சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் விண்கலம் எவ்வாறு இயங்கும்?
கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளை மேற்கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளனர்.
எட்டு நாட்கள் மட்டுமே அங்கு தங்க திட்டமிட்ட நிலையில் அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னையால் பயணம் நீண்டது. இந்நிலையில், அவர்கள் இந்திய நேரப்படி மார்ச் 19-ஆம் தேதி அதிகாலையில் பூமியை வந்தடைய உள்ளனர்.
பூமிக்கு திரும்பும் பயணம் குறித்து, மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பேசினார்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள க்ரூ10 குழுவினர், சுனிதா வில்லியம்ஸ் ,புட்ச் வில்மோர் ஆகியோரிடமிருந்து பணிகளை பெற்றுக் கொண்டாலும், இதே க்ரூ10 விண்கலத்தில் இவர்களின் பயணம் இருக்காது என்று வெங்கடேஸ்வரன் கூறினார்.
மாறாக ஏற்கெனவே 6 மாதங்களுக்கு முன்னர் விண்வெளி நிலையத்திற்கு பயணித்த க்ரூ 9 திட்டத்திற்கான விண்கலத்தில் தான் இவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர். இதற்காக க்ரூ 9 திட்டத்தின் போதே இரண்டு இருக்கைகள் காலியாக அனுப்பப் பட்டதையும் வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தில் 4 பேர் வரை பயணிக்க முடியும். "அந்த விண்கலத்தில் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பும் வரை நமக்குத் தேவையான காற்று உள்ளிட்டவை இருக்கும்." என்கிறார் வெங்கடேஸ்வரன்.
முதலில் இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இணைப்பு, காற்று வெளியேற முடியாதபடி மிகவும் உறுதியான, இறுக்கமான இணைப்பாக இருக்கும்.
விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் உள்ளே செல்வார்கள். பின்னர் விண்கலத்தின் கேப்ஸ்யூலுக்குள் சென்று கதவை முழுவதுமாக மூடும் செயல்முறை (Hatch closing coverage) நடக்கும். அதன்பின், விண்வெளி நிலையத்துக்கும் அந்த விண்கலத்துக்கும் இடையே ஒரு தடுப்பு போடப்படும்.
"இதன்பின், விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் சரிவர செயல்படுகிறதா என பாதுகாப்பு குறித்து சோதனைகள் நடைபெறும். எரிபொருள் போதுமான அளவில் இருக்கிறதா, என்ஜின் சரியாக இருக்கிறதா என சோதித்துப் பார்க்கப்படும்." என பாதுகாப்பு செயல்முறைகளை விளக்குகிறார் வெங்கடேஸ்வரன்.
அதன்பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து (undocking) பூமியை நோக்கிய பயணத்தை விண்கலம் தொடங்கும். இந்த செயல்முறைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



