மொராக்கோ நிலநடுக்கம்: 'என் குடும்பத்தில் 10 பேரை இழந்துவிட்டேன்' - வேதனையில் மக்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரன் டர்னர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் மக்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் அவர்களை உலுக்கும் விதமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பதறியடித்து தங்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடினர்.
உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ஐ தாண்டியுள்ளது. 1,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மராகேஷில் அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக அறியப்படும் இங்கு கடந்த ஆண்டு மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
“மராகேஷில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சத்தம் ஒரு போர் விமானத்தின் சத்தத்தைப் போன்று இருந்தது” என மினா மெட்டியூய் பிபிசியிடம் தெரிவித்தார்.
“என் அறை அங்கும் இங்கும் அசைவதைப் பார்த்தேன். சுவரில் இருந்த புகைப்படங்கள் போன்றவை கீழே விழத் தொடங்கின. நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது.
அப்போதுதான் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரத் தொடங்கினேன். உடனடியாக மக்கள் அலறியடித்தப்படி வீடுகளை விட்டு வெளியே ஓடி வரத் தொடங்கினர். அதை இப்போது நினைத்தாலும் அச்சமாக இருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
'என் குடும்பத்தில் 10 பேரை இழந்துவிட்டேன்'
ஹவுடா அவுட்சாஃப் மராகேஷின் ஜெமா எல்-ஃப்னா சதுக்கத்தின் வழியாக நடந்து கொண்டிருந்தபோது நடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறினார்.
“எப்படி உயிர் பிழைத்தேன் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். இப்போதும் அந்த அதிர்ச்சியில் இருந்து நான் வெளிவரவில்லை,” என்றார்.
“என் குடும்பத்தினரில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் அவர்களுடன் இருந்தேன். இப்போது அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை நம்ப முடியவில்லை,” எனவும் அவர் வேதனையுடன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மறக்க முடியாத இரவு
மராகேஷில் வசிக்கும் பிரெஞ்சு நாட்டவரும் 3 பாரம்பரிய மொராக்கோ வீடுகளின் உரிமையாளருமான மைக்கெல் பிஸ்ஸெட் இது தொடர்பாக பிபிசியிடம் பேசினார்.
“எனது படுக்கை பறந்து செல்லப் போகிறது என்று நினைத்தேன். அரை நிர்வாணமாக சாலைக்கு ஓடிச் சென்று எனது வீடுகளைப் பார்த்தேன். உண்மையிலேயே இதுவொரு பேரழிவுதான்,” என்றார்.
அந்த இரவில் அலறல் சத்தம் கேட்டு விழித்ததாகக் கூறுகிறார் மொராக்கோவில் வாழும் பிரிட்டன் செய்தியாளரான மார்ட்டின் ஜே.
“நானும் என் மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் அலறத் தொடங்கினார். நான் கண் விழித்துப் பார்த்தபோது சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டோம் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. படுக்கை, சுவர் என அனைத்தும் அசைந்துகொண்டிருந்தது,” என அவர் கூறினார்.
மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாக மார்ட்டின் ஜே தெரிவித்தார்.
“இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நிலநடுக்கம் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மொராக்கோவின் அனைத்து நகரங்களும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டுக்கு முன்பாக வீதியில் அமர்ந்திருந்தனர். நல்லவேளையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்படவில்லை.”

பட மூலாதாரம், Getty Images
நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஃபைசல் பதோர் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தார்.
“உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டேன். எத்தகைய ஆபத்தில் உள்ளோம் என்பதை என்னால் உணர முடிந்தது. அப்போது நான் கேட்ட அழுகைகளும் அலறல்களும் தாங்க முடியாததாக இருந்தன,” என்று நம்மிடம் அவர் கூறினார்.
விடுமுறைக்காக மொராக்கோவுக்கு சென்றுள்ள லண்டனை சேர்ந்த அஸா லெம்மர், வெடிப்பு சத்தத்தைக் கேட்டவுடன் தீவிரவாத தாக்குதல் என்று நினைத்ததாகத் தெரிவித்தார்.
நிலம் அதிர்வதை என்னால் உணர முடிந்தது. பாறைகள் விழுவதைப் பார்த்தேன். அப்போதுதான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன். காரில் செல்லும்போது நான் கடந்து சென்ற வீடு ஒன்று இடிந்து விழத் தொடங்கியது என்று தான் எதிர்கொண்ட சூழலை அவர் விவரித்தார்.
அவர் தங்கியிருந்த கட்டடத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால், அருகில் இருந்த கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












