ஆர்சிபியில் நடு வரிசையில் கிளென் மேக்ஸ்வெலுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தல் கொண்டுவரப்பட்டுள்ளார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான பெத்தல் பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடக்கூடியவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் 42 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்தார். 2024ல் 16 பந்துகளில் அரைசதம் அடித்தது பெத்தலின் அதிரடி பேட்டிங்கிற்கு உதாரணம். நடுப்பகுதி பேட்டிங்கிற்கு பெத்தல் வலுவாகவும், நடுப்பகுதியில் பந்துவீசவும் சரியான நபராக இருப்பார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ராசிக் சலாம் வயதை குறைத்துக் காட்டியதால் 2 ஆண்டுகள் விளையாடத் தடைவிதிக்கப்பட்டு தற்போது மீண்டும் விளையாடி வருகிறார். இர்பான் பதான் பயிற்சியில் உருவான ராசிக் சலாம், மும்பை இந்தியன்ஸ் அணியிலும், பின்னர் கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் இடம் பெற்றார். பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்துதல், ஸ்லோ பந்துகளை வீசுதல், வேகத்தை அதிகப்படுத்துதல் மற்றும் ஸ்விங் செய்தலில் திறைமையானவர்.

பட மூலாதாரம், Getty Images
வலுவான பேட்டிங் வரிசை
ஆர்சிபி அணியில் டாப் ஆர்டர் முதல் நடுப்பகுதி வரை வலுவான பேட்டிங் வரிசை அமைந்துள்ளது மிகப்பெரிய பலம். கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வெளுத்து வாங்கிய இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ஆர்சிபி தொடக்க வீரராக இருப்பது மற்ற அணிகளுக்கு சவாலாகும். கொல்கத்தா அணிக்கு அளித்த அதே தொடக்கத்தை சால்ட் அளித்தால், ஸ்கோர் உச்சத்தை எட்டும். மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி குறித்து அதிகம் கூறத் தேவையில்லை. களத்தில் நின்றுவிட்டாலே ஆர்சிபி அணியின் ஸ்கோரையும், வெற்றியையும் உயர்த்திவிடுவார்.
- தோனி பட்டை தீட்டிய ருதுராஜ், கேப்டனாக முதல் கோப்பையை வெல்வாரா? சிஎஸ்கே பலமும் பலவீனமும்
- கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன?
- ஐபிஎல் 2025: சிஎஸ்கே ஆட்டங்கள் எப்போது? கேப்டன்கள், தொடக்க விழா, மாறும் விதிகள் உள்பட முழு விவரம்
- பாகிஸ்தானின் தோல்வி பற்றி காட்டம் தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
3வது வீரராக வரும் கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியான பேட்டர். தேவைப்படும் நேரத்தில் ஆங்கர் ரோல் எடுத்தும் பேட் செய்யக்கூடியவர். கடந்த சீசனில் பட்டிதாரின் ஆட்டம் வெகுவாகப் பாராட்டப்பட்டது. கேப்டனாக வந்துள்ளதால், இன்னும் கூடுதல் பொறுப்புடன் பட்டிதார் விளையாடுவார்.
நடுப்பகுதியில் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட், தேவ்தத் படிக்கல் அல்லது ஜிதேஷ் ஷர்மா, ஜேக்கப் பெத்தல் என வகை வகையான பேட்டர்கள் இருக்கிறார்கள். இதில் எந்த வீரரை இம்பாக்ட் ப்ளேயராக ஆர்சிபி பயன்படுத்தப் போகிறது என்பது போட்டியில்தான் தெரியவரும்.
ஆர்சிபி வீரர்கள் விவரம்
விராட் கோலி, ரஜத் பட்டிதார், யாஷ் தயால், ஜோஷ் ஹேசல்வுட், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார், லியாம் லிவிங்ஸ்டோன், ராசிக் தார், குர்னல் பாண்டியா, சூயஷ் ஷர்மா, ஜேக்கப் பெத்தல், ரோமாரியோ ஷெப்பார்ட்,டிம்டேவிட், தேவ்தத் படிக்கல், நுவான் துஷாரா, லுங்கி இங்கிடி, ஸ்வப்னில் சிங், மனோஜ் பந்தகே, ஸ்வஸ்திக் சிகாரா, அபிநந்தன் சிங், மோகித் ரதே
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












