யுக்ரேன் போர்: அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமா? டிரம்ப், புதின் பேசப்போவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜார்ஜ் ரைட் & ஜாக்குலின் ஹோவர்ட்
- பதவி, பிபிசி நியூஸ்
யுக்ரேனில் அமைதியைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தின் 'பல்வேறு அம்சங்கள்' குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருவருக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்கு முன்னதாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதினுடன் தான் பேசவிருப்பதாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) காலையில் ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார். ஒப்பந்தங்கள் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளன என்றாலும், அதில் 'இன்னும் நிறைய' பணிகள் எஞ்சியுள்ளதாக அவர் கூறினார்.
"ஒவ்வொரு வாரமும் இரு தரப்பில் இருந்தும் 2,500 வீரர்கள் மரணம் அடைகிறார்கள். அது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். அதிபர் புதினுடனான அழைப்பை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, "ஓர் அமைதி ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தத்தையும் அமைதியையும் கொண்டு வர முயல்கிறோம். எங்களால் அதைச் செய்ய முடியுமென்று நான் நினைக்கிறேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மறுபுறம், மார்ச் 17ஆம் தேதியன்று தனது இரவு உரையில், புதின் போரை நீட்டிப்பதாக, யுக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.
அப்போது அவர், "இந்த முன்மொழிவு நீண்ட காலத்திற்கு முன்பே செயல்படுத்தப்பட்டு இருக்கலாம்," என்றும், "போர்க் காலத்தில் ஒவ்வொரு நாளும் மனித உயிர்கள் அழிக்கப்படுகிறது" என்றும் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளன என்பது குறித்து டிரம்ப் நிர்வாகத்திலேயே முரண்பாடுகள் உள்ளன.
ஜெட்டாவில் யுக்ரேனிய அதிகாரிகளுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, "பேச்சுவார்த்தை செயல்முறை எப்படி இருக்கும்' என்பதுதான் உரையாடலின் பெரும்பகுதியாக இருந்தது. குறிப்பிட்ட நிபந்தனைகள் அல்ல" என்றார்.
கடந்த மார்ச் 13ஆம் தேதியன்று மாஸ்கோவில் புதினை சந்தித்த அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்கோபும், அமைதியான முறையில் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில், யுக்ரேனுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய விரும்புவதை நிரூபிக்குமாறு புதினை பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தின.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், போர்நிறுத்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டதில் ஸெலென்ஸ்கியின் "தைரியத்தை" பாராட்டினார். மேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ரஷ்யாவுக்கும் அழைப்பு விடுத்தார்.
"மரணங்கள் போதும். போதுமான உயிர்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அழிவு போதும். துப்பாக்கிகள் அமைதியடைய வேண்டும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் மக்ரோன் பதிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
புதின் இப்போது ஒரு "முழுமையான, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு" ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், புதின் அமைதி ஒப்பந்தத்தில் தீவிரமாக இருப்பதற்கான "அடையாளம் எதுவும் இல்லை" என்றும் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லாம்மி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
ரஷ்யாவை "தீவிர" பேச்சுவார்த்தையில் ஈடுபட வைப்பதற்கு, பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் "கூடுதல் உத்திகளைக் கொண்டுள்ளதாகவும்" அவர் எச்சரித்தார்.
டிரம்புக்கும் புதினுக்கும் இடையே தொலைபேசி மூலம் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வெள்ளை மாளிகை நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் யுக்ரேனில் அமைதி "எப்போதையும்விட நெருக்கமாக உள்ளது" என்றும் கூறியுள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கடந்த திங்கள் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், டிரம்ப் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் "உறுதியாக" இருப்பதாகத் தெரிவித்தார்.
"இந்தப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா மற்றும் யுக்ரேனின் எல்லையில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையம் பற்றிய விவாதங்கள் அடங்கும். இதுகுறித்து ஏற்கெனவே யுக்ரேனிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நாளை புதினுடனான அழைப்பின்போது இது குறித்து மேலும் விவாதிக்கப்படும்" என்று பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் குறித்து அவர் கூறினார்.
அந்தப் பேச்சுவார்த்தை ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ஜாபோரிஜியா குறித்து நடைபெறும். மார்ச் 2022 முதல் இந்த அணுமின் நிலையம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. போரின் ஓர் அங்கமாக அந்தப் பகுதியில் நடைபெற்ற மோதலின் விளைவாக அணு விபத்து ஏற்படும் என்ற அச்சம் அங்கு தொடர்ந்து நிலவி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் என்ன சலுகைகள் பரிசீலிக்கப்படுகின்றன என்று டிரம்பிடம் ஞாயிற்றுக்கிழமை கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "நாங்கள் நிலம் பற்றிப் பேசுவோம். மின் உற்பத்தி நிலையங்கள் பற்றிப் பேசுவோம். சில சொத்துகளைப் பிரிப்பது குறித்தும் முன்பே பேச்சுவார்தைகளைத் தொடங்கியுள்ளோம்," என்றார்.
ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், தலைவர்கள் என்ன விவாதிப்பார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, "நாங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம்" என்று பதிலளித்தார்.
போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாக புதின் முன்பு கூறியிருந்தாலும், போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான நிபந்தனைகளின் பட்டியலையும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்று ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியம். அங்கு யுக்ரேன் கடந்த ஆகஸ்ட் மாதம் ராணுவ ஊடுருவலைத் தொடங்கி சில பிரதேசங்களைக் கைப்பற்றியது. சமீபத்திய வாரங்களில் ரஷ்யா அதை மீண்டும் கைப்பற்ற முயன்றது. மேலும் இப்போது குர்ஸ்க் தங்களது கட்டுப்பாட்டில் முழுமையாகத் திரும்பியுள்ளதாக புதின் கூறுகிறார்.
அதோடு, கிழக்கில் உள்ள முன்னணி போர் எல்லையில் போர் நிறுத்தத்தை எவ்வாறு கண்காணிக்க முடியும் என்பது குறித்தும் அவர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதேபோல் நேட்டோ படைகளை அந்த பிராந்தியத்தில் ஏற்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த வாரம் சௌதி அரேபியாவில் யுக்ரேனிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளால் அமைதி ஒப்பந்தம் குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டது.
தனிப்பட்ட முறையில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அவர்கள் 30 நாள் போர் நிறுத்தத்திற்கான திட்டங்களை அறிவித்தனர், அதை யுக்ரேன் ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.
செவ்வாய்க் கிழமையன்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மற்றும் கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி சந்தித்தனர். அவர்கள், யுக்ரேனுக்கு தங்கள் நாடுகள் "உறுதியுடன்" ஆதரவளிப்பதையும், ரஷ்யாவிடம் "தெளிவான உத்தரவாதங்களை" கோருவதையும் வலியுறுத்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












