காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம்: பாஜகவை 'தீய சக்தி' என்ற ராகுல் - பதிலடி கொடுத்த ஜே.பி.நட்டா

காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம்: பாஜகவை 'அசுர சக்தி' என்ற ராகுல் - பதிலடி கொடுத்த ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், ANI

பாஜக தனது வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தேர்தலில் சம பலத்துடன் போட்டியிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸுக்கு எதிராக வேண்டுமென்றே சதி நடக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

“வெறுப்பு நிறைந்த ஒரு ‘அசுர சக்தி' ஜனநாயகத்தைக் கொல்ல, காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது. தனது பொருத்தமற்ற அரசியல் செயல்பாடுகளை மறைக்க நிதி நெருக்கடிகளை காங்கிரஸ் காரணம் காட்டுவதாக பாஜக கூறுகிறது.

என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?

காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம்: பாஜகவை 'அசுர சக்தி' என்ற ராகுல் - பதிலடி கொடுத்த ஜே.பி.நட்டா

அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய சோனியா காந்தி, “இது ஒரு தீவிரமான பிரச்னை, இது காங்கிரஸை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் பாதிக்கும்” என்று கூறினார்.

இந்த விஷயம் வெட்கக்கேடானது என்று கூறிய மல்லிகார்ஜுன கார்கே, இது நமது நாட்டின் நன்மதிப்பைக் கெடுத்துவிட்டது என்றார்.

"கடந்த 70 ஆண்டுகளில் நேர்மையான தேர்தல் மற்றும் ஆரோக்கியமான ஜனநாயகம் என்ற பிம்பத்தை நமது நாடு கட்டமைத்திருந்தது, அது இன்று கேள்விக்குறியாகியுள்ளது," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸை பொருளாதார ரீதியாக உடைக்க தற்போதைய பிரதமர் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சாமானியர்களிடம் வசூலித்த பணம் முடக்கப்படுகிறது, எங்கள் கணக்கில் உள்ள பணம் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுகிறது.

தற்போதைய சவாலான சூழலிலும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்து வருகிறோம்,” என்றார்.

காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம்: பாஜகவை 'அசுர சக்தி' என்ற ராகுல் - பதிலடி கொடுத்த ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், SCREENGRAB

‘காங்கிரஸின் பொருளாதார அடையாளம் பறிக்கப்படுகிறது’ - ராகுல் காந்தி

இது காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்குவது மட்டுமல்ல, ஜனநாயகத்தை முடக்குவது என்று ராகுல் காந்தி கூறினார்.

“தேர்தலுக்கு சற்று முன், இரண்டு பழைய நோட்டீஸ்கள் வருகின்றன, மொத்தத் தொகை சுமார் 14 லட்சம், அதற்கு என்ன தண்டனை - எங்களது ஒட்டுமொத்த பொருளாதார அடையாளமும் பறிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பான இந்த முக்கியமான மாதத்தில் நிறைய இழப்புகளைச் சந்தித்துள்ளோம். பொருளாதார சிக்கல்கள் காரணமாக, எங்கள் தலைவர்கள் விமானப் பயணத்தையும் ரயில் பயணத்தையும் மேற்கொள்ள முடியவில்லை,” என்று கூறினார் அவர்.

இது மிகப்பெரிய குற்றம் என்று கூறிய ராகுல் காந்தி, இதை பிரதமரும் அவரது உள்துறை அமைச்சரும் செய்கிறார்கள் என்று கூறினார்.

"உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற கருத்து பொய்யானது. இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். ஆனால், எங்களால் இரண்டு ரூபாய்கூட செலவு செய்ய முடியவில்லை," என்றார்.

"இன்றே எங்கள் வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டாலும்கூட, ஏற்கெனவே ஒரு பெரிய நஷ்டம் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இது ஒரு விசித்திரமான சூழ்நிலை, எல்லோரும் பார்க்கிறார்கள். நீதிமன்றமோ அல்லது வேறு யாருமோ எதுவும் சொல்லவில்லை," என்று கூறினார் ராகுல் காந்தி.

‘ஆளுங்கட்சியின் ஆபத்தான விளையாட்டு’- மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம்: பாஜகவை 'அசுர சக்தி' என்ற ராகுல் - பதிலடி கொடுத்த ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், ANI

இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், சட்டரீதியிலான வழிகள் உட்பட அனைத்து வழிகளையும் கட்சி பின்பற்றுவதாகவும் காங்கிரஸ் கூறுகிறது.

உச்சநீதிமன்றத்தால் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்ட அதே திட்டத்தின் கீழ் ஆளுங்கட்சி தனது கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளதாக மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் சதியால், பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பணப் பற்றாக்குறையால் சம பலத்துடன் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.

ஆளும் கட்சி ஆபத்தான ஆட்டம் ஆடுவதால், இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்," என்றார்.

அண்டை நாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், “ஒரு சில நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன, ஆனால் ஒருவர் மட்டுமே 99 சதவீத வாக்குகளைப் பெறுகிறார்.

பாஜக செலவழிக்கும் பணத்தை, மற்ற கட்சிகளால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து, விரைவில் உண்மை வெளியே வரும் என நம்புகிறோம்,'' என்றார்.

காங்கிரஸ் கட்சி தனது பணத்தை தேர்தலுக்காக பகிரங்கமாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

‘காங்கிரஸ் மீதான பொருளாதாரத் தாக்குதல்’

காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம்: பாஜகவை 'அசுர சக்தி' என்ற ராகுல் - பதிலடி கொடுத்த ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், ANI

“தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு பணம் செலவழிக்க முடியாமலும், தொண்டர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் பணம் கொடுக்க முடியாமலும் இருந்தால், தேர்தலை நடத்தி என்ன பயன்?” என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கேள்வி எழுப்புகிறார்.

“கடந்த ஒரு மாதமாக காங்கிரஸால் தனது கணக்கில் உள்ள ரூபாய் 285 கோடியைப் பயன்படுத்த முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி சமமாகத் தேர்தலில் போட்டியிட முடியும்.

ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் எங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சீதாராம் கேசரியிடம் இருந்து 1994-95 காலகட்டத்திற்கான வருமான வரி நோட்டீஸ் வந்தது. இதுகுறித்து மேலும் நோட்டீஸ்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டு எங்கள் கணக்குகள் முடக்கப்படும்,” என்றார் அவர்.

காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம்: பாஜகவை 'அசுர சக்தி' என்ற ராகுல் - பதிலடி கொடுத்த ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், ANI

தொடர்ந்து பேசுகையில், "தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்யப்படுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கும். இப்படி எந்தக் கட்சிக்கும் அபராதம் விதித்ததில்லை. காங்கிரசுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இந்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

மொத்தம் 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்குத்தான் வருமான வரித் துறையால் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்காக கட்சிக்கு ரூபாய் 210 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஜனநாயகம் எங்கே உள்ளது?” என்கிறார் அஜய் மக்கான்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், "என்னால் எனது சொந்தப் பணத்தையே பயன்படுத்த முடியாவிட்டால், இது என்ன ஜனநாயகம்? இதில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் பணம் மற்றும் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணமும் அடங்கும்," என்றார்.

இதே நிலை நீடித்தால் கட்சி தேர்தலைப் புறக்கணிக்குமா என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அஜய் மக்கான், “கட்சி இப்படி எதுவும் யோசிக்கவில்லை” என்றார்.

பாஜகவின் பதில் என்ன?

காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம்: பாஜகவை 'அசுர சக்தி' என்ற ராகுல் - பதிலடி கொடுத்த ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், ANI

இந்த விவகாரத்தில் பாஜக மீது காங்கிரஸ் கட்சி வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தலைவர் ஜேபி நட்டா பதிலளித்துள்ளார்.

நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், "மக்கள் காங்கிரஸை முற்றிலுமாக நிராகரிக்கப் போகிறார்கள். தோல்வி பயத்தால் சூழப்பட்ட காங்கிரஸ் தலைமை இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.

மேலும், "அதன் பொருத்தமற்ற அரசியலை மறைக்க, நிதி நெருக்கடியை காங்கிரஸ் மிக எளிதாகக் காரணம் காட்டுகிறது. உண்மையில், திவாலானது அதன் நிதி நிலைமை அல்ல, ஆனால் தார்மீக மற்றும் அறிவார்ந்த அரசியல் தன்மை.

காங்கிரஸ் தனது தவறுகளைத் திருத்துவதற்குப் பதிலாக, அதன் பிரச்னைகளுக்கு அதிகாரிகளைக் குற்றம் சாட்டுகிறது. அது வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், டெல்லி உயர்நீதிமன்றமும், காங்கிரஸ் கட்சி விதிகளைக் கடைபிடிக்க வேண்டும், நிலுவையில் உள்ள வரிகளைச் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் கட்சி அதைக் கேட்கவில்லை," என்று பதிவிட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)