மதுவில் 'மெத்தனால்' கலப்பை அறிவது எப்படி? தவறுதலாக குடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டேனியல் கல்லாஸ், தாமஸ் பாப்பன் & ஜூலியா ப்ரான்
- பதவி, பிபிசி செய்தி பிரேசில்
ஜின் மற்றும் வோட்கா போன்ற மதுபானங்களை குடிக்க வேண்டாம் என்று பிரேசில் அரசாங்கம் மக்களை எச்சரிக்கிறது. ஏனென்றால், மதுபானங்களில் மெத்தனால் கலந்ததன் காரணமாக அக்டோபர் 3, 2025 நிலவரப்படி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 2 முதல், மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் சாவ் பாலோவிலும், சில பெர்னாம்புகோவிலும் ஃபெடரல் மாவட்டத்திலும் நடந்துள்ளன.
இந்நிலையில் "மதுபானம் குடிக்காமல் இருந்தால் யாருக்கும் தீங்கு இல்லை," என்று சுகாதார அமைச்சர் அலெக்சாண்ட்ரே பாடிலா மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
"இது மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருள் அல்ல," என்றும் அவர் கூறினார்.
மெத்தனால் கலக்கப்பட்ட மதுபானம் அருந்தி, அதனால் பாதிக்கப்பட்டது தொடர்பான சம்பவங்கள் உலகெங்கும் பதிவாகியுள்ளது. பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள மெத்தனால், அதிகமானோர் இறப்பதற்கும், பலரின் வாழ்க்கையில் தீவிர பின்விளைவுகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
அத்தகைய மெத்தனால் விஷத்தை எப்படி தவிர்க்கலாம்? தவறுதலாக குடித்து விட்டால் என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

பட மூலாதாரம், Isaac Fontana / EPA / Shutterstock
மெல்லக் கொல்லும் நஞ்சு
மெத்தனால் விஷம் ஒருவரின் உயிரைப் பறிக்க பல நாட்கள் ஆகலாம். ஆரம்பத்தில், இது ஒரு மோசமான ஹேங்கோவரைப் (குடிபோதைக்குப் பிறகு வரும் தலைவலி) போலவே உணரப்படலாம்.
சரியாக கண்டறியப்பட்டால், மருத்துவர்களின் கண்காணிப்பில், பீர் போன்ற சாதாரண மதுபானத்தை குறிப்பிட்ட அளவில் குடிப்பது எளிய சிகிச்சையாக இருக்கும்.
ஆனால், வீட்டில் நீங்களாகவே சிகிச்சை செய்ய முயலாதீர்கள். மெத்தனால் குடித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
நோயாளியின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவை நீண்ட நேரம் நிலையாக வைத்திருப்பது, மெத்தனால் உடலில் வளர்சிதை மாற்றமடையாமல் இயற்கையாக வெளியேற உதவும்.
பல மருத்துவமனைகளில், மாற்று மருந்துகள் மற்றும் சிறுநீரக டயாலிசிஸ் போன்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
அறிகுறிகள் மற்றும் நோயறிதல்
மெத்தனால் விஷத்தால் ஏற்படும் பாதிப்புகளை முதல் சில நாட்களில் சிகிச்சை செய்தால் கட்டுப்படுத்த முடியும். இது மரணம் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கும்.
மேலும் கண் பார்வை இழப்பு, மூளை சேதம் போன்ற நீண்டகால பாதிப்புகளையும் தவிர்க்கும். ஆனால், நோயை விரைவாக கண்டறிந்து உடனே சிகிச்சை தொடங்குவது மிக அவசியம்.
மெத்தனால் "சத்தமின்றி மெல்லக் கொல்லும் கொலையாளி" என்கிறார் மருத்துவர் ஹோவ்டா.
"அறிகுறிகள் உடனே தெரியாது. அடுத்த நாளோ, சில நாட்களுக்குப் பிறகோ தான் தோன்றும். அதனால், பாதிக்கப்பட்டவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிக்கின்றனர். ஏனெனில், அவர்கள் குடித்த உடனே அறிகுறிகள் தென்படுவதில்லை. அறிகுறிகள் காணப்படுவதற்கு ஒரு நாள் முன்பாகவோ, இரண்டு நாட்கள் முன்பாகவோ அவர்கள் குடித்திருப்பார்கள்," என்று அவர் விளக்குகிறார்.
அதேபோல், மெத்தனால் விஷத்தின் அறிகுறிகள் மற்ற பல சாதாரண உடல்நலப் பிரச்னைகளைப் போலவே இருக்கும் என்பது மற்றொரு சிக்கல். சில நேரங்களில் கடுமையான ஹேங்கோவரைப் (குடிபோதைக்குப் பிறகான தலைவலி மற்றும் சோர்வு) போலவும் தோன்றலாம்.
மெத்தனால் விஷத்தின் ஆரம்ப அறிகுறிகள் பின்வருமாறு:
- வயிற்று வலி
- நெஞ்சு வலி
- ஹைப்பர்வென்டிலேஷன் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
பிறகு இன்னும் தீவிரமான அறிகுறிகள் தோன்றக்கூடும். குறிப்பாக பார்வைக் குறைபாடுகள் தொடர்பான பிரச்னைகள் தோன்றலாம். முதலில் பார்வை முதலில் மங்கலாகத் தெரியத் தொடங்கி, பின்னர் முழுமையான பார்வை இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மெத்தனால் கலந்த மதுபானத்தை குடிக்காமல் தவிர்ப்பது எப்படி ?
பிரேசிலிய மதுபானத் தொழில் துறை மக்களுக்கு சில முக்கியமான பாதுகாப்பு குறிப்புகளை பகிர்ந்துள்ளது:
- நம்பகமான இடங்களிலிருந்து மட்டுமே பானங்களை வாங்கவும்
- வழக்கத்தை விட மிகக் குறைந்த விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்
- நுண் துகள்கள் மற்றும் அழுக்கு கொண்ட பானங்களை தவிர்க்கவும்
- விற்பனையாளர் நம்பகமானவர் என்பதை உறுதிப்படுத்த, ரசீது கேட்கவும்.
- பாட்டில்களின் முத்திரையை (seal) சரிபார்க்கவும் . அது உடைந்திருந்தால், அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் (MSF - டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்) அமைப்பின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் 40,000-க்கும் மேற்பட்டோர் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இதில் 14,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் மட்டும் இதுவரை 334 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் அமைப்பைச் சார்ந்த நார்வே மருத்துவர் நட் எரிக் ஹோவ்டா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மெத்தனால் விஷத்தை ஆராய்ந்து வருகிறார்.
"இத்தகைய சம்பவங்கள் பற்றிய தகவல்களை மக்களிடையே பரப்புவது மிகவும் முக்கியம். 'நீங்கள் குடிக்கும் பானத்தின் மீது கவனமாக இருங்கள்', 'அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ உதவியை நாடுங்கள்' போன்ற செய்திகள் மக்களின் உயிரைக் காப்பாற்றும்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Stringer / AFP via Getty Images
2013ஆம் ஆண்டில், லிபியாவில் 1,000-க்கும் மேற்பட்டோர் மெத்தனால் விஷத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அதில் 101 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் ரஷ்யாவிலும், டிசம்பர் 2016ல் 70-க்கும் மேற்பட்டோர் இதே காரணத்தால் உயிரிழந்தனர்.
கென்யாவில்:
- 2014 ஆம் ஆண்டில், இரண்டு பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் 467 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 126 பேர் இறந்ததாகவும் பதிவாகியது.
- 2005 ஆம் ஆண்டில், மெத்தனால் கலந்த மதுபானத்தைக் குடித்து பத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்
- 2000 ஆம் ஆண்டில், இதேபோன்ற நெருக்கடியால் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 140 பேர் இறந்தனர் மற்றும் 20 பேருக்கு நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டது.

பட மூலாதாரம், AFP via Getty Images
சிகிச்சை அளிக்கப்படும் முறை
மெத்தனால் விஷத்துக்கு சிகிச்சை அளிக்க, டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு உலகம் முழுவதும் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. விஷம் பரவிய இடங்களில், "அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ உதவி நாடுங்கள்" என்று மக்களுக்கு வீடியோ மூலம் அறிவுறுத்துகிறது.
"அறிகுறிகள் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் சிகிச்சை பெற்றால், பெரும்பாலானவர்கள் இந்த பிரச்னையை சமாளிக்க முடியும்," என்றும்,
"அறிகுறிகள் தோன்றிய முதல் 48 அல்லது 72 மணி நேரத்துக்குள் பலரைக் கூட காப்பாற்ற முடியும்"என்றும் மருத்துவர் ஹோவ்டா சொல்கிறார்.
மெத்தனால் உடலில் வளர்சிதை மாற்றம் அடைந்து, தீங்கு விளைவிக்கும் ஃபார்மிக் அமிலமாக மாற இவ்வளவு நேரம் ஆகும்.
அதனால், மெத்தனால் செறிவை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் மெத்தனால் வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பதே சிகிச்சையின் குறிக்கோள்.
பிரேசிலில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களில், மருத்துவர்கள் மருத்துவ எத்தனாலை இதற்கு பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ள மருத்துவமனைகளில், பீர், ஒயின், அல்லது தோலில் தேய்க்கும் ஆல்கஹால் போன்றவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
சிறுநீரக டயாலிசிஸ் மூலமும் ரத்தத்தை இயந்திர பம்புகள் வைத்து சுத்தப்படுத்துகிறார்கள். டயாலிசிஸ் சாத்தியமில்லை என்றால், ஆல்கஹால் மட்டும் பயன்படுத்தி சிகிச்சை ஒரு வாரம் வரை நீடிக்கலாம்.

பட மூலாதாரம், AFP via Getty Images
மாற்று மருந்து
மிகவும் பயனுள்ள மாற்று மருந்தான ஃபோமெபிசோலை பெற, ஒரு டோஸுக்கு 1,000 யூரோக்கள் (1,200 டாலர் ) வரை செலவாகும் என்று மருத்துவர் ஹோவ்ட் கூறுகிறார்.
இந்த மருந்தின் காப்புரிமை உலகளவில் காலாவதியாகிவிட்டது. ஆனால், மருந்து நிறுவனங்களால் இதனை போதுமான அளவு தயாரிக்க முடியாததால், விலையைக் குறைக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
எம்எஸ்எப்ஃ (டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்) அமைப்பு, இந்த மருந்தை உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என விரும்புகிறது. அவ்வாறு செய்தால், பிரேசில் போன்ற பதிவு செய்யப்படாத நாடுகள் இதை எளிதாக இறக்குமதி செய்ய முடியும்.
இதற்கிடையில், பிரேசில் அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது:
- பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பிடம் 100 ஃபோமெபிசோல் தொகுப்புகளை உடனே வழங்குமாறு கேட்டுள்ளது.
- மேலும் மருந்து பெற 10 சர்வதேச ஒழுங்குமுறை அமைப்புகளிடம் உதவி கோரியுள்ளது.
- மருந்து எத்தனாலின் இருப்பை அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Isaac Fontana / EPA / Shutterstock
மலிவான மெத்தனால்
சமீப ஆண்டுகளில், உலகம் முழுவதும் மெத்தனால் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. எரிபொருளாக இது பயன்படுகிறது. அதேபோல் பெட்ரோல், டீசலை விட சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது.
பிரேசிலில், மெத்தனால் பயன்பாட்டுக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. இதை உற்பத்தி செய்யவும், சேமிக்கவும் கட்டாயப் பதிவு தேவை.
"மெத்தனாலின் நச்சுத்தன்மை, எரிபொருள் எத்தனால் மற்றும் பெட்ரோலில் கலப்படம் செய்யும் திறன், மனித ஆரோக்கியத்துக்கும் பொது பாதுகாப்புக்கும் உள்ள ஆபத்து" ஆகியவற்றின் காரணமாக இந்த விதிகள் உள்ளதாக தேசிய பெட்ரோலிய முகமை கூறுகிறது.
ஸ்பிரிட் பாட்டில்கள் பேக்கேஜிங்கின்போது தற்செயலாக மெத்தனாலால் மாசடைந்தனவா, அல்லது மலிவாக உற்பத்தி செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றே கலக்கப்பட்டுள்ளதா என்று பிரேசில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

"சிலர் அதிக பணம் சம்பாதிக்க மெத்தனாலை பானங்களில் கலக்கிறார்கள். ஏனெனில், மெத்தனால் ஆல்கஹாலுடன் (எத்தனால்) நன்றாக கலக்கிறது," என்று மருத்துவர் ஹோவ்டா விளக்குகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆல்கஹாலுடன் தண்ணீர் கலந்து மேசையில் வைத்தால், அவை பிரிந்து தெரியும். ஆனால், மெத்தனால் கலந்தால், அது பிரிவது தெரியாது.
அதன் வாசனை, சுவை, நிறம் என எதிலுமே வித்தியாசம் இருக்காது. அதனால், இதைக் குடிப்பவர்கள், மெத்தனால் கலந்திருக்கிறதா என கண்டுபிடிப்பது மிகவும் கடினம்" என்று குறிப்பிடுகிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












