சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியதும் ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், டிராகன், நாசா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

நாசா விஞ்ஞானியான விக்டர் குளோவர் விண்வெளி பயணத்துக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியவுடன் தனது மகளுடன் உரையாடியதை நேர்காணலாக வெளியிட்டிருந்தது நாசா இணையதளம்.

அதில், "பூமிக்குத் திரும்பியதும் நீங்கள் அனுபவித்த முதல் வாசனை என்ன?" என்று அவரிடம் மகள் கேட்பார். கடலில் விண்கலம் இறங்கியதும் தான் அனுபவித்த முதல் வாசனை 'கடலின் வாசனை' என்பார் விக்டர். "அதன் வாசமும் காற்றும் அற்புதமாக இருந்தது" என்று கூறினார்.

பூமி திரும்பியதும், தான் நல்ல உடல்நிலையிலேயே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். உடல்நலமின்மை, அசௌகரியம் போன்ற எதையும் தான் உணரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் அப்படியான அற்புதத் தருணங்கள் அமையுமா என்பது மிகப்பெரிய கேள்வியே. ஏனெனில், பூமி திரும்பும் விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் அப்படியான அனுபவத்தைப் பெரும்பாலும் தருவதில்லை.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளார். இந்திய நேரப்படி, இன்று (19/03/2025) அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.

புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இணைந்து அவர் பூமிக்கு திரும்பினார். டிராகன் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் நகரும் ஸ்டிரெச்சரில் வைத்து நாசா மீட்புக் குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கு என்ன காரணம்? விண்வெளியில் 9 மாதங்களுக்கும் மேல் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்?

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன், நாசா

பட மூலாதாரம், Getty Images

விண்வெளியில் வாழ்வது, அங்கிருந்து பூமிக்குத் திரும்புவது எவ்வளவு கடினமான, சவால்கள் நிறைந்த பயணமோ அந்த அளவுக்கு, பூமிக்குத் திரும்பிய பின்னரும் விண்வெளி வீரர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, விண்வெளியில் நீண்ட காலமாகத் தங்கி, பின் பூமி திரும்பும் விண்வெளி வீரர்களால் பெரும்பாலும் இயல்பாக நிற்கவோ, நடக்கவோகூட முடியாது.

அவ்வளவு ஏன், அவர்களால் உடனடியாகத் தங்கள் அன்பானவர்களைச் சந்திக்க வீட்டுக்குக்கூட செல்ல முடியாது. மனரீதியாகவும் அவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கக் கூடும்.

விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியவுடன் விண்வெளி வீரர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்? அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருவார்கள்? அதற்கு எவ்வளவு காலமாகும்?

உடலில் ஏற்படும் மாற்றங்கள்

விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாமல் வாழ்வார்கள். ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்கள் சூரிய உதயத்தைக் காண நேரிடும். அதாவது, சர்வதேச விண்வெளி நிலையம், ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருவதால், பூமியின் இரவு பகுதிக்குச் செல்லும்போது இரவாகவும் பகல் பகுதிக்குச் செல்லும்போது பகலாகவும் தோன்றும். இது நிச்சயமாக, அவர்களின் உடலில் சில இடையூறுகளை ஏற்படுத்தும்.

நீண்ட காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கும்போது விண்வெளி வீரர்களின் உடலில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய பல நாட்கள், வாரங்கள், ஏன் பல மாதங்கள்கூட ஆகலாம். அந்தளவுக்குக் கடுமையான உடல்நலப் பிரச்னைகளை அவர்கள் சந்தித்திருக்கக் கூடும்.

நாசா விண்வெளி வீரர்களான ஸ்காட் கெல்லி மற்றும் கிறிஸ்டினா கோச் தான், சுமார் ஓராண்டு காலம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிய முதல் அமெரிக்க வீரர்களாவர்.

இவர்களுள், ஸ்காட் கெல்லி விண்வெளியில் இருந்த காலத்தில், அவருடைய இரட்டை சகோதரரான, ஓய்வுபெற்ற விஞ்ஞானி மார்க் கெல்லியின் உடல்நிலையுடன் ஒப்பிட்டு விண்வெளியில் இருக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து 'ட்வின் ஸ்டடி' எனும் பெயரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

எலும்புச் சிதைவு முதல் கண் பார்வைக் குறைபாடு வரை

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், டிராகன், நாசா

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, ஸ்காட் கெல்லி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் விண்வெளியில் தங்கியிருந்தார்

விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் முதன்மைப் பிரச்னையாக, எலும்புச் சிதைவு உள்ளது.

ஏனெனில், விண்வெளியில் புவியீர்ப்பு விசையே இல்லாத சூழலில், மனிதர்களின் எடையைத் தாங்கவல்ல முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு பூமியில் இருப்பதுபோன்று வலுவாக இருக்க வேண்டிய தேவை இருக்காது. எனவே நாட்கள் செல்லச் செல்ல அதன் அடர்த்தி, ஒவ்வொரு மாதத்துக்கும் 1-1.5% அளவுக்கு இழக்க நேரிடும்.

அதேபோன்று, பூமியில் நாம் வேலை செய்வதற்கு ஏற்பவே தசை வலுவடையும். ஆனால், அதே அளவுக்கான உடலுழைப்பை விண்வெளியில் செய்ய முடியாதபோது, தசையிழப்பும் முக்கியப் பிரச்னையாக உள்ளது.

தசை மற்றும் எலும்பு பலவீனமாவதைத் தடுக்க, விண்வெளி வீரர்கள் இரண்டு மணிநேரம் டிரெட்மில் மற்றும் உடற்பயிற்சிக்கான சைக்கிள் மூலம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படி உடற்பயிற்சி செய்யவில்லையென்றால் என்ன நடக்கும்?

விண்வெளியில் மிதக்கும் நிலையிலேயே இருந்துவிட்டு பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களால் எழுந்து நிற்கவோ, நடக்கவோகூட முடியாது.

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், டிராகன், நாசா

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, எலும்பின் அடர்த்தி குறைவதைச் சித்தரிக்கும் படம்

உடலில் உள்ள திரவங்கள், புவியீர்ப்பு விசையின்மையால் தலைப் பகுதிக்கு மேலே சென்றுவிடுவதால், கண்ணில் அழுத்தம் ஏற்பட்டு கண் பார்வை தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

இதுதவிர, நீண்ட காலம் விண்வெளியில் தங்கும்போது உடல் எடை இழப்பு, நரம்பியல் மண்டல மாற்றம், கண் பார்வை தொடர்பான பிரச்னைகள், தோல் சம்பந்தமான பிரச்னைகளும் ஏற்படக்கூடும் என நாசா கூறுகிறது.

"விண்வெளியில் இருக்கும்போது நம் உயரம் அதிகரிக்கும். தோராயமாக ஒருவர் 150 செ.மீ. உயரம் இருந்தால்,153-154 செ.மீ ஆக அவர்களின் உயரம் அதிகரிக்கும். முதுகுத் தண்டுவடத்தின் டிஸ்க்குகள் (disc) புவியில் ஈர்ப்பு விசை காரணமாகக் கீழ்நோக்கி இழுக்கும்.

அதுவே, விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், அந்த டிஸ்க்குகள் நீண்டுவிடும். இதன் காரணமாக உயரம் அதிகரிக்கும்" என்கிறார், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், உடலில் நீரிழப்பு காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக நாசா தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

நடப்பது, நிற்பதில்கூட சிரமம்

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், டிராகன், நாசா

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, (இடமிருந்து) புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ், அலெக்சாண்டர் கோர்புனோவ், நிக் ஹேக்

பூமிக்குத் திரும்பியவுடன் விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் முதல் சவால், ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் இருந்து மீண்டும் ஈர்ப்பு விசை உள்ள பூமிக்கு ஏற்ப உடலைத் தகவமைத்துக் கொள்வதுதான். இதனால், "தலை - கண்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, கைகள் - கண்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, உடல் சமநிலையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். விண்வெளியில் எப்படி உடல் மிதந்து கொண்டிருக்குமோ, அதேபோன்று பூமியிலும் உடல் மிதப்பது போன்றுகூட விண்வெளி வீரர்கள் சிலருக்கு ஏற்படும்" என நாசா கூறுகிறது.

இவற்றோடு, செவிப்பறையில் ஏற்படும் அழுத்தம் தொடர்பான பிரச்னைகளால் நரம்புக் குழாய் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். "காது செவிப்பறை, நாம் சமநிலையுடன் நிற்பதுடன் தொடர்புடையது. இதில், பிரச்னை ஏற்பட்டால், நிற்பதில் சிரமம் இருக்கும்" என்கிறார் பாண்டியன்.

விண்வெளியில் இருந்து திரும்பியவர்கள், பூமியில் நிமிர்ந்து நிற்கும்போது ரத்த அழுத்தத்தைச் சரிவர நிர்வகிக்க முடியாததால், தலை சுற்றல், மயக்கம் போன்றவைகூட ஏற்பட வாய்ப்புண்டு.

நீண்ட விண்வெளிப் பயணத்திற்குப் பின் விண்வெளி வீரர்கள் கிட்டத்தட்ட உறுதியாக நிற்க முடியாத நிலையில், ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்லும் நிலையில்தான் இருப்பர் என விளக்குகிறார் பாண்டியன்.

என்னென்ன சிகிச்சைகள், பயிற்சிகள் வழங்கப்படும்?

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், டிராகன், நாசா

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நாசா விஞ்ஞானி பாப் ஹைன்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உடற்பயிற்சி செய்யும் காட்சி

அதுமட்டுமின்றி, அவர்கள் உடல், மனரீதியாக மீண்டு வந்து, புத்துணர்வு பெறுவதற்கான பயிற்சிகளும் சுமார் 45 நாட்கள் நாசாவின் மையத்திலேயே தங்க வைக்கப்பட்டு, வழங்கப்படும் என்கிறார் அவர்.

"ஒரு விபத்தில் இருந்து மீண்டவர்களால் உடனடியாக எப்படி இயல்பு நிலையில் எல்லா வேலைகளையும் செய்ய முடியாதோ, அப்படித்தான் அவர்களின் நிலைமையும் இருக்கும். அவர்களால் உடனடியாக நிற்கவோ, நடக்கவோ முடியாது. பெரும்பாலும் மயக்க நிலையில்தான் இருப்பார்கள்.

எனவே, நான்கு கட்டமாக அவர்களுக்குப் பல்வேறு வித பயிற்சிகள் வழங்கப்படும். வார்ம்-அப் எனப்படும் முதல்கட்ட பயிற்சிகளில் தொடங்கி, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், கார்டியோவாஸ்குலர் பயிற்சிகள் எனக் கடும் பயிற்சிகள் வழங்கப்படும். விண்வெளியில் செய்ததைப் போன்று பூமி திரும்பிய பிறகும் டிரெட்மில், சைக்கிள் மூலம் பயிற்சிகளை மேற்கொள்வார்கள்" என்கிறார் பாண்டியன்.

இவை அனைத்தையும் அவர்களால் தனியாகச் செய்ய முடியாது. அதி உயர் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றின் கண்காணிப்பின் கீழ்தான் இவற்றை மேற்கொள்வார்கள், அதற்கென நாசாவின் வழிகாட்டு நெறிமுறைகளும் உள்ளன.

எலும்பு, தசை வலுவடைவதற்கான பயிற்சிகள், மசாஜ் தெரபி, ஹைட்ரோதெரபி ஆகியவையும் வழங்கப்படும். "முழுவதுமாக குணமாகி வருவதற்கு சுமார் ஆறு மாதங்களாகும். ஏனெனில், எலும்பு இழப்பையெல்லாம் ஒரே நாளில் சரிசெய்ய முடியாது. மிக மெதுவாகத்தான் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்" எனக் கூறுகிறார் பாண்டியன்.

இருப்பினும், நாசாவின் கூற்றுப்படி எலும்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுவதுமாகச் சரிசெய்ய முடியாமல் போகலாம். இருந்தாலும் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் இல்லை என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

"உணவுகளையும் வழக்கம்போல் எடுத்துக்கொள்ள முடியாது. காய்கறிகள், பழங்கள் என சரிவிகித உணவு, மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர்களுக்கு வழங்கப்படும். அதோடு, உடலில் வேறு என்ன மாதிரியான மாற்றங்கள், பிரச்னைகள் உள்ளன என்பதைப் பரிசோதித்து, அதற்கான சிகிச்சைகளும் வழங்கப்படும்" எனக் கூறுகிறார் பாண்டியன்.

மனநல ஆலோசனைகள்

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், டிராகன், நாசா

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவு உண்ணும் விஞ்ஞானிகள்

மனநலனைப் பொறுத்தவரை மனச் சோர்வை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களின் அளவு பல்வேறு காரணிகளால் விண்வெளியில் அதிகரிக்கும்.

தங்கள் குடும்பத்தினருடன் நீண்ட காலம் உடனிருக்க முடியாமல் போவது, பல்வேறு உணர்வுப்பூர்வமான தருணங்களில் உடன் இல்லாததும் விண்வெளி வீரர்களின் மனநலனில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால், குணம் சார்ந்த அல்லது மனோரீதியான ஒருங்கின்மை பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக நாசா தெரிவிக்கிறது.

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், டிராகன், நாசா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத விண்வெளியில் தங்குவதற்கு அவர்கள் ஏற்கெனவே மனரீதியாகப் பயிற்சி எடுத்திருப்பார்கள்.

அதேபோல, பூமிக்குத் திரும்பியவுடனும் மனரீதியாக இயல்பு நிலைக்குத் திரும்பவும் காலம் எடுக்கும். எனவே, அதற்கான பயிற்சிகளை வழங்க மனநல ஆலோசகர்கள் இருப்பார்கள். இவற்றோடு சேர்த்து, "குடும்பத்தின் ஒத்துழைப்பும் இதில் முக்கியம்" என்கிறார் பாண்டியன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு