சந்திர பாபு நாயுடு ஊழல் வழக்கில் சிக்கியது எப்படி? அவர் கைது செய்யப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
- பதவி, பிபிசி தெலுங்கு
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.371 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் சிஐடி போலீசாரால் நேற்று (செப்டம்பர் 9) கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவதாக இன்று (செப்டம்பர் 10) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக 2021 டிசம்பரில் 26 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அப்போது சந்திரபாபு நாயுடுவின் பெயர் இடம்பெறவில்லை. பின்னர் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டது.
ராயலசீமா பகுதியில் அவர் ஒரு பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நந்தியால் நகரில் தங்கியிருந்தபோது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப் பட்டதைத் தொடர்ந்து, அவர் ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவரது கைது நடவடிக்கைக்கு எதிராகப் பல பகுதிகளில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனால் அவரை விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்ல 11 மணிநேரம் ஆனதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 50(1)(2) இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு மீது குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவுகள் 120 (b), 166, 167, 418, 420, 465,468, 471, 409, 201, 109 ஆகியவற்றின் கீழும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 34, 37, ஊழல் தடுப்புச் சட்டம் 1988இன் பிரிவுகள் 12, 13(2), 13(1)(c), ஆகியவற்றின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், அந்தப் பிரிவுகள் என்ன சொல்கின்றன என்பதும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை

பட மூலாதாரம், UGC
விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஞாயிறு அன்று நடைபெற்ற விசாரணையின் இறுதியில் அவரை செப்டம்பர் 22ஆம் தேதி வரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின்போது சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 409ஐ போலீசார் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து வாதிட்ட அவர், சட்டப்பிரிவு 409ஐ பயன்படுத்தி வழக்கு பதிவு செய்வதற்கு முன், ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என்று நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
சந்திரபாபு நாயுடுவை கைது செய்வதற்கு முன் ஆளுநரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் சிஐடி அதைச் செய்யவில்லை என்பதால் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் லூத்ரா நீதிமன்றத்தில் வாதிட்டார். சந்திரபாபுவின் உரிமையை மீறும் வகையில் சிஐடி போலீசார் செயல்பட்டதாகவும் லூத்ரா கூறினார்.
எந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? அவற்றில் என்ன தண்டனை கிடைக்கும்?
சந்திரபாபு நாயுடு மீது எந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தெலங்கானா உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணனிடம் பிபிசி பேசியது.
இந்தப் பிரிவுகள் எந்த சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், அவை நிரூபிக்கப்பட்டால் என்ன மாதிரியான தண்டனைகள் விதிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.

"இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் ஜாமீனில் வெளிவர முடியாது எனத் தெரிய வருவடடாக" லட்சுமிநாராயணா கூறினார்.
சந்திரபாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகள் குறித்தும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்தப் பிரிவுகளின் கீழ் விதிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் லட்சுமிநாராயணா விளக்கமளித்தார்.
120(பி): இது சட்டத்துக்கு எதிராக ஒருவர் மற்றொருவருடன் இணைந்து சதித்திட்டம் தீட்டுவதைக் குறிக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மற்ற குற்றங்கள் அந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால் அதற்கு 6 மாதங்கள் சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
166: மக்கள் பிரதிநிதியாக ஒருவர் செயல்படும்போது அவர் சட்டவிரோதமாக ஓர் அமைப்பு அல்லது நபருக்கு சேதம் ஏற்படுத்தினால் இந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.
இந்த பிரிவின் கீழ் ஒரு குற்றத்திற்கு ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறை தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
167: அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அல்லது மின்னணு ஆவணங்களை ஒரு மக்கள் பிரதிநிதியாகக் கையாளுதல், போலி ஆவணங்களைத் தயாரித்து ஒரு நபர் அல்லது நிறுவனத்திற்கு சேதம் விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தப் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒரு குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

பட மூலாதாரம், UGC
418: இது மோசடி தொடர்பான குற்றங்கள் குறித்த ஒரு சட்டப்பிரிவு. ஒரு சட்டத்தை மதிக்க வேண்டிய ஒரு நபர் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக அவர்களுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு மோசடி செய்யும்போது அவர் மீது இந்தப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
420: சட்டத்தை ஏமாற்றும் ஒரு நபர், மதிப்புமிக்க பொருள் அல்லது பிறரின் சொத்தை அபகரித்தல், நேர்மையற்ற முறையில் செயல்படுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடும்போது இந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
465: இது போலி ஆவணங்களைப் பயன்படுத்தும் குற்றம் குறித்த பிரிவாக இருக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் போது, ஜாமீனில் வெளியே வரமுடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
468: மோசடி செய்யும் நோக்கத்துடன் போலி ஆவணம் அல்லது மின்னணு ஆவணத்தைப் பயன்படுத்தும் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்ய இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

பட மூலாதாரம், UGC
471: ஒரு ஆவணம் போலி ஆவணம் என்று தெரிந்தும் அதை மோசடியாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்தால் ஜாமீனில் வெளியே வரமுடியும். இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும் போது, மோசடியை பொறுத்தே தண்டனை விதிக்கப்படுகிறது.
409: நம்பிக்கை மீறல் குற்றவாளின் மீது இந்தப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மக்கள் பிரதிநிதி, வங்கியாளர்கள், பொது ஊழியர்கள், வணிகர், பங்குதாரர், தரகர், வழக்கறிஞர், முகவர் என யாரும் இந்த வகையான குற்றச்சாட்டுகளில் சிக்கி, நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்போது, பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
201: குற்றச் சான்றுகளைத் திருத்தும் அல்லது அழிக்கும் ஒரு நபர் மீது இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வழக்கின் தீவிரத்தைப் பொறுத்து, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
109, 34, 37: ஒரு குற்றம் நடக்கத் தூண்டுகோலாக இருக்கும் நபர் மீது இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 12, 13(1)(c),(d), 13 (2) : இவை அனைத்தும் ஊழலுக்கு எதிரான பிரிவுகள். குற்றம் நிரூபிக்கப்படும்போது, குற்றத்தினுடைய தீவிரத்தின் அடிப்படையில் தகுந்த தண்டனைகள் விதிக்கப்படும் என்று வழக்கறிஞர் லட்சுமிநாராயணா பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், UGC
சந்திரபாபு நாயுடு மீது என்ன குற்றச்சாட்டு?
சந்திரபாபு நாயுடு மீதான வழக்கு குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது, 2014ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் அரசாங்கம் திறன் மேம்பாட்டுக் கழகத்தைத் தொடங்கியதாகவும், அதன் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக சுமார் ரூ.3,300 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்த சீமென்ஸ் நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது என்றும், அதன்படி சீமென்ஸ் நிறுவனம் 6 பயிற்சி மையங்களைத் தொடங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் 90 சதவிகித பணிகளை சீமென்ஸ் நிறுவனம் பொறுப்பேற்று நிறைவேற்ற வேண்டும் என்றும், பத்து சதவீத பணிகளுக்கான நிதி உதவி அவ்வப்போது அளிக்கப்படும் என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், சீமென்ஸ் நிறுவனம் ஒரு ரூபாய்கூட முதலீடு செய்யாத நிலையிலும், 5 தவணைகளில் ஆந்திர அரசு ரூ.371 கோடியை விடுவித்தது என்றும் சிஐடி போலீசார் கூறியுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி விடுவிக்கப்பட்டதாகவும், அரசை ஏமாற்றி பெருமளவு நிதியைக் கையாடல் செய்வதற்கென்றே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே ஆந்திர மாநில சிஐடி போலீசார் 2021 டிசம்பர் 10 அன்று வழக்கு பதிவு செய்தனர்.

பட மூலாதாரம், APCID
இந்த நிலையில், தான் ஒரு தவறும் செய்யவில்லை என்றும், அதனால் இந்த வழக்கு குறித்து எந்த அச்சமும் இல்லை என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
"நான் உண்மையில் ஏதாவது தவறு செய்திருந்தால், தூக்கில் தொங்கவும் தயார். இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை என்னால் நிரூபிக்க முடியும்," என அவர் கூறியுள்ளார்.
மாநில அரசின் ஆலோசகராக இருக்கும் சஜ்ஜல ராமகிருஷ்ண ரெட்டி இந்தக் கைது நடவடிக்கை பற்றிப் பேசுகையில், "சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலேயே அவரை போலீசார் கைது செய்துள்ளனர்," என்றார்.
ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். சிபிஐ கட்சியின் தேசிய செயலாளர் கே. நாராயணன் இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி இந்த கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது சமூக ஊடக பதிவில், "எந்தவித விளக்கமும் கேட்காமல் இப்படி ஒரு மக்கள் தலைவரை திடீரெனக் கைது செய்வது அத்துமீறல் என்பதில் சந்தேகம் இல்லை.
சட்டநெறிமுறைகளுக்கு உட்பட்டு போலீசார் செயல்படவில்லை. இது நியாயமற்றது," எனத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












