இஸ்ரேல் குண்டுமழைக்கு நடுவே காசாவில் பாதுகாப்பான இடம் எங்கே? பரிதவிக்கும் மக்கள்

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ருஷ்டி அபு அலூஃப்
    • பதவி, பிபிசி செய்திகள், காசா

"நாங்கள் எங்கே போவோம்? இந்தப் பகுதியில் பாதுகாப்பான இடம் என்று ஒன்று இருக்கிறதா?" காசாவில் ரிமால் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கடுமையான கிண்டலுடன் இப்படிக் கேட்டார்கள்.

சனிக்கிழமையன்று காசா பகுதியில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிக் குழுவின் வரலாறு காணாத தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலியப் போர் விமானங்கள் மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தின. காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

இஸ்ரேலிய தாக்குதல்கள் டஜன் கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஆசிரிய கட்டிடங்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தின.

திங்கட்கிழமை இரவு முழுவதும் பயங்கர வெடிச்சத்தங்கள் அப்பகுதியை உலுக்கின. குழந்தைகள் அலறிக் கொண்டிருந்தார்கள். யாரும் ஒரு நிமிடம் கூடத் தூங்கவில்லை.

இஸ்ரேல், பாலத்தீன், ஹமாஸ், காசா

பட மூலாதாரம், EPA

காசா நகரத்தின் செழிப்பான அமைதியான ரிமால் பகுதியில் வசிப்பவர்களால் அந்த இரவை வெகு நாட்களுக்கு மறக்க முடியாது.

செவ்வாய்க்கிழமை விடிந்ததும், இஸ்ரேலியத் தாக்குதல்கள் குறைந்தன. அப்போதுதான் அந்த அளவுக்கு அப்பகுதி அழிந்து போயிருக்கிறது என்று மக்களால் பார்க்க முடிந்தது. தென்மேற்குச் சுற்றுப்புறத்தின் உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்திருந்தது மற்றும் அப்பகுதிக்குச் செல்லும் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டன.

அப்பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதுபோல இருந்தது. ஆங்காங்கே இடிபாடுகளும், உடைந்த கண்ணாடிகளும், துண்டிக்கப்பட்ட கம்பிகளும் கிடந்தன.

இஸ்ரேல், பாலத்தீன், ஹமாஸ், காசா

பட மூலாதாரம், EPA

‘குடிமக்களை குறி வைத்த தாக்குதல்கள்’

"நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். எனது ஐந்து குழந்தைகள் வாழ்ந்த எனது அடுக்குமாடி குடியிருப்பு இந்த கட்டிடத்தில்தான் இருந்தது. அதன் கீழே இருந்த எனது மளிகைக் கடை அழிக்கப்பட்டுவிட்டது," என்கிறார் தனது மகள் ஷாத்தை சுமந்துகொண்டு வந்த முகமது அபு அல்-காஸ்.

"எங்கே போவது? வீடில்லாதவர்கள் ஆகிவிட்டோம். இனி எங்களுக்கு வீடோ வேலையோ இல்லை," என்கிறார் அவர்.

"இஸ்ரேலே, என் வீடும் மளிகைக் கடையும் தான் உனது இராணுவ இலக்கா?" என்று கேட்கிறார் அவர். இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்களை குறிவைக்கவில்லை என்று கூறுவது பொய் என்று குற்றம் சாட்டினார்.

கடந்த திங்களன்று (செப்டம்பர் 9) காஸா மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 300 பேர் — அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் —கொல்லப்பட்டதாகப் பாலத்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்பகுதி அப்படியொரு கொடிய நாளைப் பல வருடங்களாகப் பார்த்ததில்லை.

அன்று மதியம், காசா நகரின் வடகிழக்கில் உள்ள மக்கள் அடர்ந்திருக்கும் ஜபாலியா அகதிகள் முகாமில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தளபதியின் வீட்டைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஆனால் அருகிலுள்ள சந்தையிலும் பக்கத்து வீடுகளிலும் இருந்த மக்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல், பாலத்தீன், ஹமாஸ், காசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காசாவின் இந்தச் சிறிய, மக்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் ஏற்கனவே மோசமாக இருந்த மனிதாபிமான நெருக்கடி இப்போது மேலும் மோசமாகியிருக்கிறது

மோசமாகும் மனிதாபிமான நெருக்கடி

காசாவின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கடந்த சனிக்கிழமை முதல் (அக்டோபர் 7) காஸாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 900 ஆக உள்ளது. இதில் 260 குழந்தைகளும் அடங்குவர். மேலும் 4,500 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சிறிய, மக்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் ஏற்கனவே மோசமாக இருந்த மனிதாபிமான நெருக்கடி இப்போது மேலும் மோசமாகியிருக்கிறது.

ஹமாஸின் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் அரசாங்கம் ‘முழுமையான முற்றுகைக்கு’ உத்தரவிட்டது. காசாவுக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் துண்டிக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த 22 லட்சம் குடியிருப்பாளர்கள் உணவு, எரிபொருள், மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

சனிக்கிழமையன்று ஹமாஸ் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் இஸ்ரேலிய தரப்பில் 1,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 முதல் 150 பணயக்கைதிகள் எல்லை வழியாக காசாவிற்குள் போராளிகளால் கொண்டுவரப்பட்டனர்.

"21-ஆம் நூற்றாண்டில் நாங்கள் மின்சாரம் அல்லது தண்ணீர் இல்லாமல் வாழ்கிறோம் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? என் குழந்தைக்கு நாப்கின்கள் தீர்ந்துவிட்டன. இன்னும் அரை பாட்டில் பால் மட்டுமே உள்ளது," என்கிறார் வாத் அல்-முக்ராபி. ரிமாலில் அவரது வீடு இருந்த கட்டிடம் முற்றிலுமாக இடிந்து போயிருக்கிறது.

" என் குழந்தையா சென்று இஸ்ரேலைத் தாக்கியது?" என்று கேட்கிறார் அவர்.

சனிக்கிழமைக்குப் பிறகு முதல் முறையாக திறக்கப்பட்ட காசாவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடியின் சிறிய பின்கதவுக்கு வெளியே, டஜன் கணக்கான மக்கள் வரிசையில் நின்றனர். இந்தப் பிரச்சனை இன்னும் பலநாட்கள் நீடிக்கும் என்ற அச்சத்தில், தங்களால் இயன்ற பொருட்களை வாங்கலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

காசாவின் பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்கள் பிராந்தியத்தின் தெற்கில் வளர்க்கப்படுகின்றன. கடுமையான எரிபொருள் பற்றாக்குறையால் அவற்றை வடக்கே கொண்டு செல்வது கடினமாகிவிடும். இதனால் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது.

இஸ்ரேல், பாலத்தீன், ஹமாஸ், காசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் வசிக்கும் சில மக்கள் தங்குமிடங்களின் அடித்தளத்தில் பதுங்குகின்றனர்

பாதுகாப்பான இடம் என்று ஒன்றில்லை

2007-ஆம் ஆண்டு ஹமாஸ் இந்தப் பிரதேசத்தை கைப்பற்றியதில் இருந்து, இஸ்ரேலுடன் இணைந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காசாவை இறுக்கமாக முற்றுகையிட்டு வந்திருக்கிறது எகிப்து. தற்போதைய சூழலால் இப்போது அங்கிருந்து உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை.

இப்போது எகிப்துடனான ரஃபா எல்லை வழியாக மக்கள் காஸாவை விட்டு வெளியேறவும் முடியவில்லை. இந்த எல்லை வழியாக வழக்கமாக ஒரு நாளைக்கு 400 பேர் மட்டுமே உள்ளே அல்லது வெளியே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் பாலத்தீனத்தின் பக்கமிருந்த நுழைவாயில் சேதமடைந்ததில், அவ்வழியே யாரும் செல்வதில்லை என்று காசாவில் உள்ள பாலத்தீனிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய 2 லட்சம் மக்களில் பெரும்பாலானோர் ஐ.நா. நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிலர் அச்சத்தில் தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்கள் வான்வழித் தாக்குதல்களால் தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டதைக் நேரடியாகக் கண்டனர்.

காஸாவில் வசிக்கும் சில மக்கள் தங்குமிடங்களின் அடித்தளத்தில் பதுங்குகின்றனர். ஆனால் மேலே உள்ள கட்டிடம் இடிந்து விழுந்தால் அவர்கள் உள்ளே சிக்கிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. திங்கட்கிழமை இரவு ஒரு அடித்தளத்தில் மட்டும் சுமார் 30 குடும்பங்கள் சிக்கிக்கொண்டன.

"முந்தைய போர்களில், [இஸ்ரேலுடன்] எல்லையில் வசிப்பவர்களுக்கு இந்தப் பகுதி பாதுகாப்பான புகலிடமாக இருந்தது," என்று ரிமாலில் குடியிருக்கும் முகமது அல்-முக்ராபி கூறுகிறார்.

திங்கட்கிழமை இரவு நடந்த இஸ்ரேலின் தாக்குதல்கள் இனி பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. காசாவில் நிலைமை மோசமாவதால் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமா என்று அங்குள்ள மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)