‘இந்தியா’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை? ஜின்னா எதிர்த்தது ஏன்?

இந்தியா பெயர் விவகாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தங்களது நாடு இந்தியா என்று அழைக்கப்பட வேண்டும் என்ற நேருவின் கோரிக்கையை பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுன்ட் பேட்டன் பிரபு ஏற்றுக்கொண்டார்.
    • எழுதியவர், தபிந்தா கோகப்
    • பதவி, பிபிசி உருது.காம், இஸ்லாமாபாத்

இந்த தேசம் அதிகாரப்பூர்வமாக ‘இந்தியா’ என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டு வருகிறது ஆனால் ‘ஹிந்துஸ்தான்’, ‘பாரத்’ என்ற பெயர் மாற்ற கோரிக்கை அவ்வப்போது எழுவதுண்டு.

அதேபோன்று தற்போது நாட்டிற்கு, ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்து வருகிறது.

இதற்கு முன்பும் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. முன்பு இக்கோரிக்கை எழுந்தபோது சுவாரஸ்யம் என்றவென்றால், இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக உருவெடுக்க முக்கிய காரணமான முகமது அலி ஜின்னா ‘இந்தியா’ என்ற பெயரை எதிர்த்தார் என்பதுதான்.

அதை அவர் தவறாக வழிநடத்தும் அதாவது ‘தவறாக வழிநடத்துதல்’ என்று அழைத்தார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியா என்ற பெயர் தொடர்பாக நாட்டிற்குள் சர்ச்சை இருந்து வந்தது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

துணைக் கண்டத்தில் தங்களின் பேரரசுக்கு பெயரிட ஆங்கிலேயர்கள் ‘இந்தியா’ என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்தனர். இது உண்மையில் கிரேக்க வார்த்தையாகும்.

காலனித்துவ சகாப்தத்தின் அடையாளமாக ஆங்கிலேயர்களால் இந்த பெயர் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்த அரசமைப்பு சபையில் ஆட்சேபம் எழுப்பப்பட்டது.

இந்தியா பெயர் விவகாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவில் இருந்து புதிதாக உருவான நாட்டிற்கு பாகிஸ்தான் என்ற பெயர் முகமது அலி ஜின்னாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியா என்ற பெயரை ஜின்னா எதிர்த்தது ஏன்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அதில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. புதிய நாட்டிற்கு ‘பாகிஸ்தான்’ என்ற பெயர் முகமது அலி ஜின்னாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதனால் ‘இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் எந்த சர்ச்சையும் இல்லை என்று வரலாற்று ஆசிரியர் ஜான் கீ தனது ‘India: A History’ என்று புத்தகத்தில் எழுதுகிறார்.

இருப்பினும் இந்தியா என்பது காலனித்துவ அடையாளமாக பார்க்கப்பட்டது. அதன் காரணமாக, தேசம் சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் ‘பாரத்’ என்பது நல்ல பெயராக இருந்தது என்றும் ஜான் கீ தமது நூலில் குறிப்பிடுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, சமஸ்கிருத இலக்கியங்கள் எதிலும், எந்த இடத்திலும் இந்தியா என்ற வார்த்தை குறிப்பிடப்படவி்ல்லை என்பதை மறுக்க முடியாது. பெளத்த அல்லது ஜைன நூல்களிலும் இந்த சொல் இடம்பெறவில்லை.

இவை தவிர, தெற்காசியாவில் பேசப்படும் வேறெந்த மொழியிலும் இந்த வார்த்தை இல்லை.

ஜான் கீயின் கூற்றுப்படி, பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய இந்தியா என்ற பெயரை எந்த நாடும் ஏற்றுக்கொள்ள விரும்பாது என்று முகமது அலி ஜின்னா நம்பினார்.

இருப்பினும், இறுதியில் தங்களது நாடு இந்தியா என்று அழைக்கப்பட வேண்டும் என்று நேரு கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுன்ட் பேட்டன் பிரபு ஏற்றுக்கொண்டபோது, தனது தவறான புரிதலை உணர்ந்ததாக கூறியுள்ளார் ஜான் கீ.

“எந்த நாடும் பிரிட்டிஷ் பெயரை ஏற்க விரும்பாது”

‘மவுன்ட் பேட்டனின் கூற்றுப்படி, நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை இந்தியா என்று அழைக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் ஜின்னா மிகவும் கோபமடைந்தார்’ என்று ஜான் கீ மேலும் எழுதுகிறார்.

அத்துடன், இந்த வார்த்தையின் பயன்பாடு துணைக்கண்டத்தின் மேன்மையான உணர்வைத் தரும். அதை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று ஜின்னா கருதியதாகவும் ஜான் கீ குறிப்பிடுகிறார்.

வரலாற்று ஆசிரியர் ஜான் கீயின் கூற்றுப்படி, அடிப்படையில் சிந்து நதியைச் சுற்றியுள்ள பகுதி ‘இந்தியா’ என்று அழைக்கப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை பாகிஸ்தானில் இருந்தன. இந்தியா பெயர் தொடர்பான முகமது அலி ஜின்னாவின் ஆட்சேபனைக்கு இதுவொரு முக்கிய காரணம்.

வரலாற்று ஆசிரியர் ஆயிஷா ஜலாலின் கூற்றுப்படி, பிரிவினைக்குப் பிறகு,’யூனியன் ஆஃப் இந்தியா’ மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டிற்கும் கவர்னர் ஜெனரலாக தொடர மவுன்ட் பேட்டன் தயாராக இருந்தார்.

பாகிஸ்தானை ஒரு தனி மற்றும் சுதந்திர நாடாக வைத்திருக்கும் திறனைப் பற்றி முஸ்லீம் லீக் தலைவர்கள் அச்சம் கொண்டிருந்தனர் என்று ஆயிஷா ஜலால் எழுதுகிறார்.

அத்துடன் இந்த விஷயத்தில் காங்கிரசின் நோக்கங்கள் தொடர்பாக அவர் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் முஸ்லீம் லீக் இந்தியாவால் ‘யூனியன்’ என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்தியா பெயர் விவகாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 'இந்தியா' என்ற பெயர் தவறாக இருப்பதாகவும், குழப்பத்தை விளைவிக்கும் விதத்தில் உள்ளதாகவும் மவுன்ட்பேட்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் ஜின்னா குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா என்பது தவறான பெயரா?

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, தெற்காசியாவைச் சேர்ந்த சட்டப் பேராசிரியர் மார்ட்டின் லாவ், ‘இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானின் அரசமைப்பு அடித்தளம்’ என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் ஒரு கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட் பேட்டன் பிரபுவுக்கு ஜின்னா சார்பில் எழுதப்பட்ட கடிதம் அது.

அதில், ‘இந்தியா’ என்ற பெயர் தவறாக இருப்பதாகவும், குழப்பத்தை விளைவிக்கும் விதத்தில் உள்ளதாகவும் ஜின்னா குறிப்பிட்டிருந்தார்.

செப்டம்பர் 1947 இல், இந்திய கலைக் கண்காட்சி லண்டனில் நடைபெற்றது. அந்த கண்காட்சியின் கௌரவத் தலைவராக பங்கேற்க வருமாறு ஜின்னாவுக்கு மவுன்ட்பேட்டன் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இந்தியா என்ற பெயரை பயன்படுத்த அனுமதி அளித்ததால் மவுன்ட் பேட்டன் மீது ஜின்னா கோபத்தில் இருந்தார். எனவே அவரது அழைப்பை ஜின்னா நிராகரித்ததாக லாவ் எழுதுகிறார்.

“சில ரகசியமான காரணங்களுக்காக ஹிந்துஸ்தான் இந்தியா என்ற வார்த்தையை ஏற்றுக்கொண்டது வருத்தமளிக்கிறது.

இது நிச்சயமாக தவறாக வழிநடத்தும் மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கம் கொண்டது” என்று மவுன்ட்பேட்டனுக்கு ஜின்னா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்று தனது கட்டுரையில் லாவ் மேற்கோள் காட்டியிருந்தார்.

இந்தியப் பிரிவினைக்கு முன்பே, ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற பெயரை முஸ்லிம் லீக் எதிர்த்தது. அத்துடன் இந்த எதிர்ப்புக்கான காரணம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியா பெயர் விவகாரம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பெயரை மாற்றுவதற்கான சட்ட முயற்சிகள்

தேசப் பிரிவினைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 1949 இல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு குறித்த விவாதம் தொடங்கியது.

அப்போது, நாட்டிற்கு ‘ஹிந்துஸ்தான்’ என்ற பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு ஒன்றின் ஆங்கிலப் பதிப்பில் ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இதுவே அரசமைப்புச் சட்டப் பிரிவு ஒன்றின் ஹிந்திப் பதிப்பில், ‘பாரத்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

வெளிப்படையாக சொல்வதானால் இதுநாள்வரை, இந்தியா என்ற பெயரின் பயன்பாடு எந்த சவாலையும் எதிர்கொள்ளவில்லை. ஊடகங்களும் இந்த வார்த்தையை பயன்படுத்த தொடங்கின.

இருப்பினும், இந்தியாவில் அரசியல்ரீதியான மாற்றங்கள் நிகழும் போதெல்லாம், இந்தியாவுக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை நாட்டுக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்தியா பெயர் விவகாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியா, பாரத் பெயர் விவகாரம் தேசிய அரசியலில் தற்போது புயலைக் கிளப்பி உள்ளது.

இந்த முறை என்ன நடக்கும்?

சமீபகாலத்தில் கடந்த 2020 இல் கூட இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அத்துடன் இந்த கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்தியா என்ற வார்த்தை, ‘இண்டிக்’ என்ற கிரேக்க சொல்லில் இருந்து உருவானது. எனவே இந்தப் பெயரை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

மேலும், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றும் விதத்தில், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-ஐ திருத்தம் செய்யவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.

ஆனால் இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிடவும் மறுத்துவிட்டது.

இந்தியா என்ற பெயர் ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்தியா அதுவே பாரதம்” என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று அப்போது நீதிமன்றம் தெரிவிந்திருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு இரவு விருந்துக்கு (Dinner) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில், உலக தலைவர்களுக்கு அண்மையில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

அதில், இந்திய குடியரசுத் தலைவர் (President Of India) என்பதற்கு பதிலாக, பாரதத்தின் குடியரசுத் தலைவர் ( President Of Bharat) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த பெயர் விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த முன்னெடுப்புக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவ்வபோது எழும் நாட்டின் பெயர் விவகாரத்தில் இந்த முறை வெல்லப் போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: