திருச்சி விமான நிலையம் தனியார் வசமாகிறது - மத்திய அரசு அறிவிப்பு என்ன? இன்றைய முக்கிய செய்திகள்

திருச்சி உட்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில்," அரசின் சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் சென்னை, திருச்சி, மதுரை, திருப்பதி, ராஜமுந்திரி உட்பட 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அரசு - தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் குத்தகைக்கு விட மத்திய அரசால் ஒதுக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் திங்கட்கிழமை எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தார். அதில், திருச்சி, அமிருதசரஸ், வாரணாசி, புவனேசுவரம், ராய்பூர் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் அரசு- தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்." என தினமணி செய்தி கூறுகிறது.
தமிழ்நாட்டில் முன்னேற்றமடையும் பாலின விகிதாச்சாரம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பில் ஆண் பெண் விகிதாச்சாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "ஆண் பெண் எண்ணிக்கையில் இருக்கும் வித்தியாசத்தை குறைக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளால் இந்த சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மாநில பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,"மாநிலத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் தரவுகளின்படி, 2021-22ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 931 என இருந்த பெண்களின் எண்ணிக்கை, 2023-24ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 941 என முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டிலும் பிப்ரவரி வரையிலும் இந்த எண்ணிக்கை 940 என்ற நிலையில் உள்ளது.
பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது போன்றவை இந்த விகிதாசாரத்தை பாதிக்கலாம். பிறப்பின் போதே நடக்கும் இது போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பல கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிவது சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது." என்று அந்த செய்தி கூறுகிறது.
தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறையின் இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,"பிறப்பு பாலின விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் முன்னேற்றமடைகிறது. ஆனால் இது மேலும் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, தேனி, புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் இந்த பிரச்சனையில் இன்னும் சவால் அளிக்கக் கூடியதாக உள்ளன." என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண் சிசுக்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான ஜெயசேகரன்,"பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் மேலும் சில திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், கல்வி உதவித்தொகையிலும் முன்னுரிமை வழங்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் புலி உயிரிழப்பு
தமிழ்நாடு கேரளா எல்லையில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் புலி உயிரிழந்ததாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்,"தமிழக கேரள எல்லையான வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு அருகே பென்னாநகர் அரணக்கல் பகுதிகளில் கடந்த 2ம் தேதி புலி ஒன்று நடமாடியது. இது வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளைத் தாக்கிக் கொன்றதுடன் மனிதர்களையும் தாக்கத் தொடங்கியது. இதையடுத்து இந்த புலியைப் பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனத்துறையினர் , கடந்த இரு வாரங்களாக இந்த புலியைப் பிடிக்க முயற்சி மேறகொண்டனர். டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்ட நிலையில், அரணக்கல்லில் 16 வது பிரிவு தேயிலைக் காட்டுக்குள் நடமாடுவது உறுதி செய்யப்பட்டது.
தேயிலைக் காட்டுக்குள் கூண்டு வைக்க முடியாது என்பதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
தேயிலைக் காட்டுக்குள் பதுங்கியிருந்த புலியை 15 மீட்டர் தொலைவிலிருந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவர் அனுராஜ் தலைமையிலான வனத்துறையினர் முயன்றனர். ஆனால் இந்த முயற்சியில் இரண்டு முறை தப்பிய புலி வனத்துறையினரை தாக்கியது.
வேறு வழியின்றி 3வது முறையாக துப்பாக்கியால் வனத்துறையினர் சுட்டதில் புலி சுருண்டு விழுந்தது. பிறகு புலியை மீட்டு தேக்கடி வனவிலங்கு சரணாலய மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அது இறந்து விட்டதாக, கோட்டயம் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் தெரிவித்தார். திருவனந்தபுரத்திலுள்ள தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி , புலியின் உடலை கூறாய்வு செய்து தேக்கடி வனப்பகுதியில் புதைத்தனர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லடம் அருகே தக்காளிக்கு போதிய விலை இல்லாததால் டிராக்டர் மூலம் அழிப்பு

பட மூலாதாரம், THE HINDU TAMIL
தக்காளிக்கு போதிய விலை இல்லாததால், தோட்டத்தில் விளைந்த தக்காளியை டிராக்டர் மூலம் விவசாயி ஒருவர் அழித்திருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "பல்லடம் அடுத்த அல்லாளபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், ரூ.1 லட்சம் செலவு செய்து தக்காளி பயிரிட்டார். கடந்த 15 நாட்களாக அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், தக்காளி விலை படுபாதாளத்தில் சென்றதால் விரக்தி அடைந்தார். மேலும், கடந்த 2 நாட்களாக 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.100 என விற்பனையானதால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
தக்காளி பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் வாடகை உள்ளிட்டவைகளுக்கு கூட கட்டுப்படி ஆகாமல் இருந்தது. இதனால், செந்தில்குமார் தனது 2 ஏக்கர் நிலத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளியை டிராக்டர் மூலம் அழித்தார். 'திடீரென்று தக்காளி விலை சிகரத்துக்கு செல்கிறது. திடீரென்று படுபாதாளத்துக்கும் செல்கிறது. நிலையான விலை இல்லாததால், தக்காளி பயிரிடும் விவசாயிகள் பலர் இதனை விட்டு வெளியேறிவிட்டனர். தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க, குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியதாக இந்து தமிழ் செய்தி கூறுகிறது.
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து களமிறங்க முஸ்லிம் காங்கிரஸ் திட்டம்

பட மூலாதாரம், VEERAKESARI
இலங்கையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாக வீரகேசரி இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
புத்தளம் - கற்பிட்டி நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டத்திற்குப் பின்னர் பேசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், "இம்முறை தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, குறிப்பாக பல அங்கத்தவர் தொகுதிகளில் ஒரு வாக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் அனைத்து ஆசனங்களும் அந்த கட்சிக்கே உரித்தாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அந்தந்த தொகுதிகளிலுள்ள இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழரசு கட்சியும் நாமும் கலந்தாலோசித்து சில இடங்களில் அவர்கள் சார்பில் தமிழ் வேட்பாளர்களையும், எம் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களையும் அவர்களது சின்னத்திலேயே களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அந்தந்த தொகுதிகளில் எமக்கு கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த உடன்பாட்டின் உண்மையான நோக்கமாகும். தமிழரசு கட்சிக்கு அந்தந்த தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம். புத்தளம் நகரசபையிலும் மாநகசபையிலும், கொழும்பு, கண்டி மாநகரசபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் போட்டியிடவுள்ளது. கண்டி மாநகரசபையில் தராசு சின்னத்தில் களமிறங்கவுள்ளோம்." என்று தெரிவித்தாக வீரகேசரி இணையதளம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












