சௌதி - இஸ்ரேல் ஒப்பந்தம்: பாலத்தீனம் வகுத்த விதிமுறைகள் என்ன? பலன் கிடைக்குமா?

சௌதி - இஸ்ரேல் ஒப்பந்தம்: பாலஸ்தீனம் வகுத்த விதிமுறைகள் என்ன? பலன் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டௌ பேட்மேன்
    • பதவி, பிபிசி நியூஸ்

சௌதி அரேபிய இளவரசரும், அந்நாட்டின் பிரதமருமான முகமது பின் சல்மான் இன்று பிரதமர் மோதியை சந்திக்க உள்ளார். இருவருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நல்லுறவு நிலவி வருகிறது. இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சௌதி அரேபியா இருந்து வருகிறது.

சௌதி இளவரசர் இந்தியா வருவதற்கு முன்னர் சிறப்பு மிக்க சௌதி-இஸ்ரேல் ஒப்பந்தம் உடன்பாட்டிற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா, சௌதி அரேபியா மற்றும் இஸ்ரேலை உள்ளடக்கிய மூன்று வழி ஒப்பந்தம் ஏற்பட்டால், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் பணம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நிலத்தின் மீதான கூடுதல் கட்டுப்பாடு உள்ளிட்டவை பாலத்தீனின் கோரிக்கைகளில் அடங்கும்.

பாலத்தீனிய அதிகார சபையின் அதிகாரிகள் புதன்கிழமை (செப்டம்பர் 6) ரியாத்தில் சௌதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் அமெரிக்க அதிகாரிகளைப் பார்க்கவும் திட்டமிட்டிருந்தனர்.

இஸ்ரேல்-சௌதி உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கிய உடன்படிக்கைக்கு அமெரிக்கர்கள் நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்து வருவதாகக் கருதப்படுகிறது.

பாலஸ்தீனியர்களின் வரலாற்று சிறப்பு மிக்க சவுதி-இஸ்ரேல் ஒப்பந்த உடன்பாடு விதிமுறைகள் என்ன?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கு ஈடாக, சௌதி அரேபியா, அமெரிக்க தயாரித்துள்ள ஆயுதங்களும், நாட்டில் யுரேனியம் செறிவூட்டல் உள்ளிட்ட ஒரு சிவில் அணுசக்தி திட்டத்தையும் கோருவதாகக் கூறப்படுகிறது.

இந்த உடன்படிக்கை அமெரிக்காவால் எழுதப்படும். அமெரிக்காவுடன் சௌதி அடைய விரும்பும் ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் இந்த உடன்படிக்கை உள்ளடக்கியிருக்கும்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செவ்வாயன்று (செப்டம்பர் 5) பேசுகையில், "எதிர்வரும் காலத்தில் உடனடி அறிவிப்புகள் அல்லது முன்னேற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்று கூறினார்.

இருப்பினும், மத்திய கிழக்கில் உள்ள உறவுகளை மறுசீரமைப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டால், இந்தக் கோடையில் ரியாத், அம்மான் மற்றும் ஜெருசலேமுக்கு அதிகாரிகள் மேற்கொண்ட பயணங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் எந்தவொரு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பிலும் தொடர்ந்து ஊகங்கள் உள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு திருப்புமுனை வெளியுறவுக் கொள்கை பரிசாக சௌதி-இஸ்ரேல் ஒப்பந்தத்தைப் பார்க்க வாய்ப்புள்ளது.

அரபு மற்றும் இஸ்லாமிய உலகின் தலைவராக சௌதி அரேபியா உள்ளது. 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் இருந்து அது முறையாக இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல்-சௌதி உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கிய உடன்படிக்கைக்கு அமெரிக்கர்கள் நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்து வருவதாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் பேசுகையில்: "நாம் வரலாற்றின் முக்கியமான நகர்வைப் பார்க்க இருக்கிறோம்," எனக் கூறியிருந்தார். இந்நிலையில் எந்தவொரு ஒப்பந்தமும் ஆழமான சர்ச்சைக்குரியதாக இருக்கும்.

இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கு ஈடாக சௌதி அரேபியா, அமெரிக்கா தயாரித்துள்ள ஆயுதங்களையும், நாட்டில் யுரேனியம் செறிவூட்டல் உள்ளிட்ட ஒரு சிவில் அணுசக்தி திட்டத்தையும் கோருவதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் தனது பங்கிற்கு வளைகுடா வல்லரசுடனான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளிலிருந்து பயனடைகிறது.

"இவை பெரும்பாலும் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உடன்படிக்கைகள். இதில் சௌதி அரேபியாவும் ஈடுபட விரும்புவதை இப்போது காண விரும்புகிறது," என்று இப்போது அதிகாரப்பூர்வ பாலத்தீனிய பேச்சுவார்த்தைக் குழுவின் முன்னாள் சட்ட ஆலோசகர் டயானா புட்டு கூறினார்.

இஸ்ரேலியர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இப்போது மோசமடைந்துள்ளன. ஒரு ஒப்பந்தம் வெற்றிபெற, அது பாலத்தீனியர்களுக்கு இஸ்ரேலிய சலுகைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர், தனது சொந்த பொதுமக்களை சமாதானப்படுத்த வேண்டும். ஏனெனில் வரலாற்று ரீதியாக சௌதி மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான மனப்பான்மையும் பாலத்தீனம் மீது ஆழ்ந்த அனுதாபமும் கொண்டுள்ளனர்.

ஜோ பைடன் திட்டம் என்ன?

பாலஸ்தீனியர்களின் வரலாற்று சிறப்பு மிக்க சவுதி-இஸ்ரேல் ஒப்பந்த உடன்பாடு விதிமுறைகள் என்ன ?

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில், அதிபர் பைடன் தனது ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற பாலத்தீனியர்களுக்கு கணிசமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்ததை நிரூபிக்க வேண்டும்.

நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஏமனில் நடந்த போரில் சௌதியின் பங்கு ஆகியவை சௌதிக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற யோசனையை கட்சியில் உள்ள பலர் நிராகரிக்கின்றனர்.

இஸ்ரேலின் தற்போதைய தீவிர தேசியவாத ஆளும் கூட்டணிக்கு வெகுமதி அளிக்கும் யோசனைக்கும் அவர்கள் எதிராக உள்ளனர். இது மேற்குகில் பதற்றங்களை அதிகப்படுத்துவதாகவும், இஸ்ரேலுக்குள் முன்னெப்போதும் இல்லாத உறுதியற்ற தன்மையைத் தூண்டுவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

விவாதங்களை நன்கு அறிந்த ஒரு மூத்த பாலத்தீனிய அதிகாரியின் கூற்றுப்படி, ரியாத்தில் உள்ள பாலத்தீனிய உயர் அதிகாரிகள் குழு அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பொதுஜன முன்னணியின் உளவுத்துறைத் தலைவர் மஜீத் ஃபராஜ் மற்றும் பாலத்தீன விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளர் ஹுசைன் அல்-ஷேக் ஆகியோர் சௌதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முஸயத்-அல்-அய்பானை சந்தித்தனர்.

கடந்த வாரம் அம்மானில் நடந்த அமெரிக்க உதவி வெளியுறவுத்துறை செயலர் பார்பரா லீஃப் உடனான சந்திப்பின்போது, ​​அமெரிக்கா ஆதரவு செயல்முறையில் ஈடுபடுவதற்கு ஈடாக அவர்களின் கோரிக்கைகளின் பட்டியல் அமைக்கப்பட்டது.

பாலத்தீனம் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

பாலஸ்தீனியர்களின் வரலாற்று சிறப்பு மிக்க சவுதி-இஸ்ரேல் ஒப்பந்த உடன்பாடு விதிமுறைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

தங்களது கோரிக்கை குறித்து பாலத்தீன அதிகாரி பிபிசியிடம் கூறியவை பின்வருமாறு

  • தற்போது முழு இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையின் சில பகுதிகளை (1990களின் ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் கீழ் பகுதி C என அறியப்படுகிறது) பாலத்தீனிய அதிகாரத்தின் ஆளுகைக்கு மாற்றுதல்
  • மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்ற வளர்ச்சியின் "முழுமையான நிறுத்தம்"
  • கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து மந்தமடைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பொதுஜன முன்னணிக்கு சௌதியின் நிதி உதவியை மீண்டும் தொடங்குதல் (ஆண்டுக்கு சுமார் $200m (£160m))
  • ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மீண்டும் திறப்பது (பாலத்தீனியர்களுக்கான இராஜ்ஜீய பணி). அது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் மூடப்பட்டது.
  • கடந்த 2014இல் அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரியின் கீழ் நிறுத்தப்பட்ட இஸ்ரேலுக்கும் பாலத்தீனியர்களுக்கும் இடையிலான அமெரிக்க தரகு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குதல்.

இத்தகைய சலுகைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் சௌதி-இஸ்ரேல் இயல்புமயமாக்கம் குறித்த அதிகாரப்பூர்வமான, பகிரங்கமாக கூறப்பட்ட பாலத்தீனிய நிலைப்பாட்டில் இருந்து அவை வெகு தொலைவில் உள்ளன. அது அவர்களை ஒரு சுதந்திர நாடாக விட்டுவிடவில்லை என்றால் அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.

இது 2002ஆம் ஆண்டு சௌதி தலைமையிலான அரபு அமைதி முன்முயற்சியைப் பின்பற்றுகிறது, இது கிழக்கு ஜெருசலேமில் அதன் தலைநகரான மேற்குக்கரை மற்றும் காசாவில் உள்ள ஒரு பாலத்தீனிய அரசையும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் திரும்பப் பெறுவதற்கும் ஈடாக அரபு அரசுகள் இரஸ்ரேலுக்கு அங்கீகாரத்தை வழங்கின.

பாலஸ்தீனியர்களின் வரலாற்று சிறப்பு மிக்க சௌதி-இஸ்ரேல் ஒப்பந்த உடன்பாடு விதிமுறைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய அணுகுமுறை பாலத்தீனிய தலைமையின் ஆழமான "பிணைப்பை" பிரதிபலிக்கிறது என்று புட்டு கூறுகிறார்.

"பாலத்தீனியர்கள் இந்த இயல்புமயமாக்கல் ஒப்பந்தங்களில் எதிலும் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. ஏனெனில் [அரபு உலகின் ஆதரவு] எங்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே கருவி," என்று அவர் கூறினார்.

"வன்முறையை எதிர்க்க எங்களுக்கு அனுமதி இல்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர எங்களுக்கு அனுமதி இல்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது."

"நாம் நமது கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றிக்கொள்ள முயல வேண்டுமா அல்லது 2020இல் புறக்கணித்ததைப் போல இப்போது செய்ய வேண்டுமா என்று பாலத்தீனிய அரசு கேள்வியெழுப்புகிறது. மீண்டும், பாலஸ்தீனிய அரசு என்ன செய்தாலும் சரி, இறுதியில் அது தோல்வியில்தான் முடியும்," என்று புட்டு பிபிசியிடம் கூறினார்.

பாலத்தீனம் நன்மைகளை எடைபோடுவதில் உள்ள ஆபத்து

2020ஆம் ஆண்டில் மூன்று அரபு நாடுகள் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ) அதிபர் டிரம்பின் கீழ் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களின் மூலம் இஸ்ரேல் உடனான உறவுகளை இயல்புமயமாக்கியது.

நான்காவதாக, சூடான் அதே ஆண்டில் இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவுகளை நோக்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. ஆனால், நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதும் அடுத்த ஆண்டு ராணுவ சதிப் புரட்சியில் சிக்கியதும் இந்தச் செயல்முறை ஸ்தம்பிக்க காரணமாக அமைந்தது.

ராஜ்ஜீய, வர்த்த, பாதுகாப்பு உறவுகளை உள்ளடக்கிய மத்திய கிழக்கில் பழைய எதிரிகளுக்கு இடையிலான உறவுகளில் நிகழ்ந்த வரலாற்று மாற்றமாக அவை காணப்பட்டன. ஆனால், அரேபிய எதேச்சதிகாரங்களுக்கு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கிடைப்பது போன்ற அமெரிக்காவின் தூண்டுதல்களை விமர்சகர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

பாலஸ்தீனியர்களின் வரலாற்று சிறப்பு மிக்க சௌதி-இஸ்ரேல் ஒப்பந்த உடன்பாடு விதிமுறைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

அந்த நேரத்தில், இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம் என அறியப்பட்ட அதிபர் டிரம்பின் இஸ்ரேலிய – பாலத்தீனிய சமாதான உடன்படிக்கை, இஸ்ரேல் தரப்பில் அதிக பலன்கள் இருக்கும் வகையில் உள்ள ஒரு ஒப்பந்தம். அதையும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசேலமுக்கு மாற்றியதையும் முன்னிறுத்தி பாலத்தீனம் அமெரிக்காவுடனான ராஜ்ஜீய உறவுகளைப் புறக்கணித்தது.

இந்த உடன்படிக்கையை அரபு ஒற்றுமைக்கு எதிரான துரோகமாகப் பார்த்தது. மாறாக, முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்படாமல், அதற்குப் பதிலாக இந்த முறை சௌதியுடன் இணைவது, சுதந்திர பாலத்தீனிய அரசு என்ற குறிக்கோளை ரியாத்திற்கு நினைவூட்டுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என்று மற்றொரு பாலத்தீனிய மூத்த அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், இதில் கிடைக்கும் நன்மைகள் மிக்க குறைவானதாகக் கருதப்பட்டால் அதில் ஈடுபடுவது பாலத்தீனிய தலைமைக்கு குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்தாகவும் மாறக்கூடும். ஏற்கெனவே சொந்த மக்களிடையே செல்வாக்கற்ற நிலையில் பாலத்தீனிய தலைமை உள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இஸ்ரேல் இயல்புமயமாக்கத்திற்குப் பிறகான கருத்துக் கணிப்பின்படி, பெரும்பான்மையான பாலத்தீனிய மக்கள் அந்த உடன்படிக்கையை இஸ்ரேலின் நலன்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதால் அதை பாலத்தீன் கைவிடுவதாகக் கருதினர்.

பாலத்தீனிய மக்களுக்கு இஸ்ரேல் வழங்கும் எந்தவொரு சலுகையும் நெதன்யாகுவின் கூட்டணியில் உள்ள தீவிர தேசியவாதிகளால் நிராகரிக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒன்று. இது எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் மேலும் தடையாக உள்ளது.

நெதன்யாகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலத்தீனத்திற்கு வழங்க வேண்டிய சலுகைகளை சௌதி அரேபியாவுடனான அமெரிக்க தரகு விவாதங்களின் ஒரு பகுதியாக இல்லாமல், சாதாரண ஒரு விஷயமாக ஒதுக்கித் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: