ஜி20 மாநாட்டில் தமிழகத்தின் 27அடி உயர நடராஜர் சிலை - இதைச் செய்தது யார்?

ஜி20 மாநாடு: உலக தலைவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டு நடராஜர் சிலை

பட மூலாதாரம், SKANDA STHAPATHY

படக்குறிப்பு, ஜி20 மாநாட்டு அரங்கின் முன்பாக தமிழ்நாட்டில் செய்யப்பட்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

புதுடெல்லியில் இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டோடு தொடர்புடைய ஒரு முக்கியமான சிறப்பும் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் வடித்த 27 அடி உயர நடராஜர் சிலை ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

அஷ்ட தாது எனப்படும் எட்டு உலோகங்களால், காவிரி ஆற்றின் வண்டல் மண் கொண்டு செதுக்கப்பட்டிருப்பது இந்தச் சிலையின் சிறப்பு. சோழர் காலத்தில் தஞ்சாவூர் பெரிய கோவில் நடராஜர் சிலை வடித்த குடும்பத்தினர், இதை வடித்துள்ளனர் என்பது மற்றொரு சிறப்பு அம்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களால் செதுக்கப்பட்ட நடனமாடும் நடராஜர் சிலை ஜி20 மாநாட்டில், 'பாரத் மண்டபம்’ என்றழைக்கப்படக்கூடிய அரங்கின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

சோழர் கால பாரம்பரிய குடும்பம் வடித்த சிலை

சோழர் காலந்தொட்டே, சிற்பக் கலையில் ஈடுபட்டு வரும் பாரம்பரியம் கொண்டது தேவசேன ஸ்தபதியின் குடும்பம். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ண ஸ்தபதி, ஸ்ரீகந்த ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகிய மூன்று சகோதரர்களால் இந்தச் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடும்பத்தின் முன்னோர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதில் பங்காற்றியுள்ளனர். அதன் பிறகு, 16ஆம் நூற்றாண்டில் தாராசுரம் மற்றும் சுவாமி மலையில் உள்ள கோவில் சிலைகளின் நிர்மாணப் பணிகளுக்காக சுவாமி மலைக்கு வந்த குடும்பத்தினர் அங்கேயே தங்கி சிற்பக் கலையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள், 34 தலைமுறைகளாக சிலைகள் வடிக்கும் பணியை பாரம்பரியமாகச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சகோதரர்களின் தந்தை தேவசேன ஸ்தபதி, தேசிய விருது பெற்றவர். பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, மொரிசீயஸ், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் உள்ள இந்து கோவில்கள் பலவற்றுக்கு சிலை வடித்துக் கொடுத்தவர்.

தேவசேன ஸ்தபதி குடும்பத்தினர் சுவாமி மலையில் பலருக்கு சிற்பக் கலை பயிற்சி அளித்து வருகின்றனர். தற்போது அந்த ஊரில் 600 சிற்பக் கலைஞர்களும் 100 சிற்பக் கூடங்களும் உள்ளன.

ஜி 20 மாநாடு : உலக தலைவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டு நடராஜர் சிலை

பட மூலாதாரம், SKANDA STHAPATHY

படக்குறிப்பு, எட்டு உலோகங்கள் கொண்டு 18 டன் எடையுடன் செய்யப்பட்டுள்ள இந்தச் சிலை உலகின் மிக உயர்ந்த நடராஜர் சிலைகளில் ஒன்று.

காவிரி ஆற்றின் வண்டல் மண் கொண்டு வடிக்கப்பட்ட சிலை

காவிரி ஆற்றின் படுகையில் குறிப்பிட்ட ஓரிடத்தில் உள்ள வண்டல் மண், சிலைகள் வடிக்க பிரத்யேகமாக பயன்படுத்தப்படுவது சுவாமி மலை சிற்பங்களின் சிறப்பு அம்சமாகும்.

இதற்காக, சுவாமி மலை பஞ்சலோக வெண்கல சிலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

“தஞ்சாவூரில் காவிரி ஆறு வளைந்து செல்லும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் வண்டல் மண் தான் இந்த சிலைகள் வடிக்க மிகச் சிறந்தது. சுவாமி மலையில் செய்யப்படும் சிற்பங்கள் அனைத்தும் இந்த மண்ணைக் கொண்டே செய்யப்படுகின்றன.

இந்த நடராஜர் சிலையும் அதே மண்ணை கொண்டுதான் செய்யப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில், குறிப்பிட்ட இடத்திலிருந்து 2 கி.மீ தள்ளிச் சென்றால்கூட அந்த மண்ணின் தன்மை மாறிவிடும். இந்த சிலைகளில் ரசாயனம் எதுவும் கலப்பதில்லை,” என்கிறார் ஸ்ரீகந்த ஸ்தபதி.

ஜி20 மாநாடு: உலக தலைவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டு நடராஜர் சிலை

பட மூலாதாரம், SKANDA STHAPTHY

படக்குறிப்பு, சோழர் காலத்தில் தஞ்சை பெரிய கோவில் நடராஜர் சிலையை செதுக்குவதில் பணியாற்றிய குடும்பத்தினர் இந்த நடராஜர் சிலையை வடித்துள்ளனர்.

இந்த வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கவில்லை என்கிறார் மூன்று சகோதரர்களில் இரண்டாவது சகோதரரான ஸ்ரீகந்த ஸ்தபதி.

மத்திய கலாசார துறை மற்றும் இந்திரா காந்தி கலை நிறுவனம் கோரிய ஒப்பந்தத்தில் பலருடன் போட்டியிட்டு இந்த வாய்ப்பு தங்களுக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார் அவர்.

“மத்திய அரசால் 27 அடி உயர நடராஜர் சிலை செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில் பல நிபந்தனைகள் இருந்தன. ஐந்து ஆண்டுகளில் 300 சிலைகள் செய்திருக்க வேண்டும், அதற்கான ஜிஎஸ்டி ரசீதுகள் வேண்டும், 10 அடிக்கு மேல் 10 சிலைகள் செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இருந்தன” என்றார் ஸ்ரீகந்த ஸ்தபதி.

ஒப்பந்தம் முடிவாகும் வரை, தங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பவில்லை என்கிறார் அவர். சுவாமி மலை தேவசேன ஸ்தபதி சன்ஸ், ஸ்ரீ ஜெயம் இண்டஸ்ட்ரீஸ் என்ற அவர்களின் சிற்பக் கூடத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

எட்டு உலோகங்கள் கொண்ட அஷ்ட தாது சிலை

பொதுவாக காட்சிப் பொருள்களாக வைக்கப்படும் சிலைகள் செம்பு, பித்தளை, ஈயம் என மூன்று உலோகங்களால் செய்யப்படும். அந்தச் சிலைகளின் உருவங்களில் கண்கள் திறந்திருக்காது.

வீட்டின் பூஜை அறையில், கோவில்களில் வைக்கப்படும் சிலைகள் செம்பு, பித்தளை, ஈயம் தவிர கூடுதலாக சிறிது வெள்ளி மற்றும் தங்கம் கலந்து செய்யப்படும். இந்த சிலைகளில் கண்கள் திறந்திருக்கும். இவை பஞ்சலோக சிலைகள் எனப்படும். பெரும்பாலான சிலைகள் பஞ்சலோக சிலைகளாகத்தான் இருக்கும்.

ஆனால், ஜி20 மாநாட்டில் வைக்கப்பட்டிருக்கும் நடராஜர் சிலை அஷ்ட தாது எனப்படும் எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது.

“பஞ்சலோக சிலைகளில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் தவிர கூடுதலாக பாதரசம், இரும்பு மற்றும் வெள்ளீயம் கலந்து செய்யப்பட்டது இந்த நடராஜர் சிலை.

மேற்கு வங்க மாயாபூரில் உள்ள ISKCON கோயிலுக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஷ்ட தாது சிலை செய்து கொடுத்தோம். அதன் பின் தற்போதுதான் செய்கிறோம்,” என்கிறார் ஸ்ரீகந்த ஸ்தபதி.

அஷ்ட தாது சிலைகள் செய்வது கடினம் என்று கூறும் ஸ்ரீகந்த் ஸ்தபதி, இந்த சிலைகளின் உறுதித்தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார்.

மேலும், “அஷ்ட தாது சிலைகள் பல நூற்றாண்டு காலம் வரை இருக்கக்கூடும். 18 டன் எடை கொண்ட இந்த நடராஜர் சிலைக்காக 21 டன் உலோகங்கள் உருக்கப்பட்டன,” என்றார்.

ஜி 20 மாநாடு : உலக தலைவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டு நடராஜர் சிலை

பட மூலாதாரம், SKANDA STHAPATHY

படக்குறிப்பு, இந்த சிலை ஏழு மாதங்களில் வடிக்கப்பட்டது. இதன் மெழுகு மாதிரிகளைச் செய்ய மூன்று மாதங்கள் ஆனது.

ஏழு மாதங்களாக வடிக்கப்பட்ட நடராஜர் சிலை

ஆனந்த தாண்டவமாடும் 27 அடி நடராஜர் சிலையை வடிக்க ஏழு மாதங்கள் ஆகியுள்ளன. சிலையை வடிப்பதற்கு முன்பாகச் செய்யப்படும் மெழுகு மாதிரியைச் செய்வதற்கே மூன்று மாதங்கள் ஆகியுள்ளன.

இந்த மெழுகு மாதிரியை புகழ்பெற்ற நடன கலைஞர் பத்மா சுப்ரமணியமும், பிரபல நடன கலைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான சோனல் மான்சிங் ஆகியோர் சரி பார்த்து சில திருத்தங்களைச் சொல்ல, அதன்பின் இந்த சிலை முழு வடிவம் பெற்றுள்ளது.

தஞ்சை பெரிய கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், கோனேரி ராஜபுரம் கோவில் ஆகிய மூன்று கோவில்களில் உள்ள நடராஜர் சிலைகளின் அம்சங்களை மாதிரியாகக் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை வடித்த சகோதரர்களில் மற்றொருவரான ராதாகிருஷ்ண ஸ்தபதி இது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்கிறார்.

“இந்த சிலையை இவ்வளவு குறுகிய காலத்தில் செய்து முடித்திருப்பது கனவு போல் உள்ளது. 27 அடி சிலையில், நடராஜர் சிலையின் பாதம் முதல் தலை வரை 14 அடி 3 அங்குலம் உள்ளது. இந்த சிலையை எங்களுடன் சேர்ந்து எங்கள் சிற்பக்கூடத்தைச் சேர்ந்த 32 கலைஞர்கள் செய்துள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த சிலையை சகோதர்களே நேரில் சென்று டெல்லியில் நிர்மாணித்து விட்டு வந்துள்ளனர்.

ஜி 20 மாநாடு : உலக தலைவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டு நடராஜர் சிலை

பட மூலாதாரம், SKANDA STHAPATHY

படக்குறிப்பு, சுவாமி மலையில் உள்ள தேவசேன சிற்பக் கூடத்தைச் சேர்ந்த 32 தொழிலாளர்கள் இந்த சிலையை வடித்துள்ளனர்.

இவர் சிற்பக் கலையை தனது தந்தை தேவசேன ஸ்தபதி மற்றும் கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடித்த கணபதி ஸ்தபதியிடம் இருந்து கற்றுள்ளார்.

“டெல்லியில் உலகத் தலைவர்கள் வருகை புரியும் அரங்கில் நமது நடராஜர் சிலை அமைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்குப் பெருமை, சுவாமி மலைக்குப் பெருமை, அதன் பின்னரே எங்கள் குடும்பத்துக்குப் பெருமை,” என்று ஸ்ரீகந்த் ஸ்தபதி கூறுகிறார்.

ஜி20 மாநாடு நடைபெறுவதற்கு பத்து நாட்கள் முன்புதான் இந்த சிலை சுவாமி மலையிலிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. 36 டயர் கொண்ட கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட இந்த சிலையின் மதிப்பு 10 கோடி ரூபாய்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: