புதின் - கிம் சந்திப்பு பற்றி அமெரிக்காவுக்கு என்ன கவலை? தென் கொரியா ஏன் அஞ்சுகிறது?

வட கொரியா, ரஷ்யா, கிம் ஜாங் உன், விளாதிமிர் புதின், யுக்ரேன்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

    • எழுதியவர், ஜார்ஜ் ரைட் மற்றும் ஜான் மெக்கென்ஸி
    • பதவி, பிபிசி செய்தியாளர்கள்

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா சென்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சிபிஎஸ் இடம் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனில் நடக்கும் போரில் வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.

திட்டமிடப்பட்டிருக்கும் இந்தக் கூட்டம் எங்கு நடக்கவிருக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மற்ற அமெரிக்க ஊடகங்களிலும் வெளிவந்திருக்கும் இந்தச் செய்தி அறிக்கைக்கு வட கொரியாவோ, ரஷ்யாவோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

கிம் ஜாங் உன், பெரும்பாலும் பாதுகாப்பான ஒரு ரயிலில் பயணம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் சில வட்டாரங்கள் தெரிவித்திருக்குன்றன.

சமீபத்தில், வட கொரியா-ரஷ்யாவுக்கு இடையிலான ஆயுதப் பேச்சுவார்த்தைகள் ‘சுறுசுறுப்பாக முன்னேறி வருகின்றன’ என்ற புதிய தகவல் கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியிருந்தது. அந்த அறிவிப்புக்குப் பின்னரே இந்தச் சந்திப்பு சாத்தியமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷோய்கு, சமீபத்தில் வட கொரியாவுக்குச் சென்றிருந்தபோது, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்க பியோங்யாங்கை சம்மதிக்க வைக்க முயற்சித்ததாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியின் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களில் Hwasong கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அடங்கும். இது திட எரிபொருளைப் பயன்படுத்தும் வட கொரியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) என்று நம்பப்படுகிறது.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு கிம் ஜாங் உன் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நாட்டின் கதவுகளைத் திறந்தது அதுவே முதல் முறை.

அமெரிக்காவின் எச்சரிக்கை

அந்தச் சந்திப்பில் புதின் மற்றும் கிம் ஜாங் உன் இருவரும் ‘இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க உறுதியளிக்கும்’ கடிதங்களைப் பரிமாறிக் கொண்டனர், என்று கிர்பி தெரிவித்தார்.

“ரஷ்யாவுடனான ஆயுதப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தவும், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று பியோங்யாங் செய்த பொது உறுதிமொழியைப் பின்பற்றுமாறும் நாங்கள் DPRK-யை வலியுறுத்துகிறோம்," என்றும் கிர்பி கூறியிருந்தார். கிர்பி வட கொரியாவைப் பற்றிப் பேசும் போது DPRK என்ற பெயர்ச் சுருக்கத்தைப் பயன்படுத்தினார். இதன் பொருள் Democratic People's Republic of Korea – ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு.

வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், பொருளாதாரத் தடைகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்குப் பதிலாக ரஷ்யா வட கொரியாவுக்கு என்ன வழங்கும் என்ற கவலை அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் உள்ளது. இது ஆசியாவில், ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

வட கொரியா, ரஷ்யா, கிம் ஜாங் உன், விளாதிமிர் புதின், யுக்ரேன்

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷோய்கு, சமீபத்தில் வட கொரியாவுக்குச் சென்றிருந்தபோது காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களில் Hwasong கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அடங்கும்

உணவு, பண தேவையில் இருக்கும் வட கொரியா

திங்களன்று, தென் கொரியாவின் புலனாய்வுச் சேவை, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நடத்தியதைப் போன்றே, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்துமாறு ஷொய்கு பரிந்துரைத்ததாகத் தெரிவித்தது.

பியோங்யாங்கிற்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் ரஷ்யா வட கொரியாவுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று தென் கொரியா அஞ்சுகிறது.

இதைவிடப் பெரிய கவலையாக இருப்பது, கிம் ஜாங் உன், தனது அணு ஆயுதத் திட்டத்தில் முன்னேற்றம் காண, தனக்கு மேம்பட்ட ஆயுதத் தொழில்நுட்பத்தை வழங்குமாறு புதினிடம் கேட்கலாம் என்பது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் மூலோபாய வழிமுறையாக இருப்பதைவிட ஒரு பரிவர்த்தனையாகவே அமையும் வாய்ப்புகள் உள்ளன. இப்போதைக்கு, ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் தேவை. பொருளாதாரத் தடைகளால் சிக்கலுக்குள்ளாகியிருக்கும் வடகொரியாவிற்குப் பணமும் உணவும் தேவை.

வட கொரியா, ரஷ்யா, கிம் ஜாங் உன், விளாதிமிர் புதின், யுக்ரேன்

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, இந்தப் பயணம் இப்போது நடைபெறாமல் போவதற்கான வலுவான காரணம், ஏனெனில் கிம் ஜாங் உன், தனது தனிப்பட்டப் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலைப்படுபவர், என்கின்றனர் நிபுணர்கள்

‘பயணம் நடைபெறாமல் போகவும் வாய்ப்புண்டு’

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் கிம் ஜாங் உன் மற்றும் புதினுக்கு இடையிலான சந்திப்பு நடைபெறலாம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் இராஜதந்திர நிருபர் எட்வர்ட் வோங், பிபிசி நியூஸ் சேனலிடம், வட கொரிய அதிகாரிகளின் முன்கூட்டிய குழு கடந்த மாத இறுதியில் விளாடிவோஸ்டாக் மற்றும் மாஸ்கோவிற்குச் சென்றதாக தெரிவித்தார்.

“வட கொரியத் தலைவரின் பயணங்களில் நெறிமுறைகளைக் கையாளும் பாதுகாப்பு அதிகாரிகளை இந்தப் பயணத்தில் இருந்தனர், எனவே இதைப் பார்க்கும் அதிகாரிகளுக்கு இது ஒரு வலுவான சமிக்ஞை," என்று திரு வோங் கூறினார்.

யுக்ரேன் போரில் பயன்படுத்துவதற்கு வட கொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை ரஷ்யா மற்றும் வட கொரியா மறுத்துள்ளன.

2006 மற்றும் 2008 க்கு இடையில் வட கொரியாவுக்கான இங்கிலாந்து தூதராக பணியாற்றிய ஜான் எவரார்ட் பிபிசியிடம் பேசியபொது, இந்தப் பயணம் தொடர்பாக எழுந்திருக்கும் பேச்சுகள் “இந்தப் பயணம் இப்போது நடைபெறாமல் போவதற்கான வலுவான காரணம் உள்ளது, ஏனெனில் கிம் ஜாங் உன், தனது தனிப்பட்டப் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலைப்படுபவர்,” என்றார்.

மேலும், ரஷ்யாவிற்குத் தேவையான ஆயுதங்கள் வடகொரியாவில் இருந்தாலும், ‘அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன’ என்று அவர் கூறினார்.

புதினுடன் இதற்கு முந்தைய சந்திப்பு

புதினும் மற்றும் கிம் ஜாங் உன் கடைசியாக 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்தனர். ரஷ்யாவிற்குக் கிம் ஜாங் உன் ரயிலில் சென்றிருந்தார். அவரை அதிகாரிகள், பாரம்பரிய முறைப்படி ரொட்டி மற்றும் உப்பு வழங்கி வரவேற்றனர். கிம் ஜாங் உன்னின் கடைசி வெளிநாட்டுப் பயணமும் இதுவே.

சந்திப்புக்குப் பிறகு, புதின், தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிடுவதற்கு, கிம்மிற்கு ‘பாதுகாப்பு உத்தரவாதங்கள்’ தேவைப்படுவதாகக் கூறினார்.

கிம் ஜாங் உன் மற்றும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இடையே வியட்நாமில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களைக் களைவது பற்றி நடந்த ஒரு நடந்த ஒரு சந்திப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அந்தச் சந்திப்பிற்குச் சில மாதங்களுக்குப் பிறகு கிம் ஜாங் உன் புதினைச் சந்தித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: