அமேசான் மழைக்காடுகள் அழிவது பற்றி உலகமே கவலைப்பட வேண்டியது ஏன்?

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காட்டின் வரைபடத்தின் விளக்கம் மற்றும் அடர்த்தியான தாவரங்கள் கொண்ட ஒரு பகுதியின் விளிம்பில் உள்ள பருந்துப் பார்வை புகைப்படத்தின் மீது ஒரு மரத்தின் நிழல் உருவம், பதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், BBC, Getty Images

    • எழுதியவர், நவின் சிங் கட்கா, அன்டோனியோ குபேரோ & விஷுவல் ஜர்னலிசம் குழு
    • பதவி, பிபிசி உலக சேவை

பெரும்பாலும், உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானின் நுழைவாயில் என்று விவரிக்கப்படும் வடக்கு பிரேசிலின் பெலெம் (Belém) நகரில்தான் இந்த ஆண்டின் ஐ.நா. காலநிலை மாநாடு (COP30) நடைபெற்றது.

இது, பூமியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தைப் பாதுகாப்பான வரம்புக்குள் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டிய பாரிஸ் காலநிலை உச்சி மாநாடு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதால் இந்த இடம் ஒரு முக்கியமான குறியீடாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், அந்த முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. ஏனெனில் வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வளிமண்டலத்தில் இருந்து அதிக அளவிலான கரிம வாயுவை உறிஞ்சும் அமேசான் காடு, கரிம வெளியீட்டின் போக்கை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் மிக முக்கியப் பங்காற்றும்.

ஆனால், பல தசாப்தங்களாக நடந்த காடழிப்பு மற்றும் இப்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால், அமேசானின் எதிர்காலமே தற்போது தெளிவாக இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பெலெம் தலைநகராக உள்ள பாரா (Pará) மாகாணத்தில், அமேசானின் வேறு எந்தப் பகுதியையும்விட அதிக அளவில் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே பிபிசி, அமேசானின் தற்போதைய நிலை மற்றும் அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தது.

தென் அமெரிக்காவில் 6.7 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ள இது, இந்தியாவின் பரப்பளவைவிட இரண்டு மடங்கு பெரியது
படக்குறிப்பு, தென் அமெரிக்காவில் 6.7 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ள இது, இந்தியாவின் பரப்பளவைவிட இரண்டு மடங்கு பெரியது.

அமேசானில் 60% பகுதியைத் தன்னகத்தே கொண்டுள்ள பிரேசில், வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு வலிமையான பாதுகாப்பை வழங்கும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாவதை உறுதி செய்ய முயல்வதாகக் கூறியுள்ளது. இந்த வெப்பமண்டலக் காடுகள் பெரும்பாலும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன, மேலும் அதிக மழைப்பொழிவு மற்றும் ஈரப்பதத்தால் செழிப்பாக வளரும் தாவரங்கள், உயரமான, பெரும்பாலும் பசுமையான மரங்களைக் கொண்டுள்ளன.

ஆனால் அமேசான், நதிப்படுகைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் புதர்க் காடுகளை கொண்டுள்ளது. தென் அமெரிக்காவில் 6.7 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ள இது, இந்தியாவின் பரப்பளவைவிட இரண்டு மடங்கு பெரியது. மேலும் இது பூமியிலுள்ள மிகவும் வளமான பல்லுயிர் செறிவுகொண்ட பகுதிகளில் ஒன்று.

இது தன்னகத்தே கொண்டுள்ளவை:

  • குறைந்தது 40,000 வகையான தாவரங்கள்
  • எறும்புத்திண்ணிகள் மற்றும் ராட்சத நீர்நாய்கள் உள்பட 427 பாலூட்டி இனங்கள்
  • ஹார்ப்பி கழுகு மற்றும் டூகன் (toucan) உள்பட 1,300 பறவை இனங்கள்
  • இகுவானா என்றழைக்கப்படும் பெரும்பச்சைப் பல்லி முதல் கருப்பு முதலை வரை 378 ஊர்வன இனங்கள்
  • டார்ட் விஷத் தவளை (dart poison frog) மற்றும் வழவழப்பான மேற்புறத்தைக் கொண்ட தேரை உள்பட 400க்கும் மேற்பட்ட நீர்நில வாழ்விகள்
  • அதோடு, பிரானா மற்றும் 200 கிலோ வரை எடையுள்ள பிரமாண்டமான அரபைமா உள்பட சுமார் 3,000 நன்னீர் மீன் இனங்கள்.

இந்த இனங்களில் பல வேறு எங்கும் காணப்படுவதில்லை.

அமேசானில் வாழும் விலங்குகள் மற்றும் தாவர இனங்களைக் காட்டும் காட்சிப்படம்
படக்குறிப்பு, அமேசானில் வாழும் விலங்குகள் மற்றும் தாவர இனங்களைக் காட்டும் காட்சிப் படம்

மேலும், நூற்றுக்கணக்கான பூர்வகுடி குழுக்கள் இந்தப் பகுதியில் வாழ்கின்றன.

அமேசானில் வாழும் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளின் வரைபடம் மற்றும் அவர்கள் பற்றிய் தகவல்களைக் காட்டும் காட்சிப் படம்
படக்குறிப்பு, அமேசானில் வாழும் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளின் வரைபடம் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களைக் காட்டும் காட்சிப் படம்

அமேசான் நதி உலகின் மிகப்பெரிய நதியாகும், அதன் 1,100க்கும் மேற்பட்ட கிளை நதிகளுடன் சேர்ந்து, இது உலகின் மிகப்பெரிய நன்னீர் வளத்தை உருவாக்குகிறது.

இந்த நீர் அட்லான்டிக் பெருங்கடலில் கலக்கிறது மற்றும் பிராந்திய, உலகளாவிய காலநிலை அமைப்புகளைப் பாதிக்கக்கூடிய கடல் நீரோட்டங்களைத் தக்கவைப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும், சில சீரழிந்த பகுதிகள் அவை கிரகித்து வைப்பதைவிட அதிக கரிம வாயுவை வெளியேற்றுவது கண்டறியப்பட்ட போதிலும், அதன் காடுகள் ஒரு முக்கிய கரிமத் தொட்டியாக (carbon sink) இருக்கின்றன.

அமேசான் உணவு மற்றும் மருந்துகளின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இது தங்கம் உள்ளிட்ட உலோகங்களுக்காக தோண்டப்படுகிறது. இந்தக் காடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஒரு குறிப்பிடத்தக்க உற்பத்தியாளராகவும் மாறக்கூடும். பெரிய அளவிலான காடுகள் அழிக்கப்படுவது,இதை ஒரு பெரிய மர விநியோக அமைப்பாக ஆக்கியுள்ளது.

இப்போது என்ன நடக்கிறது?

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மரங்களை வெட்டுதல், சுரங்கம் உள்ளிட்ட மனித நடவடிக்கைகளுடன் இப்போது காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட வறட்சி, வெப்பநிலை உயர்வு ஆகியவற்றின் காரணமாகக் காட்டின் 20% நிலப்பரப்பை இழந்துவிட்டோம். மேலும் அதே அளவிலான ஒரு பகுதி சீரழிந்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன.

அமேசான் பாதுகாப்பு அமைப்பின் ஆண்டிஸ் அமேசான் திட்டத்தின் கண்காணிப்பு (MAAP) அறிக்கைப்படி, சமீபகால அதீத காடழிப்பு 2022இல் நிகழ்ந்தது. அப்போது கிட்டத்தட்ட 20,000 சதுர கிமீ காடு அழிக்கப்பட்டது. இது 2021இல் நிகழ்ந்ததில் இருந்து 21% அதிகம் மற்றும் 2004க்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான காடழிப்பு.

கடந்த 2023இல் பிரேசிலில் அரசு மாற்றம் ஏற்பட்ட பிறகு, பிரேசிலிய அமேசானில் காடழிப்பு விகிதம் உடனடியாக பாதியாகக் குறைந்தது. பிற நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களில் இது குறையவில்லை என்றாலும் பிரேசிலில் குறைந்தது பற்றி உலகம் மகிழ்ச்சி கொண்டது.

ஆனால், அமேசானின் சில பகுதிகள் மீள முடியாத அளவுக்கு மோசமான சேதத்தைச் சந்தித்துள்ளதும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது.

இது பல ஆண்டுகளாக நடந்த காடழிப்பின் விளைவு மட்டுமல்ல, அமேசான் சுற்றுச்சூழலுக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக வெளிவரும் காலநிலை நெருக்கடியின் விளைவும் ஆகும்.

ஒரு பெண் வறண்ட மற்றும் வெடித்த ஆற்றுப் படுக்கையில் நிற்கிறார், தூரத்தில் ஒரு மெல்லிய நீரோட்டம் தெரிகிறது.

பட மூலாதாரம், Reuters/Amanda Perobelli

படக்குறிப்பு, தபாஜோஸ் (Tapajos) போன்ற அமேசான் வழியாகப் பாயும் ஆறுகளை வறட்சி பாதித்து வருகிறது.

வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க உயர்வு மற்றும் நீண்ட வறட்சி நிகழ்வுகள் அதன் அடிப்படைச் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமாக ஈரப்பதமான காட்டை வறண்டதாக மாற்றி, காட்டுத் தீயால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலைக்குத் தள்ளியுள்ளன.

உதாரணமாக, பிரேசிலிய விண்வெளி நிறுவனமான ஐஎன்பிஇ-இன் கூற்றுப்படி, செப்டம்பர் 2024இல், பிரேசிலிய அமேசானில் 41,463 தீ பற்றும் பகுதிகள் இருந்தன. இது 2010க்கு பிறகு அந்த மாதத்திற்கான மிக அதிகமான எண்ணிக்கை ஆகும்.

"வறட்சி மற்றும் தீ விபத்துகள் அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம், இது அமேசானின் பல பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது," என்று அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் கரிம கிரகிப்பு சூழலியல் துறையின் இணைப் பேராசிரியரான பாவ்லோ பிராண்டோ கூறுகிறார்.

"பல்வேறு பகுதிகளில் இந்தச் சீரழிவு அமேசானுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாகவும்" அவர் தெரிவித்தார்.

'பறக்கும் நதிகள்' தடைபடுதல்

பிரச்னை எவ்வாறு எழுகிறது என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமான அமேசான் பிராந்தியம் உள்வானிலை அமைப்புகளைக் கொண்டுள்ளது: அதன் காடுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து ஈரப்பதத்தைச் சுழற்றி, வானத்தில் "பறக்கும் நதிகள்" என்று அறியப்படுவனவற்றை உருவாக்குகின்றன.

இந்த வளிமண்டல நதிகள் முதலில் அமேசானின் கிழக்குப் பகுதியில், அட்லாண்டிக்கிற்கு அருகில் மழையைப் பொழிகின்றன. பின்னர் நீர் தரையில் இருந்தும் தாவரங்களில் இருந்தும் மீண்டும் காற்றுக்கு உயர்ந்து (ஆவியாதல் மற்றும் நீராவிப் போக்கு செயல்முறை மூலம்) மேலும் மேற்கு நோக்கிச் சென்று காடுகளின் மற்றொரு பகுதியில் விழுகின்றன.

மழைக்காட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கான நீரின் இந்தச் சுழற்சி அமேசான் முழுவதும் நிகழ்கிறது மற்றும் பரந்த மழைக்காடு எப்படிச் செழித்துள்ளது என்பதை இந்தச் செயல்முறை ஓரளவு விளக்குகிறது.

பிரேசில் நாட்டில் உள்ள பாரா மாகாணத்தில் வயல்களுக்கு மேலே மூடுபனி (Fog) படர்ந்திருப்பதைக் காட்டும் ஒரு பருந்துப்பார்வை புகைப்படம்.

பட மூலாதாரம், AFP via Getty Images/NELSON ALMEIDA

படக்குறிப்பு, வளிமண்டல நதிகள் (Atmospheric rivers) நீராவியைக் கடத்திச் செல்கின்றன

ஆனால், இந்த ஈரப்பத சுழற்சி இப்போது தடைபட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காடழிப்பு மற்றும் சீரழிவு ஏற்பட்ட அமேசானின் பகுதிகள் கடலில் இருந்து வரும் ஈரப்பதத்தைச் சரியாகச் சுழற்ற முடியாது, இதன் விளைவாக நீராவிப் போக்கு மூலம் மிகக் குறைவான ஈரப்பதம் மட்டுமே மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது.

"அமேசான் முழுவதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்த ஈரப்பதத்தைச் சுழற்றும் சிறிய வானிலை அமைப்புகள் இப்போது உடைந்துவிட்டன," என்று அமேசான் பாதுகாப்பு விஞ்ஞானி மற்றும் பறக்கும் நதிகளின் பங்கு மற்றும் அமேசானின் விதி குறித்த சமீபத்திய அறிக்கையின் இணை ஆசிரியரான மாட் ஃபைனர் கூறுகிறார்.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி, அட்லான்டிக்கில் இருந்து வெகு தொலைவில் உள்ள மேற்கு அமேசான் ஆகும். குறிப்பாக பெருவின் தெற்கு மற்றும் பொலிவியாவின் வடக்குப் பகுதிகள் என்று அவர் கூறுகிறார்.

"பெரு மற்றும் பொலிவியாவில் உள்ள மழைக்காடுகளின் உயிர்வாழ்வுச் சூழல், கிழக்கில் உள்ள பிரேசிலில் உள்ள பாதுகாப்பான காடுகளைச் சார்ந்துள்ளது. ஏனெனில் அந்தக் காடுகள் அழிக்கப்பட்டால், பறக்கும் நதிகளை உருவாக்கும் நீர் சுழற்சி உடைந்துவிடும், அது மேற்கு அமேசானை அடைய முடியாது. அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன."

இந்தச் சிக்கல், குறிப்பாக ஜூன் முதல் நவம்பர் வரையிலான வறண்ட காலத்தில் மோசமாக உள்ளது.

அமேசானில் அடர்ந்த தாவரங்களுக்கு இடையே அகுவாரிகோ (Aguarico) நதி வளைந்து செல்வதைக் காட்டும் ஒரு பருந்துப்பார்வை புகைப்படம்.

பட மூலாதாரம், AFP via Getty Images/Pedro Pardo

படக்குறிப்பு, அமேசான் நதிகள் சமீபத்திய ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த நீர் மட்டங்களைப் பதிவு செய்துள்ளன.

பலவீனமடையும் தாங்கு திறன்

ஈரமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த மழைக்காடு கடந்த காலத்தில் காட்டுத் தீ ஏற்படாமல் எதிர்ப்புத் திறனோடு இருந்தது. ஆனால் மழைப்பொழிவு இல்லாத பகுதிகளில் இந்த எதிர்ப்புத் திறன் பலவீனமடைந்து வருகிறது.

வறண்டு வரும் மழைக்காடு சுற்றுச்சூழல் அமைப்பு தனது தாங்கு திறனின் வரம்பை அடைந்து வருவதாகவும், அதிலிருந்து அது மீள முடியாமல் நிரந்தரமாக இழக்கப்படலாம் என்றும் சில விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

"அமேசானின் சில பகுதிகளில் இந்தத் தாங்கு திறன் பாதிப்பதற்கான அறிகுறிகளாக நாம் காண்பது இவைதான்," என்று ஃபைனர் கூறுகிறார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆய்வகத்தில் மூத்த ஆராய்ச்சி அசோசியேட்டான எரிகா பெரெங்குயர், இந்த ஆபத்து அதிகரித்து வருவதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஃபைனரை போலவே அவரும் சில பகுதிகள் மற்ற பகுதிகளைவிட மோசமாகப் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்.

"இது சில பகுதிகளில் நடக்கும் மிகவும் மெதுவான செயல்முறை," என்று அவர் கூறுகிறார்.

அமேசானில் காடழிக்கப்பட்ட, புல் நிறைந்த ஒரு பகுதியில் கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன, தூரத்தில் உயரமான மரங்கள் தெரிகின்றன.

பட மூலாதாரம், The Washington Post via Getty Images/Rafael Vilela

படக்குறிப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, மரங்களை வெட்டுதல், சுரங்கங்கள் ஆகியவை காடுகளைப் பாதித்து வருகின்றன.

சிக்கலில் உள்ள நீர்நிலைகள்

அமேசானின் வானத்தில் குறைந்த நீர் சுழற்சி என்பது ஆரோக்கியமான காடு குறைவது மட்டுமின்றி, அமேசான் நதி மற்றும் அதன் பல கிளை நதிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமேசான் படுகையில் உள்ள பல நதிகள் சமீபத்திய ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான நீர் மட்டங்களைப் பதிவு செய்துள்ளன. மேலும் 2023இல் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சி ஏற்பட்டது.

கடந்த 2023 மற்றும் 2024இன் முதல் பாதியில் நிலவிய வறண்ட நிலைமைகள், எல் நினோவால் (El Niño) ஓரளவு தூண்டப்பட்டது. இது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கும் ஓர் இயற்கை வானிலை அமைப்பாகும், இது உலகளாவிய மழைப்பொழிவு வடிவங்களை குறிப்பாக தென் அமெரிக்காவில் பாதிக்கிறது.

ஆற்றங்கரையில் ஒரு மரப் படகில் பல பேர் அமர்ந்திருக்கின்றனர், அந்தப் பகுதி அருகிலுள்ள சாலை மற்றும் கட்டிடங்களுக்கு இட்டுச் செல்கிறது.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images/Rafael Guadeluppe

படக்குறிப்பு, அமேசான் பிராந்தியம் லட்சக்கணக்கான மக்களின் தாயகமாக உள்ளது.

சுரங்கத் தொழில் குழப்பம்

காடழிப்பு, காலநிலை நெருக்கடி ஆகியவை போதுமான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சட்டவிரோத சுரங்கங்கள் - குறிப்பாக தங்கச் சுரங்கங்கள் - மழைக்காடுகளின் சுற்றுச்சூழலுக்கு அளவிட முடியாத தீங்குகளை விளைவித்துள்ளன.

"மேலும் இப்போது அரிய தாதுக்களுக்கான சுரங்கத் தொழிலும் இந்தப் பகுதியில் தொடங்கியுள்ளது," என்று பெரெங்குயர் கூறுகிறார்.

இந்தத் தாதுக்கள் மின்சார வாகனங்கள், காற்றாலை விசையாழிகள், மொபைல் போன்கள் மற்றும் செயற்கைக் கோள்களில் பயன்படுத்தப்படுகின்றன, அவை நவீன பொருளாதாரத்திற்கு முக்கியமானவை.

சுரங்கம் அதிக காடழிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அது பாதரசம் போன்ற ரசாயனங்களால் நதிகள், மண் மற்றும் தாவரங்களை மாசுபடுத்தி, பின்னர் விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே நச்சுத்தன்மையை பரப்பக்கூடும்.

சட்டவிரோத சுரங்க முதலாளிகளுக்கும், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தும் கும்பல்கள் உள்படத் திட்டமிட்ட குற்றங்களுக்கும் இடையே அதிகரிக்கும் தொடர்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

"குற்றவியல் வலைப்பின்னல் அமேசான் முழுவதும் விரிவடைந்து வருகிறது. இது அதிகாரிகளுக்குத் தரைமட்டத்தில் அதை கையாள்வதை கடினமாக்குகிறது," என்று மாட் ஃபைனர் கூறுகிறார்.

தங்கம் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சேற்று நீர் நிரம்பிய குளங்களுடன் கூடிய சட்டவிரோத சுரங்க தளத்தின் பருந்துப் பார்வை புகைப்படம்.

பட மூலாதாரம், Reuters/Ueslei Marcelino

படக்குறிப்பு, சட்டவிரோத சுரங்கம் காடுகளுக்கு மட்டுமின்றி, அந்தக் காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

அமேசான் எட்டு நாடுகளில் பரவியுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த சட்ட அமைப்பு மற்றும் சட்ட அமலாக்க ஆட்சிகளைக் கொண்டுள்ளது. இது எல்லை தாண்டிய குற்றங்களைக் கையாள்வதில் உள்ள சவாலை அதிகரிக்கிறது.

அதோடு, அமேசானுக்கு கீழே அதிக அளவு ஹைட்ரோகார்பன்கள் (எண்ணெய் மற்றும் எரிவாயு) புதைபட்டுள்ளன என்ற கண்டுபிடிப்பு, மேலும் கவலையளிப்பதற்கான மற்றொரு காரணமாக உள்ளது.

இன்ஃப்போஅமேசோனியாவின் கூற்றுப்படி, சுமார் 5.3 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்க்கு சமமான இருப்புகள் 2022 மற்றும் 2024க்கு இடைபட்ட காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பகுதி உலகில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இருப்புகளில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதாக அது கூறுகிறது. இது புதைபடிவ எரிபொருள் தொழிலுக்கு ஒரு புதிய பகுதியாக அமைகிறது.

இந்த ஹைட்ரோகார்பன் இருப்புகளில் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, பறக்கும் நதிகள் குறித்த சமீபத்திய ஆராய்ச்சிக்கு முன்பே, அமேசானுக்கான அறிவியல் குழு மழைக்காடுகள் அழிவைச் சந்தித்து வருவதால் 10,000க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவின் அபாயத்தில் இருப்பதாகக் காட்டியது.

அமேசான் காடுகள் உலகுக்கு ஏன் முக்கியம்?

அமேசான் உலகிற்கு ஏன் முக்கியம்?

அமேசான், கரிம வாயுவைக் கிரகித்துச் சேமித்து வைக்கும் ஒரு சக்தி வாய்ந்த கார்பன் தொட்டியாக உள்ளது. இது பூமியை வெப்பமாக்கும் முக்கிய வாயுவான கரிம வாயுவை அதிக அளவில் உறிஞ்சும் திறன் கொண்டது.

கடந்த 2024இல் வெளியிடப்பட்ட MAAP அறிக்கையில், "2022 நிலவரப்படி, அமேசான் தனது நிலத்தின் மேற்புறத்திலும் கீழேயும் 71.5 பில்லியன் மெட்ரிக் டன் கரிமத்தைக் கொண்டுள்ளது" என்று மதிப்பிடப்பட்டது.

இது 2022ஆம் ஆண்டு அளவில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளின் உலகளாவிய கரிம வாயு வெளியேற்றத்திற்குச் சமமானது.

ஆனால், தாவரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்படும் காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மழைக்காடுகளின் மேலும் பல பகுதிகளை நிகர கரிம வெளியீட்டாளர்களாக (net emitters) மாற்றும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமேசானை இழப்பது என்பது காலநிலை நெருக்கடிக்கு எதிரான போரில் தோல்வியடைவதற்குச் சமம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

முன்புறத்தில் ஏராளமான வெட்டப்பட்ட மரங்கள் கொண்ட ஒரு அழிக்கப்பட்ட பகுதி, பின்புறத்தில் இன்னும் உயரமாக நிற்கும் மரங்கள்.

பட மூலாதாரம், REUTERS/Amanda Perobelli

படக்குறிப்பு, சோயாபீன்ஸ் விவசாயம் விரிவடைந்ததால், அமேசானுக்குள் இருக்கும் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன

வெப்பமண்டல காடுகள் சூரிய ஒளியை விண்வெளிக்குப் பிரதிபலிக்கும் மேக மூட்டத்தையும் உருவாக்குகின்றன. மேலும் பூமியில் குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. இது தொடரும் வரை, பூமியின் வெப்பமயமாதலை அவை குறைக்கும்.

"அமேசான் போன்ற வெப்பமண்டலக் காடு கரிமத்தைச் சேமித்து வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டிருப்பது போலவே, அது கிரகத்தைக் குளிர்விக்கும் திறனையும் கொண்டுள்ளது," என்று பிரேசிலிய வனவியல் விஞ்ஞானி டாஸோ அசெவெடோ கூறுகிறார்.

"அதனால்தான், அமேசான் காடுகளை வெப்பமடைந்து வரும் இந்த பூமிக்குத் தேவைப்படும் ஓர் ராட்சத ஏசி (ஏர் கண்டிஷனர்) என்று நாங்கள் அழைக்கிறோம்."

மேலும், மேலே குறிப்பிட்டது போல, உலகின் மிகப்பெரிய நன்னீர்ப் படுகை உலகளாவிய காலநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டுள்ளது.

அட்லான்டிக்கில் இந்த நன்னீர் அதிக அளவில் வெளியேறுவது கடல் நீரோட்டங்களைத் தீர்மானிக்க உதவுகிறது என்றும், இந்த வெளியேற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் நீரோட்டங்கள் மற்றும் அவை வடிவமைக்க உதவும் பிராந்திய மற்றும் உலகளாவிய வானிலை வடிவங்களைப் பாதிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு