பல்லடத்தில் மதுபோதையில் 4 பேர் வெட்டிக் கொலை - விசாரணையின் நிலை என்ன?

இறந்த நான்கு பேர்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, அரிசிக்கடை உரிமையாளர் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட நான்கு பேரை போதையில் இருந்த கும்பல் வெட்டிப்படுகொலை செய்தனர்.
    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்படும் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமாரை காவல்துறையினர் முட்டியிலும் தொடையிலும் சுட்டுப் பிடித்துள்ளனர்.

தப்பியோட முயன்றபோது அவரைச் சுட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

பல்லடம் அருகே 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று சரணடைந்தார் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார். இவரிடம் பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை, பதுக்கி வைத்துள்ள இடத்தை காட்ட கள்ளக்கிணறு அருகேயுள்ள பகுதிக்கு ராஜ்குமாரை அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஆயுதங்கள் பதுக்கி வைத்த இடத்தினருகே, வந்ததும் வெங்கடேசன் அங்கிருந்து, தப்பிச் செல்ல முயன்றதாகவும், போலீசார் எச்சரித்தும் ஓட முயன்றவரை இரண்டு முறை முட்டியிலும்,ஒரு முறை தொடையிலும் சுட்டு பிடித்ததாக உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர் .

காவல்துறையினர் ராஜ்குமாரின் இரண்டு காலிலும், கட்டுப்போட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை பல்லடம் அருகே உள்ள தொட்டம்பட்டி வாட்டர் டேங்க் மேல் மறைத்து வைத்திருப்பதாக கூறி அதை எடுத்து தருவதாக கூறி மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறிச் செல்லும் போது பின்னே சென்ற போலீசாரை தள்ளிவிட்டு விட்டு செல்லமுத்து நீர்த்தேக்க தொட்டி மீது இருந்து குதித்து தப்பி செல்ல முயற்சி செய்த போது கால் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை கூறியது.

கால் முறிவு ஏற்பட்ட செல்லமுத்துவை காவல்துறையினர் உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் வெங்கடேஷைபிடிக்க காவல்துறை தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் வெங்கடேஷ் மற்றும் விசால் ஆகியோர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். தற்போது வெங்கடேஷுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.

பல்லடம் கொலை

காவல்துறை அளித்துள்ள விளக்கம் என்ன?

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கூறும்போது

கொலை நடந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கள்ளக்கிணறு பகுதியில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறிலும் முன்விரோதம் காரணமாகவும் கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே அழைத்து சென்ற போது வெங்கடேஷ் தப்பிக்க முயன்றதால் அவர் மீது சிறிய அளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட வேண்டியதாயிற்று" என விளக்கமளித்தார்

4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார், விஷால் என்கிற சோனைமுத்தையா, செல்லமுத்து , வெங்கடேஷின் தந்தை ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

டி.எஸ்.பி சௌமியா

பட மூலாதாரம், Sowmya

படக்குறிப்பு, டி.எஸ்.பி சௌமியா

தப்பியோடியவரை சுட்டுப் பிடித்த டிஎஸ்பி சௌமியா

குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது யார் என்பது குறித்து பிபிசி தமிழிடம் திருப்பூர் மாவட்ட எஸ்.பி சாமிநாதன் பேசினார்.

"குற்றவாளி செல்லமுத்து தப்பிக்க முயலும் போது தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே விழுந்த போது காலில் முறிவு ஏற்பட்டது. முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றார். அப்போது, டி.எஸ்.பி சௌமியா, வெங்கடேஷின் காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளார். தற்போது இந்த வழக்கில் உள்ள அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்துள்ளோம்," என்றார்.

நான்கு பேர் கொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்டது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ் (45). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.

இவரின் வீட்டுக்கு அருகே இவருக்கு நிலம் உள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 3-ஆம் தேதி இரவு நான்கிற்கும் மேற்பட்டோர் மோகன்ராஜின் நிலத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு சென்ற மோகன்ராஜ், மது அருந்திக்கொண்டிருந்த கும்பலிடம் ‘இங்கு மது அருந்தக்கூடாது’ என, கண்டித்து அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அந்த நிலத்திலிருந்து சென்ற அந்தக்கும்பல், கோபமடைந்து அரிவாள்களுடன் மோகன்ராஜ் வீட்டுக்கு வந்து அவரின் வீட்டுக்கு அருகிலேயே வைத்து அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.

மோகன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வந்த அவரது தாய் புஷ்பவதி (68), மாதப்பூர் ஊராட்சியின் பாஜக கிளைத்தலைவராக இருந்த அவரது அண்ணன் செந்தில்குமார் (47) மற்றும் சித்தி ரத்தினாம்மாள் (58), மோகன்ராஜை காப்பாற்ற, அந்தக் கும்பலை தடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால், அந்தக் கும்பல் அவர்கள் மூவரையும் கொடூரமாகத் தாக்கியதில், படுகாயமடைந்து நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர்களின் குரல் கேட்டு அங்கு பொதுமக்கள் வந்ததும், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதற்கிடையில் இறந்த நான்கு பேரின் உடல்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்காக எடுத்துச்சென்ற நிலையில் நேற்று இரவு(செப்டம்பர் 4), குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, மருத்துவமனைக்கு முன்பு செந்திகுமாரின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதல் தகவல் அறிக்கையில் என்ன இருக்கிறது ?

தமிழ் நாடு போலீஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நான்கு பேர் கொண்ட கும்பல் செந்தில்குமார் உள்பட நான்கு பேரை கொலை செய்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளதாக விசாரணை அதிகாரி கூறினார்.

இச்சம்பவம் குறித்து மோகன்ராஜின் மனைவி கனகரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ், செந்தில்குமாரிடம் ஓட்டுநராக பணியாற்றுவதற்கு முன்னதாக கறிக்கடை நடத்தி வந்ததாகவும், அப்போது மோகன்ராஜ் மற்றும் வெங்கடேஷுக்கு இடையே பிரச்னை இருந்ததாகவும் பதிவு செய்துள்ளனர்.

மோகன்ராஜ் மனைவி கனகரத்தினம் கொடுத்துள்ள புகாரில்,"எனது கணவர் கள்ளக்கிணறு தண்ணீர் பந்தலில் எஸ்எம்ஆர் என்ற பெயரில் 'ரெஸ்டாரண்ட்' வைத்து நடத்தி வந்தார். அப்போது அந்த ரெஸ்டாரண்டுக்கு எதிரில் வெங்கடேஷ் கோழி கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

பின், எனது கணவர் அந்த ரெஸ்டாரண்டை வேறு ஒரு நபருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அப்போது எனது கணவர், வெங்கடேஷின் கறிக்கடையில் கறி எடுத்து கடன் வைத்திருந்ததாக வெங்கடேஷ் அந்த ரெஸ்டாரண்டில் இருந்த சிலிண்டரையும் கோழி கூண்டுகளையும் எடுத்துச் சென்றுவிட்டார்.

இதனால், எனது கணவருக்கும், வெங்கடேஷுக்கும் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது," எனக் கூறியுள்ளார்.

முன்விரோதக் கொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோகன்ராஜ் மனைவி கனகரத்தினம் கொடுத்துள்ள புகாரில் அவரது கணவருக்கும் கொலை செய்த வெங்கடேஷுக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, பல்லடம் காவல் ஆய்வாளர் சரஸ்வதி,

‘‘நான்கு பேர் கொண்ட கும்பல் செந்தில்குமார் உள்பட நான்கு பேரை கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

நாங்கள் விசாரித்ததில், திருநெல்வேலியை சேர்ந்த குட்டி என்கிற வெங்கடேஷ், செந்தில்குமாரின் கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார். இருவருக்குள்ளும் முன்விரோதம் உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,’’ என்றார்.

மேலும் பேசிய அவர், ‘‘வெங்கடேஷ் தலைமையிலான கும்பல் செந்தில்குமாரின் நிலத்தில் அமர்ந்து மது அருந்திய போது, செந்தில்குமார் அவர்களை கண்டித்து அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்று அரிவாள்களை எடுத்துக்கொண்டு வந்து, செந்தில்குமாரின் குடும்பத்தினரை கொலை செய்துள்ளார்.’’ என்றார்.

முன்விரோதம் காரணமா ?

முன்விரோதக் கொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெங்கடேஷ் முன்னதாகவே செந்தில்குமாரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், கொலை செய்யப்பட்ட செந்தில் குமாருக்கும் வெங்கடேஷுக்கும் முன்னதாகவே விரோதம் இருந்ததாகக் கூறினார்.

“வெங்கடேஷ் முன்னதாகவே செந்தில்குமாரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக, அவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார், செந்தில்குமார். அந்த கோபமும் இருந்துள்ளது.

ஆனால், சம்பவம் நடந்தபோது அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு அவர்கள் வரவில்லை. அவர்கள் மது அருந்தத்தான் வந்துள்ளார்கள். ஆனால், அதை தடுத்தவுடன், செந்தில் குமார் மீதிருந்த கோபகம் இரட்டிப்பாகி, அவரை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்,” என்றார் சாமிநாதன்.

எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம்

இச்சம்பவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியதுடன் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழ் நாடு போதைப் பொருட்களின் தலைநகரமாக திகழ்வதாகவும் அவர் எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: