பிரிட்டிஷ் இந்தியா கால 'துராந்த்' கோட்டால் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமை இரவு பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த மோதலில் 23 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் தங்களின் பதில் தாக்குதலில், 200க்கும் மேற்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தாலிபன் முதலில் தெரிவித்தது.
பின்னர், தங்களது தரப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தாலிபன் கூறியுள்ளது.
சனிக்கிழமை இரவு எல்லையின் பல இடங்களில் கடுமையான மோதல்கள் நடந்ததாக இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் முன்னெடுத்த "தூண்டுதல் இல்லாத" தாக்குதல்களுக்கு, பாகிஸ்தான் முழு பலத்துடன் பதிலளித்துள்ளது," என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். எல்லையில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ராணுவம் வான்வழி, பீரங்கி மற்றும் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டது. தாலிபன் காவல் நிலையங்கள், முகாம்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வலையமைப்புகளை குறிவைத்து இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தாலிபன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், தாலிபன்கள் பாகிஸ்தானில் 20 எல்லைச் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும், மோதல்களுக்குப் பிறகு அவற்றைத் திருப்பி கொடுத்ததாகவும் கூறினார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தாங்கள் "கடுமையாக" பதிலடி கொடுத்ததாகவும், தங்கள் படைகள் பல ஆப்கானிய தளங்களை அழித்து, தற்காலிகமாக அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும் கூறுகின்றனர்.
மோதல் எப்போது தொடங்கியது?
கடந்த வாரம் காபூலில் பல சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நடந்தன. அதற்குப் பிறகு, தாலிபன் போராளிகள் பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் மோதல்கள் ஏற்பட்டன.
இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டி தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, மேலும் பாகிஸ்தான் ராணுவம் "விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்" என்று எச்சரித்தது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணம், தென்கிழக்கு கோஸ்ட், பாக்தியா, பாக்டிகா மற்றும் தெற்கு ஹெல்மண்ட் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் ராணுவத் தளங்கள் மீது சனிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் காபூலில் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல்

பட மூலாதாரம், MOHSEN KARIMI/AFP via Getty
"ஆப்கானிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்," என்று பாகிஸ்தான் அரசு தாலிபன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தால், "தனது தற்காப்பு உரிமையின் கீழ்" கடுமையான பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. ஆனால் இந்தக் கூற்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேசமயம், ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பாகிஸ்தானில் இருப்பதாகவும், அந்த அமைப்பு கைபர்–பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் தீவிரமாக செயல்படுகிறது என்றும் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றத்தைப் பற்றி சௌதி அரேபியா வருத்தம் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, பதற்றத்தைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோல், கத்தாரும் இந்த பதற்றம் குறித்து கவலை தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய வழிகளின் மூலம் பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு, இந்த மோதலின் மையமாக தொடர்ந்து ஒரு பெயர் நீடித்து வருகிறது. அது தான் துராந்த் கோடு (Durand Line).
துராந்த் கோடு என்றால் என்பது என்ன என்பது பற்றியும் அதைச் சுற்றி ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அடிக்கடி பதற்றம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
முதலில், இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

துராந்த் கோடு தொடர்பான சர்ச்சை
பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் எல்லை 'துராந்த் கோடு' (Durand Line) என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் ஆப்கானிஸ்தான் இந்த எல்லையை அங்கீகரிக்கவில்லை.
மறுபுறம், பாகிஸ்தான் இதனை சர்வதேச எல்லை எனக் குறிப்பிடுகிறது. இந்த எல்லைக்கு உலகளாவிய அங்கீகாரம் உண்டு என்பதே பாகிஸ்தானின் நிலைப்பாடு.
1893ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசு, ஆப்கானிஸ்தானுடன் 2,640 கிலோமீட்டர் நீளமான எல்லைக் கோட்டை வரைந்தது.
இந்த ஒப்பந்தம் , காபூலில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சர் மோர்டிமர் துராந்துக்கும், ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர் அமீர் அப்துர் ரஹ்மான் கானுக்கும் இடையே எட்டப்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தானில் யார் ஆட்சி செய்தாலும், இந்த துராந்த் கோடு குறித்த ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
எந்த ஆப்கானியரும் இதை சர்வதேச எல்லையாக ஏற்கவில்லை.
1923ஆம் ஆண்டு மன்னர் அமானுல்லாவின் ஆட்சியிலிருந்து இன்று வரை, துராந்த் கோடு குறித்து அதே நிலைப்பாடு தான் தொடர்கிறது.
1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருவான பின்னர், சில ஆப்கானிய ஆட்சியாளர்கள் துராந்த் ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இது குறித்த பாகிஸ்தானின் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது.
மேஜர் ஜெனரல் இப்திகார் 2022ல், "நாங்கள் இதை துராந்த் கோடு என்று அழைக்கவில்லை. இது பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான சர்வதேச எல்லை. இதனை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன" என்று கூறியிருந்தார்.
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, துராந்த் கோடு தொடர்பான சர்ச்சை 2022ஆம் ஆண்டில் மீண்டும் எழுந்தது.
இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அமைத்திருந்த முள் வேலிகளை தாலிபன் போராளிகள் பல இடங்களில் அகற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












