குஜராத் அரசுப்பள்ளி ஆசிரியை அமெரிக்காவில் குடியேறிய பிறகும் 8 ஆண்டுகள் தொடர்ந்து ஊதியம் பெற்றாரா?

குஜராத், பள்ளிக்கல்வி

பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சா ஆரம்பப் பள்ளியில் ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தப் பள்ளியில் பணிபுரியும் பாவ்னாபென் படேல் என்ற ஆசிரியர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதும், கடந்த பல மாதங்களாக 'சட்டவிரோதமாக பள்ளிக்கு வராமல்' இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த விஷயத்தைப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியரான பாருல் மேத்தா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சர்ச்சை வலுத்த நிலையில், மாவட்ட கல்வி அதிகாரியும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.

இந்த விஷயம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது? இந்த ஆசிரியர் எவ்வளவு காலமாக பள்ளிக்கு வரவில்லை? அவருக்கு சம்பளம் கிடைத்ததா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குஜராத், பள்ளிக்கல்வி

பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC

படக்குறிப்பு, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியரான பாருல் மேத்தா

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் என்ன கூறினார்?

ஸ்ரீ பஞ்சா தொடக்கப் பள்ளியின் பொறுப்பு முதல்வர் பருல் மேத்தா, அப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் பவ்னாபென் படேலைப் பற்றிச் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில், “ஸ்ரீ பஞ்சா தொடக்கப் பள்ளி பழங்குடியினர் பகுதியில் உள்ள பள்ளி. இந்தப் பள்ளிக்கு நான் வந்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. இந்தப் பள்ளியில் பவ்னாபென் படேல் என்ற ஆசிரியர் இருக்கிறார். தற்போது அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார்,” என்றார்.

"அவர் வருடத்துக்கு ஒரு மாதம் மட்டும் இங்கு வருவார். தனது ஆசிரியர் பணிக்காக ஒரு மாதம் இருந்துவிட்டுப் பிறகு சென்று விடுவார். இது பல வருடங்களாக நடந்து வருகிறது," என்றார் பருல் மேத்தா.

மேலும் அவர், “குழந்தைகளின் நலன் என்ன? அவர்களுக்கு ஒரு ஆசிரியர் தேவை. ஆனால் அவர் வேறொரு நாட்டில் உள்ளார்," என்றார்.

பொறுப்பு தலைமை ஆசிரியர் பருல் மேத்தா, அந்த ஆசிரியர் பள்ளிக்கு வர வேண்டும், அல்லது பணி விலக வேண்டும், எனக் கூறினார்.

மேலும் அவர், அந்த ஆசிரியர் பாவ்னா படேல் 2027-இல் ஓய்வு பெறப் போவதாகத் தெரிவித்தார்.

குஜராத், பள்ளிக்கல்வி

பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC

படக்குறிப்பு, பொறுப்புத் தலைமையாசிரியர் எழுதிய கடிதம் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் உள்ளது.

'8 வருடங்களாக வெளிநாட்டில் உள்ளார்’

பிபிசி குஜராத்திக்காகப் பணிசெய்யும் பத்திரிகையாளர் பரேஷ் பதியார் இந்த ஆரம்பப் பள்ளிக்குச் சென்று உண்மையைக் கண்டறிய முயன்றார்.

அப்போது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள், தங்கள் வகுப்பு ஆசிரியர் பாவ்னாபென் படேல் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள், தாம் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பாவனாவைக் கடைசியாகப் பார்த்ததாக தெரிவித்தனர். அதன் பிறகு அவரை பார்க்கவே இல்லை. பின்னர் அவர்கள் கற்பிக்க வரவே இல்லை, என்றனர்.

பள்ளியின் பொறுப்பு முதல்வர், மாவட்ட கல்வி அலுவலருக்கு கடிதம் எழுதி, "இந்த ஆசிரியர், 2016-ஆம் ஆண்டே வெளிநாட்டில் ‘செட்டில்’ ஆகிவிட்டார்,” என்று தெரிவித்தார்.

“பள்ளிப் பதிவேட்டின்படி, கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் வெளிநாட்டில் இருந்துகொண்டு, ஆண்டுக்கு ஒருமாதம் மட்டும் கணக்குக்காகப் பள்ளிக்கு வந்திருக்கிறார்,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தீபாவளி விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களை ஏற்பாடு செய்து இரண்டு மாத சம்பளத்தையும் வாங்கியிருக்கிறார்," என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிப் பதிவேட்டில் பாவ்னாபென் படேலின் பெயருக்கு எதிராக ‘குறைக்கப்பட்ட ஊதியத்துடன் விடுப்பு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத், பள்ளிக்கல்வி

பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC

படக்குறிப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வினு படேல்

மாவட்ட கல்வி அதிகாரி என்ன சொன்னார்?

இதுகுறித்துப் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வினு படேல், 'பல ஆண்டுகளாக பாவ்னாபென் படேல் விடுமுறையில் இருக்கிறார்' என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.

அவர் கூறுகையில், "ஆசிரியர் பாவ்னாபென் படேல் கடந்த 8 மாதங்களாக அனுமதியற்ற விடுப்பில் உள்ளார். இந்த விஷயம் தாலுகா முதன்மைக் கல்வி அலுவலர் கடந்த மே மாதம் பள்ளிக்குச் சென்ற போது அவரது கவனத்திற்கு வந்தது. அவர் கடந்த ஜூன் மாதமே ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்,” என்றார்.

"அந்த நோட்டீசுக்கு ஆசிரியர் அளித்த விளக்கம் ஏற்கப்படவில்லை. மேல் நடவடிக்கை எடுக்க தாலுகா கல்வி அலுவலர் உத்தரவிட்டார். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

ஒருபுறம், பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஆசிரியர் 8 வருடங்களாக வரவில்லை எனக் கூறுகின்ற அதேவேளை, மாவட்டக் கல்வி அதிகாரி அவர் 8 மாதங்களே இவ்வாறு வரவில்லை எனக் கூறுகிறார்.

முதன்மைக் கல்வி அதிகாரி வினு படேல் கூறுகையில், "பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஊடகங்களிடம் தவறான தகவல் அளித்துள்ளார். இந்த அங்கீகரிக்கப்படாத விடுப்பின் போது அந்த ஆசிரியருக்குச் சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியரோ, துணை தலைமை ஆசிரியரோ இந்த விஷயத்தைத் தாலுகா அளவில் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்கள் ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு, மாவட்ட அளவில் தெரிவித்துள்ளனர்,” என்றார்.

மேலும், நிர்வாகத் துறையின் 2005 தீர்மானத்தின்படி ஆசிரியர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டுகளிலும் இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி மேலும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

பனஸ்கந்தா சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து குஜராத் கல்வி அமைச்சர் குபேர் திண்டோரும் அறிக்கை அளித்துள்ளார்.

குஜராத், பள்ளிக்கல்வி

பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC

படக்குறிப்பு, பாவ்னாபென்னுக்கு மாதச் சம்பளம் ரூ.1,11,450 வழங்கப்பட்டிருப்பதைக் காட்டும் ஆவணம்

அமைச்சர் என்ன சொன்னார்?

செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் கல்வி அமைச்சர் குபேர் திண்டோர், "வெளிநாட்டில் இருந்தபடி, இங்கே பணியில் தொடர்வது மிகவும் தீவிரமான விஷயம். தற்போது, ​​ஆசிரியர் ஒருவர் அப்படிச் செய்தது பற்றி கவனத்திற்கு வந்துள்ளது. அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

“இந்த விஷயத்தில் அறிக்கை அனுப்பி, வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

“இனி குஜராத் முழுவதும் பிரசாரம் செய்து இதுபோன்ற ஆசிரியர்களை திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுப்போம்,” என்றார் அமைச்சர் குபேர் திண்டோர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)