ஒரே நாடு ஒரே தேர்தல் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது என்ன?

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தற்போதைய நடைமுறையின்படி, ஆண்டுதோறும் ஏதேனும் சில மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
    • எழுதியவர், சந்தன் குமார் ஜாஜ்வாடே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு, இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

முதல் கட்டமாக, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். இரண்டாம் கட்டமாக, பொதுத்தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக நாடு முழுவதும் விரிவான விவாதங்களைத் தொடங்கவும், செயல்படுத்தும் குழுவை உருவாக்கவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது

இந்தநிலையில், இந்த பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த பிறகு நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

"நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரசியல் கட்சிகள், நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான நிபுணர்களை கலந்தாலோசித்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளது," என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

"தேர்தல் காரணமாக ஏற்படும் அதிக செலவு குறைய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படக்கூடாது. இன்றைய இந்தியாவும், இன்றைய இளைஞர்களும் வளர்ச்சி விரைவாக நடக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தேர்தல் பணியால் வளர்ச்சிக்கு இடையூறு இருக்கக்கூடாது என்று கருதுகின்றனர்." என்றும் அவர் கூறினார்

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தற்போதைய அரசியல் சூழலில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய அரசமைப்பு சட்டத்தின் கீழ் முதல் பொதுத் தேர்தல் 1952ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

அப்போது நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகும் 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளிலும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டது.

இருப்பினும், அதற்கிடையே இந்தத் தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டது.

இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி 1957ஆம் ஆண்டு கேரளாவில் ஆட்சி அமைந்தது.

அந்த ஆட்சியின் ஐந்தாண்டுக் காலம் முழுமையாக நிறைவடைவதற்கு முன்னமே அரசமைப்பு சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு ஆட்சியைக் கலைத்தது. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனால் 1960இல் கேரள சட்டமன்றத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டியதானது.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்ன சொல்கிறார்?

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவற்றில் முக்கியமாக, 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு, சில மாநிலங்களின் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் திட்டமிடப்பட்டதற்கு முன்பாக 1972இல் நடத்தப்பட்டது.

கடந்த 1967இல், பல மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

பிகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா (அப்போது ஒரிசா) ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளோ அல்லது கூட்டணி ஆட்சியோ அமைக்கப்பட்டது.

ஆனால், இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி முன்கூட்டியே கலைக்கப்பட்டன.

இப்படியாக நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் மாறியது. இந்நிலையில் முந்தைய அந்தத் தேர்தல் நடைமுறையை தற்போது மீண்டும் கொண்டு வர மத்திய பாஜக அரசு முயல்கிறது என்கிறார் ராவத்.

ஒரே நாடு ஒரே தேர்தல்: 'தற்போதைய சூழலில் எளிதான காரியமல்ல'

இந்தியாவில் 1967 வரை மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. எனவே அப்போது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் இருந்ததால், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது எளிதாக இருந்தது.

ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் மத்தியில் பாஜகவும், பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகளும் ஆட்சியில் உள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்கிறார் ராவத்.

அதேநேரம், நாடாளுமன்ற மக்களவைக்கும், அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமா? அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது என்றும் ராவத் தெரிவித்துள்ளார்.

இவர் 2015இல், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அரசமைப்பு சட்டத்தில் என்ன திருத்தங்கள் தேவை?

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

“நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தால் முடியும் என்று மத்திய அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன், நான்கு முக்கியமான பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்போது ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது,” என்று ராவத் கூறுகிறார்.

முதலாவதாக, சட்டமன்றங்களின் பதவிக்காலம், மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது உள்ளிட்ட விதிமுறைகள் அடங்கிய அரசமைப்பு சட்டத்தின் ஐந்து பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது தவிர, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மற்றும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வகை செய்யும் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் ஆணையம் தெரிவித்திருந்ததாக ராவத் கூறுகிறார்.

அதாவது ‘நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்பதற்குப் பதிலாக, ‘ஆக்கப்பூர்வமான நம்பிக்கை தீர்மானம்’ என்னும்படி இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதன்படி நாடாளுமன்றத்திலோ, மாநில சட்டமன்றங்களிலோ ஒரு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதில் ஆட்சி கவிழ நேர்ந்தால், அதன் காரணமாக நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களிலும் பதவிக்காலம் பாதிக்கப்படாதபடி, புதிய அரசு ஆட்சியைத் தொடரும் விதத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததாக ராவத் கூறுகிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த வேண்டுமானால், தற்போதைய நிலையில் கூடுதலாக 12 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்கிறார் ராவத்.

கூடுதலாக எவ்வளவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை?

ஒரே நாடு ஓரே தேர்தலை செயல்படுத்த வேண்டுமானால், மொத்தம் 35 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை.

இதனடிப்படையில், தற்போதைய நிலையில் கூடுதலாக 12 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதே எண்ணிக்கையில் விவிபேட் இயந்திரங்களும் தேவைப்படும்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரம் ஒன்றின் விலை தலா 17 ஆயிரம் ரூபாய். அத்துடன் இவற்றைப் பெற ஓராண்டுக்கு மேலாகும் எனவும் கூறுகிறார் ராவத்.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு என அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால், தற்போதுள்ள எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையிலான இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படும் என்று பிபிசியிடம் கூறினார் இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோஷி.

“நடைமுறையில் சாத்தியமில்லை”

அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்தையும் ஒரே நேரத்தில் கலைக்க முடியாது என்பதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறையில் சாத்தியப்படாது என்கிறார் மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளரும், அரசமைப்பு சட்டத்தில் நிபுணத்துவம் மிக்கவருமான பிடீடி ஆச்சாரி.

“சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கான உரிமை அந்தந்த மாநில அரசுக்குத்தான் உண்டு. ஒரு மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுவது போன்ற தருணங்களில்தான் மத்திய அரசு அங்கு நடைபெற்று வரும் ஆட்சியைக் கலைக்க முடியும். ஆனால், ஒரே நேரத்தில் அனைத்து மாநில சட்டமன்றங்களையும் மத்திய அரசால் முன்கூட்டியே கலைக்க இயலாது,” என்கிறார் ஆச்சாரி.

எந்தவொரு மாநிலத்தின் சட்டமன்றத்தையும் அதன் பதவிக்காலத்துக்கு முன்பாகக் கலைப்பது அரசமைப்பு நெருக்கடியை உருவாக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும் இது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானதாகவும், அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானதாகவும் இருக்கும் எனவும் ஆச்சாரி கூறுகிறார்.

அதிகார மோதலும், அரசமைப்பு நெருக்கடியும்

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1967இல், பல மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் அது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் எனக் கருதுகிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோஷி.

அப்படியொரு நிலை ஏற்படும்போது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையமும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த மாநில தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும்.

அத்தகைய சூழல், தேர்தல் நடத்தும் உரிமை தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே விவாதம் எழலாம். அது அரசமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கலாம். இதுதொடர்பாக அரசமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்தால், அதன் விளைவாக மாநில அரசுகளுடன் மோதல் உருவாகலாம்.

இதைத் தவிர, தேர்தலுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி அல்லது கூட்டணிக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை என்றால், அது மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் தேர்தல் நடத்த எவ்வளவு செலவு?

ஒவ்வொரு முறை தேர்தல் நடத்துவதற்கும் செய்யப்படும் செலவும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தேவைக்கான முக்கிய காரணமாகத் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதில் உண்மை முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது.

“உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் குறைந்த செலவில் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சராசரியாக ஒரு அமெரிக்க டாலர் செலவிடப்படுகிறது.

இதில் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், பணியாளர்களுக்கான ஊதியம், பாதுகாப்புப் பணியாளர்களின் சம்பளம், வாக்குப்திவு இயந்திரத்துக்கான செலவு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்,” என்கிறார் ஓ.பி.ராவத்.

தேர்தல் செலவுகள் தொடர்பாக கிடைக்கப் பெறும் தரவுகளின் அடிப்படையில், கென்யாவில் நடத்தப்படும் தேர்தல்களில் ஒரு வாக்காளருக்கு சராசரியாக 25 டாலர்கள் செலவிடப்படுகின்றன. இது உலக அளவில் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் தேர்தலில் ஒன்று.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவில் ஒரு தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சராசரியாக ஒரு அமெரிக்க டாலர் செலவிடப்படுகிறது.

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சுமார் 1.75 டாலர்கள் செலவிடப்பட்டது.

“இந்தியாவில் தேர்தலை நடத்த சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் செலவாகும். இது பெரிய விஷயமில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்கின்றன.

இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது. இதன் மூலம் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பணம் ஏழைகளைச் சென்றடைகிறது,” என்கிறார் எஸ்.ஒய்.குரோஷி.

அரசியல் ரீதியான எதிர்ப்பு எப்படி இருக்கும்?

பேனர்கள், விளம்பரங்கள் என்று ஆட்டோக்காரர் முதல் போஸ்டர் ஒட்டுபவர் வரை தேர்தல் நேரத்தில் பல்வேறு தரப்பினருக்கும் வேலை கிடைக்கும்.

குரோஷியின் கூற்றுப்படி, தேர்தல்களின்போது சாதாரண குடிமக்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களை வலியச் சென்று பார்க்கும் ஒரே சந்தர்ப்பம் இதுதான்.

சாமானியர்களும் இதை விரும்புகிறார்கள். அதாவது அரசியல் கட்சியினர் மீண்டும் மீண்டும் தங்களை நாடி வந்து பார்க்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் விருப்பமாக உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, ஒன்றரை மாதங்களுக்கு மத்திய அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ முடியாது.

ஆனால், ஏற்கெனவே அமலில் இருக்கும் திட்டங்களில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அதேநேரம் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் நடைபெறும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் எந்த பாதிப்பும் உண்டாகாது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1983இல் எழுந்தது.

இந்திரா காந்தி கண்டுகொள்ளாத கோரிக்கை

இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1983இல் எழுந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

அதன்பிறகு 1999இல், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்தது.

அப்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

(2023-ஆம் ஆண்டு வெளியான இந்த கட்டுரை மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: